ஒரு 'நடுநிலை' ஆஸ்திரியா உருவாக நேரு எவ்வாறு உதவினார்? -சஞ்சனா சச்தேவ்

 பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று  ஆஸ்திரியா நாட்டிற்கு பயணம் செய்தார். 1983-ல் இந்திரா காந்திக்குப் பிறகு மத்திய ஐரோப்பாவில் உள்ள ஆஸ்திரியா நாட்டிற்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார்.


பிரதமர் நரேந்திர மோடியின் ஆஸ்திரியா பயணத்திற்கு முன், ஜூலை 9, செவ்வாய் அன்று காங்கிரஸ் கட்சி, ஆஸ்திரியாவின் சுதந்திரம் மற்றும் நடுநிலைமையை ஆதரிப்பதில் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நினைவு கூர்ந்தது.


அக்டோபர் 26, 1955-ல் ஆஸ்திரியா முழு சுதந்திரம் அடைந்ததாகவும், பிரதமர் மோடியால் அடிக்கடி விமர்சிக்கப்படும் ஜவஹர்லால் நேரு, ஆஸ்திரியாவை ஒரு இறையாண்மை  தேசமாக நிறுவுவதில் முக்கியப் பங்காற்றினார் என்று காங்கிரஸ் கட்சியின்  பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டார். 


ஜெய்ராம் ரமேஷ், ஆஸ்திரிய கல்வியாளர் டாக்டர். ஹான்ஸ் கோச்லரின் படைப்புகளைக் குறிப்பிட்டார். இரண்டாம் உலகப் போரின் வெற்றிகரமான சக்திகளால் பத்து ஆண்டுகள் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் ஆஸ்திரியாவின் வளர்ச்சி மற்றும் இறையாண்மைக்கு நேருவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் சுட்டிக்காட்டினர்.


ஜவஹர்லால் நேருவுக்கும் ஆஸ்திரியாவுக்கும் என்ன தொடர்பு?


இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஆஸ்திரியா, அமெரிக்கா, சோவியத் யூனியன், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளின் கட்டுப்பாட்டில் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு மண்டலமும் வெற்றி பெற்ற நேச நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.


இருப்பினும், ஆஸ்திரியா ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இருக்க விரும்பியது. நடுநிலையாக இருப்பதன் மூலம், மேற்கத்திய மற்றும் கிழக்கு நாடுகளுடன் உறவுகளை வளர்க்க ஆஸ்திரியா விரும்பியது. உலக நாடுகள் மத்தியில்  ஒரு தனித்துவமான பங்கை வகிக்கவும் ஆஸ்திரியா விரும்பியது.  


ஆஸ்திரியாவின் புவியியல் நிலை, முதலாளித்துவ மேற்கு ஐரோப்பாவிற்கும் கம்யூனிச கிழக்கு ஐரோப்பாவிற்கும் இடையில் அமைந்துள்ளது. இது பனிப்போரின் போது பாதிக்கப்படக்கூடியதாக இருந்தது. சோவியத் யூனியனும் மேற்கத்திய நாடுகளும் ஆஸ்திரியா மீது ஆதிக்கம் செலுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தன.

 

பனிப்போரின் போது ஆஸ்திரியாவை இறையாண்மை உள்ள நாடாக உருவாக்க நேரு முயற்சியில் ஈடுபட்டார். மருத்துவர் ஹான்ஸ் கோச்லர் தனது  ஆஸ்திரியா, நடுநிலைமை மற்றும் அணிசேராமை, 2021 (Austria, Neutrality and non-Alinment  (2021)) என்ற புத்தகத்தில், ஆகஸ்ட் 1952-ல், ஆஸ்திரியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் அரசியல் இயக்குநர் நேருவைச் சந்திக்க புது டெல்லிக்கு பயணம் செய்தார். நேரு சோவியத்துகளுடன் கலந்து ஆலோசித்து ஆஸ்திரியாவின் தேவைகளை பூர்த்திசெய்வதாக உறுதியளித்தார். அதே ஆண்டு, நேச நாடுகளின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வந்து அதன் இறையாண்மையை மீட்டெடுக்குமாறு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆஸ்திரியாவின் கோரிக்கையை ஆதரித்த சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். 


ஜூன் 2, 1953-ல், இரண்டாம் எலிசபெத்தின் பதவியேற்பு விழாவின் போது, ​​நேருவும் ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சர் கார்ல் க்ரூபரும் லண்டனில் சந்தித்தனர். ஊடக அறிக்கைகளின்படி, ஜூன் 20-அன்று அவர்கள் மீண்டும் சந்தித்தாக சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பில், ஆஸ்திரியாவிற்கும் நான்கு நேச நாடுகளுக்கும் இடையே நிறுத்தப்பட்ட ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக சோவியத் அரசாங்கத்துடன் க்ரூபர் நேருவின் உதவியை நாடினார். ஆஸ்திரியா இராணுவக் கூட்டணிகளில் இணைவதற்கு எதிராக உறுதியளிக்கத் தயாராக இருப்பதாக க்ரூபர் சுட்டிக்காட்டினார். இது அதன் நடுநிலைமையின் முக்கிய அங்கமாகும். அதை அவர் அடுத்தடுத்த விவாதங்களிலும் வலியுறுத்தினார். 


நேருவின் "இராஜதந்திர நடுநிலையாளர்" (“diplomatic mediator”) என்ற பாத்திரம் "ஆஸ்திரிய ஒப்பந்த விவாதங்களில் முற்றிலும் புதிய சூழலை" உருவாக்கியது என்று இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அரசியல் தீர்வு (The Political Settlement After the Second World War) (1972) என்ற தனது புத்தகத்தில், பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் சர் ஜான் வீலர்-பெனட் எழுதினார். 


நியூஸ் ஆஸ்டெரிச் (Neues Österreich) என்ற ஆஸ்திரிய செய்தித்தாள் ஜூன் 21, 1953-அன்று பிரதமர் நேருவைப் புகழ்ந்து செய்தி வெளியிட்டது. சர்வதேச அரசியலில் தனது செல்வாக்குமிக்க அந்தஸ்தின் காரணமாக நேரு ஆஸ்திரியா அரசு உடன்படிக்கையை அடைய உதவுவதில் தனித்தன்மை வாய்ந்தவர் என்று அவர்கள் கூறினர். 1976-ஆம் ஆண்டு தனது நினைவுக் குறிப்புகளில், ஒப்பந்தத்தை எட்டுவதில் நேருவின் பங்கு பற்றி க்ரூபர் எழுதினார். 


மே 1955-இல், "பர்கென்ஸ்டாக் முன்முயற்சி" (“Bürgenstock Initiative”) என்று அழைக்கப்படும் ஒரு முயற்சி ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கான அடித்தளத்தை அமைத்தது. அப்போது மாநில அமைச்சராகவும் பின்னர் ஆஸ்திரியாவின் வெளியுறவு அமைச்சராகவும் பிரதமராகவும் ஆன புருனோ க்ரீஸ்கி (Bruno Kreisky) நேருவின் குறிப்பிடத்தக்க பங்கை சுட்டிக்காட்டினார். ஆஸ்திரியாவின் நடுநிலை நிலைக்கு நேருவின் முக்கியமான பங்களிப்பை ஒப்புக்கொண்டு, "இதனால், நேருவின் பெயர் எப்போதும் நமது நடுநிலைமையின் வரலாற்றுடன் இணைக்கப்படும்" என்று ரெடென் (Reden) தனது புத்தகத்தில் எழுதினார். 


ஜூன் 1955-ல், பிரதமர் நேரு ஆஸ்திரியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அரச உடன்படிக்கையின் முடிவில் ஆஸ்திரியா முழுமையாக சுதந்திரமடைந்த ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த பயணம் நிகழ்ந்தது. புதிதாக சுதந்திரம் பெற்ற ஆஸ்திரியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுத் தலைவர்  நேருவின் வருகை மிகவும் முக்கியத்துவம் பெற்றது.


ஆஸ்திரியா அதன் நடுநிலை நிலையைத் தொடர்கிறதா? 


ஆஸ்திரியா அதன் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நடுநிலைமையை கடைபிடித்து வந்தாலும், குறிப்பாக பிரிவு 9-a, ஆஸ்திரியா இராணுவக் கூட்டணிகளில் சேராது மற்றும் வெளிநாட்டு இராணுவ தளங்களை அதன் எல்லைக்குள் அனுமதிக்காது என்று வெளிப்படையாக அறிவித்தது. 1991-ல் பனிப்போரின் முடிவில் இது தெளிவாகத் தெரிந்தது.


1995-ல், ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆஸ்திரியா இணைந்தது மற்றும் நேட்டோவின் 'அமைதிக்கான கூட்டு' (‘Partnership for Peace’) திட்டத்தின் ஒரு பகுதியாகவும் ஆஸ்திரியா இடம்பெற்றது. 9/11 தாக்குதலுக்குப் பிறகு, ஆஸ்திரியா மேற்கத்திய தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தனது ஈடுபாட்டை அதிகரித்தது. 2001-ஆம் ஆண்டில், ஆஸ்திரிய பாராளுமன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இது பாதுகாப்பு அமைச்சகத்தை வெளிநாட்டு இராணுவப் படைகளை ஆஸ்திரியா வழியாக பயணம் செய்வதற்கு தற்காலிகமாக அனுமதித்தது. இது பெரும்பாலும் நேட்டோ படைகளால் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், ஆஸ்திரியா குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றங்களை சந்தித்துள்ளது. மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை ஆதரிக்கும் தலைவர்கள் மற்றும் கட்சிகளை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. 


2010-ஆம் ஆண்டில், ஆஸ்திரிய பாராளுமன்றம் 1955-ல் நிறுவப்பட்ட நடுநிலைச் சட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க திருத்தத்தை மேற்கொண்டது. அவர்கள் ஆஸ்திரியாவின் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தின் ஒரு பகுதியாக இராணுவ நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்க அனுமதிக்கும் ஒரு பிரிவை அரசியலமைப்பில் சேர்த்தனர். இந்த மாற்றம் இருந்தபோதிலும், ஆஸ்திரியா மூன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. அயர்லாந்து மற்றும் மால்டா ஆகியவை அதிகாரப்பூர்வமாக நடுநிலை நிலைப்பாட்டைப் பராமரிக்கின்றன.


குறிப்பாக புருனோ கிரீஸ்கியின் தலைமையின் முடிவில், ஆஸ்திரேலியா,  கடுமையான நடுநிலையிலிருந்து விலகி மேற்கத்திய சார்புடைய அணுகுமுறையை (Western-centered realpolitik) நோக்கி நகர்ந்தது.  சோவியத் யூனியனுடனான பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதிலும் நடுநிலைமை செய்வதிலும் பிரதமர் நேருவின் முக்கிய பங்கைப் பற்றி விவாதிப்பதை ஆஸ்திரிய அதிகாரிகள் நிறுத்திவிட்டனர் என்று மருத்துவர் ஹான்ஸ் கோச்லர் கூறினார். 

  

கட்டுரையாளர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பயிற்சியாளராக உள்ளார்.



Original article:

Share: