கேரளாவில் PM-SHRI திட்டம் தொடர்பான சர்ச்சை : அந்த பள்ளிக் கல்வித் திட்டம் என்ன?, சில மாநிலங்கள் அதை ஏன் எதிர்க்கின்றன? -அபிநய ஹரிகோவிந்த்

 சமக்ர சிக்ஷா திட்டத்தின் (Samagra Shiksha scheme) கீழ் நிதி வெளியிடுவதை PM-SHRI திட்டத்தை செயல்படுத்தலுடன் ஒன்றிய அரசு இணைத்துள்ளது. இந்தத் திட்டம் எதைப் பற்றியது, அது ஏன் எதிர்ப்பை எதிர்கொள்கிறது என்பது இங்கே குறிப்பிட்டுள்ளது.


கேரளாவில் அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக PM-SHRI பள்ளிகள் திட்டம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கேரளாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPI(M)) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசாங்கம் இப்போது இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளது. அரசுப் பள்ளிகளை 'PM-SHRI' பள்ளிகள் என்று முத்திரை குத்த அனுமதிக்க மறுத்ததற்கு இது ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.


இந்த முடிவு எதிர்க்கட்சியான காங்கிரஸிடமிருந்து மட்டுமல்ல, இடது ஜனநாயக முன்னணி (LDF) கட்சிகளுக்கும் விமர்சனங்களைத் தூண்டியுள்ளது. இந்த முடிவை ஆலோசிக்கப்படவில்லை என்ற காரணத்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. மேலும், இடதுசாரிகளின் இதுவரையிலான நிலைப்பாடு தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ஐ எதிர்ப்பதாகவே இருந்து வருகிறது என்றும் அது வாதிட்டது.


இதற்கிடையில், கேரள அரசு PM-SHRI திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (Memorandum of Understanding (MoU)) கையெழுத்திட்டுள்ளது.


PM-SHRI திட்டம் என்றால் என்ன?


2022-ல் PM SHRI பள்ளிகளின் திட்டத்தை (PM-SHRI) ஒன்றிய அரசு அங்கீகரித்தது. தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ன் முக்கிய அம்சங்களை "வெளிப்படுத்தும்" 14,500 பள்ளிகளை உருவாக்குவதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். இந்தப் பள்ளிகள் தங்கள் பிராந்தியங்களில் உள்ள மற்றவர்களுக்கு "மாதிரி" (model) பள்ளிகளாகச் செயல்படும். இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் ஒன்றிய, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களால் நிர்வகிக்கப்படும் தற்போதைய தொடக்க, இடைநிலை மற்றும் உயர் இடைநிலைப் பள்ளிகளை உள்ளடக்கியது.


இதுவரை, 13,070 பள்ளிகள் PM-SHRI பள்ளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில், 1,533 பள்ளிகள் கேந்திரிய வித்யாலயாக்கள் (Kendriya Vidyalayas) மற்றும் நவோதயா வித்யாலயாக்கள் (Navodaya Vidyalayas) ஆகும். இவை ஒன்றிய அரசால் நிர்வகிக்கப்படுகின்றன.


ஒரு 'PM-SHRI' பள்ளி தேசிய கல்விக் கொள்கையின் (NEP) பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும். கல்வி அமைச்சகம் இதற்கான தெளிவான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. கற்பித்தல் மற்றும் கற்றல் புதுமையான முறைகளைப் பயன்படுத்த வேண்டும். இவற்றில் கலை சார்ந்த மற்றும் விளையாட்டு அடிப்படையிலான கற்றல் அடங்கும். பள்ளிகள் தொழிற்கல்வியை வழங்க வேண்டும் மற்றும் திறன் ஆய்வகங்களை அமைக்க வேண்டும். பள்ளிகள் இளைய வகுப்புகளில் உள்ள குழந்தைகள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் திறன்களை அடைவதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், அவை ஆய்வகங்கள் மற்றும் கணினிகள் உள்ளிட்ட போதுமான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை வழங்க வேண்டும். சோதனை மற்றும் மதிப்பீடுகள் மாணவர்களின் திறன்களை அளவிடுவதில் கவனம் செலுத்தும், மேலும் மனப்பாடம் செய்வதை சார்ந்து இருக்கக்கூடாது. இந்த பள்ளிகள் இடைநிற்றல் இல்லாநிலையை இலக்காகக் கொண்டு கற்றல் விளைவுகளை மேம்படுத்த வேண்டும்.


பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை, PM-SHRI பள்ளிகள் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பையோ அல்லது தேசிய கல்விக் கொள்கையின் (NEP) அடிப்படையில் மாநிலத்தால் உருவாக்கப்பட்ட மாநில பாடத்திட்டக் கட்டமைப்பையோ பின்பற்ற வேண்டும்.


அமைச்சகம் ஒரு பள்ளித் தர மதிப்பீட்டு கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இது திட்டத்தின்கீழ் பள்ளிகள் அவற்றின் முன்னேற்றம் மற்றும் மாற்றத்தைக் கண்காணிக்க உதவும் ஒரு சரிபார்ப்புப் பட்டியலாக இது செயல்படுகிறது. ஒரு பள்ளி பெறும் நிதியின் அளவு இந்த மதிப்பீட்டுக் கட்டமைப்பில் அதன் மதிப்பெண்ணைப் பொறுத்து அமைகிறது.


இந்தத் திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன.


எந்த மாநிலங்கள் PM-SHRI திட்டத்தை செயல்படுத்துகின்றன?


கேரளா அதை செயல்படுத்த ஒப்புக்கொண்ட நிலையில், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் மட்டுமே தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


சமக்ர சிக்ஷா திட்டத்தின் (Samagra Shiksha scheme) கீழ் டெல்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளத்திற்கு நிதி விடுவிப்பதை கல்வி அமைச்சகம் நிறுத்திய பிறகு, ஆம் ஆத்மி கட்சி ஆளும் பஞ்சாப் மற்றும் டெல்லி கடந்த ஆண்டு PM-SHRI திட்டத்தை செயல்படுத்த ஒப்புக்கொண்டன.


இந்தத் திட்டத்தில் பள்ளி பெயர்களில் 'PM-SHRI' என்ற முன்னொட்டு சேர்க்கப்பட வேண்டும் என்பதால் மேற்கு வங்காளம் இந்த திட்டத்தை எதிர்த்தது. ஆனால், அதற்கான செலவில் ஒரு பகுதியை மாநில அரசு ஏற்க வேண்டும்.


கடந்த ஆண்டு மார்ச் மாதம், கேரளா PM-SHRI திட்டத்தை செயல்படுத்த விருப்பம் தெரிவித்தது. ஆனால், பின்னர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய கல்விக் கொள்கையின் (NEP) அனைத்து விதிகளையும் மாநிலம் "முழுமையாக" செயல்படுத்தும் என்ற அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. திமுக ஆளும் தமிழ்நாடு இதே போன்ற காரணங்களுக்காக PM-SHRI திட்டத்தை எதிர்த்தது. தேசிய கல்விக் கொள்கையை (NEP) முழுமையாக செயல்படுத்த விரும்பவில்லை என்று கூறியது.


கேரளாவில், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசாங்கத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPI(M)) மற்றும் பாஜக இடையே "தொடர்பு" இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், "இந்த மாற்றத்தை கட்டாயப்படுத்திய அழுத்தம் என்ன" என்பதை முதலமைச்சர் வெளிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


இதற்கிடையில், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளன.


இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் நிபந்தனைகள் என்ன?


சமக்ர சிக்ஷா திட்டத்தின் (Samagra Shiksha scheme) கீழ் நிதி வெளியிடுவதை PM-SHRI செயல்படுத்தலுடன் ஒன்றிய அரசு இணைத்துள்ளது. சமக்ர சிக்ஷாவுக்கு ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் 60:40 என்ற விகிதத்தில் நிதியளிக்கின்றன. சமக்ர சிக்ஷா நிதி, கல்வி உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவதை ஆதரிக்கிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்களை வழங்குவதுடன், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஆதரவளிக்கிறது. மேலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவின்கீழ் மாணவர்களைச் சேர்ப்பதற்கான தனியார் பள்ளிகளின் கட்டணத்தை இது திருப்பிச் செலுத்துகிறது. PM-SHRI-ஐ செயல்படுத்த மறுத்த மாநிலங்கள் சமக்ர சிக்ஷாவின் கீழ் நிதியைப் பெறவில்லை.


2024-25 மற்றும் 2025-26-ஆம் ஆண்டுகளில் சமக்ர சிக்ஷா திட்டத்திற்காக கேரளா மாநிலமானது ஒன்றிய அரசிடமிருந்து இதுவரை எந்த நிதியையும் பெறவில்லை. மேலும், 2023-24-ஆம் ஆண்டிற்கான அதன் ஒதுக்கீட்டில் ஒரு பகுதியை மட்டுமே பெற்றுள்ளது. இது சமக்ர சிக்ஷாவிற்கு சுமார் ரூ.1,150 கோடி ஆகும்.


கேரள பொதுக் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி இந்த ஆண்டு மே மாதம் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், சமக்ர சிக்க்ஷா நிதியின் மாநிலப் பங்கானது, கல்வி உரிமைச் சட்டம் (RTE) உரிமைகள், பாடப்புத்தகங்கள் மற்றும் சம்பளம் போன்ற அத்தியாவசிய செலவினங்களுக்கு கேரளா பயன்படுத்தியுள்ளது என்று கூறினார். "ஆனால் சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான உதவித்தொகை, சீருடைகள் மற்றும் பள்ளி மானியங்களுக்கான நிதி போன்ற சில உறுதிமொழிகள் நிலுவையில் உள்ளன," என்று அவர் கூறினார்.


சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் நிதி தேவையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முடிவு இணைக்கப்பட்டுள்ளது என்று சிவன்குட்டி இந்த வாரம் கூறினார்.


PM-SHRI-ஐ செயல்படுத்த ஒன்றிய அரசுடன் மாநிலம் கையெழுத்திட வேண்டிய புரிந்துணர்வு ஒப்பந்தம், தேசிய கல்விக் கொள்கையை (National Education Policy (NEP)) முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோருகிறது.


"மாநில அரசு செயல்படுத்தக்கூடிய புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை மட்டுமே மாநில அரசு செயல்படுத்தும்," என்று சிவன்குட்டி இந்த வாரம் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். இதில், பள்ளிகளில் பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை மாநில அரசு தொடர்ந்து தீர்மானிக்கும் என்று கூறினார்.



Original article:

Share: