இந்தியா-ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்க ஒப்பந்தம் (European Free Trade Association (EFTA)) பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு வலுப்படுத்துகிறது மற்றும் “மேக் இன் இந்தியா” முயற்சியுடன் எவ்வாறு ஒத்துப்போகிறது?
அதிகரித்து வரும் பாதுகாப்புவாதம் மற்றும் உலகளாவிய பொருளாதார உறுதியற்ற தன்மையுடன், ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துடனான இந்தியாவின் கூட்டாண்மை பொருளாதார வளர்ச்சி மற்றும் பன்முகத்தன்மைக்கு ஒரு முக்கிய வாய்ப்பை வழங்குகிறது.
சுதந்திர வர்த்தக சங்க ஒப்பந்த நாடுகளான (EFTA) - சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டீன் - புதுப்பிக்கத்தக்க ஆற்றல், துல்லியமான பொறியியல் மற்றும் நிதிச் சேவைகள் ஆகியவற்றில் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்குவதால், இந்தியாவின் கண்டுபிடிப்பு சார்ந்த பொருளாதாரத்திற்கு ராஜதந்திர வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குகின்றன.
எனவே, சுதந்திர வர்த்தக சங்க ஒப்பந்த நாடுகளுடன் உடன் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்தவும், வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கவும், பிப்ரவரி 10, 2025 அன்று புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஒரு பிரத்யேக மேசையை இந்தியா திறந்து வைத்துள்ளது. நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய ஆதரவு மையமாகச் செயல்படுவதன் மூலம், வணிக வாய்ப்புகளை உண்மையான நன்மைகளாக மாற்ற சுதந்திர வர்த்தக சங்க ஒப்பந்த மேசை உதவும்.
இருப்பினும், இந்தியா-EFTA வர்த்தகம் மற்றும் பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்திற்கு (Trade and Economic Partnership Agreement (TEPA) முன்னால் உள்ள முக்கிய வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ன?
கூட்டாண்மையின் புதிய சகாப்தம்
EFTA மேசை உருவாக்கம், இந்தக் கூட்டாண்மை வெறும் வர்த்தக ஒப்பந்தத்தைவிட அதிகம் என்பதைக் காட்டுகிறது. இது பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் நீண்டகால ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர வளர்ச்சியின் அடிப்படையில் ஆழமான ஒத்துழைப்பை நோக்கிய ஒரு படியாகும்.
EFTA நாடுகளிடமிருந்து முதலீட்டை ஈர்ப்பதற்கும், இந்தியாவில் விரிவடையும் நிறுவனங்களை ஆதரிப்பதற்கும் EFTA மேசை ஒரு முக்கிய இடமாக செயல்படும். இது சந்தை நுண்ணறிவு, ஒழுங்குமுறை வழிகாட்டுதல், நிதி மற்றும் வணிக ஆதரவு மற்றும் உள்நாட்டு கொள்கைகள் மற்றும் முதலீட்டு நடைமுறைகளுக்கு உதவுதல் போன்ற முக்கியமான சேவைகளை வழங்கும்.
முக்கிய வர்த்தகத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலம், இறக்குமதிகள் மற்றும் முதலீடுகளை அதிகரிக்க மேசை பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
TEPA ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, இரு தரப்பினரும் குறைந்த கட்டணங்கள், சுங்க செயல்முறைகள், சிறந்த சந்தை அணுகல் மற்றும் நிலையான வர்த்தகத்திற்கான வலுவான கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகி வருகின்றனர்.
ஆற்றலை உணர்ந்து கொள்ளுதல்
இந்த முயற்சிகள் மார்ச் 10, 2024 அன்று இறுதி செய்யப்பட்ட EFTA உறுப்பு நாடுகளுடனான இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக மற்றும் பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தை (TEPA) தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் (EFTA) 1960-ல் ஆஸ்திரியா, டென்மார்க், போர்ச்சுகல், நார்வே, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய ராச்சியம் (United Kingdom) ஆகியவற்றால் நிறுவப்பட்டது.
பல ஆண்டுகளாக, டென்மார்க் மற்றும் இங்கிலாந்து 1972-ல் கூட்டணியை விட்டு வெளியேறின. அதைத் தொடர்ந்து 1985-ல் போர்ச்சுகல் ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில் (European Economic Community (EEC)) இணைந்தது. ஸ்வீடனும் ஆஸ்திரியாவும் 1995–ல் EFTA-விலிருந்து வெளியேறி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.
மீதமுள்ள நான்கு EFTA உறுப்பினர்கள் - சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டீன் - பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றனர். இந்தியாவுடனான அவர்களின் வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் (Free Trade Agreements (FTAs)) முதல் முறையாக, இந்தியாவுடனான EFTA-ன் கூட்டாண்மை இலக்கு முதலீடு மற்றும் வேலை உருவாக்கத்திற்கான சட்டப்பூர்வ உறுதிப்பாட்டை உறுதிசெய்தது.
ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் 2008-ல் தொடங்கி 21 சுற்றுகள் நீடித்தன. 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இறுதி ஒப்பந்தம், EFTA நாடுகள் இந்தியாவில் $100 பில்லியன்களை முதலீடு செய்ய இருப்பதாக உறுதியளிக்கிறது.
இந்த முதலீடு 15 ஆண்டுகளில் 10 லட்சம் (1 மில்லியன்) வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு ஈடாக, மருந்துகள், ரசாயன பொருட்கள், கனிமங்கள் மற்றும் பிற பொருட்களுக்கு குறைந்த அல்லது பூஜ்ஜிய வரிகளில் சிறந்த சந்தை அணுகலை இந்தியா EFTA-க்கு வழங்கும்.
அதிகரித்து வரும் பாதுகாப்புவாதம் மற்றும் உலகளாவிய பொருளாதார உறுதியற்ற தன்மையுடன், இந்தக் கூட்டாண்மை இந்தியா அதன் இறக்குமதிகளை பன்முகப்படுத்தவும் சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் உதவும். EFTA மற்றும் இந்தியா இடையேயான பொருளாதார உறவு இரு தரப்பினருக்கும் குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ளது.
“மேக் இன் இந்தியா” முயற்சியை வலுப்படுத்துதல்
இந்தியா-EFTA வர்த்தகம் சீராக வளர்ந்து வருகிறது. இது 2022-23ஆம் ஆண்டில் $18.65 பில்லியனில் இருந்து 2023-24ஆம் ஆண்டில் $24 பில்லியனாக அதிகரித்துள்ளது. வர்த்தக சமநிலை EFTA-க்கு சாதகமாக உள்ளது. தனிப்பட்ட EFTA நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளும் வலுப்பெற்றுள்ளன.
இந்தியாவின் சந்திரன் திட்டத்தில் சுவிட்சர்லாந்தின் துல்லிய தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகித்தது. நான்கு EFTA நாடுகளில், சுவிட்சர்லாந்து இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நட்புநாடாகும். ஏப்ரல் 2000 முதல் செப்டம்பர் 2024 வரை இந்தியாவில் $10.72 பில்லியன் முதலீடு செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததன் மூலம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் நார்வே மற்றும் ஐஸ்லாந்தின் நிபுணத்துவம், இந்தியாவின் தூய்மையான எரிசக்திக்கு மாறுவதை ஆதரிக்கும். பசுமை இயக்கம், வட்டப் பொருளாதாரம், நீலப் பொருளாதாரம், கப்பல் கட்டுதல் மற்றும் கடல் உணவு உற்பத்தி ஆகியவற்றில் நார்வே இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற முடியும்.
உலகின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதியான $1.6 டிரில்லியன் மதிப்புள்ள நார்வேயின் இறையாண்மை செல்வ நிதியம், வலுவான தொழில்நுட்ப முதலீடுகள் காரணமாக 2023-ல் $213 பில்லியன் லாபத்தை ஈட்டியது. இது இந்தியாவிற்கு ஒரு பெரிய முதலீட்டு வாய்ப்பை உருவாக்குகிறது.
கூட்டு முயற்சிகள் மூலம் மருந்துகள், ரசாயனங்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் பொறியியல் ஆகியவற்றில் இந்தியா முதலீடுகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-EFTA, TEPA வர்த்தகம் மற்றும் முதலீட்டை எளிதாக்கும், குறிப்பாக தொழில்துறை பொருட்கள் மற்றும் சேவைகளில் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைப் பன்முகப்படுத்த உதவும். இது இந்தியாவின் “மேக் இன் இந்தியா” முயற்சியையும் அதிகரிக்கும்.
சவால்களை கண்டறிதல்
இருப்பினும், ஒப்பந்தத்தின் சாத்தியமான நன்மைகள் இருந்தபோதிலும், சில சவால்கள் உள்ளன. விதிமுறைகள் மற்றும் சந்தை அணுகலில் உள்ள வேறுபாடுகள் தடைகளை உருவாக்குகின்றன. மேலும், இந்த ஒப்பந்தம், EFTA நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதியைவிட, இந்தியாவிற்கான EFTA ஏற்றுமதிகளுக்கு சாதகமாக இருக்கலாம். முக்கியமாக, தற்போதுள்ள கட்டண கட்டமைப்புகள் காரணமாக அதிக நன்மை ஏற்படும்.
இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 2012-13-ல் $31.74 பில்லியனில் இருந்து 2022-23-ல் $14.8 பில்லியனாகக் குறைந்துள்ளது. இருப்பினும், ஒப்பந்தத்தின் கீழ் கட்டணங்களைக் குறைப்பது வர்த்தக பற்றாக்குறையை அதிகரிக்கக்கூடும்.
கூடுதலாக, இந்தியாவிற்கும் EFTA நாடுகளுக்கும் இடையிலான தயாரிப்பு தரம், சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு விதிகளின் வெவ்வேறு தரநிலைகள் வணிக ரீதியாக ஒன்றிணைந்து செயல்படுவதில் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். மேலும், விவசாயம் மற்றும் பால் துறைகளுக்கான வரிகளை இந்தியா குறைக்கவில்லை. இது சில EFTA ஏற்றுமதியாளர்களுக்கான நன்மைகளைக் கட்டுப்படுத்துகிறது.
இறுதியாக, அறிவுசார் சொத்துரிமைகள் (intellectual property rights (IPR)) ஒரு கவலையாகவே உள்ளன. EFTA நாடுகள் கடுமையான தரவு பிரத்தியேக விதிகளை விரும்புகின்றன. இது எதிர்கால சவால்களை உருவாக்கக்கூடும்.
இருப்பினும், இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகளுடன் வர்த்தகம் மற்றும் முதலீட்டை இணைப்பது உள்நாட்டு எதிர்ப்பை நிவர்த்தி செய்யவும், முதலீட்டிற்கு சாதகமான சூழலை உருவாக்கவும் உதவும். வரி அல்லாத தடைகளைக் குறைப்பதன் மூலமும் கூட்டு தொழில்நுட்பக் குழுக்களை அமைப்பதன் மூலமும் ஒழுங்குமுறை இடைவெளிகளைக் குறைப்பது நிலையான வர்த்தகத்தை சீராக்க உதவும். மேலும், உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவை ஒப்பந்தத்தை வலுப்படுத்தும். இது நிலையான விநியோகச் சங்கிலிகளை உருவாக்கவும், முதலீட்டை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்.
இந்தக் கூட்டாண்மை இப்போதுதான் தொடங்குகிறது. ஆனால், இரு தரப்பினரும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் நீண்டகால பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் உறுதியளித்துள்ளனர். இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா-இங்கிலாந்து FTA-க்களின் தாமதங்களில் காணப்படும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் வர்த்தக சவால்களுடன், வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (Trade and Economic Partnership Agreement (TEPA)) இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு முக்கியமான படியாகும். 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக (Viksit Bharat) ஆக வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கையும் இது ஆதரிக்கிறது.
(ஸ்ரேயா சின்ஹா விவேகானந்தா இன்டர்நேஷனல் பவுண்டேஷனில், புது டெல்லியில் ஒரு ஆராய்ச்சி கூட்டாளியாக [ஐரோப்பா டெஸ்க்] உள்ளார்.)