மாதிரி ஐக்கிய நாடுகள் (Model United Nations) அமைப்பு உலகளாவிய குடிமைப்பண்பை வளர்க்கும் எனில், மாதிரி இளைஞர் கிராம சபை (Model Youth Gram Sabha) குடிமை பெருமையையும் உள்ளூர் தலைமைத்துவத்தையும் வளர்க்கும்.
மக்களவை அல்லது சட்டமன்றம் அளவுக்கு கிராம சபைக்கும் இந்தியாவின் ஜனநாயக அமைப்பில் முக்கியத்துவம் உண்டு. ஆனால், மக்களாட்சியின் அரசியலமைப்பிற்கு அடித்தளமாக இருக்கும் கிராம சபை, பொதுவாகப் பேசப்படும் உரையாடல்களிலும் குடிமக்கள் விழிப்புணர்விலும் பெரிதாக இடம்பெறுவதில்லை. குழந்தைகள் பாராளுமன்றம் (Children’s Parliament), இளைஞர் பாராளுமன்றம் (Youth Parliament) அல்லது மாதிரி ஐக்கிய நாடுகள் அமைப்பு (Model United Nations) போன்ற அமைப்புகளைப் போல, மாதிரி இளைஞர் கிராம சபையும் (Model Youth Gram Sabha) பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத கருத்தாகவே இருக்கிறது. ஆனால், பாராளுமன்றத்தைக் காட்டிலும் கிராம சபைகளில்தான் ஜனநாயகத்தின் உண்மையான வடிவம் வெளிப்படுகிறது. நேரடி, பங்கேற்பு நிறைந்த, பொறுப்புமிக்க முறையில் கிராமசபை நடத்தப்படுகிறது.
1992ஆம் ஆண்டின் 73வது திருத்தச் சட்டத்தின் மூலம் அறிமுகமான அரசியலமைப்பின் 243A-ஆம் பிரிவு, கிராம சபையை பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் (Panchayati Raj system) அடிப்படையாக வரையறுக்கிறது. இது ஒரு கிராமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு வாக்காளரையும் கூட்டங்களில் பங்கேற்கச் செய்கிறது. அவர்கள் கிராமத்தின் நிதிநிலை, வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் ஆட்சி முன்னுரிமைகள் குறித்து விவாதிக்க முடிகிறது. இது கிராம மக்கள் தங்களது சமூகத்தைச் சார்ந்த முடிவுகளில் பங்கேற்க வழிவகைச் செய்வதோடு அரசியல் சார்ந்த வெளிப்படைத்தன்மையையும் மக்களின் பொறுப்பையும் ஊக்குவிக்கிறது. ஆனால், அதன் புரட்சிகரமான திறனைப் பொருட்படுத்தாமல், கிராம சபைக் கூட்டங்களில் மக்களின் பங்கேற்பு மிகக் குறைவாகவே உள்ளது.
கிராம சபைகள் ஏன் எழுச்சி அளிப்பதாக இல்லை?
நீங்கள் ஒரு கிராமத்தை வழிநடத்த விரும்புகிறீர்களா? என்று ஒரு இளைஞரிடம் கேட்டால் பெரும்பாலும் பதில் மௌனமாக இருக்கிறது. கல்வி பாடத்திட்டங்களும் மக்களவை, மாநிலங்களவைத் தேர்தல்கள், பாராளுமன்ற நிர்வாகம் அல்லது ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலக மாதிரிகளில்தான் கவனம் செலுத்துகின்றன. ஆனால், இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமான பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் இதுகுறித்து மௌனமாகவே உள்ளன. இதன் விளைவாக கிராம சபை என்பது உயிர்ப்புள்ள ஜனநாயக அனுபவமாக இல்லாமல் ஒரு நிர்வாகக் கருத்தாகவே பார்க்கப்படுகிறது. ஒரு வளர்ந்த பாரதத்தை (விக்சித் பாரத்) உருவாக்க, கிராமசபை என்பது உத்வேகம் அளிக்கும் தளமாக நிலைநிறுத்தப்பட வேண்டும். வளர்ச்சி மற்றும் ஜனநாயகத்தை வடிவமைக்க கிராமப்புற இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் உள்ளூர்களில் தலைமை தாங்கி வழிநடத்த அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். மேலும், கிராமசபை மாதிரிகள் (Simulations) பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களில் இணைக்கப்பட வேண்டும் போன்ற முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்படுகின்றன.
இந்த இடைவெளியைக் குறைக்கும் வகையில், 2025-ஆம் ஆண்டில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், கல்வி அமைச்சகம், பழங்குடியினர் நல அமைச்சகம் மற்றும் லட்சிய பாரத கூட்டுறவு (Aspirational Bharat Collaborative) அமைப்புடன் இணைந்து மாதிரி இளைஞர் கிராம சபை திட்டத்தைத் தொடங்கின. இங்கு மாணவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொறியாளர்கள் ஆகியோர்போல் பங்கு வகித்து கிராம நிதிநிலை மற்றும் வளர்ச்சி சார்ந்தத் திட்டங்களை விவாதிக்கிறார்கள். இந்தத் திட்டம் ஆசிரியர்களின் மேற்பார்வையில் இயங்குகிறது. போதிய பயிற்சி, பரிசுகள், உட்பட சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. இதனால் குடிமைக் கல்வி என்பது அனுபவமாக மாறி, கிராம உள்ளாட்சியைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே உருவாகிறது. மேலும், எதிர்கால சந்ததியினருக்கு ஜனநாயக ஈடுபாட்டை அவர்களிடையே உறுதியானதாக்குகிறது.
முதல்கட்டமாக, இந்தத் திட்டம் 28 மாநிலங்களிலும் 8 யூனியன் பிரதேசங்களிலும் (Union Territories) உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 600-க்கும் மேற்பட்ட ஜவஹர் நவோதய வித்யாலயங்கள் (jawahar Navodaya Vidyalayas), 200 ஏகலைவ மாதிரி குடியிருப்பு பள்ளிகள் (Eklavya Model Residential Schools) மற்றும் மகாராஷ்டிராவின் சில மாவட்ட ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் (Zilla Parishad schools) ஆகியனவாகும். 126 முதன்மை பயிற்சியாளர்கள் நாடு முழுவதும் இதற்காக ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கின்றனர். இதுவரை 24 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் 1,238 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். மேலும், இது குறித்த பல அமர்வுகள் (sessions) நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டமானது தேசிய அளவில் தொடங்கப்படுவதற்கு முன்பு, உத்தரப்பிரதேசத்தில் உள்ள பக்பட் ஜவஹர் நவோதய வித்யாலயத்திலும் (Jawahar Navodaya Vidyalaya Baghpat) ராஜஸ்தானின் அல்வார் ஏகலைவ பள்ளியிலும் (Eklavya Model Residential School) வெற்றிகரமான முன்னோடித் திட்டங்கள் நடத்தப்பட்டன. ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் உள்ள சிதாபூர் ஜவஹர் நவோதய வித்யாலயம் (Jawahar Navodaya Vidyalaya) பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாதிரி கிராம சபையில் பங்கேற்றனர். இரண்டாம் கட்டமாக, இந்த முயற்சி மத்திய நிறுவனங்கள், மாவட்ட ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளைத் தாண்டி அனைத்து மாநில அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
மாதிரியிலிருந்து உண்மையான மாற்றம்
இந்தியாவைப் போன்ற ஒரு ஜனநாயக நாட்டில், குடிமக்களின் தீவிரப் பங்களிப்பு என்பது வெறும் உரிமை மட்டுமல்ல முக்கியப் பொறுப்பும் ஆகும். மாதிரி ஐக்கிய நாடுகள் சபையானது உலகளாவிய குடிமைப்பண்பை வளர்த்தால், மாதிரி இளைஞர் கிராம சபையும் குடிமைப் பெருமையையும் உள்ளூர் தலைமைத்துவத்தையும் வளர்க்க உதவும். பஞ்சாயத்து ராஜ் (Panchayati Raj) அமைப்புகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதன்மூலம் ஜனநாயக அமைப்புகளில் குடிமக்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை மாணவர்களால் நன்கு புரிந்துகொள்ள முடியும். விவாதங்களை நடத்துவது, தீர்மானங்களை நிறைவேற்றுவது, மற்றும் ஒருமித்த கருத்தை அவர்களிடையே உருவாக்குவது போன்ற அனுபவம் முக்கியமான வாழ்க்கைத் திறன்களை (critical life skills) மாணவர்களிடம் வளர்க்க உதவுகிறது.
இந்த மாதிரியானது குடிமைக் கல்வியை (civic education) மறுவரையறை செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இதனை அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்துவதன் மூலம் கிராம சபைக் கூட்டங்களில் மக்களின் பங்கேற்பு மீண்டும் விருப்பமான ஒன்றாக மாறும் வாய்ப்புள்ளது. பள்ளியில் “இளைஞர் கிராம சபைத் தலைவர்” ஆக இருந்த ஒருவரே, எதிர்கால இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகவோ (Indian Administrative Service (IAS)) அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ பதவி வகிக்கும்பட்சத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தின் சக்தியை அதிகம் மதிக்கும் வாய்ப்பு உள்ளது.
வளர்ச்சியடைந்த இந்தியா (விக்சித் பாரத்) என்கிற தொலைநோக்குப் பார்வை வெறுமனே கொள்கைகளை மட்டும் சார்ந்து இருக்க முடியாது. நிர்வாகத்தை அரசின் பொறுப்பாக மட்டும் பார்க்காமல், பகிர்ந்து கொள்ளப்பட்ட குடிமைக்கடமையாகப் பார்க்கும் நாட்டின் குடிமக்களைச் சார்ந்துள்ளது. மாதிரி இளைஞர் கிராம சபை (Model Youth Gram Sabha) என்பது வெறும் வகுப்பறைப் பயிற்சி என்பதையும் கடந்து மக்களாட்சி மீளுருவாக்கத்திற்காக மாணவர்களிடையே எழுச்சியை ஏற்படுத்துவதற்கான ஒரு நாற்றங்கால் (seedbed) ஆகும்.
இளைஞர்கள் தங்கள் கிராம சபைக் கூட்டம் நாடாளுமன்றம் போலவே முக்கியமானது என்பதை அறியும் போது, ஜனநாயகம் ஒரு அருவமான அமைப்பாக இருப்பதை நிறுத்திவிடும் — அது வாழும் கலாச்சாரமாக மாறும். மேலும், இந்தியாவில் ஒவ்வொரு குழந்தையும் தங்கள் குரல் கிராம சபையில் முக்கியமானது என்று நம்பி வளரும்போது, உண்மையான பங்கேற்பு, தற்சார்பு, மற்றும் இரக்கமுள்ள தேசத்தின் கனவு இனி தொலைதூர ஆசையாக இருக்காது. அது இந்திய மக்களாட்சியின் அன்றாடத் துடிப்பாக மாறும்.