காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் போது, பிரிட்டிஷ் மற்றும் முஸ்லீம் லீக்கிற்கு பா.ஜ.க-வின் சித்தாந்த மூதாதையர்கள் ஆதரவளித்ததாக குற்றம் சாட்டினார். வரலாறு கூறுவது என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக் கட்சியின் தாக்கம் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் போது பிரிட்டிஷ் மற்றும் முஸ்லீம் லீக்கை பாஜகவின் மூதாதையர்கள் ஆதரித்ததாக குற்றம் சாட்டினார்.
1937 மாகாணத் தேர்தல்கள்
1935-ம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டத்தின் (Government of India Act of 1935) ஆணையின் கீழ் நடைபெற்ற 1937 மாகாணத் தேர்தல்களில் காங்கிரஸ் வியக்கத்தக்க வகையில் செயல்பட்டது.
மொத்தமுள்ள 1,585 மாகாண சட்டமன்றத் தொகுதிகளில் 711 சட்டமன்றத் தொகுதிகளையும், 11 மாகாணங்களில் 5 மாகாணங்களில் மெட்ராஸ், பீகார், ஒரிசா, மத்திய மாகாணங்கள் மற்றும் ஐக்கிய மாகாணங்கள் முழுமையான பெரும்பான்மையுடன், பம்பாயில் 175-ல் 86 இடங்கள் பெரும்பான்மையைப் பெற்றது. இந்த மாகாணங்கள் அனைத்திலும் காங்கிரஸ் அமைச்சரவைகள் உருவாக்கப்பட்டன. சிறிது காலம் கழித்து, வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (West Frontier Province (NWFP)) மற்றும் அஸ்ஸாமிலும் காங்கிரஸ் அரசாங்கங்களை அமைத்தது.
மீதமுள்ள 3 மாகாணங்களில் - சிந்து, பஞ்சாப் மற்றும் வங்காளம் ஆகியவற்றில் காங்கிரஸ் அல்லாத அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன. சிந்துவில், சிந்து யுனைடெட் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது; பஞ்சாபில் சிக்கந்தர் ஹயாத் கானின் யூனியனிஸ்ட் கட்சி பெரும்பான்மை பெற்றது. வங்காளத்தில், காங்கிரஸ் 54 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் கூட, ஃபஸ்லுல் ஹக்கின் கிரிஷக் பிரஜா கட்சி (Krishak Praja Party (KPP)) முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது.
இந்திய முஸ்லிம்களின் ஏகபிரதிநிதி என்று கூறிக்கொண்ட முஸ்லிம் லீக் அந்த தேர்தலில் படுமோசமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
தனித் தொகுதிகளின் கீழ் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட 482 இடங்களில் முஸ்லிம் லீக் 106 இடங்களை மட்டுமே வென்றது. மேலும், அது வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. பஞ்சாபில் ஒதுக்கப்பட்ட 84 தொகுதிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. சிந்துவில் 33 தொகுதிகளில்ல் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றது. இவை அனைத்தும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்களாக இருந்தன.
1930களில் வி டி சாவர்க்கரின் தலைமையில் தேர்தல் அரசியலில் நுழைந்த இந்து மகாசபையும் சிதைந்தது.
“போராளி, வெகுஜன அடிப்படையிலான அரசியலில் ஈடுபடவில்லை என்றால் படிப்படியாக தாங்கள் வாடிவிடுவார்கள் என்பதை வகுப்புவாதிகள் இப்போது உணர்ந்துள்ளனர்” என்று பிபன் சந்திராவும் மற்றவர்களும் இந்திய சுதந்திரப் போராட்டம் 1988 (India’s Struggle for Independence (1988)) என்ற நூலில் எழுதினார்கள். வரவிருக்கும் ஆண்டுகளில், முஸ்லிம் லீக் மற்றும் இந்து மகாசபை போன்ற வகுப்புவாத கட்சிகள் தங்கள் சக மதவாதிகளின் அச்சங்கள் மற்றும் கவலைகளில் செயல்பட்டது.
முஸ்லிம் லீக் மற்றும் இந்து மகாசபை இடையே கூட்டணி
முஸ்லிம் லீக் மற்றும் இந்து மகாசபையின் அரசியலும் சித்தாந்தமும் ஒன்றையொன்று பிரதிபலிப்பதாக பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், “வினோதமாகத் தோன்றினாலும், சாவர்க்கரும் ஜின்னாவும் ஒரு தேசம் மற்றும் இரு தேசம் என்ற பிரச்சினையில் ஒருவரையொருவர் எதிர்ப்பதற்குப் பதிலாக அதில் முழு உடன்பாடு கொண்டுள்ளனர். இந்தியாவில் இரண்டு தேசங்கள் உள்ளன என்பதை இருவரும் ஒப்புக்கொள்கிறார்கள், ஒப்புக்கொள்வதோடு மட்டுமல்லாமல், வலியுறுத்துகிறார்கள் - ஒன்று முஸ்லீம் தேசம் மற்றொன்று இந்து நாடு.” பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை - (Pakistan or the Partition of India, 1940) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 1939-ல், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப் பிரதிநிதிகளுடன் எந்த ஆலோசனையும் இல்லாமல் ஜெர்மனி மீது இந்தியாவின் சார்பாக போரை அறிவிக்கும் வைஸ்ராய் லின்லித்கோவின் முடிவுக்கு எதிராக காங்கிரஸ் ஒரு வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்தது. போர் முயற்சிக்கு இந்தியா அளித்த ஆதரவிற்கு ஈடாக, போருக்குப் பிந்தைய இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிரிட்டன் முறையாக உறுதியளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியது. லின்லித்கோ மறுத்துவிட்டார், மேலும் 1939 அக்டோபரில் அனைத்து காங்கிரஸ் அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்தனர்.
காங்கிரஸின் அமைச்சர்கள் ராஜினாமா செய்ததால், மாகாணங்களில் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. முஸ்லீம் லீக் மற்றும் இந்து மகாசபை ஆகிய இரண்டும் காங்கிரஸின் அதிகாரத்தை விட்டுக்கொடுக்கும் முடிவிற்கு மத்தியில் ஒரு அரசியல் வாய்ப்பைக் கண்டன. மேலும், மாகாண அரசாங்கங்களில் அங்கம் வகிக்க விரைந்தன. இறுதியில், அவர்கள் சிந்து மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகிய இரண்டு முஸ்லிம் பெரும்பான்மை மாகாணங்களில் கூட்டணி ஆட்சிக்கு நுழைந்தனர்.
வங்காளத்தில், மற்றொரு முஸ்லிம் வகுப்புவாதியான ஃபஸ்லுல் ஹக் மற்றும் அவரது கிரிஷக் பிரஜா கட்சியை இந்து மகாசபை ஆதரித்தது. குறிப்பாக சுபாஷ் சந்திரபோஸ் நிறுவிய பார்வர்டு பிளாக் இந்த கூட்டணியை ஆதரித்தது.
இந்து மகாசபையின் முதன்மையான கருத்தியல் மற்றும் அரசியல் பிரமுகரான சாவர்க்கர், இந்த கூட்டணிகளை நியாயமான சமரசங்கள் அடிப்படையில் நியாயப்படுத்தினார். 1942-ல் கான்பூரில் நடந்த இந்து மகாசபை கூட்டத்தில் அவர் ஆற்றிய தலைமை உரையில் கூறியதாவது:
“நடைமுறை அரசியலில்... நியாயமான சமரசங்கள் மூலம் நாம் முன்னேற வேண்டும் என்பதை மகாசபை அறிந்திருக்கிறது. …சமீபத்தில்தான் சிந்துவில், சிந்து-இந்து-சபா அழைப்பின் பேரில் கூட்டணி அரசாங்கத்தை நடத்துவதில் லீக்குடன் கைகோர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது… வங்காளத்தின் விவகாரம் நன்கு அறியப்பட்டதாகும். காங்கிரஸால் கூட சமாதானம் செய்ய முடியாத முஸ்லீம் லீக் காரர்கள், ஃபஸ்லுல் ஹக்கின் பிரதமர் மற்றும் நமது மதிப்பிற்குரிய மகாசபையின் திறமையான தலைமையின் கீழ், இந்து மகாசபை மற்றும் கூட்டணி அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டவுடன் மிகவும் நியாயமான முறையில் சமரசம் செய்து நேசமானவர்களாக வளர்ந்தனர். திரு ஃபஸ்லுல் ஹக் மற்றும் நமது மதிப்பிற்குரிய மகாசபை தலைவர் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் தலைமையின் கீழ்… [இது] இந்து மகாசபைக்காரர்கள் அரசியல் அதிகார மையங்களை பொது நலன்களுக்காக மட்டுமே கைப்பற்ற முயன்றனர், அதிகாரத்தின் பயன்களுக்காக அல்ல என்று நிரூபித்தது.”
வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு எதிர்ப்பு
போருக்குப் பிந்தைய இந்தியாவின் நிலை குறித்து காங்கிரஸுக்கும் வைஸ்ராய்க்கும் இடையே நடந்த பேச்சுக்கள் தோல்வியடைந்த பிறகு, மகாத்மா காந்தி ஆகஸ்ட் 8, 1942-ல் பம்பாயின் கோவாலியா டேங்க் மைதானத்தில் இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார். ஆகஸ்ட் 9-ம் தேதிக்குள் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டனர். கடுமையான அடக்குமுறைக்கு உத்தரவிட்டது. இது ஒரு தேசியவாத எழுச்சிக்கு வழிவகுத்தது, மக்கள் வியாபாரிகள், தெருவில் இறங்கி பொது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்தினர்.
முஸ்லிம் லீக் மற்றும் இந்து மகாசபை வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேரவில்லை. அவர்கள் தங்கள் அமைச்சகங்களில் தொடர்ந்தனர். மேலும், பிரிட்டிஷ் போர் முயற்சிக்கு வைஸ்ராய்க்கு தங்களது ஆதரவை வழங்கினர். இது அதிகாரத்தைக் காப்பாற்றும் நோக்கில் எடுக்கப்பட்ட அரசியல் முடிவாக இருந்தது.
சாவர்க்கர், இப்போது பிரபலமான ஒரு கடிதத்தில், "நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றங்கள் அல்லது ராணுவத்தில் பணிபுரிபவர்களில் உறுப்பினர்களாக இருக்கும் நாடு முழுவதும் உள்ள இந்து மகாசபைக்காரர்களுக்கு... தங்கள் பதவிகளில் உறுதியாக இருங்கள் என்றும், என்னவானாலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேர வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். பிரபு பாபு, காலனித்துவ வட இந்தியாவில் இந்து மகாசபை, 2013 என்ற நூலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது (as quoted in Prabhu Bapu, Hindu Mahasabha in Colonial North India, 2013).
வங்காள அரசாங்கத்தில் அங்கம் வகித்த சியாமா பிரசாத் முகர்ஜி, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தோற்கடிக்க ஆதரவளிப்பதாக உறுதியளித்து கடிதம் எழுதினார்.
சியாமா பிரசாத் முகர்ஜி எழுதினார்: “போரின் போது, உள்நாட்டு குழப்பங்கள் அல்லது பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் வகையில், வெகுஜன உணர்வைத் தூண்டும் எவரும், எந்த அரசாங்கத்தாலும் எதிர்க்கப்பட வேண்டும்... இந்தியர்கள் பிரிட்டனை நம்ப வேண்டும், பிரிட்டனுக்காக அல்ல, எந்த நன்மைக்காகவும் அல்ல. ஆங்கிலேயர்கள் ஆதாயமடையலாம், ஆனால், மாகாணத்தின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை பராமரிப்பதற்காக”. ஒரு நாட்குறிப்பில் இருந்து ஒரு பக்கம், முகர்ஜி, மரணத்திற்குப் பின் 1993-ல் வெளியிடப்பட்டது (Mookerjee in Leaves from a Diary, published posthumously in 1993).
ஜின்னாவும் இதே கருத்தைத்தான் கொண்டிருந்தார். காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் இருந்தபோது, ஜின்னா பாகிஸ்தானுக்கான தனது இயக்கத்தை மேலும் தீவிரப்படுத்தினார். இந்து ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம்களை எச்சரிக்கும் வார்த்தைகளைத் தொடர்ந்தார். அவர் வெகுஜன இயக்கத்தை காங்கிரஸின் “இந்தியாவில் இந்து ராஜ்ஜியத்தை நிறுவுவதற்கான வெளிப்படையான கிளர்ச்சி” என்று குறிப்பிட்டார். தி நேஷன், 2011 செய்தித்தாளில் வெளியிடப்பட்ட "தி குவாய்ட்-இ-ஆசாம் மற்றும் இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கம்" இல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது (As quoted in “The Quaid-i-Azam and Quit India Movement”, published in the newspaper The Nation, 2011) .
’ஜின்னாவின் முடிவு நிறைவேறியது’ என சுமித் சர்க்கார் நவீன இந்தியாவில் எழுதினார். “முஸ்லிம் லீக்கின் விரைவான முன்னேற்றம், காங்கிரஸின் ஒடுக்குமுறையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது. உண்மையில் போரின் இறுதி ஆண்டுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க அரசியல் வளர்ச்சியைக் கண்டனர். 1943வாக்கில், அஸ்ஸாம், சிந்து, வங்காளம் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகிய இடங்களில் முஸ்லீம் லீக் அமைச்சகங்கள் நிறுவப்பட்டன. காந்தியின் கீழ் இருந்த ‘இந்து’ காங்கிரசுடன் சமமாக நடத்தப்படும் உரிமையுடன் முஸ்லிம்களின் ஒரே செய்தித் தொடர்பாளர் என்ற தனது உரிமையை நிலைநாட்டுவதற்கான தனது குறிக்கோளில் ஜின்னா வெற்றிக்கண்டார்.