தொழில்துறையின் வணிகக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படும் பிரதமரின் அமெரிக்கப் பயணம் -சந்திரஜித் பானர்ஜி

 பிரதமரின் சுருக்கமான பயணம் மற்றும் அதன் மூலம் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் இந்தியா-அமெரிக்க பொருளாதார உறவை அதிகரிக்க உதவும்.


பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த வாரம் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட சுருக்கமான மற்றும் அதிகாரப்பூர்வ பயணம் பல வழிகளில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை வலுப்படுத்தியது மற்றும் அவர்களின் பொருளாதார உறவுக்கு புதிய உத்வேகத்தை அளித்தது. இந்த வருகை இரு நாட்டு தரப்பிலும் உள்ள தொழில்களுக்கு பல நன்மைகளைத் தந்தது. வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி ஆகியவற்றில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.


இந்திய தொழில்துறையைப் பொறுத்தவரை, இந்த முயற்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவை, இந்தியா உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் அதிக ஈடுபாடு கொள்ளவும், அதன் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை மேம்படுத்தவும், பாதுகாப்புத் துறையில் அதன் பங்கை அதிகரிக்கவும் உதவும்.


வர்த்தக உந்துதலை நோக்கி


முதலாவதாக, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் (Bilateral Trade Agreement (BTA)) முதல் கட்டத்தைத் தொடங்க ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இதில், வர்த்தக தடைகளைக் குறைத்து, ஒழுங்குமுறை தொடர்பான செயல்முறைகளை எளிதாக்குவதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். இந்த ஒப்பந்தம் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும். இது இந்தியாவை அவர்களின் விநியோகச் சங்கிலிகளில் ஒருங்கிணைக்கவும் உதவும். 2030-ம் ஆண்டுக்குள் 500 பில்லியன் டாலர் வர்த்தகத்தை எட்டுவதே இதன் இலக்கு ஆகும். இந்த இலக்குதான் லட்சியமானது என்றாலும், குறிப்பாக துறைசார் துணை இலக்குகள் மற்றும் எளிமையான எல்லை தாண்டிய நடைமுறைகள் இதனுடன் சாத்தியமானதாகும்.

இரு நாட்டு தரப்பினரின் வரிகளையும் நிவர்த்தி செய்ய ஏற்கனவே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு தொழில்துறை பொருட்களை ஏற்றுமதி செய்வதிலும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு உழைப்பு மிகுந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. விவசாயப் பொருட்களும் வர்த்தகத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இந்தத் திட்டம் இரு நாடுகளிலிருந்தும் ஏற்றுமதியை ஊக்குவிக்கிறது. கூடுதலாக, அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனங்கள் உட்பட பசுமை முதலீடுகளை ஊக்குவிக்கும் முயற்சியும் இதனுடன் உள்ளது.


இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry (CII)) 2020-ம் ஆண்டில் தனது அறிக்கையில் இந்த இலக்கை அங்கீகரித்துள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்பம் (IT), மருந்தகம் (pharma), ஆடைகள் மற்றும் ஜவுளி (garments and textiles) போன்ற துறைகள், திட்டம்-500 (Mission-500)-க்கான கூட்டு உறுதிப்பாட்டால் பலனடையும் என்று நம்புகிறது.


அமெரிக்க சந்தை ஏற்கனவே இந்திய ஏற்றுமதிகளுக்கு ஒப்பீட்டளவில் திறந்திருக்கும் நிலையில், நன்கு கட்டமைக்கப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) ஒன்றுக்கொன்று நன்மை பயக்கும். குறிப்பாக, இந்தியாவிற்கு அதிக அமெரிக்க முதலீடு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களை இது எளிதாக்கும்.


ஒரு தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் ஆற்றல் தொடர்பான கவனம்


இரண்டாவதாக, அமெரிக்கா-இந்தியா உறவை மாற்றுதல் உத்திக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் (Transforming the Relationship Utilizing Strategic Technology (TRUST)) இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் இராஜதந்திர  மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை எடுத்துக்காட்டுகிறது. இது தனியார் நிறுவனங்கள் தங்கள் அரசாங்கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.


TRUST முன்முயற்சியானது பாதுகாப்பு (defense), செயற்கை நுண்ணறிவு (artificial intelligence (AI)), குறைக்கடத்திகள் (semiconductors), குவாண்டம் கம்ப்யூட்டிங் (quantum computing), உயிரி தொழில்நுட்பம் (biotechnology), ஆற்றல் மற்றும் விண்வெளி (energy and space) உள்ளிட்ட பல முக்கியத் துறைகளில் கவனம் செலுத்துகிறது. இந்த முயற்சி, முக்கிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுடன் புதுமை மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை (innovation and technology collaborations) வலுப்படுத்தும்.


கூடுதலாக, INDUS புதுமை முயற்சி (INDUS Innovation initiative) மேம்பட்ட தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை விரைவுபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.


AI பொருளாதாரத்தில் இந்தியா ஒரு முக்கிய பங்களிப்பாளராக வளர்ந்து வருகிறது. AI உள்கட்டமைப்பு குறித்த அமெரிக்க-இந்திய சாலை வரைபடம் (U.S.-India Roadmap) தரவு மையங்கள், கணினி சக்தி மற்றும் AI மாதிரிகளில் முதலீடுகளைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி இந்திய AI தொடக்க நிறுவனங்களுக்கு அதிக நிதி வாய்ப்புகளை உருவாக்கக்கூடும். இது நிதி தொழில்நுட்பம், சுகாதார தொழில்நுட்பம் மற்றும் வேளாண் தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் பெரிய முதலீடுகளை ஈர்க்கக்கூடும். இந்த முன்னேற்றங்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகளாவிய தெற்குலக நாடுகளுக்கும் வளர்ச்சியை ஆதரிக்கும்.


மூன்றாவதாக, பாதுகாப்புத் துறை முயற்சிகள் இந்தியா-அமெரிக்க இராஜதந்திர கூட்டாண்மையை வலுப்படுத்துகின்றன. இது அதிகரித்த தொழில்நுட்ப பரிமாற்றங்கள், கூட்டு உற்பத்தி மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு மூலம் நிகழ்கிறது. இந்த ஆண்டு, அமெரிக்க-இந்திய முக்கியப் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான 10 ஆண்டு கட்டமைப்பு தொடங்கப்பட்டது. இது அவர்களின் பாதுகாப்பு உறவில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது. உள்நாட்டு உற்பத்தி, திறன் மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய பல்வேறு அமைப்புகளின் கூட்டு உற்பத்திக்கான ஒப்பந்தங்கள் இதில் எட்டப்பட்டன.


ஈடுசெய் விதிகள் (offset clauses) சேர்க்கப்பட்டால், இந்தியத் தொழில்கள் வருகையின் போது அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்களிலிருந்து பெரிதும் பயனடையலாம்.



          ஈடுசெய் விதிகள் : ஒப்பந்தங்களில் உள்ள ஈடுசெய் உட்பிரிவுகள், பொதுவாக வர்த்தக ஒப்பந்தங்களில் காணப்படுகின்றன. இதில் கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் அரசாங்க ஒப்பந்தங்கள், குறிப்பாக பாதுகாப்பு கொள்முதல் ஆகியவை அடங்கும். எந்த இழப்பீடுகளையும் ஈடுசெய்ய ஒரு ஈடுசெய் விதி (offset clause) ஒப்பந்தத்தில் சேர்க்கப்படலாம்.


நான்காவதாக, எரிசக்தி ஒத்துழைப்பு ஒரு முக்கிய விவாதப் பொருளாக இருந்தது. இந்தியா தனது எரிசக்தி ஆதாரங்களை பன்முகப்படுத்த விரும்புவதால், நீண்டகால நாடுகளின் இராஜதந்திர இணைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டது. உலகளாவிய எரிசக்தி நிலைத்தன்மை மற்றும் மலிவு விலையை மேம்படுத்த ஹைட்ரோகார்பன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை நாட்டு தலைவர்கள் வலியுறுத்தினர். இந்தியாவின் 2025-26 மத்திய பட்ஜெட்டில் சிறிய மட்டு உலைகளை (small modular reactors (SMRs)) உருவாக்குவதில் தனியார் துறையுடன் இணைந்து பணியாற்றும் திட்டங்கள் உள்ளன. இந்த தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதில் அமெரிக்க நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும். இந்தியா லட்சிய நிகர-பூஜ்ஜிய இலக்குகளைக் (net-zero goals) கொண்டிருப்பதால், அதன் பெரிய இயற்கை எரிவாயு இருப்புக்களுடன் அமெரிக்கா நம்பகமான எரிசக்தி விநியோகர்களாக இருக்க முடியும். இந்தக் கூட்டாண்மை இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த உதவும்.


ஐந்தாவது, இரு நாடுகளும் கூட்டு உள்கட்டமைப்பு திட்டங்களுடன் இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை (India-Middle East-Europe Economic Corridor (IMEC)) முன்னேற்றுவதாக உறுதியளித்துள்ளன. இரு நாடுகளும் இந்த பிராந்தியங்களில் பன்முக ஏற்பாடுகளில் இணைகின்றன. இது உள்கட்டமைப்பு மேம்பாட்டை விரைவுபடுத்தக்கூடும். இது இரயில்வே, சாலைகள், திறன்மிகு நகரங்கள் மற்றும் தொழில்துறை மண்டலங்கள் போன்ற பகுதிகளில் இந்திய தொழில்களின் அதிக பங்கேற்புக்கு வழிவகுக்கும். இந்தியாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் கடலுக்கடியில் கேபிள்கள் திட்டம் பற்றிய குறிப்பு இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சேவை ஏற்றுமதியை அதிகரிக்க உதவும்.




உயர் கல்வியில் இணைப்புகள்


ஆறாவது, கல்வியில், உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த இருநாட்டு தலைவர்கள் முடிவு செய்தனர். இதில் இந்தியாவில் அமெரிக்காவின் சிறந்த கல்வி நிறுவனங்களின் வளாகங்களை நிறுவுவதும் அடங்கும். இந்த நடவடிக்கை இந்திய மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இந்திய மாணவர்களுக்கு பயனளிக்கும். கூடுதலாக, சட்டப்பூர்வ இயக்கம் சீராக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த உந்துதலைத் தொடர இரு நாட்டு அரசாங்கங்களுடனும் இணைந்து பணியாற்ற இந்திய தொழில்துறை (Indian industry) உறுதிபூண்டுள்ளது. அவர்கள் வணிக சார்பு கொள்கைகளுக்காகவும், செயல்படுத்தலில் தொழில்துறை கருத்துக்களை உள்ளடக்கியிருப்பதை உறுதி செய்வதற்காகவும் வாதிடுகின்றனர். ஒத்துழைப்பு மற்றும் தொடர்ச்சியான சீர்திருத்த உணர்வோடு, இந்த வருகையின் நன்மைகளை முழுமையாக உணர முடியும். இது இந்தியாவின் பொருளாதாரத்தை உயர் வளர்ச்சிப் பாதையில் நிலைநிறுத்த உதவும். சுருக்கமாக, நரேந்திர மோடியின் அமெரிக்க வருகை, ஒரு தொழில்துறை கண்ணோட்டத்தில், வெறும் இராஜதந்திர திட்ட வெற்றியைவிட அதிகமாகும். இது உலகளாவிய கூட்டாண்மைகளைப் பயன்படுத்தி பொருளாதார சக்தியாக மாறுவதற்கான ஒரு திட்டமாகும். இந்தியா அதன் இராஜதந்திர கூட்டணி நாடுகளுடன் இணைந்து புதுமைகளை உருவாக்கி செழிக்க முடியும்.


சந்திரஜித் பானர்ஜி இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் இயக்குநர் ஜெனரலாக உள்ளார்.




Original article:

Share: