இந்தியா மக்கள்தொகை மாற்றத்தை (demographic shift) சந்திக்க உள்ள நிலையில், மூத்த குடிமக்களைப் பராமரிப்பது தேசிய முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
34-வது சர்வதேச மூத்த குடிமக்கள் தினம் (International Day of Older Persons) அக்டோபர் 1-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், மூத்த குடிமக்களின் பராமரிப்பதில் கவனம் செலுத்துவது இன்னும் முக்கியமானது. இது உலக அளவில் மட்டுமல்ல, இந்தியாவிற்கு முக்கியமானது. 2023-ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 1.1 பில்லியன் மக்கள் இருப்பதாக சமீபத்திய தரவு காட்டுகிறது. இந்த குழு மொத்த மக்கள் தொகையில் 14.16% ஆகும். 2050-ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 2.1 பில்லியனாக அல்லது உலக மக்கள் தொகையில் 22% ஆக இரட்டிப்பாகும். 1982-ஆம் ஆண்டு மூத்த குடிமக்கள் தொடர்பான வியன்னா சர்வதேச நடவடிக்கைத் திட்டம் (Vienna International Plan of Action) ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் ஐ.நா இந்த நாளை மூத்த குடிமக்கள் தினமாக நிறுவியது.
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தி இந்த ஆண்டின் கருப்பொருள் "மூத்த குடிமக்கள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்களின் கண்ணியத்தை மதிக்கும் பராமரிப்பு அமைப்புகளை வலுப்படுத்துதல்" என்பதை வலியுறுத்துகிறது. இந்தியாவின் மாறிவரும் மக்கள்தொகையைப் பொறுத்தவரை, இந்த செய்தி மிகவும் முக்கியமானது.
மூத்த குடிமக்களின் சமூக பொருளாதார நிலை (Socioeconomic status of the elderly)
கடந்த பத்தாண்டுகளில், கருவுறு விகிதம் குறைப்பு (fertility reduction), மகப்பேறு மரணம் (maternal mortality), வறுமை ஒழிப்பு (poverty alleviation) மற்றும் தொற்று நோய்களைக் (communicable diseases) கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இருப்பினும், வேகமாக வயதாகும் மக்களுக்குத் தேவையான சேவைகள் மற்றும் கவனிப்பு குறித்து சிறிய விவாதங்கள் நடந்துள்ளன. இந்தியாவில் அதிக மூத்த குடிமக்கள் இருப்பதை நாம் மறந்து விட்டோம்.
இந்தியாவில், தற்போது 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட 149 மில்லியன் மக்கள் உள்ளனர். இது மக்கள் தொகையில் 10.5% ஆகும். 2050-ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 347 மில்லியனாக அல்லது மக்கள் தொகையில் 20.8% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் முத்த குடிமக்களின் மக்கள் தொகை அதன் இளைய வயதினரை விட வேகமாக வளர்ந்து வருகிறது. ஆயுட்காலம் 70 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. ஆனால், ஆரோக்கியமான ஆயுட்காலம் 6.5 ஆண்டுகள் குறைவாக உள்ளது. 2046-ஆம் ஆண்டில், இந்தியாவில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 0-14 வயதுடைய குழந்தைகளின் மக்கள்தொகையை விட அதிகமாக இருக்கும்.
மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
ஐ.நா மக்கள்தொகை நிதியம் மற்றும் சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் (UN Population Fund and the International Institute for Population Sciences) ஆகியவற்றால் வெளியிடப்பட்ட இந்திய முதியோர் அறிக்கை 2023 (India Ageing Report 2023) இன் படி, இந்தியாவின் மூத்த குடிமக்களில் 40% பேர் ஏழைகள் என்று கூறுகிறது. 18.7% பேர் எந்த வருமானமும் இல்லாமல் வாழ்கின்றனர். மேலும், 18.7% மூத்த குடிமக்களுக்கு மட்டுமே மருத்துவக் காப்பீடு உள்ளது. இதனால் பெரும்பாலானோர் நோய்வாய்ப்பட்டால் நிதி நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். 2017-18-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இந்தியாவில் நீண்ட காலம் வாழும் நபர்களைப் பற்றிய ஆய்வு (Longitudinal Ageing Study in India (LASI)) ஆண்களை விட நீண்ட காலம் வாழும் பெண்கள், பல நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறிந்துள்ளது.
ஆண்களில் 28%-க்கும் அதிகமானோர் மற்றும் பெண்களில் 30% முறையே, ஒரு நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 25% ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாள்பட்ட நிலைகள் உள்ளன. வயதாகும்போது, இந்த நிலை மோசமடைகிறது. தொடர்ந்து மருத்துவ உதவியின் அவசியத்தை வலியுறுத்துகிறது. கணக்கெடுப்புக்கு 12 மாதங்களுக்கு முன்பு 59% வயதான மூத்த குடிமக்கள் வெளிநோயாளர் சேவைகளைப் பயன்படுத்தினர் என்பதையும் LASI ஆய்வு காட்டுகிறது.
மூன்றில் இரண்டு பங்கு வயதான நபர்கள் பொது சுகாதாரப் பராமரிப்புக்கான நம்பிக்கை அல்லது அணுகல் இல்லாததால் தனியார் வழங்குநர்களிடமிருந்து சிகிச்சையைப் பெறுகிறார்கள். வயதான நோயாளிகளில் 23% மட்டுமே பொது சுகாதார சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். இது இந்தியாவின் ஆரம்ப சுகாதார அமைப்பின் குறைபாடுகளை கோடிட்டுக் காட்டுகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் இந்த குறைபாடு இருப்பதை ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (Ministry of Health and Family Welfare) வெளியிட்டுள்ள சுகாதாரப் பராமரிப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளம் குறித்த அறிக்கை இந்தக் குறைபாடுகளை வெளிக்காட்டியது.
79.9% கிராமப்புற சமூக சுகாதார நிலையங்களில் தேவைக்கேற்ற நிபுணர்கள் இல்லை. குறிப்பாக, அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு 83.37%, மகப்பேறு மருத்துவர்களுக்கு 74.57%, மருத்துவர்களுக்கு 81.93%, குழந்தை மருத்துவர்களுக்கு 80.58% பற்றாக்குறை உள்ளது. இந்தப் பற்றாக்குறையால் ஏற்படும் உயர் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் (out-of-pocket health-care) காரணமாக, பல மூத்த குடிமக்கள் வறுமையை எதிர்கொள்கின்றனர். மேலும், அவர்களுக்குத் தேவையான சிகிச்சையைப் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
மூத்த குடிமக்கள் சுகாதாரப் பராமரிப்புக்கு கூடுதலாக ஊட்டச்சத்து குறைபாடு, உடல் பருமன் மற்றும் சமூக தனிமை போன்ற பிரச்சினைகளைக் எதிர்கொள்கின்றனர். பல வயதானவர்கள், குறிப்பாக கிராமப்புறங்களில், உடல் குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். இது ஆடை அணிவது, குளிப்பது மற்றும் நடப்பது போன்ற அன்றாட அடிப்படைபணிகளைச் செய்வதற்கான திறனைக் குறைக்கிறது. மேலும், இளைய குடும்ப உறுப்பினர்கள் நகரங்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்குச் செல்வதால், பல வயதான நபர்கள் இப்போது தனியாக வாழ்கின்றனர்.
இது அவர்களின் தனிமை, மனச்சோர்வு மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. கூடுதலாக, காலநிலை மாற்றம் அவர்களின் நிலைமையை மோசமாக்கியுள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள மூத்த குடிமக்கள் வானிலை மாற்றங்களினால் மிகவும் பாதிப்படைகின்றனர்.
மூத்த குடிமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், வேறு எந்த பொது சுகாதார காப்பீட்டின் கீழும் இல்லாத 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (AB-PMJAY)) நீட்டிப்பு, 1999-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கை,பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மற்றும் நலன்புரி சட்டம் (Maintenance and Welfare of Parents and Senior Citizens Act), 2007-ஆம் ஆண்டுக்கான நடவடிக்கைகள் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கான கட்டமைப்பை வழங்கும் முன்முயற்சிகளாகும்.
கூடுதலாக, தடுப்பு, குணப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு சிகிச்சை ஆகியவை முதியோருக்கான சுகாதாரப் பராமரிப்புக்கான தேசிய திட்டத்தால் (National Programme for the Health Care for the Elderly (NPHCE)) வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கைகளால் மட்டுமே மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க முடியாது.
கோரிக்கைகள் அதிகரிக்கும் போது கொள்கையை மறுவடிவமைத்தல்
இந்தியா மக்கள்தொகை மாற்றத்தை சந்திக்க உள்ள நிலையில், மூத்த குடிமக்களைப் பராமரிப்பது தேசிய முன்னுரிமையாக இருக்க வேண்டும். மூத்த குடிமக்கள் உடல்நலம், சமூகப் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் ஆகியவற்றில் சரியான ஆதரவைப் பெறுவதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, இளைய தலைமுறையினர் சமூக மற்றும் நிதி ரீதியாக பராமரிப்பிற்கான அதிக தேவைகளை எதிர்கொள்கின்றனர்.
மூத்த குடிமக்களுக்கு தேவையான ஆதரவினை வழங்க, வலுவான கொள்கைகளையும் அமைப்புகளையும் உருவாக்க வேண்டும். மூத்த மக்கள்தொகை அதிகரிக்கும் போது சமூகக் கொள்கைகள், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூக ஆதரவு ஆகியவற்றில் வாய்ப்பும் சவாலும் உள்ளது. விரிவான சுகாதாரப் பாதுகாப்பில் முதலீடு செய்தல், வயதுக்கு ஏற்ற சூழலை உருவாக்குதல் மற்றும் வலுவான நீண்ட கால பராமரிப்பு வழங்குதல் ஆகியவை வயதானவர்கள் ஆரோக்கியமான மற்றும் மிகவும் கண்ணியமான வாழ்க்கையை வாழ உதவும். மூத்த குடிமக்களைப் பராமரிப்பது கடமை மட்டுமல்ல; இது நமது சமூகத்தின் எதிர்காலத்திற்கான முதலீடும் ஆகும். மூத்த குடிமக்களை சிறப்பாக நடத்தம் சமூகம் அதன் வரலாற்றை மதிப்பதுடன், வலுவானஎதிர்காலத்தை உருவாக்குகிறது.
நிதின் குமார் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (Indira Gandhi National Open University (IGNOU)) மாணவர் மற்றும் ஆராய்ச்சியாளர்.