இந்தியாவின் கப்பல் போக்குவரத்துத்துறை மேலும் வளர்வதற்கு அரசின் ஆதரவு தேவைப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய கடல்சார் வார நிகழ்வு (The India Maritime Week event), கப்பல் போக்குவரத்து என்பது வெறும் வணிகம் மட்டுமல்ல, அது முக்கியமான ராஜதந்திர ரீதியிலானக் கூறுகளைக் (strategic component) கொண்ட வணிகம் என்பதை அங்கீகரிக்கிறது. இருபது ஆண்டுகளாக, தனியார்மயமாக்கல், சுதந்திரமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என்ற கொள்கைச் சூழலின் காரணமாக இந்தியக் கப்பல் துறை பெரியளவில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதனால், அரசின் ஆதரவு குறைந்து, கடல்சார் துறையின் முக்கிய உத்திமுறையின் நோக்கமும் பலவீனமடைந்தது. துறைமுக உள்கட்டமைப்பு வசதிகளைத் தவிர அரசு பெரும்பாலும் கடல் பயணிகளுக்குப் பயிற்சி அளிப்பதிலும் கல்வி அளிப்பதிலும் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தது. இதன் மூலம் அவர்கள் வெளிநாட்டு கப்பல்களில் பணியாற்றி அந்நியச் செலாவணியைக் கொண்டுவர முடியும். ஒருகாலத்தில் உலகின் முன்னணி கப்பல் உரிமையாளர் கழகமாக இருந்த இந்தியக் கப்பல் கழகமும் (Shipping Corporation of India (SCI)) காலப்போக்கில் நிராகரிக்கப்பட்டது. அரசின் சாதகமான கொள்கைகள், உதாரணமாக இந்தியாவின் எண்ணெய் போக்குவரத்திற்கான முன்னுரிமை வழங்கும் நடைமுறையும் நீக்கப்பட்டன. இதனால் இந்தியக் கப்பல் கழகம் (Shipping Corporation of India (SCI)) பெரியளவில் வீழ்ச்சி அடைந்தது. மேலும் தனியார்மயமாக்கப்படுதல் என்ற நிலையில் இருந்தும் தப்பியது. கொரோனா (COVID-19) பெருந்தொற்றுப் பேரிடர் என்பது இந்திய நாட்டிற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்தியா வணிகத்திற்காக வெளிநாட்டு கப்பல்களைப் பெரிதும் நம்பியிருந்ததால், தன் சொந்த வர்த்தகத்தில் தலையிடுவதற்கான செல்வாக்கும் பெரியளவில் குறைந்திருந்தது. தனியார் கப்பல்துறை மிகவும் சிறியதாக இருந்ததால், முழுமையாகச் செயல்படவும் முடியவில்லை. கப்பல் போக்குவரத்து ஒரு வணிகமாக இருந்தாலும், ராஜதந்திர ரீதியில் மிகவும் முக்கியமானது என்பதையும் பெருந்தொற்றுக்குப் பிறகு அரசு புரிந்துகொண்டுள்ளது. குறிப்பாக குழப்பம், போர், மற்றும் தேசிய நலன், பாதுகாப்பு சார்ந்து மீண்டும் பிரச்சனைகள் எழும் காலங்களில் கப்பல் போக்குவரத்து எந்தளவிற்கு முக்கியம் என்பதை அரசு உணர்ந்துகொண்டது. இதனால், சமீபத்தில் அரசின் இந்தியக் கப்பல் கழகமானது (Shipping Corporation of India (SCI)) கப்பல் படையின் வலிமையை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
கடல்சார் வார விழாவில் அறிவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டின் பெரும்பகுதி துறைமுகத் துறையுடன் தொடர்புடையது. அரசு தனது துறைமுகங்களை குத்தகையாளர் முறையில் (Landlord Model) இயக்கிவருகிறது. இதில், தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இயக்க உரிமையைப் பெற்று, அரசுடன் வருவாய்த் தொகையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதன் மூலம் துறைமுகங்களுக்கு புதிய திட்டங்களை மேற்கொள்வதற்கான நிதி உதவியை அளித்துள்ளது. உதாரணமாக, சென்னை மற்றும் கொல்கத்தா துறைமுகங்கள் அந்தமான் தீவுகளில் இடைமாற்றுத் துறைமுக மையம் (transshipment hub project) அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளன. துறைமுக இணைப்பு, சாகர்மாலா திட்டங்கள் (Sagarmala projects), மற்றும் இந்திய கடற்படை பயிற்சி ஆகிய துறைகளிலும் முதலீடுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும், வெளிநாட்டு கப்பல் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள உள்நாட்டின் கிளை நிறுவனங்கள் மூலம் கப்பல்களை பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கையின் மூலம் இந்திய தேவைகளுக்காகக் கப்பல்களைப் பயன்படுத்துவதற்கும், காப்பீடு போன்ற வணிகங்களுக்கு ஆதரவளிக்கவும் அரசுக்குச் சாதகமாக இருக்குமென்றும் கூறப்படுகிறது. ஆனால், இந்திய வணிகக் கப்பல் கட்டுமானத் துறையில் இன்னும் பெரிய முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை. இதில் பெரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தால், இந்தியாவின் தொழில்துறை, தொழில்நுட்ப மற்றும் திட்ட மேலாண்மை போன்ற துறைகளின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். இந்தியக் கப்பல் கட்டுமானத் தளங்கள், அதிநவீன திரவ எரிவாயுவில் (Liquefied Natural Gas (LNG)) இயங்கும் கப்பல்களையோ அல்லது எதிர்காலத்துக்கான பசுமை எரிபொருளில் (futuristic green fuel burning vessels) இயங்கும் கப்பல்களையோ உருவாக்கத் தொடங்கினால் மட்டுமே இந்தியக் கப்பல் போக்குவரத்துத் உண்மையிலேயே முழு வேகத்தில் முன்னேறிச் செல்ல முடியும்.