நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic kidney disease) தமிழ்நாட்டில் இறப்புக்கு ஐந்தாவது முக்கிய காரணமாகும்.
உலக சிறுநீரக தினம் (World kidney day) ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் 'பராமரிப்பு மற்றும் உகந்த மருந்துப் பயிற்சிக்கான சமமான அணுகலை மேம்படுத்துதல்' (Advancing equitable access to care and optimal medication practice) என்பதாகும். டிசம்பர் 1971 இல், இந்தியாவில் முதல் சிறுநீரகவியல் துறை தமிழ்நாட்டின் அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியின் பிரீமியர் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றில் தொடங்கப்பட்டது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டின் கீழ் டயாலிசிஸ் திட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது உட்பட பல சாதனைகளை தமிழ்நாடு செய்துவருகிறது.
தமிழ்நாடு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் (Chief Minister’s Comprehensive Health Insurance Scheme (CMCHIS)) டயாலிசிஸ் திட்டத்தை வெற்றிகரமான நடத்தி வருகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளா மட்டுமே பொது - தனியார் கூட்டு (Public-Private Partnership) மாதிரியைத் தேர்வு செய்யாமல் அரசு மருத்துவமனைகளில் ஹீமோடையாலிசிஸ் திட்டத்தை (hemodialysis programme) நடத்துகின்றன. கூடுதலாக, 2021 ஆம் ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று பெரிட்டோனியல் டயாலிசிஸ் பைகளை (peritoneal dialysis bags) வழங்கி வருகிறது. இந்த திட்டம் பரிசோதனை, மருந்து விநியோகம், மற்றும் நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று நோய்த்தடுப்பு, பராமரிப்பு, உள்ளிட்ட சுகாதார சேவைகளை வழங்குகிறது. இருப்பினும், அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த இன்னும் நீண்ட தூரம் நாம் செல்ல வேண்டும்.
நாள்பட்ட சிறுநீரக நோய், தமிழ்நாட்டில் இறப்புக்கான ஐந்தாவது முக்கிய காரணியாக உள்ளது. இதனால் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்திற்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறது. மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் நெப்ராலஜி துறை (Institute of Nephrology) மற்றும் இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்யூனிட்டி மெடிசின் (Institute of Community Medicine) மூலம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், நாள்பட்ட சிறுநீரக நோய் தமிழ்நாட்டின் வயது வந்தோரில் 8.4% பேரை பாதித்துள்ளது, 0.3% பேருக்கு உடனடி டயாலிசிஸ் தேவைப்படுகிறது. நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம், அதிகரித்து வருவதால் நாள்பட்ட சிறுநீரக நோயின் சுமை அதிகரிக்கும், என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உடல்நலம், மற்றும் பொருளாதாரம், இரண்டையும் பாதிக்கும். ஒவ்வொரு ஆண்டும், தமிழக அரசு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் (CMCHIS) ஹீமோடயாலிசிஸுக்கு (hemodialysis) மட்டுமே ₹100 கோடிக்கு மேல் செலவிடுகிறது. இது ஒரு நோய்க்கு செலவிடப்படும் அதிகபட்ச தொகையாகும்.
சிறுநீரகங்கள் எவ்வளவு நன்றாக வேலை செய்கின்றன என்பதைப் பார்க்க இரத்தத்தில் உள்ள கிரியேட்டினின் அளவைப் பரிசோதிப்பது அவசியம். சிறுநீரில் அதிக புரதம் இருக்கிறதா என சோதிக்க டிப்ஸ்டிக் முறையைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக முதன்மை பராமரிப்பு அமைப்புகளில், அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு இது கட்டாயமாக தேவைப்படுகிறது. தமிழ்நாட்டு, மக்கள் அறியப்படாத, காரணங்களுடன் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப் படுகின்றனர். குறிப்பாக விவசாயம், உப்பளங்கள், செங்கல் சூளைகள், மற்றும் பிற தொழில்களில் பணிபுரிபவர்கள். தமிழகத்தில் ஏராளமானோர் விவசாயத்தில் ஈடுபட்டு வருவதால் அவர்களுக்கு இந்த சிறுநீரக நோயால் ஆபத்து ஏற்படுகிறது. நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட சிறுநீரக நோய்களுக்கு பெரும்பாலும் அறிகுறிகள் தென்படாது, எனவே தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்வது மிக முக்கியம்.
அரசு மருத்துவமனைகளில் அதிக சிறப்பு வாய்ந்த மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநில அரசு ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது. இதில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு உள்ளது. மருத்துவத்தின் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற அவர்கள் இந்த இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தலாம். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்கள் பல்வேறு துறைகளில் 900 மருத்துவர்கள் இருந்தாலும், மருத்துவக் கல்லூரிகளில் 20 தகுதிவாய்ந்த சிறுநீரக மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். மக்கள்தொகையில் 8.4% பேரை பாதிக்கும் ஒரு நோயுடன், ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் குறைந்தது இரண்டு சிறுநீரக மருத்துவர்கள் தேவை. நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு அதன் பல்வேறு கட்டங்களில் நிலை 1 முதல் 5 வரை சரியான சிகிச்சையை வழங்கினால் இறுதி கட்ட சிறுநீரக நோயைத் தடுக்கலாம், மேலும் நீண்ட காலத்திற்கு செலவுகளை மிச்சப்படுத்தலாம்.
தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு நீரிழிவு, மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கான, மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று மருத்துவ பனியாளர்கள் வழங்குகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் 1 கோடிக்கும் அதிகமான நபர்கள் பயனடைந்துள்ளனர். இருப்பினும், தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மருந்துகள் தேவைப்படுவதால், நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான மருந்துகளைச் இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும். இந்த திட்டம் பயண செலவுகள், மற்றும் ஊதிய இழப்பை குறைக்கிறது மற்றும் தொடர்சியாக மருந்து மாத்திரை உட்கொள்ளுதலை ஊக்குவிக்கிறது.
திராவிட மாதிரி அரசின் இரு கண்கள் சுகாதாரமும், கல்வியும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். சுகாதார சமத்துவத்தை அடைய ஒவ்வொரு நிலையிலும் நியாயமான நடவடிக்கைகளை அவர் உறுதி செய்துள்ளார். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைப் போலவே, நாள்பட்ட சிறுநீரக நோய்க்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது தேவையானதாக உள்ளது. இதன் மூலம் தமிழகம் அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியத்தை அடைய முடியும்.
சக்திராஜன் ராமநாதன், சென்னை மருத்துவக் கல்லூரியில் சிறுநீரகவியல் முதுநிலை உதவி பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.