கற்காலம் என்பது உண்மையில் மரங்களின் காலமா? -அர்ஜுன் சென்குப்தா

 கற்காலத்தைச் சேர்ந்த மரங்கள் தொல்பொருள் ஆய்வுகளில் அரிதாகவே எஞ்சியுள்ளன. இருப்பினும், பழங்கால மனிதர்களின் அன்றாட வாழ்க்கைகளுக்கு மரக்கருவிகள் மிக முக்கியமானவை என்று ஒரு சமீபத்திய ஆய்வு காட்டுகிறது.


கற்காலத்தை 'மர யுகம்' (Wood Age) என்றும் விவரிக்கலாம் என்று புதிய ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. மனிதர்களும் நமது மூதாதையர்களும் கற்கருவிகளைப் பயன்படுத்திய இந்த காலகட்டத்தில், மரக் கருவிகளின் குறிப்பிடத்தக்க பயன்பாட்டையும் உள்ளடக்கியது.


1994 மற்றும் 2008-க்கு இடையில் ஜெர்மனியின் ஷோனிங்கனில் உள்ள நிலக்கரி சுரங்க அகழ்வாராய்ச்சியிலிருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு சுமார் 300,000-400,000 ஆண்டுகள் பழமையான மரக் கலைப்பொருட்களை ஆய்வு செய்ததில், இந்தக் கலைப்பொருட்கள் "கூர்மையான குச்சிகள்" (sharpened sticks) அல்ல, ஆனால் "தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட கருவிகள்" (technologically advanced tools) என்று ஆய்வானது சுட்டிக்காட்டியது. இந்த கருவிகளை உருவாக்க திறமை, துல்லியம் மற்றும் நேரம் தேவைப்பட்டது.


ஏப்ரல் மாதம் தேசிய அறிவியல் அகாடமியின் (National Academy of Sciences) செயல்முறைகள் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில், மொத்தம் 187 மரக் கலைப்பொருட்கள் அடையாளம் காணப்பட்டதாகக் கூறியது. இந்த கலைப்பொருட்கள் பிரித்தல் (splitting), இழைத்தல் அல்லது சிராய்ப்பு (scraping or abrasion) உள்ளிட்ட பரந்த அளவிலான மரவேலை நுட்பங்களை நிரூபித்தன.


மனித வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை நிர்ணயித்தல்


மனித "வரலாறு" எழுத்தின் வருகையுடன் தொடங்கியது. அதற்கு முந்தைய அனைத்தும் "வரலாற்றுக்கு முந்தைய காலம்" என்று அழைக்கப்படுகின்றன. பழைய கருவிகள் அல்லது கட்டிடங்கள் போன்றவற்றிலிருந்து நாம் பெரும்பாலும் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பற்றி அறிந்து கொள்கிறோம். சில சமயங்களில், இன்று வெவ்வேறு குழுக்களின் மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதைப் படிப்பது கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள உதவும்.


19ஆம் நூற்றாண்டில், டேனிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் (Danish archaeologist) கிறிஸ்டியன் ஜீர்கென்சன் தாம்சன் மனித வரலாற்றுக்கு முந்தைய முதல் அறிவியல் ரீதியாக கடுமையான காலத்தை உருவாக்கினார். அவர் அதை கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் என்று பிரித்தார். தொழில்நுட்ப முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்டியன் ஜுர்கென்சனின் அடிப்படை காலவரிசை, நமது இனத்தின் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடிப்படையானது, பின்னர் கோட்பாடு என்னும் நிலைக்கு உயர்ந்துள்ளது. இருப்பினும், கலாச்சாரங்கள் முழுவதும் பல்வேறு அனுபவங்களை பிரதிபலிக்கும் வகையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


நவீன கால எத்தியோப்பியாவில் சுமார் 3.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமினிட் (hominid) மூதாதைகள் முதன்முதலில் கற்கருவிகளைப் பயன்படுத்தியபோது கற்காலம் தொடங்கியது. சுமார் 6,000-4,000 ஆண்டுகள்வரை நீடித்த இந்த காலகட்டம் மனித வரலாற்றில் 99% உள்ளடக்கியது. பழைய கற்காலம் (Palaeolithic Age), இடைக்கற்காலம் (Mesolithic Age), மற்றும் புதிய கற்காலம் (Neolithic Age) என்று மூன்று காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.


பழைய கற்காலம் சில பகுதிகளில் சுமார் 11,650 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீடித்தது. இந்தக் காலமானது அடிப்படையான கற்கருவிகளின் பயன்பாடு மற்றும் வேட்டையாடும் வாழ்க்கை முறையால் வகைப்படுத்தப்படுகிறது. இடைக்கற்காலம் என்பது பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலமாகும். புதிய கற்காலம் மேற்கு ஆசியாவில் சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு, நிலையான விவசாயத்தின் வளர்ச்சி மற்றும் விலங்குகளின் வளர்ப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.


பேணுதல் சார்பு (Preservation bias)


தொல்லியல் சான்றுகள் கற்காலத்தை வகைப்படுத்த உதவுகின்றன. இந்த காலகட்டத்தைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சித் தளங்களில் பல்வேறு நுட்பமான கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கருவிகள் அவற்றைப் பயன்படுத்திய மக்களின் வாழ்க்கை மற்றும் திறன்களைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகின்றன.


சார்லஸ் டார்வின், "மனிதனின் வம்சாவளியும், பாலுறவில் தேர்வும்" (1871) (The Descent of Man, and Selection in Relation to Sex) என்ற புத்தகத்தில், "ஒரு சிக்கிமுக்கிக் கல்லை முரட்டுத்தனமான கருவியாக மாற்றுவது, சரியான கையைச் சரியான வழிகளில் பயன்படுத்தக் கோருகிறது. மிக அடிப்படையான கற்கருவிகளுக்குக்கூட மனிதர்களும் அவர்களின் மூதாதையர்களும் மனநுட்பத்தையும் உடல்திறனையும் வெளிப்படுத்த வேண்டியிருந்தது. இந்தப் பண்புகள் மற்ற உயிரினங்களில் அரிதாகவே காணப்படுகின்றன.

இருப்பினும், இந்தத் திறன்கள் கல்லுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. உலகெங்கிலும் உள்ள கற்காலத் தளங்கள் எலும்புகள், கொம்புகள், களிமண் மற்றும் வரையறுக்கப்பட்ட உலோக வேலைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைப் பயன்படுத்தியதற்கான சான்றுகளைக் காட்டுகின்றன. இருப்பினும், மரம் ஏராளமான வளமாக இருந்தபோதிலும், மரவேலைக்கான சான்றுகள் மிகவும் குறைவாகவே உள்ளன.


ஆயிரக்கணக்கான தொல்லியல் தளங்கள், சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்பு பழங்கற்காலத்தில் கண்டறிந்துள்ளன. இருப்பினும், இந்த தளங்களில் 10-க்கும் குறைவான இடங்களில் இருந்து மர எச்சங்கள் மட்டுமே கிடைத்துள்ளன என்று தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரப் பயன்பாட்டின் ஆரம்பகால சான்றுகள், மரக் குடியிருப்புகளின் வடிவம் 700,000 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்டன. கற்கருவிகளின் மிகத் தொன்மையான சான்றுகள் கிடைத்து இரண்டரை மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது.


தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஐம் போக்கெட் மற்றும் மைக்கேல் நோயல் ஆகியோர் தங்கள் செல்வாக்குமிக்க கட்டுரையான "புதிய கற்கால அல்லது மர யுகம்" (The Neolithic or Wood Age)-ஐ 1985-ல் எழுதினர். பழையகற்காலத்திலிருந்து மர எச்சங்கள் இல்லாதது மரம் பயன்படுத்தப்படவில்லை என்பதற்கான அறிகுறி அல்ல. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வை நடத்திய குழுவின் தலைவரான தோமஸ் டெர்பெர்கர் இதை எதிரொலித்தார். மேலும் அவர், மரக் கருவிகள் கற்களைப் போலவே நீண்ட காலமாக இருந்திருக்கின்றன என்று நாம் கருதலாம். ஆனால் மரம் மோசமடைந்து அரிதாகவே உயிர்வாழ்வதால், ‘பேணுதல் சார்பு’ பழங்காலம் குறித்த நமது பார்வையை சிதைக்கிறது, என்று அவர் நியூயார்க் டைம்ஸிடம் கூறினார்.


ஷோனிங்கன் என்ன வெளிப்படுத்துகிறார்


ஷோனிங்கனில் உள்ள கண்டுபிடிப்புகள் மிகவும் முக்கியமானவை. தொல்பொருள் ஆராய்ச்சித் தளத்தின் ஈரமான மற்றும் ஆக்ஸிஜன் இல்லாத மண் நிலைமைகள் மரம் மற்றும் பிற கரிமப் பொருட்கள் சிதைவதைத் தடுத்தன. இது உலகில் வரலாற்றுக்கு முந்தைய மரக் கலைப்பொருட்களின் நன்கு பாதுகாக்கப்பட்ட சேகரிப்புக்கு வழிவகுத்தது.


சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வானது, காணப்படும் மரக் கருவிகளின் எண்ணிக்கை மற்றும் பல்வேறு காரணமாக ஷோனிங்கனின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. டிர்க் லெடர் (Dirk Leder), ஜென்ஸ் லேமன் (Jens Lehmann), அன்னெமிகே மில்க்ஸ் (Annemieke Milks), டிம்கோடன்பெர்க் (Tim Koddenberg), மைக்கேல் சீட்ஸ் (Michael Sietz), மத்தியாஸ் வோகல் (Matthias Vogel), உட்ஸ் போஹ்னர் (Utz Böhner) மற்றும் டெர்பெர்கர் (Teberger) ஆகியோரால் இணைந்து எழுதப்பட்ட இந்த ஆய்வு, குறைந்தது 20 வேட்டை ஆயுதங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று கூறுகிறது. கூடுதலாக, புதிதாக அடையாளம் காணப்பட்ட இரண்டு கலைப்பொருள் வகைகளில் பிளவுபட்ட மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட 35 கருவிகளும் உள்ளடக்கியது. அவை உள் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படலாம் என்று அது கூறியது.


1990களின் நடுப்பகுதியில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹார்ட்முட் தீம் (Hartmut Thieme) மூன்று மர ஈட்டிகளைக் கண்டுபிடித்தார். சுமார் 400,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட காட்டுக் குதிரைகளின் இறைச்சி எச்சங்களுடன் இவற்றையும் அவர் கண்டுபிடித்தார். உலகின் மிகப் பழமையான பாதுகாக்கப்பட்ட வேட்டை ஆயுதங்களின் இந்த கண்டுபிடிப்பு ஷோனிங்கன் மற்றும் ஹார்ட்முட் தீம் ஆகியோருக்கு உலகளாவிய புகழைக் கொண்டு வந்தது. சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்புவரை மனிதர்கள் எளிய தோட்டிகள் என்ற நம்பிக்கையை இது சவால் செய்தது.


தொலைநோக்குப் பார்வை, திட்டமிடல் மற்றும் பொருத்தமான தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய முறையான வேட்டை, நவீனத்திற்கு முந்தைய ஹோமினிட் (hominid) நடத்தையின் ஒரு பகுதியாக ஈட்டிகள் இருந்தது என்று தெரிவிக்கின்றன. இந்தக் கண்டுபிடிப்பு ஆரம்பகால மனித நடத்தை மற்றும் கலாச்சாரம் குறித்த தற்போதைய பல கோட்பாடுகள் திருத்தப்பட வேண்டியிருக்கலாம் என்பதாகும். ஹார்ட்முட் தீம் தனது 1997ஆம் ஆண்டு "ஜெர்மனியிலிருந்து கீழ் பழங்கற்கால வேட்டை ஈட்டிகள்" (Lower palaeolithic hunting spears from Germany) என்ற கட்டுரையில் இதைப் பற்றி எழுதினார். தாமஸ் டெர்பெர்கர் தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஹோமோ சேபியன்கள் (Homo sapiens) வேட்டையாடுவது மட்டுமல்லாமல், இறைச்சி மற்றும் சமைப்பதில் ஒழுங்கமைக்கும் அளவுக்கு அதிநவீனமாகவும் இருந்தனர் என்று கூறினார்.


புதிய ஆய்வு ஷோனிங்கனின் மரக் கலைப்பொருட்களின் தொழில்நுட்ப சிக்கலைப் பற்றி மேலும் வெளிப்படுத்தியது. ஆராய்ச்சியாளர்கள் 3-டி நுண்ணோக்கியைப் பயன்படுத்தினர், இது பல்வேறு கோணங்களில் இருந்து நிறைய படங்களை எடுத்து அவற்றை டிஜிட்டல் முறையில் ஒன்றிணைத்து 3-டி படத்தை உருவாக்குகிறது. அவர்கள் மைக்ரோ-சிடி ஸ்கேனர்களைப் பயன்படுத்தினர், அவை வழக்கமான CT ஸ்கேனர்களைப் போலவே இருக்கின்றன, ஆனால் மிக உயர்ந்த தெளிவுத்திறனுடன், தேய்மானம் அல்லது வெட்டுக் குறிகளைக் கண்டறிகின்றன.


முன்னணி எழுத்தாளரான டாக்டர் டிர்க் லெடர், இப்போது வரை, மரத்தைப் பிளப்பது நவீன மனிதர்களின் நடைமுறையாக மட்டுமே கருதப்பட்டது என்று விளக்கினார். சில ஈட்டிமுனைகள் உடைந்த பிறகு மீண்டும் கூர்மையாக்கப்பட்டதற்கான அறிகுறிகளைக் கொண்டிருந்தது. இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள டாக்டர் அனெமிகே மில்க்ஸ், எஞ்சிய அடையாளம் காணப்பட்ட மரக்கருவிகள் பழுதுபார்க்கப்பட்டு பிற பணிகளுக்கான புதிய கருவிகளாக மறுசுழற்சி செய்யப்பட்டன என்று குறிப்பிட்டார்.


வரலாற்றுக்கு முந்தைய மரவேலைகளுக்கான ஆதாரங்களின் பற்றாக்குறை இருந்தபோதிலும், ஷோனிங்கனின் கண்டுபிடிப்புகள் நமது கடந்த காலத்தைப் பற்றிய முழுமையான பார்வையை வழங்குகின்றன. அவை ஒரு மூலப்பொருளாக மரத்தின் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன மற்றும் அதனுடன் பணிபுரிவதில் நவீனத்திற்கு முந்தைய மனிதர்களின் அதிநவீன திறன்களை நிரூபிக்கின்றன.




Original article:

Share: