சி.வி. ராமனின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு பார்வை.

 1986-ஆம் ஆண்டு முதல், சி.வி.ராமன் அவர்கள் 'ராமன் விளைவை' (Raman Effect) கண்டறிந்ததைப் போற்றும் வகையில், பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி இந்தியா தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடி வருகிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசை அவருக்குப் பெற்றுத் தந்த இந்த முக்கிய கண்டுபிடிப்பு, ஒளியைப் பற்றிய நமது புரிதலையே மாற்றியமைத்தது. பள்ளிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் அறிவியல் கண்காட்சிகளுடன் நாடு இந்த நாளைக் கொண்டாடும் வேளையில், நம்மிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டிய  அவரை நினைவு கூர்வோம்.


அசாத்தியத் திறமை கொண்ட மாணவர்


1888-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம் தேதி திருச்சிராப்பள்ளியில் பிறந்த சந்திரசேகர வெங்கட ராமன், சிறுவயதிலேயே விதிவிலக்கான திறமையை வெளிப்படுத்தினார். அவரது தந்தை ஆர். சந்திரசேகர் ஐயர், இயற்பியல் மற்றும் கணிதத் துறையில் விரிவுரையாளராக இருந்ததால், ராமனுக்கு இயல்பாகவே இயற்பியலில் ஆர்வம் ஏற்பட்டது. அவர் தனது இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்றார். அவருக்கு வெறும் 18 வயது இருக்கும்போது, "செவ்வகத் துளையினால் ஏற்படும் சமச்சீரற்ற விளிம்பு விளைவு பட்டைகள்" (Unsymmetrical diffraction-bands due to a rectangular aperture) என்ற தனது முதல் அறிவியல் ஆய்வுக் கட்டுரையை ஆங்கில இதழான ‘Philosophical Magazine’ இதழில் வெளியிட்டார்.


அந்தக் காலத்தில், அறிவியல் ஆராய்ச்சியை ஒரு முழுநேரத் தொழிலாகத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்தன. இராமன் லோகசுந்தரியை மணந்திருந்ததால், அவருக்கு நிலையான வருமானம் தரும் ஒரு வேலை தேவைப்பட்டது. 1907-ஆம் ஆண்டுப் படிப்பை முடித்த பிறகு, அவர் தனது மனைவியுடன் கல்கத்தாவிற்குச் சென்று, இந்திய நிதிச் சேவை (Indian Finance Service (IFS)) பிரிவில் துணை கணக்குத் தலைவராகப் (Assistant Accountant General) பணியில் சேர்ந்தார். தனது ஓய்வு நேரங்களில்,  இந்திய அறிவியல் வளர்ச்சி சங்கம் (Indian Association for the Cultivation of Science (IACS)) நிறுவனத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார். 1917-ஆம் ஆண்டில், இயற்பியல் மீதான தனது ஆர்வத்தைப் பின்பற்றுவதற்காகத் தனது அரசு  வேலையை விட்டு வெளியேறினார். அதன் பிறகு, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முழுநேர இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்த அவர், அங்குள்ள புகழ்பெற்ற ‘Palit Chair’ பதவியை 15 ஆண்டுகள் வகித்தார். அந்தப் பதவியின் ஒரு நிபந்தனை என்னவென்றால், சர்வதேச அறிஞர்களுக்கு இணையாகக் கருதப்படுவதற்கு அவர் வெளிநாட்டில் பயிற்சி பெற வேண்டும் என்பதாகும். இருப்பினும், இராமன் தனது திறமை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். தமக்கு வெளிநாட்டுப் பயிற்சி தேவையில்லை என்றும், மாறாக மற்ற நாட்டு அறிஞர்களுக்கே தம்மால் பயிற்சி அளிக்க முடியும் என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.


ராமன் விளைவின் கண்டுபிடிப்பு


1921-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் நடைபெற்ற ஆங்கிலயேப் பேரரசு பல்கலைக்கழகங்களின் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு சி.வி.ராமன் லண்டனிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். அந்த கடல் பயணத்தின் போது, மத்திய தரைக்கடல் ஏன் அடர் நீல நிறத்தில் காணப்படுகிறது என்று அவர் வியந்து சிந்தித்தார். கடலின் நீல நிறம் என்பது வானத்தின் பிரதிபலிப்பு மட்டுமே என்ற பொதுவான விளக்கத்தை அவர் ஏற்கவில்லை. உண்மையை கண்டறியும் உறுதியுடன், அவரும் அவரது மாணவர் கே.எஸ். கிருஷ்ணனும் பல ஆய்வக சோதனைகளை மேற்கொண்டனர். அவர்கள் பல்வேறு திரவங்களின் வழியாக ஒளியைச் செலுத்தி, சிதறிய ஒளியைக் கவனித்தனர். அதில் பெரும்பாலான ஒளி அதே நிறத்தில் இருந்தது, ஆனால் ஒரு சிறிய பகுதி மட்டும் சற்று மாறியிருந்தது. ஒளியானது மூலக்கூறுகளுடன் ஆற்றலைப் பரிமாறிக் கொண்டது என்பதை இது நிரூபித்தது. இந்த கண்டுபிடிப்பு தற்போது 'ராமன் விளைவு' (Raman Effect) என்று அழைக்கப்படுகிறது.


சி.வி. ராமன் அவர்கள்,  மாணவர்களை ஆர்வத்துடனும், சுதந்திரமாகவும் சிந்திக்க ஊக்குவித்த ஒரு சிறந்த ஆசிரியராக விளங்கினார். அவரது ஆய்வகத்தில் பணியாற்ற விரும்பும் மாணவர்கள், அவர்களின் அடிப்படை அறிவு மற்றும் தனித்துவமான சிந்தனையைச் சோதிக்கும் வாய்மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியிருந்தது. மாணவர்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, அவர்களுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்க அவர் உதவினார். அவர் தனது மாணவர்கள் அனைவரையும் சமமாக நடத்தினார். மேலும், அவர்களின் சோதனைகளுக்கான புதிய யோசனைகளையும் மேம்பாடுகளையும் நேரில் வழங்கினார். அவர் தன் மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். மேலும், மாணவர்களும் எந்த நேரத்திலும் அவரது வழிகாட்டுதலைப் பெறலாம் என்பதை நன்கு அறிந்திருந்தனர்.


1930-ஆம் ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற முதல் இந்தியர் மற்றும் முதல் ஆசியர் என்ற பெருமையை சி.வி.ராமன் பெற்றார். இந்தச் சாதனை அவருக்குப் உலகளாவிய புகழைத் தேடித்தந்ததோடு, இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்தது. ஒளிச்சிதறல் குறித்த தனது ஆராய்ச்சியின் போதே, அதாவது 1925-ஆம் ஆண்டிலயே, இப்பணிக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று அவர் கணித்திருந்தார். ஸ்பெக்ட்ரோஸ்கோப் (spectroscope) கருவியை வாங்குவதற்கு நிதி திரட்டியபோது, இந்தக் கருவி கிடைத்தால் இந்தியாவிற்கு நோபல் பரிசைப் பெற்றுத் தருவேன் என்று தனது ஆதரவாளரிடம் அவர் உறுதியளித்தார். போதிய வசதிகள் இல்லாத காலக்கட்டத்திலும், குறைந்த ஆதாரங்களைக் கொண்டு மிகப்பெரிய அறிவியல் சாதனைகளைப் படைக்க முடியும் என்பதற்கு ராமனின் இந்த வெற்றி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக் குறிப்பிடப்படுகிறது. 


சி.வி. இராமன் 1933-ஆம் ஆண்டு முதல் 1937-ஆம் ஆண்டு வரை இந்திய அறிவியல் நிறுவனத்தின் (Indian Institute of Science (IISc)) இயக்குநராகப் பணியாற்றினார். அங்கு அவரே இயற்பியல் துறையை நிறுவி, தொடக்கத்தில் அதன் ஒரே ஒரு பேராசிரியராகவும் இருந்தார். அக்காலகட்டத்தில், விக்ரம் சாராபாயின் விண்வெளி கதிர் (cosmic rays) குறித்த ஆராய்ச்சிக்கு அவர் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். 1948-ஆம் ஆண்டு பெங்களூரில் இராமன் ஆராய்ச்சி நிறுவனத்தைத் (Raman Research Institute) தொடங்கிய அவர், 1970-ஆம் ஆண்டில் அவரின் இறுதி காலம் வரையிலும், ஒளியியல், படிக இயக்கவியல், வைரத்தின் அமைப்பு, மலர்களின் நிறங்கள் மற்றும் மனித பார்வைத் திறன் ஆகிய துறைகளில் தொடர்ந்து தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. 


காலப்போக்கில், ராமன் விளைவின் கோட்பாடுகள் பல்வேறு அறிவியல் துறைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. இன்று இந்த விளைவு புற்றுநோய் கண்டறிதல், மருந்து மேம்பாடு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி போன்ற முக்கிய பணிகளில் பயன்படுத்தப்படுகிறது. ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக அவரது மரபு இன்றும் நிலைத்திருப்பதோடு, அறிவின் எல்லைகளை விரிவுபடுத்தும் வகையில் புதிய ஆராய்ச்சிகளையும் சோதனைகளையும் மேற்கொள்ள பல தலைமுறை அறிவியல் ஆர்வலர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது.


Original article : Shining a light on the life of C.V. Raman


Share: