2024-ஆம் ஆண்டில் உலகளவில் பதிவான 12.06 மில்லியன் டெங்கு நோயாளிகளில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும்.
இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் டெங்கு நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு உலகளவில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளன. பிரேசில் மற்றும் பிற தென் அமெரிக்க நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பின் (World Health Organization (WHO)) தரவுகள் ஒவ்வொரு ஆண்டும் டெங்கு நோயாளிகள் அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன.
டெங்கு என்பது ஏடிஸ் எஜிப்டி கொசுக்களால் (Aedes aegypti mosquito) பரப்பப்படும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு லேசான அறிகுறிகள் இருக்கும். இருப்பினும், இந்த நோய் காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை மற்றும் மூட்டு வலிகள், குமட்டல், வாந்தி, கண்களுக்குப் பின்னால் வலி மற்றும் தடிப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்தும். கடுமையான நிலைகளில், தொற்று உட்புற இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும் மற்றும் சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தி லான்செட் (The Lancet) இதழின் தலையங்கத்தின்படி, கடந்த 20-ஆண்டுகளில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், இந்த எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்பட்டதாகவும் இருக்கலாம். டெங்கு மட்டுமே தற்போது ஆண்டுதோறும் உயிரிழக்கும் ஒரே தொற்று நோயாக உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய டெங்கு கண்காணிப்பின் தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை உலகளவில் 12 மில்லியனுக்கும் அதிகமான பாதிப்புகள் மற்றும் 6,991 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு முழுவதும் பதிவான 5.27 மில்லியன் பாதிப்புகளை விட இரு மடங்கு அதிகமாகும், இது ஒரு சாதனையாகும். கடந்த ஆண்டுக்கு முன்பு, வருடாந்திர டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை பொதுவாக இரண்டு முதல் மூன்று மில்லியன் வரை மட்டுமே பதிவாகியிருந்தன.
2024-ஆம் ஆண்டிற்கான பதிவு எண்கள் இன்னும் குறைவான எண்ணிக்கையாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் தங்கள் தரவை உலகளாவிய கண்காணிப்பு வலையமைப்பிற்கு தெரிவிக்கவில்லை. கூடுதலாக, தரவை அளிக்கும் மற்ற நாடுகளில், ஒவ்வொரு டெங்கு நோயாளியும் பரிசோதிக்கப்பட்டு சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இருக்க மாட்டார்கள்.
இந்தியாவின் பல நகரங்களில் கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தேசிய வெக்டார் மூலம் பரவும் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் (National Vector Borne Disease Control Programme) சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் மாத இறுதிக்குள் 32,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளில் 32 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த எண்ணிக்கை கடந்த இரண்டு மாதங்களில் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது. ஒன்றிய சுகாதார செயலாளர் அபூர்வ சந்திரா ஆகஸ்ட் தொடக்கத்தில் 2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50% அதிகரித்துள்ளது என்று கூறினார்.
இந்தியாவில் பல பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. 2001-ஆம் ஆண்டில், இந்த நோய் எட்டு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் மட்டுமே பதிவானது. 2022-ஆம் ஆண்டில், இது ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கும் பரவியது. மேலும், லடாக் முதல் இரண்டு நோய் பாதிப்புகளைப் பதிவு செய்தது.
நகரமயமாக்கல், காலநிலை மாற்றம் மற்றும் மக்கள் மற்றும் பொருட்களின் பரவல் ஆகிய மூன்று முக்கிய காரணிகளால் டெங்கு பரவுதல் எளிதாக்குகிறது என்பதை தி லான்செட் (The Lancet) இதழின் தலையங்கம் சுட்டிக்காட்டுகிறது.
நகரமயமாக்கல் (URBANISATION):
அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகர்ப்புறங்களில் இந்த நோய் மிக விரைவாக பரவுகிறது. ஏனென்றால், நகர்ப்புற இடங்கள் சுத்தமான, தேங்கி நிற்கும் நீரில் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களுக்கு போதுமான உற்பத்தி செய்யும் (breeding sites) இடங்களை உருவாக்குகின்றன. பொதுவாக மழைக்காலத்தின் போதும் அதற்குப் பிறகும் பாதிப்புகளின் அதிகரிப்பு பதிவாகிறது.
புது தில்லியின் மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையத்தில் உள்ள வெக்டார் மூலம் பரவும் நோய்கள் குழுவைச் சேர்ந்த டாக்டர் சுஜாதா சுனில், டெல்லியில் சமீபத்திய மழை மற்றும் வெப்பமான வானிலை கொசுக்கள் பெருகுவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குகிறது என்று குறிப்பிடுகிறார்.
காலநிலை மாற்றம்:
வெப்பநிலையின் அதிகரிப்பு கொசுக்கள் முன்பு செல்ல முடியாத இடங்களில் உற்பத்தி செய்ய அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக புவி வெப்பமடைதல், கொசுக்கள் இதுவரை இல்லாத அதிக உயரமான இடங்களில் கூட அதிக அளவில் உள்ளது என்று சுனில் கூறினார்.
மேலும், காலநிலை மாற்றம் டெங்கு வைரஸை வலுவாகவும், பரவுவதில் சிறப்பாகவும் மாற்றியுள்ளது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் ஆய்வின் படி, அதிக வெப்பநிலை டெங்குவை பரப்பும் கொசுக்களை அதிக இடங்களில் வாழ அனுமதிக்கிறது. இது கொசுக்களில் வைரஸ் வேகமாகப் பெருக உதவுகிறது.
மக்கள் இயக்கம் (MOVEMENT OF PEOPLE):
மக்கள் மற்றும் பொருட்களின் உலகளாவிய இயக்கம், தொற்றுநோய்களின் அதிக பரவலுக்கு வழிவகுத்தது. இருப்பினும், சிறந்த சோதனை மற்றும் அறிக்கையிடலும் அதிகரிப்புக்கு பங்களிக்கக்கூடும் என்று சுனில் கூறினார்.
டெங்கு மட்டுமின்றி, இதே கொசுவால் பரவும் சிக்குன்குனியா (chikungunya), ஜிகா போன்ற நோய்களும் அதிகரித்து வருகின்றன. ஜிகா (Zika) முதன்முதலில் இந்தியாவில் 2016-ல் காணப்பட்டது மற்றும் அதன் பின்னர் பல முறை இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
"ஒரு தொற்றுநோய் கொசுக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறதா என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். மற்ற இரண்டு தொற்றுநோய்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது நடந்தால், மூன்று நோய்த்தொற்றுகளின் பரவலும் அதிகரிக்கக்கூடும்" என்று சுனில் கூறினார்.
டெங்குவை தடுப்பது (dengue be prevented) எப்படி?
முதலில், தனிநபர்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது சுற்றுப்புறங்களிலோ கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொட்டிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இரண்டாவதாக, மக்கள் கொசுக்கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் பகலில் கடிக்கும். முழு உடலையும் மறைக்கும் ஆடைகளை அணிவது, குறிப்பாக மழைக்காலங்களில், கடிப்பதைத் தடுக்கலாம்.
மூன்றாவதாக, பொது சுகாதார அமைப்புகள் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை செயல் முறைகளில் கவனம் செலுத்த வேண்டும். இது டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்கவும், அதனுடன் தொடர்புடைய இறப்புகளை குறைக்கவும் உதவும்.
டெங்குவுக்கு எதிராக ஏதேனும் தடுப்பூசிகள் (vaccines against dengue) உள்ளதா?
உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) இரண்டு தடுப்பூசிகளை பரிந்துரைக்கிறது. சனோஃபியின் டெங்வாக்ஸியா (Sanofi's Dengvaxia) மற்றும் டகேடாவின் க்யூடெங்கா (Takeda's QDenga). ஆனால், இவற்றுக்கு இந்தியாவில் அனுமதி கிடைக்கவில்லை. இந்தியா தனது சொந்த தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறது.
சில வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகின்றன. அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் (National Institute of Allergy and Infectious Diseases in the United States) நிறுவனத்திலிருந்து மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட பலவீனமான வைரஸைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் (Serum Institute of India’s) தடுப்பூசி மிகவும் மேம்பட்ட செயல் நிலைகளில் உள்ளனர். இதே வைரஸைப் பயன்படுத்தி பனேசியா பயோடெக் (Panacea Biotec) உருவாக்கி வருகிறது.