ஒரு ஆளுநர் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யும் வரை குற்றவியல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன இதற்க்கு உதாரனமாக பல நிகழ்வுகள் உள்ளன.
மேற்கு வங்க ஆளுநர் சிவி ஆனந்த போஸ் மீது கொல்கத்தாவில் பாலியல் துன்புறுத்தல் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநரை குற்றம் சாட்டப்பட்டவராக பெயரிடவோ, வழக்கை காவல்துறை விசாரிக்கவோ, இயலாது என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 361-வது பிரிவு குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவுசெய்யப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கிறது. "தனது பதவியின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பயன்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்கும் அவர்கள் எந்த நீதிமன்றத்திற்கும் பதிலளிக்க வேண்டியதில்லை" என்று அது கூறுகிறது. இந்த சட்டபிரிவு அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது செய்யும் அல்லது செய்யத் தோன்றும் எந்தவொரு செயலையும் உள்ளடக்கியது.
இந்த விதி இரண்டு முக்கியமான துணை உட்பிரிவுகளை உள்ளடக்கியது:
1. குடியரசுத் தலைவருக்கோ அல்லது மாநில ஆளுநருக்கோ எதிராக அவர்கள் பதவியில் இருக்கும்போது எந்த நீதிமன்றத்திலும் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கவோ தொடரவோ முடியாது.
2. குடியரசுத் தலைவருக்கோ அல்லது மாநில ஆளுநருக்கோ அவர்களின் பதவிக்காலத்தில் கைது நடவடிக்கை அல்லது சிறைத்தண்டனை உத்தரவை எந்த நீதிமன்றமும் பிறப்பிக்க முடியாது.
மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நடத்திய நேர்காணலில் "ஆளுநர் மீது வழக்குத் தொடருவதற்கு எதிராக அரசியலமைப்பு மொத்தத் தடையை உருவாக்குகிறது. அவரை குற்றவாளியாக பெயரிட முடியாது. ஆளுநரின் பதவிக்காலம் முடிந்த பின்னரே அவர்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கமுடியும். ஆளுநர் ராஜினாமா செய்யும்போது அல்லது குடியரசுத் தலைவரால் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படலாம்.
2006ஆம் ஆண்டில் ராமேஸ்வர் பிரசாத் எதிர். இந்திய ஒன்றியம் (Rameshwar Prasad vs Union of India) என்ற உச்ச நீதிமன்ற வழக்கில், ஆளுநரின் விலக்கு குறித்து நீதிமன்றம் விவாதித்தது. தனிப்பட்ட தவறான நடத்தை குற்றச்சாட்டுகளிலிருந்து விலக்கு அளிப்பதும் இதில் அடங்கும். உச்ச நீதிமன்றம், "ஆளுநருக்கு முழு விலக்கு உள்ளது" என்று கூறியது.
ஆளுநர் தனது செயல்பாடுகள் அல்லது முடிவுகளுக்கு எந்த நீதிமன்றத்திற்கும் ஆளுநர் பதிலளிக்க வேண்டியதில்லை என்று நீதிமன்றம் விளக்கியது. தனது கடமைகளைச் செய்யும்போது அவர் எடுக்கும் அல்லது எடுக்கத் தோன்றும் எந்தவொரு நடவடிக்கைகளும் இதில் அடங்கும். இந்த தீர்ப்பு குறிப்பாக விருப்புரிமை அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவதைக் குறிப்பிட்டது, குற்றவியல் புகார்கள் அல்ல.
இருப்பினும், ஓர் ஆளுநர் தனது பதவிக்காலம் முடியும் வரை அவர் மீதான குற்றவியல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதற்கு பல முன்னுதாரணங்கள் உள்ளன.
பாஜக தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீது கிரிமினல் சதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு அனுமதி அளித்தது. இந்த குற்றச்சாட்டுகள் 1992 பாபர் மசூதி இடிப்புடன் தொடர்புடையவை. இருப்பினும், உ.பி.யின் முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் அந்த நேரத்தில் ராஜஸ்தான் ஆளுநராக இருந்ததால் அவர் மீது வழக்கு விசாரணை தொடரப்படவில்லை.
கல்யாண் சிங், ராஜஸ்தான் ஆளுநராக இருக்கும்போது, அரசியலமைப்பின் 361 வது பிரிவின் கீழ் விலக்கு உண்டு என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அவர் ஆளுநராக பனி நிறைவு பெற்ற பின் நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்று நீதிமன்றம் கூறியது.
மேகாலயா ஆளுநர் மீது ஆளுநர் மாளிகை ஊழியர்கள் பாலியல் புகார் கூறியதை அடுத்து மேகாலயா ஆளுநர் வி.சண்முகநாதன் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2009 ஆம் ஆண்டில், ஆந்திர ஆளுநர் என்.டி.திவாரியும் ராஜ் பவனில் பாலியல் புகாரில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட பின்னர் "உடல்நிலையை" காரணம் காட்டி ராஜினாமா செய்தார்.