பொறுப்புத்தன்மை (accountability) மற்றும் சுதந்திரம் (independence) ஆகிய இரண்டும் நீதிபதிகளுக்கு சம முக்கியமானதாக இருக்க வேண்டும்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்கள் என்ற லோக்பாலின் தீர்ப்பும், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து அதற்கு தடை விதித்ததும் வெறும் சட்டக் கேள்வியை எழுப்புவதில்லை. இது நீதித்துறை சுதந்திரம் மற்றும் பொறுப்புத் தன்மை இரண்டையும் பாதிக்கிறது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் (Prevention of Corruption Act) ‘பொது ஊழியர்கள்’ (public servants) என்ற வரையறைக்குள் வந்தாலும், அரசியலமைப்பு நீதிமன்றங்களின் நீதிபதிகள் லோக்பாலுக்குப் பதில் அளிக்கும் பட்சத்தில் நீதித்துறை சுதந்திரம் பாதிக்கப்படும் என்று பலர் நம்புவதால், நீதிமன்றமும், அரசு சட்ட அதிகாரிகளும், மூத்த வழக்கறிஞர்களும் லோக்பாலின் முடிவை கவலையளிப்பதாகக் கண்டனர் என்பது புரிந்துகொள்ளத்தக்கது.
லோக்பாலின் கருத்தானது, முதல் பார்வையில் தவறானது போல் தெரிகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதன் அதிகார வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்பதற்கான எந்தவொரு தெளிவான வழிகாட்டுதல் எதுவும் இல்லை.
கடந்த மாதம், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான லோக்பால், முன்னாள் இந்திய தலைமை நீதிபதி (CJI) மீதான ஊழல் புகாரை தள்ளுபடி செய்தது. லோக்பால் சட்டம், 2013, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்காது என்று அது கூறியது. நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தவொரு அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் சட்டத்தில் உள்ள "நபர்கள்" என்ற குறிப்பு, அரசியலமைப்பால் நிறுவப்பட்டதால் உச்ச நீதிமன்றத்திற்கு பொருந்தாது.
இருப்பினும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து லோக்பால் வேறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தது. மாநில சட்டங்களால் உருவாக்கப்பட்ட உயர் நீதிமன்றங்கள் சட்டப்பூர்வ அமைப்புகள் என்று அது கூறியது. எனவே, அவற்றின் நீதிபதிகள் லோக்பால் சட்டத்தின் பிரிவு 14-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி "நபர்கள்" என்ற வரையறையின் கீழ் வருகிறார்கள்.
”கே. வீராசாமி vs இந்திய ஒன்றியம்-1991” (K. Veeraswami vs Union of India) வழக்கில் நீதித்துறையின் சுதந்திரம் முக்கிய கவலையாக இருந்தது. இந்திய தலைமை நீதிபதியை (CJI) கலந்தாலோசிக்காமல் நீதிபதிகளுக்கு எதிராக எந்த வழக்கும் பதிவு செய்ய முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிபதிகள் பொது ஊழியர்கள் என்றும் அது கூறியது.
இந்தக் கொள்கையைப் பின்பற்றி, லோக்பால் தலைமை நீதிபதிக்கு ஒரு புகாரை அனுப்பியது. லோக்பாலின் தீர்ப்பு மதிப்பாய்வில் இருக்கும்போது, ஒரு நீதிபதி மீது நம்பகமான ஊழல் குற்றச்சாட்டு எழுந்தால் அதன் பொறுப்புத் தன்மையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம்.
தற்போது, நீதிமன்றம் அத்தகைய வழக்குகளை ஒரு உள் செயல்முறை மூலம் கையாளுகிறது. ஒரு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமை நீதிபதி அல்லது குடியரசுத் தலைவரிடம் புகார் வந்தால் மட்டுமே இந்த செயல்முறை தொடங்குகிறது. குற்றச்சாட்டுகள் உண்மையாகத் தோன்றினால், பல நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். நீதிபதியை ராஜினாமா செய்யச் சொல்லலாம், நீதித்துறைப் பணி மறுக்கப்படலாம் அல்லது நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்படலாம்.
சில வழக்குகளில், நீதிபதிகள் ஒரு உயர் நீதிமன்றத்திலிருந்து மற்றொரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறார்கள். இருப்பினும், ஊழல் சம்பந்தப்பட்டதா என்பது உட்பட, இடமாற்றத்திற்கான காரணம் ஒருபோதும் வெளிப்படுத்தப்படுவதில்லை. தற்போதைய அமைப்பு போதுமானதா அல்லது அதன் மேற்பார்வையின் கீழ் சுதந்திரத்தனமான வழக்குத் தொடரலை உள்ளடக்க வேண்டுமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும். நீதித்துறைக்கு பொறுப்புத்தன்மை மற்றும் சுதந்திரம் ஆகிய இரண்டும் சமமாக முக்கியம் என்பது இங்கு தெளிவுப்படுத்தியுள்ளது.