தேர்தல் தினத்தை விடுமுறை நாளாக அறிவித்த விவகாரம் - அமெரிக்கை வி நாராயணன்

 இந்தப் பிரச்சினை ஜனநாயகம் என்றால் என்ன என்பதில் ஆழமாக செல்கிறது.

 

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு வாக்களிப்பது என்பது வெறும்  கடமை அல்ல. அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமை. ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் வாக்களிப்பது கட்டாயம். தென்னாப்பிரிக்கா, தென்கொரியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் தேர்தல் நாளில் விடுமுறை அளிக்கின்றன. இது அதிகமான மக்கள் வாக்களிப்பில் பங்கேற்க உதவும். 


முதலாளிகள், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (Small and Medium-sized Enterprises (SMEs)), தேர்தல் நாளில் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்ற  கோரிக்கை அதிகரித்து வருகிறது. சிலர் அரசியலமைப்பு கொள்கைகளைக் குறிப்பிட்டு இதை ஆதரிக்கிறார்கள். மற்றவர்கள் அதன் முக்கியத்துவத்தை சந்தேகிக்கிறார்கள் மற்றும் தனிநபர் சுதந்திரங்களை மீறுவதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (Organisation for Economic Co-operation and Development (OOCED)) உள்ள பல முன்னேறிய ஜனநாயக நாடுகள் தங்கள் தேசிய தேர்தல்களை வார இறுதிகளில் நடத்துகின்றன.


அமெரிக்காவில், தேர்தல் நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு  சில  மாகாணங்கள் இதை ஊதிய விடுமுறையாக ஆக்குகின்றன. எவ்வாறாயினும், 'வாக்காளர் வாக்குப்பதிவை அதிகரித்தல்' (‘Increasing Voter Turnout’) குறித்து பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்  (Princeton University) நடத்திய ஆய்வில், தேர்தல் தினத்தை அரசு ஊழியர்களுக்கு விடுமுறையாக மாற்றுவது வாக்குப்பதிவை அதிகரிக்கும் என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. வெறுமனே வாக்கு பதிவு நாளில் விடுமுறை அளிப்பது வாக்குப்பதிவை அதிகரிப்பதற்கான ஒரு பயனுள்ள உத்தி அல்ல என்று ஆய்வு முடிவு  கூறுகிறது. 


சமநிலை பிரச்சினை


முதலாளிகள், தேர்தல் நாளை விடுமுறை தினமாக மாற்ற வேண்டும் என்பது முக்கியப்  பிரச்னையாக எழுந்துள்ளது. குடிமைக் கடமைக்கும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் இடையிலான சமநிலையை இது கேள்விக்குள்ளாக்குகிறது. வாக்களிப்பது கட்டாயம் இல்லை என்றால் வணிகங்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்கக் கட்டாயப்படுத்தப்பட வேண்டுமா? இந்தச் சுமையை முதலாளிகள் மீது சுமத்துவது சரியா?


கட்டாய விடுமுறை அறிவிப்பின் ஆதரவாளர்கள் வாக்களிப்பதை ஜனநாயகத்திற்கு முக்கியமானது என்று இந்திய அரசியலமைப்பு அங்கீகரிக்கிறது என்று வாதிடுகின்றனர். எனவே, தேர்தல் நாளில் ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிப்பது, இந்த அரசியலமைப்பு ஆணையை நிறைவேற்றும் வகையில், அவர்கள் வாக்குச் சாவடிகளை அணுகுவதை உறுதி செய்கிறது. மேலும், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI)), இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கம் (Associated Chambers of Commerce and Industry of India (ASSOCHAM)) மற்றும் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம் (National Association of Software and Services Companies (NASSCOM)) போன்ற அமைப்புகள் மக்கள் வாக்களிக்க உதவுவது உட்பட பரந்த சமூக இலக்குகளை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கட்டாய விடுமுறைகளை எதிர்ப்பவர்கள் தனிநபர் சுதந்திரம் மற்றும் சுதந்திர சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளுக்காக வாதிடுகின்றனர். ஜனநாயகத்தில், வாக்களிக்கலாமா வேண்டாமா என்ற உரிமை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தேர்தல் தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கலாமா என்பது உட்பட தங்கள் செயல்பாட்டுக் கொள்கைகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை முதலாளிகளுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு செய்ய அவர்களைக் கட்டாயப்படுத்துவது அவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கருதப்படலாம். குறிப்பாக குறைந்த வளங்களைக் கொண்ட சிறுவணிகங்களுக்கு இந்த நடவடிக்கைகள் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும்.  அமெரிக்கா போன்ற பிற ஜனநாயக நாடுகளுடன் ஒப்பிடுவது சிக்கலை மேலும் அதிகரிக்கிறது. அமெரிக்காவில், தேர்தல்நாள் ஒரு தேசிய விடுமுறை அல்ல, மேலும் வாக்களிப்பதற்கான அட்டவணையை நிர்வகிப்பதற்கு தனிநபர்கள் பொறுப்பு. சில மாகாணங்கள் வாக்களிப்பதற்கு ஊதியத்துடன் கூடிய நேரத்தை வழங்கினாலும், இது கூட்டாட்சி மட்டத்தில் நாடு தழுவிய அளவில் கட்டாயப்படுத்தப்படவில்லை.


இந்தியா என்ன செய்ய வேண்டும்?


வெவ்வேறு வணிகத் தேவைகள் மற்றும் கலாச்சார சூழல்களின் அடிப்படையில் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும் இதேபோன்ற அணுகுமுறையை இந்தியா பின்பற்ற வேண்டுமா என்ற கேள்விகளுக்கு இது வழிவகுக்கிறது. தமிழக உள்துறை செயலாளர் பி.அமுதா சமீபத்தில் முன்வைத்த ஒரு முன்மொழிவு, ஊதியத்துடன் கூடிய விடுப்பை வாக்களிப்பதற்கான சான்றுடன் இணைக்க வேண்டும் என்று முன்மொழிந்தார். இது வாக்காளர்களின் எண்ணிக்கையை ஊக்குவிக்கிறது. குடிமை ஈடுபாடு மற்றும் வணிகக் கவலைகளை நிவர்த்தி செய்து முதலாளிகள் முடிவெடுக்க அனுமதிக்கிறது. பணியாளர்கள் வாக்களித்து தங்கள் வேலைகளைச் செய்கிறார்கள். இது தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் சமூகக் கடமைகளை சமநிலைப்படுத்தும்.


முன்னோக்கில்


இறுதியில், தேர்தல் நாள் விடுமுறையாக இருக்க வேண்டுமா என்ற கேள்வி சட்டத்திற்கு அப்பாற்பட்டது. ஜனநாயகத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதுதான். மக்கள் மற்றும் வணிகங்கள் ஆகிய இருவரின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, வாக்களிப்பில் பங்கேற்க அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும். சட்டமியற்றுபவர்கள் கடுமையான விதிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, முதலாளிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தாமல் அதிகமான மக்களை வாக்களிக்க வைக்க ஆக்கப்பூர்வமான வழிகளை சிந்திக்க வேண்டும். எதிர்காலத்தில் தொழில்நுட்பம் எந்த அழுத்தமும் இல்லாமல் வீட்டிலிருந்து வாக்களிக்க அனுமதிக்கும். முதலாளிகள் தேர்தலுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டுமா என்பது பற்றிய இந்த விவாதம் சிக்கலானது. இது ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் பொருளாதாரம் போன்ற முக்கியமான கருத்துக்களை உள்ளடக்கியது. வாக்களிப்பது முக்கியமானது என்றாலும், குடிமைக் கடமை மற்றும் வணிகத் தேவைகள் இரண்டையும் மதிக்கும் சமநிலையைக் கண்டறிய வேண்டும். அதைப் பற்றிப் பேசுவதன் மூலமும், நெகிழ்வான யோசனைகளைக் கொண்டு வருவதன் மூலமும், இந்தியா தனது ஜனநாயக விழுமியங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் அதே வேளையில், பலதரப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.


நாராயணன் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த அரசியல்வாதி, கட்டுரையாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர் ஆவார்.




Original article:

Share: