சர்வதேச சட்டத்தின் வலுவின்மையானது, உலக சர்வாதிகாரர்களுக்கு உதவுகிறது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள், இருநாடுகளும் பலத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அச்சுறுத்தல்களுடன், சர்வதேச சட்டத்தின் பயன்பாடு குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது. சர்வதேச நாடுகளின் சில அறிஞர்கள், சர்வதேச சட்டத்தின் வலுவின்மை செய்தி குறித்து குறிப்பிடுகிறார்கள். குறிப்பிடப்பட்ட விதிகள் அல்லது விதிமுறைகள் இல்லாத உலகத்திற்கு ஒருவர் தயாராக வேண்டும் என்று வாதிடுகின்றனர். 2022-ல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பிறகு இந்த பலவீனமான வாதம் தொடங்கியதுடன், காசா மற்றும் மேற்கு ஆசியாவின் பிற பகுதிகளில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு இது மேலும் தொடர்ந்தது. டொனால்ட் டிரம்பின் அதிபர் பதவியானது, வெனிசுலாவில் சமீபத்திய சட்டவிரோத அமெரிக்காவின் நடவடிக்கைகள், பல சர்வதேச அமைப்புகளிலிருந்தும் அமெரிக்கா விலகியது மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி தற்போதைய சூழ்நிலையை உலக ஒழுங்கில் ஒரு "பிளவு" என்று விவரித்தார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் சர்வதேச சட்டம் மீதுள்ள நம்பிக்கையை குறைக்கிறது. சர்வதேச சட்டம் அதன் இருண்ட காலங்களில் ஒன்றைக் கடந்து செல்கிறது என்பது உண்மைதான் என்றாலும், அதன் வலுவின்மை என்று கூறுவது வெறும் அறிவுபூர்வமாக சோம்பேறித்தனமானது (intellectually lazy) மட்டுமல்ல, அது தவறாகவும் வழி நடத்தக்கூடும்.
பலத்தைப் பயன்படுத்துதல்
இதைப் புரிந்துகொள்வதற்கு ஒரு உதாரணமாக, மிக அடிப்படையான சர்வதேச விதிமுறைகளில் ஒன்றை எடுத்துக் கொள்வோம். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் பிரிவு 2(4) இல் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதேச நாடுகளில் அச்சுறுத்தல் அல்லது பலத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் பல நாடுகள் இந்த விதியை மீறியுள்ளன என்பது உண்மைதான். ஆனால், இதுபோன்ற மீறல்கள் புதியவை அல்ல. கடந்த காலங்களிலும் இதே போன்ற மீறல்கள் நடந்தன. 1970-ம் ஆண்டில், உலகம் முழுவதும் பல போர்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவிற்கும் அப்போதைய சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான பனிப்போர் போட்டி காரணமாக, பிரிவு 2(4) வலுவிழந்துவிட்டது என்று சர்வதேச வழக்கறிஞர் தாமஸ் ஃபிராங்க் வாதிட்டார்.
கடந்த நாற்பது ஆண்டுகளில், அமெரிக்காவும் பிற அதிகாரத்துவ நாடுகளும் சோவியத்-ஆப்கானிஸ்தான் போர் (1979-89), பால்க்லேண்ட்ஸ் போர் (1982), வளைகுடாப் போர் (1990-91), மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் போஸ்னியா, கொசோவோ, ஆப்கானிஸ்தான் (2001), ஈராக் (2003), சிரியா மற்றும் லிபியாவில் மோதல்கள் உட்பட பல போர்களில் ஈடுபட்டுள்ளன. சமீபத்திய போர்கள் மற்றும் இராணுவத் தாக்குதல்களைப் போலவே, இந்தப் போர்கள் அனைத்தும் பிரிவு 2(4)ஐ கடுமையாக பலவீனப்படுத்தின. ஆனால், அவை அதை அழிக்கவில்லை. சக்திவாய்ந்த நாடுகளை பொறுப்புக்கூற வைப்பதற்கான முக்கிய சட்ட வழி முறையாக இன்றும் தொடர்ந்து வருகிறது.
கொலம்பியா பேராசிரியர் மோனிகா ஹகிமி விளக்குவது போல, சர்வதேச உறவுகள் சட்டத்தால் நிர்வகிக்கப்படும் போது, பொது அதிகாரத்தை வைத்திருப்பவர்கள் சர்வதேச சட்டத்தைப் பயன்படுத்தி தங்கள் செயல்களை விளக்க வேண்டும். அவர்களின் செயல்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச விதிகளின் அடிப்படையில் இருந்தால் மட்டுமே அதிகாரம் குறித்த அவர்களின் கூற்றுக்கள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்.
கூடுதலாக, சர்வதேச சட்டம் மட்டுமே சாதாரண மற்றும் குறைந்த சக்தி வாய்ந்த மக்களுக்கு அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்கும் திறனை வழங்கும் ஒரே அமைப்பு. இந்த சட்ட கட்டமைப்பு இல்லாமல், உலகம் மிகவும் ஆபத்தானதாக இருக்கும்.
இருப்பினும், இன்றைய பிரிவு 2(4) இன் விதிமீறல் கடந்த காலத்திலிருந்து இதே போன்ற செயல்களிலிருந்து வேறுபட்டது. கடந்த காலத்தில், அதிகாரத்துவம் வாய்ந்த நாடுகள் சர்வதேச சட்டத்தின் பகுப்பாய்வு கட்டமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தின. மேலும், மேலாதிக்கங்களுக்கு கூட இந்த நெறிமுறை கட்டமைப்பு தேவை என்பதை நிரூபித்தன. இது உரையாடல் மற்றும் விவாதத்திற்கான வாய்ப்பை உருவாக்கியது. எனவே, 1990ஆம் ஆண்டு மற்றும் 2000ஆம் ஆண்டுகளில், அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்த, தற்காப்புக்கான விளக்கத்தை சட்டப்பூர்வமாக விரிவுபடுத்தியது. இது நாடுகள் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான தடைக்கு விதிவிலக்காகும். அமெரிக்க சட்ட விளக்கங்கள் சரியானவையா? அல்லது அதன் ஏகாதிபத்திய வடிவமைப்புகளை மறைக்க ஒரு கருவியாக இருந்ததா? என்பது விவாதத்திற்குரியதாக உள்ளது.
இன்றைய மக்கள்வாத-சர்வாதிகார உலகில், தலைவர்கள் மிகவும் வெளிப்படையாகவும் தைரியமாகவும் செயல்படுகிறார்கள். அவர்கள் சர்வதேச சட்டத்தின்படி தங்கள் செயல்களை விளக்கவோ அல்லது நியாயப்படுத்தவோ அரிதாகவே முயற்சி செய்கிறார்கள். அவர்களின் ஏகாதிபத்திய லட்சியங்கள் தெளிவாகத் தெரியும். அமெரிக்கா மீண்டும் மீண்டும் வெனிசுலா எண்ணெயைக் கோருவது இதைத் தெளிவுபடுத்துகிறது.
சர்வதேச சட்டத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் மக்கள்வாத-சர்வாதிகாரத்தின் வளர்ந்து வரும் எழுச்சி ஆகும். ஆபத்தை ஏற்படுத்துவது இராணுவத் தாக்குதல் அல்லது படையெடுப்பு மட்டுமல்ல, இந்த பரந்த அரசியல் போக்கும் ஆகும்.
இராணுவ நடவடிக்கை பயன்படுத்துவதைத் தாண்டிப் பார்க்கும்போது
அதே நேரத்தில், சர்வதேச சட்டத்தின் முழு அமைப்பையும் ஐக்கிய நாடுகள் சாசனமாகக் குறைப்பது தவறாகும். ஐக்கிய நாடுகளின் சாசனம் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு முக்கியமான தூணாக இருந்தாலும், கடந்த 80 ஆண்டுகளாக நிகழ்ந்த சர்வதேச நாடுகளை சட்டப்பூர்வமாக்குவதை அதுவே வரையறுக்கவில்லை. இன்று, சர்வதேச சட்டம் பரவலாகவும் பன்முகத்தன்மையுடனும் உள்ளது. சர்வதேச வர்த்தகம், வெளிநாட்டு முதலீடு, பொது விமானப் போக்குவரத்து, கடல்சார் வளங்கள், விண்வெளி, மனித உரிமைகள், காலநிலை மாற்றம், இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் மற்றும் பல துறைகளை நிர்வகிக்கிறது. யேல் பல்கலைக்கழகத்தின் ஊனா ஏ. ஹாத்வே வாதிடுவது போல, சர்வதேச சட்டம் ஒரு சமூக நிகழ்வாக வளர்ந்து செழித்து வருவதை இது காட்டுகிறது.
சர்வதேச சட்டம் அமைதியாக செயல்படுகிறது
சர்வதேச சட்ட உருவாக்கமானது, எந்த தடையுமின்றி தொடர்கிறது. இது இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், உயர் கடல் ஒப்பந்தம் (கடல் உயிரியல் பன்முகத்தன்மையின் நிலைத்தன்மையை நோக்கமாகக் கொண்டது), மற்றும் ஒரு தொற்றுநோய் ஒப்பந்தம் (தொற்றுநோய் தடுப்பை வலுப்படுத்துதல்) போன்ற முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக, உலகளாவிய (சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்) மற்றும் பிராந்திய மட்டங்களில் (மனித மற்றும் மக்கள் உரிமைகள் தொடர்பான ஆப்பிரிக்க நீதிமன்றம்) நூற்றுக்கணக்கான சர்வதேச நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை, சர்வதேச நாடுகளின் நீதிமயமாக்கலை நிரூபிக்கின்றன. இந்த நீதிமன்றங்கள் பொதுவாக ஊடக கவனத்தை ஈர்ப்பதில்லை. இருப்பினும், அவை சிக்கலான மோதல்களை அமைதியாகவும் சட்டத்தின்படியும் தொடர்ந்து தீர்த்து வைக்கின்றன.
சுருக்கமாக, சர்வதேச வழக்கறிஞர் பிலிப் சாண்ட்ஸ் கூறுகையில், சர்வதேச சட்டத்தின் பெரும்பகுதி பின்னணியில் அமைதியாகவும் சுமூகமாகவும் செயல்படுகிறது. ஊடகங்கள் பெரும்பாலும் ஐ.நா. சாசனத்தின் மீறல்களில் கவனம் செலுத்தினாலும் இது நிகழ்கிறது. சர்வதேச சட்டத்தின் இந்த அமைதியான அமைப்பு பொருட்கள் மற்றும் மக்கள் எல்லைகளைத் தாண்டிச் செல்ல உதவுகிறது. இது தகவல் தொடர்பு அமைப்புகள் தேசிய எல்லைகளுக்கு அப்பால் செல்லவும் அனுமதிக்கிறது. இதன் விளைவாக, சாதாரண மக்களின் வாழ்க்கை பல வழிகளில் மேம்படுகிறது.
ஒரு சர்வாதிகார அரசாங்கம் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும்போது, தாராளவாத அரசியலமைப்பு அமைப்பை நாம் கைவிடாதது போல, தற்போதுள்ள தாராளவாத சர்வதேச சட்ட அமைப்பை உலகளாவிய சர்வாதிகார நாடுகளிடமிருந்து பாதுகாக்கவும் நாம் போராட வேண்டும். சர்வதேச சட்டம் வலுவிழந்துவிட்டது என்று கூறுவது அந்த உலகளாவிய சர்வாதிகார நாடுகளுக்கு மட்டுமே உதவும்.
பிரபாஷ் ரஞ்சன் ஜிண்டால் குளோபல் சட்டப் பள்ளியில் பேராசிரியர் மற்றும் துணை இயக்குநர் (ஆராய்ச்சி) ஆவார்.
Original article : International law is not dead, its rules stay resilient -Prabhash Ranjan