அணுசக்தி சோதனைக்கு எதிரான உலகளாவிய ஒருமித்த கருத்து பலவீனமடைந்துவரும் நிலையில், இந்தியா அதன் தேர்வுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். – அமிதாப் மத்தூ

 1998-ம் ஆண்டு அணு ஆயுத சோதனைகளுக்குப் பிறகு இந்தியா காட்டிய கட்டுப்பாடான அணுகுமுறையானது அதன் அனுபவத்தை வெளிப்படுத்தியது. இன்று, அமெரிக்கா மீண்டும் அணு ஆயுத சோதனைகளை தொடங்கும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில், அந்தக் கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் இந்தியாவின் தயார்நிலை அதன் நம்பிக்கையை வெளிப்படுத்தும்.




அமெரிக்கா மீண்டும் அணு ஆயுத சோதனைகளை பரிசீலிக்கும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்ததது, ஒரு பழைய விவாதத்தை மீண்டும் துவங்குவதைவிட அதிகம். பனிப்போருக்குப் பிந்தைய கட்டுப்பாடு குறித்த ஒருமித்த கருத்து எவ்வளவு பலவீனமாகிவிட்டது என்பதை அவர் உலகிற்கு நினைவூட்டினார். கடந்த முப்பதாண்டுகளாக, நாடுகள் அணு ஆயுத சோதனைக்கு தன்னார்வமாக, உலகளாவிய தடையைப் பின்பற்றி வருகின்றன. இது சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டதால் அல்ல, மாறாக இது அரசியல் வசதிக்கும், மற்றும் தார்மீக ரீதியிலான வலிமைக்கும் அடிப்படையாக செயல்பட்டது. இப்போது, ​​அந்த ஒப்பந்தம் பலவீனமடைந்து வருகிறது.


சோதனை இல்லாமல் அமெரிக்கா தனது அணு ஆயுத கிடங்கின் நம்பகத்தன்மையை சந்தேகிப்பது, மற்ற நாடுகளிலும் காணப்படும் நிலைமைகளைப் பிரதிபலிக்கின்றன. ரஷ்யா தனது ஆர்க்டிக் சோதனை மையங்களில் (Arctic test sites) செயல்பாட்டை மீண்டும் தொடங்கியுள்ளது. சீனா லோப் நூர் (Lop Nur) பகுதியில் தனது கட்டமைப்புகளை விரிவாக்குகிறது. மிக சக்திவாய்ந்த நாடுகள் சுயக்கட்டுப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கத் தொடங்கும்போது, அத்தகைய நம்பிக்கையைச் சார்ந்திருக்கும் உலகளாவிய அமைப்பு உடைந்துபோகத் தொடங்குகிறது.


இந்தியா இந்த உலகளாவிய மாற்றங்களை புறக்கணிக்க முடியாது. 1998-ல் இருந்து, இந்தியாவின் தன்னார்வ அணுசக்தி சோதனைத் தடை அதன் இராஜதந்திர ரீதியில் அனுபவத்தையும், நெறிமுறை நம்பிக்கையையும் வெளிப்படுத்தியது. அது உலகிற்கு இந்தியாவின் அணுசக்தித் திட்டம் நெறிமுறை அடிப்படையில் செயல்படுவதாக உறுதியளித்தது. இதனால் இந்தியாவுக்கு தூதரக சட்டபூர்வ அங்கீகாரம், தடைநீக்கம், மற்றும் சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு போன்ற நிபந்தனைகளுக்கும் வழிவகுத்தது. இருப்பினும், மறுஆய்வு இல்லாமல் கட்டுப்பாடு செயலற்றதாக மாறும். இந்தியா இப்போது தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும். இது சோதனையை மீண்டும் தொடங்கும் முதல் நாடாக அல்ல, ஆனால் சரிசெய்யும் கடைசி நாடாக இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த உதவும்.



25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் சோதனைகளுக்குப் பிறகு உலகின் அணுசக்தி நிலைமை பெரிதும் மாறிவிட்டது. ரஷ்யா முக்கிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களில் இருந்து விலகியுள்ளது. சீனா தனது அணு ஆயுதக் கிடங்கை வேகமாக விரிவுபடுத்தி, புதிய ஏவுகணை கிணறுகளை உருவாக்கி வருகிறது. உண்மையான அணு ஆயுத சோதனைகளை கணினி உருவகப்படுத்துதல்கள் (computer simulations) நிரந்தரமாக மாற்ற முடியுமா என்று அமெரிக்கா கேள்வி எழுப்பி வருகிறது. இந்தியா ஒருபோதும் கையெழுத்திடாத விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம், பெரிய நாடுகள்கூட அதை அங்கீகரிக்காததால் இன்னும் செயலற்ற நிலையில் உள்ளது. இன்று, அணு ஆயுத உத்தரவு உண்மையான ஒப்பந்தத்தைவிட தற்காலிக வசதியையே அதிகம் சார்ந்துள்ளது.


இந்தியாவின் நம்பகமான குறைந்தபட்ச தடுப்பு என்ற கோட்பாடு, முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற உறுதிமொழியில் உறுதிபடுத்தப்பட்டு, நாட்டிற்கு சிறப்பாக சேவையை செய்துள்ளது. இது இந்தியாவின் பொறுப்புணர்வானது இராணுவத் தயார்நிலையைப் பேணுவதைக் காட்டுகிறது. இது இந்தியாவின் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் அனுபவசக்தி என்ற பிம்பத்தையும் வலுப்படுத்துகிறது. இருப்பினும், தடுப்பு நடவடிக்கைகளில் நம்பகத்தன்மை நிரந்தரமானது அல்ல. இது ஆயுதங்களை வைத்திருப்பதை மட்டுமல்ல, அவற்றின் செயல்திறனில் உள்ள நம்பிக்கையையும் நம்பியுள்ளது. இந்தியாவின் ஆயுதங்கள் 1998-ல் உறுதிசெய்யப்பட்ட வடிவமைப்புகளை அடிப்படையாகக் கொண்டது. அதன்பிறகு தொழில்நுட்பம், பொருட்கள், மற்றும் விநியோக அமைப்புகள் முன்னேற்றமடைந்துள்ளன. கண்டங்களுக்கு இடையேயான வரம்பைக் கொண்ட அக்னி-V இப்போது செயல்பாட்டுக்கு வருகிறது. நீர்மூழ்கிக் கப்பல் ஏவப்பட்ட ஏவுகணைகளும் (Submarine-launched missiles) அறிமுகப்படுத்தப்படுகின்றன. அடுத்தகட்டமாக, பல சுதந்திரமான இலக்கு வைக்கக்கூடிய மறுநடவடிக்கை வாகனங்கள் (Multiple Independently Targetable Reentry Vehicle (MIRV)) உருவாகும். இதற்கு, வெடிப்புத் திறன் (yield), குறைக்கப்பட்டளவு (miniaturisation), மற்றும் நம்பகத்தன்மை (reliability) ஆகியவற்றில் புதிய நிலையின் உறுதிப்பாடு தேவைப்படும்.


கணினி மாதிரியாக்கம் மற்றும் துணை சோதனைகள் அறிவை விரிவுபடுத்தலாம். ஆனால், உண்மையான தரவுகளை முழுமையாக மாற்ற முடியாது. மிகுந்த அனுபவம் கொண்ட அமெரிக்காவேகூட உருவகப்படுத்துதல்கள் (simulations) போதுமானதாக இருக்கிறதா என நிச்சயமற்ற நிலையில் உள்ளது. குறைவான சரிபார்க்கப்பட்ட சோதனை முடிவுகளைக் கொண்ட இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த நிச்சயமற்றத் தன்மை அதிகமாக உள்ளது. முக்கிய கேள்வி இந்தியா உடனடியாக சோதனை செய்யவேண்டுமா என்பது அல்ல. மற்ற நாடுகள் சோதனையை மீண்டும் தொடங்கக்கூடிய எதிர்காலத்திற்கு இந்தியா எவ்வாறு தயாராக வேண்டும் என்பதுதான்.


கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்வது என்பது பொறுப்பற்ற முறையில் செயல்படுவதைக் குறிக்காது. சோதனை அவசியமானால், அது எப்போதாவது அவசியமானால், அறிவியல் பூர்வமாகவும், மட்டுப்படுத்தப்பட்டதாகவும், பொறுப்பானதாகவும் இருக்கலாம். ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக சரிபார்ப்புக்காக வடிவமைக்கப்பட்ட நிலத்தடி சோதனைகளின் தொடர், புதிய தலைமுறை வடிவமைப்புகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும். இதுபோன்ற சோதனைகள் இந்தியாவின் அணுசக்தி தடுப்பு நவீனமானது மற்றும் நம்பகமானது என்பதை எதிரிகளுக்குத் தெரிவிக்கும். அணுசக்தி இராஜதந்திரத்தில், உண்மையான வலிமையைப் போலவே கருத்தும் முக்கியமானது. இதை நம்புவதற்கு நம்பகத்தன்மை தெரியும்படி இருக்க வேண்டும்.


இருப்பினும், இந்தியா தனது கட்டுப்பாடு பெற்ற தார்மீக மற்றும் இராஜதந்திர மூலதனத்தைப் பாதுகாக்க வேண்டும். பொறுப்பான அணு சக்தி என்ற அதன் நிலைமை, தொழில்நுட்பத் திறமை மட்டுமல்ல, அதைப் பயன்படுத்தும் அறிவும் சார்ந்தது. இதற்கான சவால் என்னவென்றால், கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தயாராக இருப்பதுதான். இந்தியா சோதனை செய்வதற்கான விருப்பத்தைத் திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும், ஆனால் அணுசக்தி சோதனைகளை மீண்டும் தொடங்கும் முதல் நாடாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.


கட்டுப்பாடு என்பது செலவு இல்லாதது என்று கருதுவது, வளர்ந்துவரும் அதிகார சமநிலையை தவறாகப் புரிந்துகொள்வதாகும். சீனாவின் ஆயுதக் கிடங்கு அளவு மற்றும் நுட்பத்தில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. பாகிஸ்தான் உத்திமுறை மற்றும் கடல் சார்ந்த அமைப்புகளில் பன்முகப்படுத்தப்படுகிறது. அமெரிக்கா புதிய வகையான போர்முனைகளை உருவாக்கி மீண்டும் சோதனை செய்யத் தயாராக உள்ளது. இந்தியா நீண்டகாலமாக ஒருதலைப்பட்சமான கட்டுப்பாட்டைத் தொடர்ந்தால், அது புதிய உலகளாவிய ஆயுதக் கட்டுப்பாட்டு கட்டமைப்பிலிருந்து விலக்கப்படலாம். உண்மையான இராஜதந்திர தன்னாட்சிக்கு கடினத்தன்மை அல்ல, நெகிழ்வுத்தன்மை தேவை.


சோதனை தவிர்க்க முடியாததாக மாறினால், அது இந்தியாவின் நம்பகமான குறைந்தபட்ச தடுப்பு மற்றும் முதல் பயன்பாடு இல்லை என்ற நெறிமுறைக் கட்டமைப்பிற்கு இணக்கமாக இருக்க வேண்டும். காட்சிப்படுத்தலுக்காக அல்ல, சரிபார்ப்புக்கான சோதனை, இந்த கொள்கைகளுடன் இணைந்து செயல்பட முடியும். அதன் குறிக்கோள் அறிவு மற்றும் தயார்நிலைக்காக இருக்க வேண்டுமே தவிர ஆக்கிரமிப்பு அல்லது அதிகரிப்புக்காக அல்ல.


இது வெறும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு அப்பால் ஒரு ஆழமான கேள்வி உள்ளது. ஒரு ஜனநாயக நாடு சோதனை இல்லாமல் நம்பகமான தடுப்பு முறையை பராமரிக்க முடியுமா? நம்பகத்தன்மையை மறுபரிசீலனை செய்யப்படாத ஆயுதங்களை நம்பியிருக்குமாறு தலைவர்கள், விஞ்ஞானிகளையும் வீரர்களையும் உண்மையாகக் கேட்க முடியுமா? 1998-ன் தார்மீக தெளிவைத் திரும்பிப் பார்ப்பதன் மூலம் இந்த சந்தேகங்களைத் தீர்க்க முடியாது. இந்தியாவுக்கு ஒரு திறந்த மற்றும் தகவலறிந்த தேசிய விவாதம் தேவை. இந்த விவாதம் தொழில்நுட்பம், உளவியல் மற்றும் அரசியல் ஆகியவற்றின் உயிருள்ள கலவையாக தடுப்பு முறையைப் பார்க்க வேண்டும்.


1998-க்குப் பிறகு இந்தியாவின் கட்டுப்பாடு அனுபவத்தைக் காட்டியது. இன்று அந்த கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் துணிவு நம்பிக்கையின் அடையாளம். மற்றவர்கள் சந்தேகிக்கும்போது தைரியத்திலிருந்தும், எச்சரிக்கையின்போது ஞானத்திலிருந்தும் இராஜதந்திர ரீதியில் சுயாட்சிநிலை வந்தது. தயார்நிலை அமைதியை உறுதி செய்யும்போது வழக்கத்தைவிட சிறப்பாக முடிவெடுக்க இந்தியாவுக்கு இப்போது அதே தைரியம் தேவை.


டிரம்பின் அறிவிப்பு ஒருபோதும் நெவாடா பாலைவனத்தில் உண்மையான அணு ஆயுத சோதனைகளுக்கு வழிவகுக்காமல் போகலாம். ஆனால், 1992 முதல் நிலவிவந்த அமைதி இப்போது சிதறத் தொடங்கியுள்ளது. கேள்வி — இந்தியா வெறும் பார்வையாளராக இருப்பதா அல்லது புதிய உலக ஒழுங்கை வடிவமைப்பதா? மாறிவரும் உலகில், அசையாமல் இருப்பது புத்திசாலித்தனம் அல்ல, அது செயலற்ற தன்மையின் அடையாளம்.



இந்தியாவின் அணுஆயுத சோதனையை நிறுத்துவதற்கான இந்தியாவின் முடிவு தனக்குத்தானே அளித்த வாக்குறுதியாகும், மற்ற நாடுகளுடனான ஒப்பந்தம் அல்ல. தடைக்கான ஒவ்வொரு வாக்குறுதிக்கும் ஒரு வரம்புநிலை உண்டு. சூழ்நிலைகள் மாறும்போது, ​​அத்தகைய வாக்குறுதிகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். உண்மையான இராஜதந்திர ரீதியில் அனுபவம் மாற்றத்தை ஏற்றுக்கொண்டு அதற்குத் தயாராக இருப்பதாகும். உலகம் வெடிப்புகள் மூலம் ஆயுதங்களைச் சோதிக்கத் திரும்பினால், அதன் அணு ஆயுதத் தடுப்பு நெறிமுறை மற்றும் நம்பகமானது என்பதை இந்தியா உறுதிசெய்ய வேண்டும்.


அமிதாப் மத்தூ, பேராசிரியர் மற்றும் இயக்குநர், சர்வதேச ஆய்வு பள்ளி, ஜே.என்.யு; முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினர் ஆவர்.



Original article:

Share: