'கருதப்பெறும் காடுகளின்' (deemed forest) தன்மை மற்றும் பரப்பளவு குறித்த தெளிவான பார்வை அவசியம்.
1980 ஆம் ஆண்டின் இந்தியாவின் வன (பாதுகாப்பு) சட்டத்தை (Forest (Conservation) Act) மாற்றுவதற்கான மத்திய அரசின் திட்டத்தை இந்திய உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. 1951 மற்றும் 1975 க்கு இடையில் தோராயமாக நான்கு மில்லியன் ஹெக்டேர் வன நிலங்கள் திசைமாறின என்று ஒன்றிய அரசு குறிப்பிடுகிறது. சட்டத்தின் படி, காடுகளை திசை திருப்புவது இப்போது ஒன்றியத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இந்த சட்டத்தின்படி, ஒன்றிய அரசு வகுத்துள்ள விதிகளை பின்பற்றாமல் காடுகளை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாது. 1981 முதல் 2022 வரை, பிற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வன நிலத்தின் ஆண்டு சராசரி சுமார் 22,000 ஹெக்டேராகக் குறைந்துள்ளது என்று ஒன்றியம் கண்டறிந்தது. இந்த தொகை 1951 மற்றும் 1975 க்கு இடையில் பயன்படுத்தப்பட்டதை விட மிகக் குறைவு. இந்த சட்டத்தின் விதிகள் பெரும்பாலும் இந்திய வனச் சட்டம் அல்லது எந்தவொரு மாநில சட்டத்தாலும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட காடுகளுக்கு பொருந்தும். தமிழ்நாட்டின் கூடலூரில் சட்டவிரோதமாக மரம் வெட்டப்பட்ட வழக்கு, டி.என்.கோடவர்மன் திருமுல்பாடு தீர்ப்பு (T.N. Godavarman Thirumulpad judgment) என்று அழைக்கப்படும் மிக முக்கியமான நீதிமன்ற தீர்ப்புக்கு வழிவகுத்தது. இந்த முடிவு காடுகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பதை மாற்றியது. அனைத்து காடுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அவை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் அல்லது அவை யாருக்கு சொந்தமாக இருந்தாலும் சரி சில வறைமுறைகளுக்குட்பட்டே செயல்படவேண்டும் என்று கூறியது. இது 'கருதப்பெறும் காடுகள்' (deemed forests) என்ற கருத்தை அறிமுகப்படுத்தியது. இவை அரசு அல்லது வருவாய் பதிவுகளில் அதிகாரப்பூர்வமாக காடுகள் என்று பெயரிடப்படாத பகுதிகள். மாநிலங்கள் 'கருதப்பெறும் காடுகளை' (deemed forests) அங்கீகரிக்க நிபுணர் குழுக்களை அமைக்க வேண்டும். தீர்ப்பு வெளியாகி 28 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், ஒரு சில மாநிலங்கள் மட்டுமே இத்தகைய குழுக்களை அமைத்துள்ளன அல்லது தங்கள் பகுதிகளில் உள்ள 'கருதப்பெறும் காடுகளின்' (deemed forests) அளவை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளன.
வன (பாதுகாப்பு) சட்டத்தை Forest (Conservation) Act) தெளிவுபடுத்தி அதை மாற்றவதற்கு ஒன்றிய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏனென்றால், சில பதிவு செய்யப்பட்ட வன நிலங்கள் மாநில அரசுகளின் அனுமதியுடன் வனத்துறை அல்லாத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டன. ஒன்றியத்தின் கூற்றுப்படி, தனியார் குடிமக்கள் தனியார் தோட்டங்கள் மற்றும் பழத்தோட்டங்களை பயிரிட தயங்குகிறார்கள், ஏனெனில் அவை 'காடு' (forest) என வகைப்படுத்தப்படலாம் என்ற கவலைகள், கணிசமான சுற்றுச்சூழல் நன்மைகள் இருந்தபோதிலும், அவற்றின் உரிமையை ரத்து செய்ய வழிவகுக்கும். இந்தியா தனது நிகர பூஜ்ஜிய இலக்குகளை அடைய 2.5 முதல் 3 பில்லியன் டன் கார்பன் உறிஞ்சியை உருவாக்க இதற்கான இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு, வனச் சட்டங்கள் நெகிழ்வானதாக இருக்க வேண்டும். முன்மொழியப்பட்ட மாற்றங்கள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாத 'கருதப்பெறும் காடுகளின்' (deemed forest) பாதுகாப்பிலிருந்து விலக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த மாற்றங்கள் பல பொது நல மனுக்களுக்கு வழிவகுத்தது. இந்த மாற்றங்கள் காடுகளைப் பாதுகாக்கும் நோக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று மக்கள் கவலைப்படுகிறார்கள். உச்ச நீதிமன்றம் இன்னும் இதற்கான இறுதி முடிவை எடுக்கவில்லை. எவ்வாறாயினும், ஏப்ரல் மாதத்திற்குள் மாநிலங்கள் 'கருதப்பெறும் காடுகளை' (deemed forest) எவ்வாறு அடையாளம் காண்கின்றன என்பது குறித்த தகவல்களை சேகரித்து பகிர்ந்து கொள்ளுமாறு ஒன்றிய அரசை அது கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவின் கார்பன் உறிஞ்சிக்கு தனியாரின் நில பங்களிப்பு போதுமானதாக இல்லை என்று ஒன்றிய அரசு நம்புகிறது. ஆனால், இது அவர்களின் யூகம் மட்டுமே. இந்த முக்கியமான பிரச்சினையை சரியாக விவாதிக்க கள நிலவரத்தை முழுமையாக ஆய்வு செய்வது மிக அவசியம்.