அமைதி மற்றும் நிலையான பாதுகாப்பு வாரியத்திற்கான தேவையை முன்வைக்கும் வாதம் -நிருபமா ராவ்

 போர்களுக்குப் பிறகு அமைதியை நிலைநிறுத்தக்கூடிய வகையில் ஒரு புதிய அமைப்பை ஐக்கிய நாடுகள் சபை உருவாக்க வேண்டும். 


ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations) 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வேளையில், அதன் இலட்சியங்களுக்கும் அவற்றை நிலைநிறுத்த நோக்கம் கொண்ட அமைப்புகளுக்கும் இடையிலான இடைவெளி முன்பைவிடத் தெளிவாகத் தெரிகிறது. பேரழிவு தரும் போரைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கூட்டமைப்பு (United Nations Security Council (UNSC)) இன்னும் மோதலுக்கு எதிர்வினையாற்றி வருகிறது. ஆனால் இன்னும் அமைதியை நிலைநிறுத்த உறுதியான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. கண்டங்கள் முழுவதும் மோதல்கள் பல ஆண்டுகளாக இன்னும் தீர்வு இல்லாமல் நீடிக்கின்றன. சர்வதேச அமைப்பு அரசியல் ஈடுபாட்டை மிக விரைவில் கைவிடுவதாலும் தீர்வு இல்லாமல் மோதல்கள் பல ஆண்டுகளாகத் தொடர்கின்றன. அமைதி ஒப்பந்தங்களும் வெறும் பெயரளவில் இருக்கின்றன. நாடுகளுக்கிடையே உறவுகளை வளர்த்துக் கொள்ளும் ராஜதந்திர செயல்கள் ஒரு தொடர்ச்சியான செயல்முறையாக இருப்பதற்குப் பதிலாக, நெருக்கடி நிலைகளில் மட்டும் செயல்படுத்தப்படும் ஒரு வடிவமாக மாறியுள்ளது. 


இந்தப் பிரச்சினை வெறுமனே அரசியல் மோதல்கள் பற்றியது மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் அமைப்பின் கட்டமைப்பு குறித்த பிரச்சனைகளையும் உள்ளடக்கியது. வன்முறை குறைந்து சமரச முயற்சிகளுக்குப் பிறகு அரசியல் ஆதரவைப் பராமரிக்க ஐ.நா.விடம் எந்த உறுதியான அமைப்பும் இல்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபை மோதல் தடுப்பு நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்கிறது, ஆனால் கட்டமைப்புரீதியாக அவ்வப்போது மட்டுமே செயல்படுகிறது என்பது மிகப் பெரிய பின்னடைவாகும். நாடுகளுக்கிடையே அமைதியை ஏற்படுத்தும் பணிகள் சில நிலைகளை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், அரசியல் சார்ந்த உத்திகளைக் கையாள்வதில் அதிகாரங்களைக் குறைந்த அளவில் கொண்டுள்ளன. அமைதியை ஏற்படுத்த அமைக்கப்படும் ஆணையம், ஒரு மதிப்புமிக்க முன்முயற்சியாக இருந்தாலும், அரசியல் மாற்றங்களில் ஈடுபடுவதற்கான அதிகாரம் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் இருப்பதில்லை. ஐ.நா. இது போன்ற நடவடிக்கைகளில் சூழல் மீதான கட்டுபாட்டை இழக்கிறது. செயலில் உத்வேகத்தையும் இழந்து அமைப்பின் நோக்கத்தையும் மறந்துவிடுவதாகத் தெரிகிறது.


ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் (United Nations Security Council (UNSC)) கட்டமைப்பில்  சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற கோரிக்கை  நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. ஆனால் அனைத்து புதிய அமைப்புகளின் உருவாக்காதிற்கும் ஒரு முன்நிபந்தனையாக அத்தகைய சீர்திருத்தத்திற்காக காத்திருப்பது என்பது ராஜதந்திர ரீதியில் நோக்கும்போது மிகப்பெரிய தவறாகிறது. சீர்திருத்தம் என்பது சாசனத்தின்கீழ் ஏற்கனவே இருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி, இப்போது செயல்படும் ஐ.நா.வின் திறனை வலுப்படுத்தும் சீர்திருத்தமாக இருக்க வேண்டும். அதுவே தற்போதைய சூழலுக்கு சாத்தியமானது என்றும் நம்பப்படுகிறது. ஐ.நா. பொதுச் சபையானது பிரிவு 22-ன்கீழ் அதன் பணிகளைச் செய்ய புதிய துணை அமைப்புகளை நிறுவ அதிகாரம் கொண்டுள்ளது. இதற்கு முன்பும் இந்த அதிகாரத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு  பயன்படுத்தியுள்ளது. எனவே அந்த அதிகாரத்தை மீண்டும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.


தெளிவாக வரையறுக்கப்பட்ட இடம்


'அமைதி மற்றும் நிலையான பாதுகாப்பு வாரியம்' (Board of Peace and Sustainable Security) என்பது தற்போது மோதலுக்கான தீர்வைக் கொண்டுவர தேவையான அமைப்பின் வெற்றிடத்தை நிரப்பும் என்று கூறப்படுகிறது. இந்த அமைப்பு சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கூட்டமைப்பின்  முதன்மைநிலையை சவாலுக்கு உள்ளாக்குவதைப் போல அமைந்தது. இந்த வாரியம் மாநிலங்களின் இறையாண்மை விவகாரங்களில் ஊடுருவாமலும் முன்கூட்டியே எச்சரிக்கை அல்லது மோதலுக்கு முந்தைய தலையீட்டையும் தவிர்க்கும் என்று தெரிகிறது. அதற்குப் பதிலாக, மோதல்களின் போதும் அதற்குப் பின்னரும், ஐ.நா. அமைப்பின் பிடிகள் தற்போது விலகியுள்ள இடங்களில் கட்டமைக்கப்பட்ட அரசியல் ஆதரவை வழங்குதல் போன்ற சில தெளிவான பகுதிகளில் மட்டும் இந்த வாரியம் கவனம் செலுத்தும் என்று சொல்லப்படுகிறது. 


அதன் அணுகுமுறை அரசியல் ரீதியாக மட்டுமே இருக்கும் என்பது தெரிய வருகிறது. தேசிய அளவில் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளை வலுப்படுத்துதல், சமாதான ஒப்பந்தத்தை செயல்படுத்துவதோடு, நாடுகளின் இராஜதந்திர முயற்சிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் அமைதி காக்கும் பணியை நம்பகத்தன்மை வாய்ந்த அரசியல் இலக்குகளுடன் இணைத்தல் போன்ற தொலைநோக்குத் திட்டங்களை உறுதி செய்வதே இந்த புதிய வாரியத்தின் பணியாகக் கருதப்படுகிறது. இந்த அமைப்பு ஐ.நா. பொதுச்செயலாளர் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபையுடன் ஒருங்கிணைந்து செயல்படும் என்று கூறப்படுகிறது. இந்த வாரியாமானது ஐ.நா. பொதுச்செயலாளர் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு குழுவுடன் (UNSC) ஒருங்கிணைந்து செயல்படும், அமைதி கட்டமைப்பு குழுவை (Peacebuilding Commission (PBC)) உள்ளடக்கியிருக்கும். மேலும் ஐ.நா. அமைதி பாதுகாப்பு மற்றும் அமைதி கட்டமைப்பு உத்திகளை அரசியல் விளைவுகளுடன் ஒருங்கிணைக்க உதவும். இந்த அமைப்பு ஐ.நா. பாதுகாப்புச் சபையின் அதிகாரத்தையும், பிரிவு 99-ன்கீழ் பொதுச்செயலாளரின் அதிகாரங்களையும் மதிக்கும் என்று வரையறை செய்யபடுகிறது.


இந்த அமைப்பைப்  பிரதிநிதித்துவப்படுத்துங்கள்


இத்தகைய அமைப்பின் நம்பகத்தன்மை என்பது அதன் உறுப்பினர்களைப் பொறுத்தது. இந்த புதிய அமைப்பு பிரதிநிதித்துவமானதாக இருக்க வேண்டும், வெறுமனே அதிகாரமற்றதாக இருக்கக்கூடாது. ஐ.நா. பொதுச் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையான சுமார் இருபத்து நான்கு நாடுகளின் சுழற்சி உறுப்பினர்கள் மூலம் சமநிலை மற்றும் புதுப்பித்தலை உறுதிசெய்ய முடியும்.  ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் (Caribbean) மற்றும் மேற்கு ஆசியா ஒவ்வொன்றும் சமநிலை மற்றும் புதுப்பித்தலை உறுதி செய்வதற்காகச் சுழற்சி முறையில் செயல்படும் என்கின்றனர்.


முக்கியமாக, பிராந்திய அமைப்புகள் முழுமையாக பங்கேற்கும் நியூயார்க்கைப் போலவே அடிஸ் அபாபா (Addis Ababa), ஜகார்த்தா (Jakarta) மற்றும் பிரேசிலியாவிலும் (Brasília) அமைதி உருவாகிறது. நிரந்தர உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் கூடுதல் அதிகாரம் வழங்கப்படாது. வீட்டோக் அதிகாரங்களால் (vetoes) செயல்பாடுகளை முடக்கவும் முடியாது. ஐ.நா. உறுப்பினர் நாடுகள், பிராந்திய அமைப்புகள் அல்லது பொதுச்செயலாளர் மட்டுமே நிகழ்ச்சி நிரல்களை முன்மொழிய முடியும் என்று வரையறுக்கப்படுகிறது.  சிவில் சமூகம் ஆலோசனை வழங்க முடியும் ஆனால் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. 


நிலையான பாதுகாப்பு (sustainable security) என்ற கருத்து முக்கியமானது. பாதுகாப்பு ஏற்பாடுகளால் மட்டும் நீடித்த அமைதியைப் பராமரிக்க முடியாது என்பதை இந்த வாரியத்தின் நடவடிக்கைகள் அங்கீகரிக்கிறது. சீரான நிர்வாகம், உள்ளடக்கம் மற்றும் பொறுப்பான தலைமை மூலம் அரசியல் ஒப்பந்தங்கள் படிப்படியாக சட்டப்பூர்வமாக்கப்படும்போது அமைதிக்கான நிலைத்தன்மை உருவாக்கப்படும். நிலையான பாதுகாப்பு என்பது இறையாண்மையை மதிக்கிறது மற்றும் திணிக்கப்படுகிற தீர்வுகளைவிட காலப்போக்கில் செயல்படுத்தப்பட இருக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகளைப் பெறமுடியும் என்று நம்பப்படுகிறது. இது பாதுகாப்பை உண்மையான அரசியல் தேவைகளுடன் இணைக்கிறது. (நிலையான பாதுகாப்பு என்பது மோதல் சார்ந்த மேலாண்மையை நீண்டகால அரசியல் உறுதித்தன்னமையோடு ஒருங்கிணைக்கிறது. அமைதி முயற்சிகளை, நிர்வாகம், மேம்பாடு மற்றும் நாடுகளின்  ஒத்துழைப்புடன் சீரமைப்பதன் மூலம் இது "தடுப்பு பாதுகாப்பு"  உடன் தொடர்புடைய தேவையற்ற தலையீடுகளைத் தவிர்க்கிறது மற்றும் தேசிய அளவில் வழிநடத்தப்படும் அணுகுமுறைகளை மேலும் வலுப்படுத்துகிறது).


செயல்பாட்டு பாணி


பொதுவான அறிக்கைகளுக்கான மற்றொரு அமைப்பாக இல்லாமல் செயல்படும் அமைப்பாக இந்த வாரியம் இருக்கும். மற்ற அமைப்புகள் விலகிச் செல்லும் இடத்திலும் தொடர்ந்து செயல்படும் என்கிற உறுதியை அளிக்கிறது. காலப்போக்கில் உறுதிமொழிகளைக் கண்காணிக்கும் மற்றும் ஆணை புதுப்பிப்புகளுக்கு இடையில் அமைப்பின் வாக்குறுதிகளைத் தொடர்ந்து  பாதுகாக்கும் என்று அறியப்படுகிறது. நீண்டகாலமாகவே ஐ.நா.வின் செயல்பாடுகளில் வழக்கமாகிவிட்ட சறுக்கலை நிச்சயம் குறைக்குமென்றும்  அமைதிக்கான பலவீனமான சூழல் இருக்கும்போது சர்வதேச நாடுகளின் சமரசம் சார்ந்த முயற்சிகளுக்கு இந்த அமைப்பு வழிகாட்டும் என்றும் கூறப்படுகிறது


அதன் ஆணை தோற்றத்தில் மிதமானதாக இருக்கலாம் ஆனால் நடைமுறையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது ஐ.நா. அமைப்பின் மையத்தில் ஐ.நா.விற்குள் கட்டமைக்கப்பட்ட அரசியல் சார்ந்த ஆதரவைக் கொண்டுவரும் என்றும் நம்பப்படுகிறது. எல்லை மீறல்கள் இல்லாமல் தொடர்ச்சியையும், மோதல் போக்கற்ற ஒருங்கிணைப்பையும் உருவாக்கும் என்று கருதப்படுகிறது. இது நாடுகளுக்கு இறையாண்மை பாதுகாக்கப்படுகிறது என்று உறுதியளிக்கும் மற்றும் சமூகங்களுக்கு முதல் சிரமத்தில் அமைதி கைவிடப்படாது என்று உறுதியளிக்கும்.


ஐ.நா. அமைப்பின் சீர்திருத்தம் நீண்டகாலமாக முழுமையான சொற்களில் விவாதிக்கப்படுகிறது. அமைப்பை அப்படியே ஏற்றுக்கொள்வது அல்லது அதை முழுவதுமாக சீரமைக்க வலியுறுத்துவது என்பது  மிகவும் தவறான வழிமுறை. நிறுவனங்கள் மாறாமல் பொறுப்புடன் பரிணமிப்பதன் மூலம் மட்டுமே உயிர்வாழ்கின்றன. 'அமைதி மற்றும் நிலையான பாதுகாப்பு வாரியம்' (Board of Peace and Sustainable Security) பலதரப்பு அமைப்பைப் பாதிக்கும் அனைத்தையும் தீர்த்துவைக்க முயற்சி மேற்கொள்ளப்பவதில்லை. ஆனால், போரிலிருந்து அமைதிக்கான பயணத்தில் அரசியல் சார்ந்த தீர்வு காணப்படாமல் இருப்பது போன்ற  ஐ.நா.-வின்  மிகப்பெரிய பலவீனத்தை இந்த புதிய அமைப்பு நிவர்த்தி செய்யும் என்று தெரிய வருகிறது.


சீர்திருத்தம் எப்போதும் புதிய கோட்பாடுகளை மட்டுமே கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அமைதி நிலைத்திருக்க வேண்டும், அரசியல் உறுதிப்பாடுகள் உடன் இருக்க வேண்டும், ராஜதந்திரம் என்பதும்கூட  கண்ணியாமான நடவடிக்கையாக இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. அமைப்புகள் தக்க சமயங்களுக்காக இல்லாமல் தொடர்  செயல்முறைகளுக்காக கட்டமைக்கப்பட வேண்டும். ஐ.நா. அமைப்பு இப்போது இதை மீண்டும் புரிந்து கொண்டுள்ளது. ஐ.நா. அமைப்பு இது போன்ற புதுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அமைதி மற்றும் நிலைத்தமான பாதுகாப்பு வாரியம் (Board of Peace and Sustainable Security (BPSS)) உலகளாவிய அளவில் ஐ.நா.-வின் தாக்கத்தை அதிகரித்து மோதல்களை பொறுப்புடன் நிர்வகிக்கும் திறனை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகள் மூலம் மட்டும்தான்  உண்மையான சீர்திருத்தம் தொடங்க முடியும்.


நிருபமா ராவ் இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர்.



Original article:

Share: