வறட்சி, காடழிப்பு, காலநிலை மாற்றம்: தென் அமெரிக்கா தீ விபத்துக்கு என்ன காரணம்? -அலிந்த் சௌஹான்

 இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பிரேசில், பெரு, பொலிவியா, கொலம்பியா மற்றும் பிற நாடுகளின் சில பகுதிகள் மற்றும்  அமேசான் மழைக்காடுகளை எரித்துள்ளது. தென் அமெரிக்கா முழுவதும் மில்லியன் ஏக்கர் காடுகள் தற்போது எரிந்து வருகின்றன.


தென் அமெரிக்கா கிட்டத்தட்ட இருபதாண்டுகளில் மிக மோசமான காட்டுத் தீயால் பாதித்து வருகிறது. மேலும், செப்டம்பர் 11 நிலவரப்படி, ஒரு வருடத்தில் காணப்பட்ட தீ விபத்துகளின் எண்ணிக்கையானது, முன்பை விட தற்போது அதிகரித்துள்ளது. 


பிரேசிலின், விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் (National Institute for Space Research (INPE)) பகுப்பாய்வு செய்யப்பட்ட செயற்கைக்கோள் தரவுகள், தென் அமெரிக்காவின் அனைத்து 13 நாடுகளிலும் இந்த ஆண்டு இதுவரை 346,112 தீ பாதிப்பு ஏற்படும் பகுதிகளை அடையாளம் கண்டுள்ளன. இது 2007-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட 345,322 பாதிப்பு ஏற்படும் பகுதிகள் என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. 


இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, அமேசான் மழைக்காடுகளை தீ பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. தற்போது பிரேசில், பெரு, பொலிவியா, கொலம்பியா உள்ளிட்ட சில பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருகிறது. தென் அமெரிக்கா முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கர் காடுகள் எரிந்து கொண்டிருக்கின்றன. 


இதனால், மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது பிரேசில் ஆகும். இது கண்டத்திலேயே மிகப் பெரிய நாடாகும். இப்பகுதியில் எரியும் தீயில் 60% இங்குதான் உள்ளது. பிரேசிலிய தன்னார்வ தொண்டு நிறுவனமான மேபியோமாஸின் தரவு (Data from Mapbiomas), இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் 11 மில்லியனுக்கும் அதிகமான ஹெக்டேர் நிலம் எரிந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த பகுதி உத்தரகண்ட் மாநிலத்தை விட இரண்டு மடங்கு பெரியது. ஆறு பரந்த சுற்றுச்சூழல் அமைப்புகளில் மூன்று, அமேசான், செராடோ (உலகின் மிகவும் பல்லுயிர் சவன்னா) மற்றும் பான்டனல் ஈரநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று கிரிஸ்ட் இதழின் அறிக்கை தெரிவிக்கிறது. 


பிரேசிலைத் தொடர்ந்து, பொலிவியா இந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான தீ விபத்துகளைக் கண்டுள்ளது என்று விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவன (INPE) தரவுகள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 13 நிலவரப்படி நாட்டின் 3.8 மில்லியன் ஹெக்டேருக்கும் அதிகமான காடுகள் மற்றும் புல்வெளிகள் சேதமடைந்துள்ளன. பொலிவியாவைத் தொடர்ந்து பெரு, அர்ஜென்டினா மற்றும் பராகுவே ஆகிய நாடுகள் உள்ளன. இந்த காட்டுத்தீயால் ஏற்பட்ட புகை பல நாடுகளின் வானத்தை நிரப்பியுள்ளது.  நச்சு மேகங்கள் இப்போது 10 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளன. இது முழு அமெரிக்காவையும் விட பெரியது என்று லைவ் சயின்ஸின் (Live Science) அறிக்கை தெரிவிக்கிறது. 


நடாலியா கில் வளிமண்டல அறிவியலில் நிபுணர் ஆவார். உருகுவேயின் தொழில்நுட்ப ஆய்வகத்தில் காற்றின் தரம் மற்றும் உமிழ்வு பிரிவில் பணிபுரிகிறார். காற்றின் தரம் படிப்படியாக குறைந்து வருவதாக அவர் லைவ் சயின்ஸிடம் (Live Science) கூறினார். தெற்கு பிரேசில், வடக்கு அர்ஜென்டினா, பொலிவியா, பராகுவே மற்றும் வடகிழக்கு உருகுவே ஆகிய நகரங்களில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.


உருகுவேயின் தலைநகரான மான்டிவீடியோ போன்ற நகரங்களில் வசிப்பவர்கள் பல நாட்களாக மோசமான பார்வையை (poor visibility) அனுபவித்துள்ளனர். இது அடர்த்தியான புகை மேகம் மற்றும் கருப்பு மழை காரணமாக இருந்தது. இது சாம்பல் மற்றும் கரி கலவையின் காரணமாக மழைப்பொழிவு இருண்டதாக மாறும் போது நிகழ்கிறது. அர்ஜென்டினாவின் குறைந்தது 11 மாகாணங்களில் இதேபோன்ற நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. 


விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் (INPE) காற்றின் தர ஆராய்ச்சியாளர் கர்லா லாங்கோ, ராய்ட்டர்ஸிடம் கூறுகையில், புகையின் வெளிப்பாடு சுவாச பிரச்சினைகளுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று கூறினார். இது ஆயிரக்கணக்கான கடுமையான மரணங்களையும் ஏற்படுத்தக்கூடும். காட்டுத்தீ புகையை உள்ளிழுப்பது தென் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 12,000 ஆரம்பகால இறப்புகளுக்கு பங்களிக்கிறது என்று 2023-ஆம் ஆண்டு நடந்த  ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஒவ்வொரு ஆண்டும், தென் அமெரிக்காவில் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் அதிக எண்ணிக்கையிலான காட்டுத்தீ பாதிப்புகள் ஏற்படுகிறது. இது கண்டத்தின் காட்டுத்தீ காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில், விவசாயிகள் வேண்டுமென்றே சாகுபடிக்காக தங்கள் நிலங்களை எரிக்கிறார்கள். பெரும்பாலும், இந்த தீ காடுகளுக்குள் தப்பிச் செல்கிறது. இருப்பினும், இந்த ஆண்டு காட்டுத்தீ காலமாக பல காரணங்களுக்காக மோசமாக உள்ளது. 


இந்த கண்டம் தற்போது வரலாறு காணாத மோசமான வறட்சியை சந்தித்து வருகிறது. பிரேசில், பெரு மற்றும் பொலிவியா ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பிரேசிலில், நாட்டின் சுமார் 59% வறட்சி நிலைமைகளை எதிர்கொள்கிறது. கிரிஸ்டின் கூற்றுப்படி, அமேசான் படுகை ஆறுகள் (Amazon basin rivers) வரலாறு காணாத அளவில் குறைந்த மட்டத்தில் பாய்கின்றன. இந்த தீவிர வறண்ட நிலைமைகள், எல் நினோ நிகழ்வால் (இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவடைந்தது), பிராந்தியம் முழுவதும் தீ பரவ அனுமதித்துள்ளது. 


குறிப்பாக அமேசானில் அதிக அளவு காடுகளை அழிப்பது காட்டுத்தீயை மோசமாக்கியுள்ளது. நிலத்தை சுத்தம் செய்யும் போது, ​​தீ பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உலக வளக் கழகத்தின் அறிக்கையின்படி, காடழிப்பு வானிலை முறைகளில் பிராந்திய மாற்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் பெரிய மற்றும் கடுமையான வறட்சிக்கு வழிவகுத்தன. இதனால், காடுகள் தீயால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்படுகிறது .


புவி வெப்பமடைதலும் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது. தென் அமெரிக்காவில் நிலவும் வறட்சிக்கு பருவநிலை மாற்றமே முக்கிய காரணம் என்று சர்வதேச விஞ்ஞானிகள் குழுவான உலக வானிலை இயற்பண்பு (World Weather Attribution) அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரித்து வருவதால் வறட்சியை 30 மடங்கு அதிகமாக்கியுள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது கடுமையான வெப்பத்தை உந்தியது மற்றும் குறைந்த மழைக்கு பங்களித்தது.


தென் அமெரிக்காவில் இந்த ஆண்டு காட்டுத்தீ எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வழக்கமாக, அக்டோபர் மாதத்தில் இப்பகுதியில் மழை பெய்யும். ஆனால், உறுதியாக மழை வருவதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. அமேசான் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியல் இயக்குனர் அனே அலென்கார், கிரிஸ்டிடம், "மழை வருமா என்பது தெரியாது" என்று குறிப்பிட்டிருந்தார்.


கண்டத்தில் நடந்து வரும் தீவிர காட்டுத்தீ காலநிலை விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தவில்லை. இந்த நிகழ்வுகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக காலநிலை மாதிரிகளால் செய்யப்பட்ட கணிப்புகளுடன் பொருந்துகின்றன என்று கூறுகிறார்கள். வறட்சி, காட்டுத்தீ மற்றும் வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் வரும் ஆண்டுகளில் மோசமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கு முக்கியக் காரணமாகும்.



Original article:

Share: