73 மற்றும் 74 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்து முப்பதாண்டுகள் கடந்துவிட்டது. இச்சட்டங்கள் இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளை தன்னாட்சி அமைப்புகளாக செயல்பட வைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. இதைத் தொடர்ந்து, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த 2004 ஆம் ஆண்டில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் (Ministry of Panchayati Raj) உருவாக்கப்பட்டது.
அதிகாரப் பகிர்வின் நிலையை ஆராய்வதன் அடிப்படையில், சில மாநிலங்கள் முன்னேறியுள்ளன. பல மாநிலங்கள் முன்னேறவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. அதிகாரப் பரவலாக்கத்திற்கான மாநில அரசாங்கங்களின் அர்ப்பணிப்பு, அடிமட்ட அளவில் உள்ளாட்சியின் நிர்வாக வழிமுறைகளாக பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் செயல்திறனை உறுதிபடுத்துவதில் இவை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அரசியலமைப்புத் திருத்தம் மூலம் நிதிப் பகிர்வு பற்றிய குறிப்பிட்ட தகவல்களை வழங்குகிறது. இதில் சுதந்திரமான அளவில் வருவாய் ஈட்டுவது இதில் அடங்கும். ஒன்றிய சட்டத்திலிருந்து பெறப்பட்ட பல்வேறு மாநில பஞ்சாயத்து ராஜ் சட்டங்கள், வரிவிதிப்பு மற்றும் அவை வசூல் செய்வதற்கான விதிகளையும் கொண்டுள்ளன. இச்சட்டங்களின் அடிப்படையில், ஊராட்சிகள் தங்களது வளங்களை அதிகபட்ச அளவில் பெருக்கிக் கொள்ள பாடுபட்டுள்ளன. பங்கேற்பு திட்டமிடல் (Participatory planning) மற்றும் பட்ஜெட் (budget) ஆகியவை அமைச்சகத்தின் இத்தகைய தலையீடுகளின் விளைவாகும்.
தி இந்து (பிப்ரவரி 5, 2024) இதழில் சமீபத்தில் வெளியான ஒரு கட்டுரை, பஞ்சாயத்துகளால் ஈட்டப்படும் வருவாயில் 1% மட்டுமே பஞ்சாயத்துகளுக்கு வரிகளிலிருந்து திரும்பி வருகிறது, மீதமுள்ள தொகை மாநில மற்றும் மத்திய அரசின் மானியங்களாக வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. 80% வருவாய் மத்திய அரசிலிருந்தும், 15% மாநிலங்களிலிருந்தும் வருகிறது என்று இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளாக அதிகாரப் பகிர்வு முயற்சிகள் இருந்தபோதிலும், பஞ்சாயத்துகளால் உருவாக்கப்பட்ட வருவாய் இன்னும் மிகக் குறைவாகவே உள்ளது என்பதை இது காட்டுகிறது. இது அதிகாரப்பரவலை ஆதரிப்பவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது.
சொந்த வருவாய் ஆதாரத்திற்கான வழிகள்
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் சொந்த வருவாயை (source of revenue (OSR)) எவ்வாறு திரட்ட முடியும் என்பது பற்றி பேசுகிறது. பஞ்சாயத்துகள் சேகரித்து பயன்படுத்தக்கூடிய வரிகள் மற்றும் பிற வருமான ஆதாரங்களை உள்ளடக்கிய மாநில சட்டங்களை இது விளக்குகிறது. சொத்து வரி, நில வருவாய் வரி, முத்திரை வரி கூடுதல் கட்டணம், சுங்கச்சாவடிகள், தொழில்முறை வரி, விளம்பர கட்டணம், நீர் மற்றும் சுகாதார பயனர் கட்டணங்கள் மற்றும் விளக்கு கட்டணம் ஆகியவை முக்கிய வருவாய் ஆதாரங்களில் அடங்கும். பஞ்சாயத்துகள் நிதி விதிகளை அமைப்பதன் மூலம் வரிவிதிப்புக்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும். வரி மற்றும் வரி அல்லாத ஆதாரங்களைத் தீர்மானித்தல், விகிதங்களை அமைத்தல், அவற்றை தவறாமல் திருத்துதல், வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பகுதிகளை வரையறுத்தல் மற்றும் பயனுள்ள வரி வசூல் மற்றும் அமலாக்கச் சட்டங்களை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
கட்டணம், வாடகை, முதலீடுகளிலிருந்து வருமானம், விற்பனை, பணியமர்த்தல் கட்டணங்கள் மற்றும் ரசீதுகள் போன்ற வரி அல்லாத வருவாய்க்கு நிறைய சாத்தியங்கள் உள்ளன. கிராமப்புற வணிக மையங்கள், புதுமையான வணிக முயற்சிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், கார்பன் வரவுகள், கார்ப்பரேட் சமூக பொறுப்பு (Corporate Social Responsibility (CSR)) நிதிகள் மற்றும் நன்கொடைகள் உள்ளிட்ட புதுமையான திட்டங்கள் மூலம் சொந்த மூல வருவாயை (Own Source Revenue (OSR)) உருவாக்க பங்களிக்க முடியும்.
கிராம சபைகளின் பங்கு
உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி செல்வங்களை உருவாக்குவதன் மூலம் அடிமட்ட அளவில் தன்னிறைவு மற்றும் நீடித்த வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கிராம சபைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. விவசாயம், சுற்றுலா மற்றும் சிறு தொழில்கள் போன்ற வருமானம் ஈட்டும் திட்டங்களுக்கான திட்டமிடல் மற்றும் அதற்கான முடிவுகளை எடுப்பதில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வரி மற்றும் கட்டணங்களை வசூலிக்கலாம் மற்றும் அந்த பணத்தை உள்ளூர் வளர்ச்சி மற்றும் சமூக திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். கிராம சபைகள் பண நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கின்றன மற்றும் அவற்றை முடிவெடுப்பதில் அனைவரையும் ஈடுபடுத்துகின்றன. இது நம்பிக்கையை உருவாக்குகிறது மற்றும் கிராமங்கள் நிதி ரீதியாக சுதந்திரமாகவும் வலுவாகவும் மாற உதவுகிறது. வருவாய் பெருக்கத்தை அதிகரிக்க, கிராம சபைகள் தொழில்முனைவோரை ஊக்குவிக்க வேண்டும் மற்றும் வெளி குழுக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
பல மாநிலங்களில் கிராம பஞ்சாயத்துகளுக்கு வரி வசூலிக்கும் அதிகாரம் இல்லை. மேலும், பல இடங்களில் இடைநிலை மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு வரி வசூலிக்கும் பணி வழங்கப்படவில்லை. கிராம பஞ்சாயத்துகள் தங்கள் வரிகளில் 89%, இடைநிலை பஞ்சாயத்துகள் 7% மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகள் ஒரு சிறிய தொகையை மட்டுமே வசூலிக்கின்றன. அனைத்து மூன்றடுக்கு பஞ்சாயத்துகளுக்கும் நியாயமான முறையில் சொந்த வருவாய் ஒதுக்கீடு செய்வது அவசியம்.
பல உள்ளாட்சி அமைப்புகள் சொந்தமாக பணத்தை சம்பாதிப்பதை விரும்பாததற்கு காரணங்கள் உள்ளன. மத்திய நிதிக்குழு (Central Finance Commission (CFC)) மானியங்கள் அதிகரிப்பதால், பஞ்சாயத்துகள் தங்கள் சொந்த வருவாயை உயர்த்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்கள் 10 மற்றும் 11 வது மத்திய நிதிக்குழுக்களில் (CFC) ரூ.4,380 கோடியிலிருந்து 14 மற்றும் 15 வது நிதிக்குழுக்களில் (CFC) முறையே ரூ.2,00,202 மற்றும் ரூ.2,80,733 கோடியாக உயர்ந்தன. 2018-19ல் ரூ.3,12,075 லட்சமாக இருந்த வரி வசூல் 2021-2022ல் ரூ.2,71,386 லட்சமாக குறைந்துள்ளது. வரி அல்லாத வசூலும் ரூ.2,33,863 லட்சத்தில் இருந்து ரூ.2,09,864 லட்சமாக குறைந்துள்ளது. பஞ்சாயத்துகள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தங்கள் சொந்த வருவாயைத் திரட்ட போட்டியிடுகின்றன. ஆனால் இப்போது அவை ஒன்றிய மற்றும் மாநில நிதி ஆணையங்களின் மானியங்களை அதிகம் நம்பியுள்ளன. சில மாநிலங்கள் ஒரு ஊக்கத்தொகையாக நிர்ணயிக்கக்கூடிய மானியங்களை வழங்கும் கொள்கையைக் கொண்டுள்ளன. ஆனால் அது குறைவாகவே செயல்படுத்தப்படுகிறது. பஞ்சாயத்துகள், கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அவர்கள் சொந்த மூல வருவாய் (OSR) பஞ்சாயத்து நிதியுடன் நேரடியாக இணைக்கப்படவில்லை.
சார்புநிலையிலிருந்து விடுபடுதல்
வருவாய் ஈட்டக்கூடிய காரணிகளைக் கொண்டிருந்தாலும், வளங்களைத் திரட்டுவதில் பஞ்சாயத்துகள் தடைகளை எதிர்கொள்கின்றன. சமூகத்தில் நிலவும் 'இலவச கலாச்சாரம்' (freebie culture) வரி செலுத்துவதில் உள்ள தயக்கத்திற்கு பங்களிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வரிகளை விதிப்பது அவர்களின் பிரபலத்தை மோசமாக மாற்றும் என்று நினைக்கிறார்கள். இங்கு இதற்கான தீர்வு தெளிவாக உள்ளது: பஞ்சாயத்துகளை தன்னிறைவு பெற்ற நிறுவனங்களாக உருவாக்க வருவாயை உயர்த்துவதன் முக்கியத்துவத்தை தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கற்பிக்க வேண்டும். இறுதியில், மானியங்களை நம்பியிருப்பதை நாம் குறைக்க வேண்டும். இதனால் பஞ்சாயத்துகள் தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொள்ள முடியும். இதற்கு மாநில மற்றும் ஒன்றிய அரசு உட்பட நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் அர்ப்பணிப்பு முயற்சிகள் தேவை. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும், பொதுமக்களுக்கும் பஞ்சாயத்துகள் நிதி ரீதியாக சுதந்திரமாக இருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி கற்பிப்பது மிக முக்கியம்.
பி.பி.பாலன், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர்.