சீனாவின் வணிக நடைமுறைகளை மதிப்பீடு செய்தல். -அசோக் கே காந்தா

 இந்தியா சீனாவுடனான அதன் பொருளாதார உறவுகளுக்கு ராஜதந்திர, பாதுகாப்பு மற்றும் பொருளாதார கண்ணோட்டத்தில் வேறுபட்ட அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.


சீனாவுடனான இந்தியாவின் பதட்டமான நிலைகள் குறைந்து வருகின்றன என்று சமீபத்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சீனாவிலிருந்து அந்நிய நேரடி முதலீட்டிற்கு (foreign direct investment (FDI) ) மிகவும் தாராளமான அணுகுமுறையை சிலர் பரிந்துரைக்கின்றனர். எல்லை பதட்டங்களை ஒட்டுமொத்த உறவுகளுடன் இணைக்கும் இந்தியாவின் தற்போதைய கொள்கையிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றத்தை இது குறிக்கும். 


இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜெனீவாவில் தனது உரையில், சீனாவுடனான "படை விலகல் பிரச்சினைகளில்" ('disengagement problems') சுமார் 75% தீர்க்கப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், எல்லையில் அதிகரித்து வரும் இராணுவமயமாக்கல் "பெரிய பிரச்சினை" என்று அவர் குறிப்பிட்டார்.  


அதே நாளில், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (National Security Adviser (NSA)) அஜித் தோவல் ஒரு மூத்த சீன அதிகாரியான வாங் யியை சந்தித்தார். மீதமுள்ள பகுதிகளில் முழுமையான படைகளை விலக்கிக் கொள்வதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்கவும், அவசரமாக செயல்படவும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், டெப்சாங் சமவெளி (Depsang Plains) மற்றும் டெம்சோக் (Demchok) தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றத்திற்கான அறிகுறியும் இல்லை. எல்லையில் அமைதியும் உறுதித்தன்மை மீட்டெடுக்கப்படும் வரை சீனாவுடனான உறவுகளை இயல்பாக்குவதில்லை என்ற தனது நிலைப்பாட்டை இந்தியா மறுபரிசீலனை செய்வதற்கான அறிகுறியும் இல்லை. 


2020-ஆம் ஆண்டில் பல்வேறு இடங்களில் சீனா எல்லைக் கோட்டை (Line of Actual Control (LAC)) மீறிய பிறகு, எல்லைப் பகுதிகளில் அமைதியை எவ்வாறு மீட்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. முந்தைய மோதலின் போது எல்லைகள், உண்மையான நிலைமைக்குத் திரும்ப வேண்டும் என்று இந்தியா முன்பு வலியுறுத்தியது. ஆனால், இது இப்போது விவாதிக்கப்படவில்லை. “முரண்பாடு புள்ளிகள்” (‘friction points’) என்று அழைக்கப்படுபவற்றில் ஒப்புக் கொள்ளப்பட்ட விலகல் விதிமுறைகள் பற்றிய பொதுத் தகவல்கள் குறைவாகவே உள்ளன. லடாக்கில் பாரம்பரியமாக பார்வையிட்ட குறைந்தது 15 ரோந்து புள்ளிகளை இந்திய எல்லைப் படையினர் இனி அணுக முடியாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய கேள்வி: சீனா உருவாக்கியுள்ள "புதிய இயல்பை" (‘new norma’) ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா? 


 பொருளாதார வர்ணனை ( economic commentary) 


தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் இருந்தபோதிலும், பொருளாதார ஆய்வு 2024, சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை விட சீன முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் சீனாவின் விநியோகச் சங்கிலிகளுடன் இந்தியா இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. சில பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை உறுப்பினர்கள் இந்தக் கருத்தைப் பகிர்ந்துகொண்டு, இந்தியாவின் முதலீட்டுத் தேவைகள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் இருப்பு இல்லாததன் காரணமாக சீனாவிலிருந்து அன்னிய நேரடி முதலீடுகளை (foreign direct investment (FDI)) பார்க்கிறார்கள். இருப்பினும், இந்தக் கருத்துக்கள்  இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சிக்கலான உறவையும் சீனாவுடன் தொடர்புடைய பொருளாதார அபாயங்களைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தையும் புறக்கணிக்கின்றன. 


சீன விநியோகச் சங்கிலிகளுடன் (Chinese supply chains) ஆழமான ஒருங்கிணைப்பு மற்றும் சீன முதலீடுகளை ஈர்ப்பதன் சாத்தியமான நன்மைகள் கேள்விக்குரியவை. 


சீனாவின் கோரிக்கை 


சமீபத்திய டிராக் -1.5 (Track-1.5) மற்றும் டிராக் -2 (Track-2) உரையாடல்களில், சீன அறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் தற்போதைய நிலை மாறிவிட்டது என்பதை ஒப்புக் கொண்டனர். ஆனால், இந்தியா இந்த புதிய யதார்த்தங்களை ஏற்றுக்கொண்டு சாதாரண உறவுகளை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்த்தனர். அவர்கள் சீன நிறுவனங்களுக்கு சம நிலை, எளிதான விசா செயல்முறைகள், நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குதல் மற்றும் சீன பத்திரிகையாளர்களை இந்தியாவில் இருக்க அனுமதித்தல் போன்ற கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த பிரச்சினைகள் சீனா ஏற்படுத்தியுள்ள ஆழமான பிரச்சினையின் அறிகுறிகள் மட்டுமே என்றும், சீனா முதலில் இதை கவனிக்க வேண்டும் என்றும் இந்தியா பதிலளித்தது. 


எல்லைப் பிரச்சினை அல்லது தங்கள் உறவில் உள்ள மற்ற சவால்களில் சீனா சமரசம் செய்யத் தயாராக இல்லை என்பதை இந்தியா தெளிவாக உணர்ந்தது. கிழக்கு லடாக்கில் தாங்கள் உருவாக்கிய புதிய சூழ்நிலையை இந்தியா படிப்படியாக ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் சீனா பொறுமையாக காத்திருப்பது போல் தெரிகிறது. மற்ற இடங்களில், குறிப்பாக தென் சீனக் கடலில் தங்களின் உத்தியை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.


குளோபல் டைம்ஸில் வெளியிடப்பட்ட ஒரு கடுமையான ("இந்தியாவின் இராஜதந்திரத்தில் 'எஸ். ஜெய்சங்கர் பிரச்சனை' உள்ளது") கருத்துக் கட்டுரையில்   சீன மனநிலை தெளிவாகத் தெரிகிறது. இந்த கட்டுரை பீப்பிள்ஸ் டெய்லி செய்தித்தாளின் ஆங்கில பதிப்பிலிருந்து அகற்றப்பட்டாலும், இது மிகவும் செல்வாக்கு மிக்க சீன செய்தி பதிப்புகளில் கிடைக்கிறது. 


இரண்டாவதாக, குறிப்பிடத்தக்க இருதரப்பு வர்த்தக பற்றாக்குறை குறித்த இந்தியாவின் நீண்டகால பிரச்சினையை தீர்க்க சீனா விரும்பவில்லை. சீன சந்தையை அணுக முயற்சிக்கும் இந்திய நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் அவர்கள் புறக்கணிக்கிறார்கள். சர்வதேச வர்த்தக மையத்தின் தரவுகளின்படி (International Trade Centre data), சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 2021-ஆம் ஆண்டில்  $64 பில்லியன் இருந்தது.  2023-ஆம் ஆண்டில் $105 பில்லியனை  தாண்டியது. இதற்கிடையில், சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 2021-ஆம் ஆண்டில்  $23 பில்லியன் இருந்து 2023-ஆம் ஆண்டில் $16 பில்லியனயாக குறைந்தது. முக்கியமான துறைகளில் சீன இறக்குமதிகளை இந்தியா சார்ந்திருப்பதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இது குறிப்பிடத்தக்க பாதிப்பை உருவாக்குகிறது. ஏனெனில், இதுபோன்ற சார்புகளை ஆயுதமாக்கிய வரலாற்றை சீனா கொண்டுள்ளது. 


மூன்றாவதாக, அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளும் சீனாவும் தங்கள் பொருளாதாரங்களில் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளித்து வருகின்றன. ரோடியம் குழுமத்தின் (Rhodium Group) அறிக்கை, சீனாவிற்கு மாற்றாக, வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகளில் இந்தியா அதிக மதிப்பெண் (2.86) பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்தியா சீன விநியோகச் சங்கிலிகளுடன் நெருக்கமாகப் பணியாற்ற முயற்சித்தால், உலகளாவிய நிறுவனங்கள் தங்கள் விநியோகச் சங்கிலிகளுக்கு மாற்றாக இந்தியாவைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.


நான்காவதாக, சீனா ஒரு சந்தைப் பொருளாதாரமாக வகைப்படுத்தப்படவில்லை. ஜூலை 2024-ஆம் ஆண்டில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது அமர்வு தொழில்துறை கொள்கையில் அதன் கவனத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. அரசுத் துறைக்கு வளர்ந்து வரும் பங்கு மற்றும் அரசின் ராஜதந்திர  இலக்குகளுக்கு சேவை செய்ய தனியார் துறையை ஒருங்கிணைப்பது ஆகியவை இதில் அடங்கும். 


மின்சார வாகனங்கள், சூரிய உபகரணங்கள் மற்றும் லித்தியம் அயன் பேட்டரிகள் போன்ற எதிர்கால தொழில்களில் ஆதிக்கம் செலுத்துவதை சீனா நோக்கமாகக் கொண்டுள்ளது. உள்நாட்டு நுகர்வில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, சீனா தனது பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க ஏற்றுமதியை விரும்புகிறது. இந்த அணுகுமுறை இந்தியா போன்ற முன்னேறிய பொருளாதாரங்கள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் ஆகிய இரு நாடுகளுடனும் அதன் பொருளாதார உறவுகளில் பதட்டங்களை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 

சீனாவின் திட்டம் 


ஐந்தாவதாக, முதலீடு மற்றும் அதன் நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்ப வெளியேற்றங்கள் மீதான சீனாவின் கடுமையான கட்டுப்பாடு உள்நாட்டு மதிப்புச் சங்கிலிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ராஜதந்திரம் உலகளாவிய தொழில்நுட்ப உற்பத்தியில் சீனாவை முக்கியமான நாடக காட்ட முயற்சிக்கிறது இது மெர்கேட்டர் இன்ஸ்டிடியூட் ஃபார் சீனா ஸ்டடீஸ் (Mercator Institute for China Studies (MERICS))-ன் சமீபத்திய ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


மற்றொரு அறிக்கை, சீனா தனது கார் உற்பத்தியாளர்களை மேம்பட்ட மின்சார வாகன தொழில்நுட்பத்தை நாட்டிற்குள் வைத்திருக்கவும், முக்கிய கூறுகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் வெளிநாட்டு ஆலைகளுக்கு "நாக்-டவுன் கருவிகளை" (‘knock-down kits’) ஏற்றுமதி செய்கிறது. 

 

கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், இந்தியாவின் உற்பத்தி திறன்களை வளர்ப்பதில் சீனா உதவும் என்று எதிர்பார்ப்பது தவறானதாகும். சீன நிறுவனங்கள் இந்தியாவில் முக்கியமான துறைகளில் முதலீடு செய்ய விரும்புகின்றன. பெரும்பாலும் கையகப்படுத்துதல் மூலம். இது எல்லை பதட்டங்கள் அதிகரிப்பதற்கு முன்பு, ஏப்ரல் 2020-ஆம் ஆண்டில் பத்திரிகை குறிப்பு 3-ஐ அறிமுகப்படுத்த வழிவகுத்தது. சீன நிறுவனங்களுக்கு தடையற்ற அணுகலை அனுமதிப்பது குறைந்த மதிப்பு முதலீடுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் உலகளாவிய நன்மையைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட பல துறைகளில் தொழில்துறை வளர்ச்சியைத் தடுக்கலாம்.

 

ஆறாவதாக, சீனாவிலிருந்து அந்நிய நேரடி முதலீட்டை (foreign direct investment (FDI)) அதிகரிப்பதன் மூலம் சீனாவிலிருந்து இறக்குமதியைக் குறைக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு, குறிப்பிடத்தக்க சீன முதலீடுகளைப் பெற்ற பிற பிராந்தியங்களின் ஆதாரங்களால் ஆதரிக்கப்படவில்லை. 


எடுத்துக்காட்டாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பிற்கு (Association of Southeast Asian Nations (ASEAN)) சீனாவிலிருந்து இறக்குமதி 2021-ஆம் ஆண்டில் $386 பில்லியனில் இருந்து 2023-ஆம் ஆண்டில் $438 பில்லியனாக உயர்ந்தது. முக்கியமாக, சீனாவில் இருந்து இடைநிலைப் பொருட்களின் ஆதாரம் அதிகரித்ததன் காரணமாக. அமெரிக்க கட்டணங்களைத் தவிர்ப்பதற்காக சீனா தனது ஏற்றுமதிகளை வியட்நாம் மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளது. ஆனால், விதிகளைச் சுற்றி வருவதற்கான வழி மெதுவாக மூடப்படுகிறது.

 

பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில், சீனாவுடனான அதன் பொருளாதார உறவில் இந்தியா கவனமாக அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். உலகின் மிகப் பெரிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக இருக்கும் சீனாவிலிருந்து இந்தியா தன்னை முழுமையாகப் பிரித்துக் கொள்ள முடியாது. இருப்பினும், சீனாவின் அந்நிய நேரடி முதலீட்டை (foreign direct investment (FDI)) ஏற்கும் பொருளாதாரத்தின் பகுதிகளை இந்தியா தேர்வு செய்ய வேண்டும். இந்த முடிவு இந்தியாவின் உற்பத்தி பலம் மற்றும் உத்திகளின் அடிப்படையிலும் தேசிய பாதுகாப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சியையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


அசோக் கே.காந்தா சீனாவுக்கான முன்னாள் தூதர், இப்போது சிந்தனைக் குழாம்களுடன் தொடர்புடையவர்.



Original article:

Share: