இந்தியா ஏன் யூரியா பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும்? – ஹரிஷ் தாமோதரன்

 அதிக மானிய விலையில் கட்டுப்படுத்தப்படும் உரத்தின் நுகர்வு உள்நாட்டு உற்பத்தியைவிட மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு திறமையான தேவை-விநியோக மேலாண்மை (demand-supply management) தேவைப்படுகிறது.


இந்தியாவின் யூரியா நுகர்வு நடப்பு நிதியாண்டில் 40 மில்லியன் டன்களை (மெட்ரிக் டன்) எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குக் காரணம், நல்ல பருவமழை காரணமாக ஏற்பட்ட அதிக தேவை மற்றும் கடந்த ஒரு பத்தாண்டுகாலமாக நைட்ரஜன் உரத்தின் அதிகபட்ச சில்லறை விலை (maximum retail price (MRP)) மாற்றப்படாதது இந்த அதிகரிப்புக்கு காரணம் ஆகும்.


இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் உரமான யூரியாவின் விற்பனை 2024-25 (ஏப்ரல்-மார்ச்) நிதியாண்டில் 38.8 மில்லியன் டன்களை எட்டியது, இதுவரை இல்லாத அதிகபட்சமாகும். தற்போதைய நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், விற்பனை வருடந்தோறும் 2.1% அதிகரித்துள்ளது. விவசாயிகள் கோதுமை, கடுகு, உருளைக்கிழங்கு மற்றும் பிற ராபி (குளிர்கால-வசந்த) பயிர்களை அதிக அளவில் பயிரிடுவதால், இந்த வளர்ச்சி தொடரும் அல்லது அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.


இந்த நிலைமையின் மூலம், மொத்த யூரியா நுகர்வு கிட்டத்தட்ட 40 மில்லியன் டன்களை எட்டக்கூடும்.


இடையறாத வளர்ச்சி (Relentless growth)


1990-91 மற்றும் 2010-11-க்கு இடையில் யூரியா நுகர்வு சுமார் 14 மில்லியன் டன்னிலிருந்து 28.1 மில்லியன் டன்னாக இரட்டிப்பாகியுள்ளது என்பதை அட்டவணை 1 காட்டுகிறது. பின்னர் இது 2013-14-ல் 30.6 மில்லியன் டன்னாக மேலும் உயர்ந்தது. அதன்பிறகு, நுகர்வு நிலையானதாக மாறியதன் அடிப்படையில், 2017-18-ல் 29.9 மில்லியன் டன்னாக சற்று குறைந்தது.


இந்த வீழ்ச்சிக்குக் காரணம், நரேந்திர மோடி அரசாங்கம் மே 2015-ல் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படும் அனைத்து யூரியாவிற்கும் வேப்ப எண்ணெய் பூச்சு (neem oil coating) கட்டாயமாக்கியது.


யூரியாவில் 46% நைட்ரஜன் வெளியீட்டைக் குறைப்பதற்காக வேப்ப எண்ணெய் பூச்சு மேற்கொள்ளப்பட்டது. இது அதன் செயல்திறனை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஒரு ஏக்கருக்கு தேவையான உரப்பைகள் குறைக்க வழிவகுப்பதுடன், துகள் பலகை, ஒட்டுப் பலகை மற்றும் கால்நடைத் தீவன உற்பத்தியில் இருந்து பால் கலப்படம் வரை அதிக மானிய விலையில் உரத்தை விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு சட்டவிரோதமாக மாற்றுவதைத் தடுக்கவும் இது நோக்கமாகக் கொண்டது.


ஆனால் வேப்பெண்ணெய் பூச்சு, 2018-ல் 50 கிலோ பைகளை 45 கிலோவாக மாற்றியதும், 2021 ஜூன் மாதத்தில் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு (Indian Farmers Fertiliser Cooperative (IFFCO)) அறிமுகப்படுத்திய ”நானோ யூரியா” போன்ற நடவடிக்கைகளும், 2017-18 முதல் யூரியா நுகர்வைக் குறைக்கவில்லை. இது 2020-21-ல் 35 மில்லியன் டன்னையும், இந்த நிதியாண்டில் 40 மில்லியன் டன்னையும் எட்டும் நிலையில் உள்ளது.


ஒரு தொழில்துறை வட்டாரம் குறிப்பிட்டதாவது, “இப்படியே சென்றால், 2030-க்குள் இதன் பயன்பாடு 45 மில்லியன் டன்னைத் தாண்டக்கூடும்”. இதற்குக் குறைந்த விலையே முக்கிய காரணம் ஆகும். 2012 நவம்பர் முதல் யூரியாவின் அதிகபட்ச சில்லறை விலை (MRP) ரூ.5,360-ஆகவும், 2015 ஜனவரி முதல் வேப்பெண்ணெய் பூச்சுடன் ரூ.5,628-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இப்போது மற்ற உரங்களின் டன் ஒன்றுக்கான விலையை ஒப்பிடுகையில், யூரியா மிகக் குறைவு. உதாரணமாக, ஒற்றை சூப்பர் பாஸ்பேட் (single super phosphate (SSP)) ரூ.11,500–12,000, டை-அம்மோனியம் பாஸ்பேட் (Diammonium phosphate (DAP)) ரூ.27,000, மற்றும் பிற கலப்பு உரங்கள் ரூ.37,000 வரை விலை கொண்டுள்ளன.


ஒரு நிபுணர் கூறிப்பிட்டதாவது “யூரியா, அடுத்த குறைந்த விலை உரமான SSP விட பாதி விலையில் கிடைக்கிறது. அதில் 46% நைட்ரஜன் உள்ளது, ஆனால் SSPயில் மொத்தம் 27% மட்டுமே ஊட்டச்சத்து உள்ளது. அரசாங்கம் யூரியாவின் MRP-ஐ இரட்டிப்பாக்கினாலும், இதற்கான தேவை கணிசமாகக் குறையாது.”


பற்றாக்குறையின் தாக்கம்


இதன் பற்றாக்குறை தோன்றத் தொடங்கியதில் ஆச்சரியமில்லை. சமீபத்திய காரீப் (பருவமழை) காலத்தில், யூரியாவைப் பெறுவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. பல மாநிலங்களில் இருந்துவரும் அறிக்கைகளின்படி, விவசாயிகள் தங்களுக்குத் தேவையான குறைந்தபட்ச அளவை வாங்குவதற்காக மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருப்பது தெரியவந்துள்ளது.


இப்போது புதிதாக துவங்கியுள்ள ராபி (குளிர்கால-வசந்த) பருவத்திலும் நிலைமை அவ்வளவு சிறப்பாக இல்லை. அக்டோபர் 1 அன்று யூரியா இருப்பு 3.7 மில்லியன் டன்னாக இருந்தது. இது, கடந்த ஆண்டு இதே தேதியில் 6.3 மில்லியன் டன்களை விடக் குறைவு.


நுகர்வு அதிகரிப்புக்கான காரணம் உள்நாட்டு உற்பத்தியில் அதிகரிப்புடன் பொருந்தவில்லை. அட்டவணை-1-ல் காட்டப்பட்டுள்ளபடி, உள்நாட்டு உற்பத்தி 2023-24-ல் 31.4 மில்லியன் டன்னாக அதன் அதிகபட்ச அளவை எட்டியது. பின்னர் அது 2024-25-ல் 30.6 மில்லியன் டன்களாகக் குறைந்தது. ஏப்ரல்-செப்டம்பர் 2025-ல், 2024-ல் இதே காலத்துடன் ஒப்பிடும்போது உற்பத்தி 5.6% குறைந்துள்ளது.


2019 மற்றும் 2022-க்கு இடையில் அமைக்கப்பட்ட ஆறு புதிய யூரியா ஆலைகள் இல்லாவிட்டால் நிலைமை மோசமாக இருந்திருக்கும். ஒவ்வொரு ஆலையும் ஆண்டுக்கு 1.3 மில்லியன் டன் உற்பத்தி திறன் கொண்டது.  கீழ்க்கண்ட  ஆலைகளில் பின்வருவன அடங்கும். இவை, 


  • இராஜஸ்தானில் கடேபன்-III நிலையங்களில், சம்பல் உரங்கள் மற்றும் இரசாயனங்கள், 


  • தெலுங்கானாவில் ராமகுண்டத்தில், ராமகுண்டம் உரங்கள் மற்றும் இரசாயனங்கள்


  • மேற்கு வங்கத்தில் பனகர் நிலையங்களில், மேடிக்ஸ் உரங்கள் மற்றும் இரசாயனங்கள்


  • உத்தரபிரதேசத்தில் கோரக்பூர், பீகாரில் பராவ்னி மற்றும் ஜார்க்கண்டில் சிந்த்ரி ஆகியவை இந்துஸ்தான் உர்வாரக் & இரசாயனங்கள் நடத்தும் அனைத்தும் இதில் அடங்கும். இந்த ஆலைகள் ஒன்றாக, இந்தியாவின் உள்நாட்டு யூரியா உற்பத்தியை 2019-20ல் 24.5 மில்லியன் டன்னிலிருந்து 2023-24ல் 31.4 மில்லியன் டன்னாக அதிகரிக்க உதவியது.


இருப்பினும், பல புதிய ஆலைகள் முழு திறனில் இயங்கவில்லை. இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு (IFFCO), தேசிய உரங்கள் மற்றும் கிருஷக் பாரதி கூட்டுறவுக்கு சொந்தமான பழைய ஆலைகள் சிறப்பாக செயல்படுகின்றன.


இரண்டு ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. இவை ஆந்திராவின் காக்கிநாடாவில் உள்ள நாகார்ஜுனா உரங்கள் & இரசாயனங்கள் மற்றும் உத்தரபிரதேசத்தின் பாங்கியில் உள்ள கான்பூர் உரங்கள் & இராசாயனங்கள் ஆகும். அவற்றின் உற்பத்தி திறன் முறையே 1.2 மில்லியன் டன் மற்றும் 0.7 மில்லியன் டன் ஆகும்.


முன்னோக்கிய பாதை


யூரியாவுக்கு அதிக தேவை தொடர்ந்து இருக்கும். இது மலிவு விலையில் உள்ளது, அதன் விலை இரட்டிப்பாக இருந்தாலும், அது இன்னும் மலிவான உரமாக இருக்கும். நானோ யூரியாவைப் போலல்லாமல் இது பயன்படுத்துவது எளிது. தாவர வளர்ச்சிக்கு நைட்ரஜன் அவசியம் என்பதால் இது மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.


மொத்த பயிர் பரப்பளவு விரிவாக்கம், நீர்ப்பாசன பரப்பளவு மற்றும் விவசாயிகள் சோளம் அல்லது கீரை வகைகள் போன்ற நைட்ரஜனை விரும்பும் பயிர்களை அதிக அளவில் நடவு செய்வதன் மூலம் மட்டுமே இது அதிகரிக்கும்.


சிறந்த நிலையில், யூரியா நுகர்வை சுமார் 45 மில்லியன் டன்களாக கட்டுப்படுத்தலாம். அதிகபட்ச சில்லறை விலையை (Maximum Retail Price(MRP)) சரிசெய்தல், விநியோகத்தை பங்கீடு செய்தல் (உதாரணமாக, ஒரு விவசாயிக்கு 25 மானிய விலை என்ற அடிப்படையில் பைகளுக்கு வரம்பிடுதல்) மற்றும் நைட்ரஜன் வெளியீட்டை மெதுவாக்கும் யூரியாஸ் அல்லது "நைட்ரஜன் ஏற்றம்" (Nitrification) தடுப்பான்களைச் சேர்ப்பதன் மூலம் இதைச் செய்யலாம்.


விநியோகப் பக்கத்தில், தற்போதைய நிறுவப்பட்ட திறன்கள் 30–31 மில்லியன் டன் (மெட்ரிக் டன்) யூரியாவை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். இறக்குமதியை 10 மில்லியன் டன்னுக்குள் வைத்திருக்க, இந்தியா சுமார் 5 மில்லியன் டன் புதிய திறனைச் சேர்க்க வேண்டும். இதன் பொருள், ஒவ்வொன்றும் 1.3 மில்லியன் டன் உற்பத்தி செய்யும் நான்கு புதிய ஆலைகளை உருவாக்குவது.


இந்தியாவில் தற்போது ஏழு செயல்பாட்டு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (liquefied natural gas (LNG)) முனையங்கள் உள்ளன. இவை குஜராத்தில் தஹேஜ், ஹசிரா மற்றும் முந்த்ரா; கேரளாவில் கொச்சி; மகாராஷ்டிராவில் தபோல்; தமிழ்நாட்டில் எண்ணூர்; மற்றும் ஒடிசாவில் தம்ரா ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. மேலும் ஆறு முனையங்கள் கட்டுமானத்தில் உள்ளன. தற்போதுள்ள முனையங்கள், விரிவான குழாய் வலையமைப்புடன், எரிவாயுவை இறக்குமதி செய்து நாட்டின் வலுவான யூரியா ஆலைகளுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கின்றன.


இந்த அமைப்பைக் கருத்தில் கொண்டு, துறைமுகங்களுக்கு அருகிலுள்ள மேற்கு மற்றும் தெற்கு சந்தைகளுக்கு யூரியாவை இறக்குமதி செய்வது முக்கியமாக அர்த்தமுள்ளதாக இருக்கும். வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியங்களுக்கு, எரிவாயுவை இறக்குமதி செய்து உள்நாட்டில் யூரியாவை உற்பத்தி செய்வது மிகவும் சிக்கனமாக இருக்கும்.


இது மொத்தக் கப்பல்களில் நேரடியாக யூரியாவை இறக்குமதி செய்வதிலிருந்து வேறுபட்டது. இத்தகைய இறக்குமதிகள் கூடுதல் செலவுகள் மற்றும் சிக்கலான தளவாடங்களை உள்ளடக்கியது. இந்த செயல்முறையில் துறைமுகத்தில் இறக்குதல், பைகளில் அடைத்தல், மீண்டும் ஏற்றுதல் மற்றும் தொலைதூர நுகர்வு மையங்களுக்கு யூரியாவை கொண்டு செல்வது ஆகியவை அடங்கும்.


வரும் நாட்களில், யூரியாவின் விநியோகம் மற்றும் தேவையை நிர்வகிப்பது ஒரு பெரிய சவாலாக இருக்கும். இது பொருளாதார மற்றும் அரசியல்ரீதியாக சிரமங்களை ஏற்படுத்தும்.



Original article:

Share: