காலநிலை மாற்றம் தொடர்பான 2015-ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தைப் (Paris Agreement on climate change) போலவே உயர் கடல் ஒப்பந்தம் (High Seas Treaty) முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை அன்று, இந்திய அரசாங்கம் விரைவில் உயர் கடல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளிக்க இருப்பதாக அறிவித்தது. இந்த சர்வதேச ஒப்பந்தம், மாசுபாட்டைக் குறைப்பதன் மூலம் கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உயர் கடல்கள் என்பது எந்தவொரு நாட்டின் கட்டுப்பாட்டில் இல்லாத கடல் பகுதியாகும். இது போன்ற காரணத்தினால்தான் இந்த ஒப்பந்தம் தேசிய அதிகார வரம்புகளுக்கு அப்பாற்பட்ட பல்லுயிர் (Biodiversity Beyond National Jurisdictions (BBNJ)) ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. உயர் கடல் ஒப்பந்தம் முறையாக, எந்தவொரு நாட்டின் கட்டுப்பாட்டில் இல்லாத கடல் பகுதிகளின் கடல் உயிரியல் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாடு குறித்த ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.
இந்தியா, மற்ற நாடுகளைப் போல 20 ஆண்டுகாலமாக பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றது. கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தம் இறுதியானது. எனவே, இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு ஒப்புதல் அளிக்கும் முடிவு அனைவரும் எதிர்பார்த்தது தான். தற்போது, 91 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன, அவற்றில் எட்டு நாடுகள் அதை உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த ஒப்பந்தம் எந்த ஒரு நாட்டின் கட்டுப்பாட்டிலும் இருக்கக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி வருகிறது. பொதுவாக, நாடுகள் தங்கள் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல்கள் (370 கிமீ) வரை கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன. அவை பிரத்தியேகப் பொருளாதார மண்டலங்கள் (exclusive economic zones (EEZs)) என அழைக்கப்படுகின்றன. உயர் கடல்கள் அல்லது சர்வதேச நீர், இந்த மண்டலங்களுக்கு வெளியே உள்ளது. அவை மொத்த கடல் பரப்பில் சுமார் 64% ஆகும். இந்த பகுதிகள் அனைவருக்கும் சொந்தமானது. பொருளாதார நடவடிக்கைகள், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கடலுக்கடியில் கேபிள்கள் போன்ற உள்கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
எந்தவொரு நிறுவனமும் உயர் கடல்களுக்கு பொறுப்பேற்காததால், அவை அதிகப்படியான வளசுரண்டல், பல்லுயிர் இழப்பு, மாசுபாடு (பிளாஸ்டிக் குப்பை கொட்டுதல் உட்பட) மற்றும் கடல் அமிலமயமாக்கல் போன்ற பிரச்சினைகளை அடிக்கடி எதிர்கொள்கின்றன. 2021-ஆம் ஆண்டில் மட்டும், 17 மில்லியன் டன் பிளாஸ்டிக் கடலில் கொட்டப்பட்டதாக ஐ.நா மதிப்பீடுகள் தெரிவித்தன. வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடல் மற்றும் பெருங்கடல்களை நிர்வகிக்கும் சர்வதேச சட்டம், 1982 ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம் (United Nations Convention on the Law of the Sea (UNCLOS)) என்று அழைக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள கடல்களை நாடுகள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான விதிகளை இது உருவாக்கியது. கடல் நடவடிக்கைகளுக்கான நாடுகளின் கடமைகளை ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம் வரையறுக்கிறது. இது இறையாண்மை, பயண உரிமைகள் மற்றும் பிரத்தியேக பொருளாதார பயன்பாடு போன்ற சிக்கல்களைக் குறிக்கிறது. இது பிராந்திய நீர் மற்றும் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களுக்கான எல்லைகளையும் அமைக்கிறது.
உயர் கடல் ஒப்பந்தம் மூன்று முக்கிய இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது: கடல் மரபியல் வளங்களின் நியாயமான பகிர்வுகளை உறுதி செய்கிறது. கடல் சுற்றுச்சூழல் அமைப்பை மாசுபடுத்தும் அல்லது சேதப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் கட்டாய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் தேவை.
கூடுதலாக, இந்த ஒப்பந்தம் வளரும் நாடுகளின் திறனை வளர்ப்பதையும், கடல் தொழில்நுட்பங்களை அவர்களுக்கு மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்த நாடுகள் கடல் வளங்களை முழுமையாகப் பயன்படுத்த உதவுகிறது. அதே நேரத்தில் பாதுகாப்பு முயற்சிகளுக்கும் உதவுகிறது.
கடல் சூழலியலைப் பாதுகாப்பது என்பது தேசிய பூங்காக்கள் அல்லது வனவிலங்கு காப்பகங்கள் போன்ற கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை (Marine Protected Areas (MPAs)) உருவாக்குவதை குறிக்கிறது. கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்கின்றன. கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான சில பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் எதிர்காலத்தில் சில பகுதிகள் அடையாளம் காணப்பட வாய்ப்புள்ளது.
கடல்களில் பல்வேறு வகையான உயிரினங்கள் உள்ளன. அவற்றில் சில மனிதர்களுக்கு குறிப்பிடத்தக்க மதிப்பைக் கொண்டுள்ளன. இந்த உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன மற்றும் மருந்துகள் கண்டுபிடிப்புக்கு மதிப்புமிக்கதாக இருக்கலாம். அறிவியல் ஆராய்ச்சி அல்லது வணிக பயன்பாட்டிற்காக இந்த கடல் வளங்களிலிருந்து நன்மைகளை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்வதை உறுதி செய்வதை உயர் கடல் ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வளங்களைக் கண்டுபிடிப்பதற்கு செலவுகள் ஏற்படக்கூடும். ஆனால், எந்தவொரு நாடும் இந்த வளங்களின் மீது உரிமைகளைக் கோர முடியாது என்பதை இந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் அல்லது பாதுகாப்பு பகுதிகளில் எந்தவொரு மாசுபடுத்தும் அல்லது தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளும் முன் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கு (environmental impact assessment (EIA)) உட்படுத்தப்பட வேண்டும். பின்னர், இந்த மதிப்பீடுகள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும். தேசிய எல்லைகளுக்குள் உள்ள செயல்பாடுகள் கூட உயர் கடல்களை பாதிக்குமாயின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும்.
கடல் வளங்களுக்கான நியாயமான அணுகல் மற்றும் கடல் பல்லுயிர் பாதுகாப்புக்கான கொள்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம் (United Nations Convention on the Law of the Sea (UNCLOS)) கோடிட்டுக் காட்டினாலும், இந்த இலக்குகள் எவ்வாறு அடைய வேண்டும் என்பது தெளிவாக விளக்கப்படவில்லை. உயர் கடல் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டவுடன் ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனத்தின் கீழ் ஒன்றாக செயல்படுவதன் மூலம் இந்த இடைவெளி குறைகிறது. குறைந்தது 60 நாடுகள் அதை ஏற்றுக்கொண்டால் அல்லது ஒப்புக்கொண்டால் உயர் கடல் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். 60-வது ஒப்புதலுக்குப் பிறகு, ஒப்பந்தம் 120-நாட்களுக்குள் சர்வதேச சட்டமாக மாறும்.
ஒப்புதல் (ratification) என்பது ஒரு நாடு ஒரு சர்வதேச சட்டத்திற்கு சட்டப்பூர்வமாக கட்டுப்படுவதை முறையாக ஒப்புக்கொள்வது. இது சட்டத்தில் கையெழுத்திடுவதில் இருந்து வேறுபட்டது. கையொப்பமிடுவது ஒரு நாடு சட்டத்தை ஏற்றுக்கொள்கிறது மற்றும் அதைப் பின்பற்ற விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது. ஆனால், அது சட்டத்தை அங்கீகரிக்கும் வரை சட்டத்தின் படி செயல்படத் தேவையில்லை. ஒப்புதல் செயல்முறை வெவ்வேறு நாடுகளில் வேறுபடுகிறது.
நாடாளுமன்றம் போன்ற சட்டமன்ற அமைப்புகளைக் கொண்ட நாடுகளில், பொதுவாக நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படுகிறது. மற்ற நாடுகளில், இதற்கு நிர்வாக ஒப்புதல் மட்டுமே தேவைப்படலாம். ஒரு நாடு ஓர் ஒப்பந்தத்தை அங்கீகரிக்காமலேயே அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம், அதாவது அது அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தத்திற்கு கட்டுப்படவில்லை என்று பொருள். உதாரணமாக, அமெரிக்கா கியோட்டோ ஒப்பந்தத்தில் (Kyoto Protocol) கையெழுத்திட்டது. ஆனால், செனட் அதற்கு ஒப்புதல் அளிக்காததால் அவை அங்கீகரிக்கப்படவில்லை.
Original article:
https://indianexpress.com/article/explained/explained-global/india-high-seas-treaty-9442536/