சட்டங்கள் முதல் ஆயுதப் படைப் பணியாளர்களுக்கான இடைநிலைத் தொழில் படிப்புகளின் பாடத்திட்டங்கள் வரை, காலனித்துவ செல்வாக்குகளை அகற்றுவதால் பல பகுதிகளில் மாற்றங்களைக் காணலாம்.
இந்திய ஆயுதப் படைகள் காலனித்துவ தாக்கங்களை அகற்றுவதற்கான மாற்றங்களை பரிசீலித்து வருகின்றன. அவர்கள் ராணுவத்தை மேலும் இந்தியமாக்க விரும்புகிறார்கள்.
மேற்கத்திய நிபுணர்களுக்குப் பதிலாக இந்திய சிந்தனையாளர்களைப் படிப்பது, ராணுவத்தில் ஸ்காட்டிஷ் பைப் படைகளின் (Scottish-origin pipe bands) எண்ணிக்கையைக் குறைப்பது மற்றும் சில ராணுவப் பிரிவுகளுக்கு அதிக இந்திய அடையாளத்தை வழங்குவது ஆகியவை பரிசீலிக்கப்படும் மாற்றங்களில் அடங்கும்.
ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி சட்டங்களுக்குப் பதிலாக ஒரே முப்படைச் சட்டமும் திட்டமிடப்பட்டுள்ளது.
என்ன மாற்றங்கள் பரிசீலிக்கப்படுகின்றன?
இந்திய இராணுவ சிந்தனையை ஊக்குவிப்பதற்காக, இராணுவ அதிகாரிகளுக்கான தொழில் படிப்புகளில் இப்போது மேற்கத்திய இராணுவ எழுத்தாளர்களுக்கு பதிலாக பண்டைய இந்திய சிந்தனையாளர்களின் நூல்களை உள்ளடக்கியது.
உதாரணமாக, செகந்திராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரி (College of Defence Management (CDM)), குஜராத் பல்கலைக்கழகத்தின் இந்தியப் படிப்புத் துறையுடன் இணைந்து பாடத்திட்டத்தை உருவாக்குகிறது. மூன்று சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கான இடைநிலைத் தொழில் படிப்புகளுக்கு இது கட்டாயமாக இருக்கும்.
புதிய பாடத்திட்டம் இந்திய தேசிய இராணுவம் (Indian National Army (INA), மராத்தியர்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற இந்தியப் படைகளின் நிலப் பிரச்சாரங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம். முதலாம் ராஜ ராஜ சோழன், அவரது மகன் ராஜேந்திர சோழன், மன்னர் மார்த்தாண்ட வர்மா மற்றும் குஞ்சாலி மரக்கர் IV போன்ற ஆட்சியாளர்களின் கடல்சார் உத்திகளும் இதில் அடங்கும். கூடுதலாக, இது பண்டைய இந்திய பேரரசர் சந்திரகுப்த மௌரியரின் ஆட்சி மாதிரியைப் பற்றி விவாதிக்கலாம்.
காலாவதியான சட்டங்கள் மற்றும் பழைய விதிகளை அடையாளம் காணும் பணியில் ஆயுதப்படைகள் ஈடுபட்டுள்ளன.
தற்போது, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை ஒவ்வொன்றையும் நிர்வகிக்கும் வெவ்வேறு சேவைச் சட்டம் உள்ளது. பணிநீக்கங்களைக் குறைத்து, சுமூகமான செயல்பாடுகளை ஊக்குவிக்கும், ஒருங்கிணைந்த முப்படைச் சேவைச் சட்டத்தைக் (tri-services Act) கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு பிராந்திய தலைமையகத்திலும் ஸ்காட்டிஷ் வம்சாவளி படையின் (Scottish-origin pipe bands) எண்ணிக்கையை ஒன்றுக்கு மட்டும் குறைக்க இராணுவம் பரிசீலித்து வருகிறது. தற்போது, கிட்டத்தட்ட ஒவ்வொரு பிரிவிலும் ஒன்று உள்ளது. ஆனால், அவை சடங்கு நோக்கங்களுக்காக மட்டுமே வைக்கப்படும்.
கூடுதலாக, பீரங்கி மற்றும் கவசப் பிரிவுகள் போன்ற இராணுவத்தின் காலாட்படை படைப்பிரிவுகளை மேலும் உள்ளடக்கியதாக உருவாக்க முடியுமா? என்பதைப் பார்க்க ஒரு ஆய்வு இருக்கலாம். இது ஜாட் மற்றும் பீகார் படைப்பிரிவுகள் போன்ற குறிப்பிட்ட பிராந்திய படைப்பிரிவுகளிலிருந்து விலகிச் செல்வதைக் குறிக்கும்.
ஆயுதப் படைகளால் ஏற்கனவே என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?
கடந்த சில ஆண்டுகளாக, இராணுவம் பல காலனித்துவ கால பழக்கவழக்கங்களையும் நடைமுறைகளையும் நீக்கியுள்ளது. பல இராணுவப் பிரிவு முறைகளையும், கடற்படைக் கொடியையும் மாற்றியுள்ளனர். மேலும், இராணுவ தளங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளுக்கு இப்போது இந்தியப் பெயர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
மற்ற நாடுகளுடனான பெரும்பாலான கூட்டுப் பயிற்சிகள், அத்துடன் ராணுவ வளாகங்களில் உள்ள செயல்பாடுகள் மற்றும் கருத்தரங்கு அரங்குகள் ஆகியவை இந்திய முறைகளில் பெயரிடப்பட்டுள்ளன.
கூடுதலாக, குடியரசு தினம் மற்றும் பாசறைக்கு திரும்புதல் (Beating Retreat ceremonies) போன்ற நிகழ்வுகளில் அதிகமான இந்திய இசைகள் மற்றும் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, 2022-ஆம் ஆண்டின் பாசறைக்கு திரும்புதல் விழாவிற்குப் பிறகு எபிட் வித் மீ என்ற கிறிஸ்தவப் பாடலுக்குப் பதிலாக ஏ மேரே வதன் கே லோகன் (Ae Mere Watan Ke Logon) என்ற தேசபக்தி இந்தி பாடல் இசைக்கப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்திய கடற்படை அதன் கடற்படை மெஸ்ஸில் பாரம்பரிய குர்தா-பைஜாமா (kurta-pyjama ) உடையை அனுமதித்தது.
நெறிமுறைகள், சட்டம் மற்றும் போர்முறைகள் பற்றிய இந்தியக் கருத்துகளை மேம்படுத்துவதற்காக, தொழில்முறை இராணுவக் கல்வி நிறுவனங்கள் இப்போது இந்தியவியல் நிபுணர்கள் தலைமையில் வழக்கமான கருத்தரங்குகளை நடத்தி வருகின்றன.
ஏன் மாற்றங்கள்?
காலனித்துவ செல்வாக்குகளை அகற்றுவதன் மூலம் இந்திய இராணுவத்தை மேலும் இந்தியமாக்குவதே இலக்கு.
1947-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து ராணுவத்தை இந்தியமயமாக்கும் செயல்முறை நடந்து வருகிறது. இருப்பினும், சமீபகாலமாக இந்த முயற்சிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு குஜராத்தின் கேவாடியாவில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தளபதிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையால் இந்த மாற்றம் ஏற்பட்டது. இந்த உரையின் போது, தேசிய பாதுகாப்பு அமைப்பில் மேலும் உள்நாட்டுமயமாக்கலின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஆயுதப்படைகளின் கோட்பாடுகள், நடைமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் இதில் அடங்கும்.