நரசிம்மராவ் காலகட்டம் இந்தியாவை எவ்வாறு மாற்றியது? - ஷியாம்லால் யாதவ்

 1991 : நேரு-காந்தி குடும்பத்திலுருந்து இல்லாமல், ஐந்தாண்டுகள் முழுவதுமாக பதவி வகித்த முதல் பிரதமர் பிவி நரசிம்மராவ் ஆவார். அவரது காலத்தில், இந்தியாவில் பெரும் தாக்கமான பொருளாதாரத்தை தாராளமயமாக்குதல், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது போன்ற இரண்டு பெரிய விஷயங்கள் நடந்துள்ளன.


பி.வி.நரசிம்மராவுக்கு குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டு ஆறரை ஆண்டுகளுக்குப் பிறகு, மே 21, 1991 அன்று, ராஜீவ் காந்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையால் (Liberation Tigers of Tamil Eelam (LTTE)) ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அது இந்திய மக்களவைத் தேர்தலின் போது நடந்தது. இதனால், அரசியல் பிளவுபட்டது. பொருளாதாரம் ஆழ்ந்த நெருக்கடியில் இருந்தது.


மே 20, ஜூன் 12 மற்றும் ஜூன் 15 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. பஞ்சாபில் 1992 பிப்ரவரியில் வாக்குகள் பதிவாகின. 1984-ல் நடந்ததைப் போலல்லாமல், இராஜீவ் படுகொலை காங்கிரஸுக்கு அனுதாப வாக்குகளின் அலையைக் கொண்டு வரவில்லை. இருப்பினும், பி.வி.நரசிம்மராவ் சிறுபான்மை அரசாங்கத்திற்கு தலைமை தாங்கியதால் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது.


டி.என்.சேஷன் தேர்தல்


1955ஆம் ஆண்டு இந்திய நிர்வாகப் பணியில் சேர்ந்து, கேபினட் செயலாளராகப் பணியாற்றிய டி என் சேஷன், டிசம்பர் 12, 1990 அன்று தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்றார். தேர்தல் விதிகளை கடுமையாக அமல்படுத்தியதற்காகப் பெயர் பெற்றவர். இதனால், இவர் பல இந்தியர்கள் மத்தியில் புகழ்பெற்ற அந்தஸ்தைப் பெற்று, இந்திய தேர்தல் ஆணையத்தின் நிலைமையை மாற்றினார்.


தேர்தலில், கிட்டத்தட்ட 500 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். ஆனால், அதிகளவில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வாக்குப்பதிவு 56.73% மட்டுமே இருந்தது. இது 1989-ல் 61.95%-ஐ விட மிகக் குறைவாகும். மொத்தமுள்ள 521 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 232 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 468 இடங்களில் போட்டியிட்டு 120 இடங்களில் வென்றது. ஜனதா தளம் 59 இடங்களில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 35 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 14 இடங்களிலும் வெற்றி பெற்றது. ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு முந்தையநாள் அமேதியில் பதிவான வாக்குப்பதிவில் 1.12 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நடந்து முடிந்த  இடைத்தேர்தலில் ராஜீவின் நெருங்கிய நண்பரான கேப்டன் சதீஷ் சர்மா வெற்றி பெற்றார். முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங் மற்றும் சந்திரசேகர் முறையே ஃபதேபூர் (Fatehpur) மற்றும் பல்லியா (Ballia) தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து, பின்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா ஜனதா கட்சி சார்பில் ஹாசன் (Hassan) தொகுதியில் வெற்றி பெற்றார். மேலும், பின்னாள் ஜனாதிபதியான பிரதிபாபாட்டீல் அமராவதி தொகுதியில் (Amravati) வெற்றி பெற்றார். எல்.கே.அத்வானி புது தில்லி மற்றும் காந்திநகரில் வெற்றி பெற்றதன் அடிப்படையில், அவர் காந்திநகரை தக்க வைத்துக் கொண்டார். அடல் பிஹாரி வாஜ்பாய் லக்னோவில் வெற்றி பெற்றதோடு, விதிஷாவிலும் தனது இருக்கையை தக்க வைத்துக் கொண்டார். ராம ஜென்மபூமி இயக்கத்தின் மற்ற தலைவர்களான உமாபாரதி மற்றும் வினய் கட்டியார் ஆகியோர் முறையே கஜுராஹோ மற்றும் அயோத்தியில் வெற்றி பெற்றனர்.


பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் (Kanshi Ram), எட்டாவா தொகுதியில் வெற்றி பெற்றார். மம்தா பானர்ஜி, ஒரு ஆற்றல் மிக்க தலைவர் ஆவார். இவர், கல்கத்தா தெற்கில் (தற்போது கொல்கத்தா தக்ஷின்) தேர்தலில் அவர் இளம் வயதில் வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு மேற்கு வங்க முதல்வராக பதவியேற்கும் வரை இந்தப் பதவியில் இருந்தார்.


யார் பிரதமராக இருப்பார்?


இராஜீவ் காந்தி மரணத்தால் காங்கிரஸ் கட்சிக்கு திடீரென பிரதமர் வேட்பாளர் கிடைக்கவில்லை.


படுகொலை நடந்த சில நாட்களுக்குப் பிறகு, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அர்ஜுன் சிங், சீதாராம் கேசரி மற்றும் எம்.எல். ஃபோதேதார் (M L Fotedar) ஆகியோர் பி.வி.நரசிம்மராவைச் சந்தித்து, சோனியா காந்தியை கட்சியின் அடுத்த தலைவராக நியமிக்க பரிந்துரைத்தனர். பி.வி.நரசிம்மராவ் கடுமையாக மறுத்தார். அர்ஜுன் சிங்கின் சுயசரிதையான "எ கிரைன் ஆஃப் சாண்ட் இன் தி ஹவர் கிளாஸ் ஆஃப் டைம்"  (A Grain of Sand in the Hourglass of Time) நூலில் பிரதமராக வரவிருக்கும் அவர், "கோபத்தில் வெடித்து, கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சிக்கு இது அவசியமா என்ற வார்த்தைகளை வெளிப்படுத்தினார். காங்கிரஸ் கட்சி எப்போதும் நேரு-காந்தி குடும்பத்தால் வழிநடத்தப்பட வேண்டுமா அல்லது வேறு மாற்று வழிகள் இருக்காதா? என்று கேள்வி எழுப்பினார்.


இதற்கு ஒரு மாற்றாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் என்.டி.திவாரி இருந்திருக்க முடியும், ஆனால் அவர் நைனிடால் தேர்தலில் தோல்வியடைந்தார். இதனால், சோனியா கட்சிக்கு தலைமை தாங்க மறுத்த பின்னர், பி.வி.நரசிம்மராவ் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று ஜூன் 21, 1991 அன்று பிரதமராக பதவியேற்றார்.


பொருளாதார சீர்திருத்தங்கள், பாபர் மசூதி இடிப்பு


அரசியல் ரீதியாக, பி.வி.நரசிம்மராவின் பதவிக்காலம் ‘10, ஜன்பத் சாலை’யுடன் (சோனியாவின் இல்லத்தில்) நெருக்கமானவர்களுடன் தொடர்ச்சியான மோதல்கள் நிறைந்ததாக இருந்தது. இருந்தபோதிலும், ஜனதா தளத்தைச் சேர்ந்த ஒரு குழுவைப் போன்ற பிற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தன் பக்கம் சேர்த்துக்கொள்வதன் மூலம் அவர் இன்னும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்டார். மேலும், அவரது பதவிக்காலம் பல ஊழல்களைக் கண்டது, அவற்றுள்:


- 1992 இந்திய பங்குச் சந்தை ஊழல் (ஹர்ஷத் மேத்தா ஊழல்)


- 1995 டெல்லி வீட்டு ஒதுக்கீடு ஊழல் (வீட்டுவசதி அமைச்சர் ஷீலா கவுல் சம்பந்தப்பட்டது)


- 1995 பெட்ரோல் பங்க் ஊழல் (சதீஷ் சர்மா சம்பந்தப்பட்டது)


- 1996 தொலைத்தொடர்பு ஊழல் (தொலைத்தொடர்பு அமைச்சர் சுக்ராம் சம்பந்தப்பட்டது)


- ஜெயின் டைரீஸ் வழக்கு (ஹவாலா ஊழல்) ஆகியவை அடங்கும்.


பி.வி.நரசிம்மராவின் ஆட்சிகளில் நடந்த, நிதி அமைச்சர் மன்மோகன் சிங் தலைமையிலான பொருளாதாரத்தின் தாராளமயமாக்கல் மற்றும் டிசம்பர் 6, 1992 அன்று கரசேவகர்களால் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்ற இரண்டு நிகழ்வுகள் இந்தியாவை என்றென்றைக்குமாக மாற்றின.


பாபர் மசூதி இடிக்கப்பட்ட மறுநாள் இரவு, உத்தரப்பிரதேசம் (கல்யாண் சிங்), மத்தியப் பிரதேசம் (சுந்தர்லால் பட்வா), ராஜஸ்தான் (பைரோன் சிங் ஷெகாவத்), இமாச்சலப் பிரதேசம் (சாந்தா குமார்) ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக தலைமையிலான அரசாங்கங்களை அகற்றினார். சுதந்திரத்திற்குப் பிறகு மூன்றாவது முறையாக, ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (Rashtriya Swayamsevak Sangh (RSS)) தடை செய்யப்பட்டது. இருப்பினும், பின்னர் ஜபல்பூர் உயர் நீதிமன்றத்தால் இந்த தடையானது ரத்து செய்யப்பட்டது.


மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பை உட்பட பல நகரங்களில் கலவரங்கள் வெடித்தன. கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்புகளை வடிவமைத்த மாஃபியா தலைவன் தாவூத் இப்ராகிம் அன்றிலிருந்து தலைமறைவாக இருந்தான்.


1992 பிப்ரவரியில் சட்டமன்றத் தேர்தலை நடத்தி, பஞ்சாபில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மீண்டும் கொண்டு வர பி.வி.நரசிம்மராவ் முடிவு செய்தார். ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பிறகு பியாந்த் சிங் முதல்வரானார். ஆனால், ஆகஸ்ட் 31, 1995 அன்று பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டார்.


காங்கிரசில் குழப்பம்


பி.வி.நரசிம்மராவுக்கு கட்சியில் நிறைய போட்டியாளர்கள் இருந்தனர். மத்தியப் பிரதேச முதல்வராகவும், சோனியாவின் நம்பிக்கைக்குரிய நண்பராகவும் இருந்த அர்ஜுன் சிங், பி.வி.நரசிம்மராவுக்கு பல்வேறு கவலைகளைத் தெரிவித்து கடிதம் எழுதியதாக தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். டிசம்பர் 24, 1994 அன்று மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருந்த அர்ஜுன் சிங் பதவியை ராஜினாமா செய்தார்.


அர்ஜுன் சிங் டெல்லியின் பின்னாள் முதலமைச்சரான ஷீலா தீட்சித் மற்றும் உத்திர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைக்க பி.வி.நரசிம்மராவ் எடுத்த முடிவால் வருத்தமடைந்த என்.டி.திவாரி ஆகியோருடன் கைகோர்த்தார். அவர்கள் அகில இந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி) கட்சியை உருவாக்கினர். ‘10 ஜன்பத்’ சாலையின் ஆதரவுடன், பல தலைவர்கள் மத்தியிலும் மாநிலங்களிலும் திவாரியின் பிரிவில் இணைந்தனர்.


பி.வி.நரசிம்மராவின் பதவிக்காலம் முடியும் தருவாயில் இருந்தபோது, மத்தியில் பாஜக, மாநிலங்களில் ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி போன்ற பிற கட்சிகள் தங்களை பலப்படுத்திக் கொண்டபோது, காங்கிரஸ் அமைப்பு நொறுங்கிக் கொண்டிருந்தது. அடுத்த மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க, பி.வி.நரசிம்மராவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.




Original article:


Share: