வேலைகளில் நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சிக்கு, தீவிர அளவிலான கல்வி தொழில் சேவைகள், ஊதிய மானியங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் தேவை.
நல்ல தரமான வேலைகள் இல்லாதது, குறிப்பாக இந்தியாவின் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு ஓர் அவசர பிரச்சினையாக உள்ளது என்று பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். சமீபத்திய தேர்தல்களில், வேலையின்மை ஒரு முக்கிய கவலையாக இருந்தது. சில மாநிலங்களின் தேர்தல் முடிவுகள், வாக்காளர்களில் பெரும் பகுதியினரை திருப்திப்படுத்த நலன்சார்ந்த அறிக்கைகள் மட்டும் போதாது என்பதைக் காட்டுகின்றன. காங்கிரஸ் கட்சியின் தேர்தலுக்கு முந்தைய தேர்தல் அறிக்கை வேலைப் பிரச்சினையை மற்ற கட்சிகளை விட அதிக உணர்திறன் மற்றும் உறுதியான பரிந்துரைகளுடன் முக்கிய பங்காற்றியது. இருப்பினும், அனைத்து ஆட்சிகளிலும் வேலையின்மை பல பத்தாண்டுகளாக ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக உள்ளது.
பொதுவாக, வளர்ச்சியானது தானாகவே வேலைப் பிரச்சினையைத் தீர்க்கும் என்று நம்புபவர்கள் 50 ஆண்டுகால தேசிய வேலைவாய்ப்பு கணக்கெடுப்புகளைப் புறக்கணிக்கிறார்கள். இந்தியாவில் வேலை கிடைப்பது பொதுவாக பொருளாதார வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கவில்லை என்பதை இந்த ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த கணக்கெடுப்புகள் கவனிக்கப்படாமல் விடப்பட்டால், இது ஒரு சமூக பிரச்சினையாக மாறும். மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், வேலை உருவாக்கும் கொள்கைகளின் வடிவமைப்பு, செலவு திறன் மற்றும் செயல்படுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது முக்கியம். சாதகமான கொள்கைகளுக்கு சில உதாரணங்களான இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளின் அனுபவங்களை முன்னிலைப்படுத்துவேன்.
2005 முதல், மத்திய அளவில் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டங்களில் இந்தியா சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளது. இந்த திட்டங்கள் மிகவும் ஏழைகளுக்கு கடுமையான வெயிலின் கீழ் கடினமான உடல் உழைப்பை உள்ளடக்கியது. இருப்பினும், அசல் சட்டத்தின் பல பகுதிகள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்படாவிட்டால் தொழிலாளர்கள் அரிதாகவே வேலையின்மை நலன்களைப் பெறுகிறார்கள், மேலும் ஊதியம் வழங்குவதில் நீண்ட தாமதங்கள் உள்ளன. பெரும்பாலான குடும்பங்கள் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்று உறுதியளித்ததை விட மிகக் குறைவாகவே பெறுகின்றன.
ஒரு சில மாநிலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட முயற்சிகளைத் தாண்டி, நாடு தழுவிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை நகரங்களில் செயல்படுத்துவது பற்றி பேசப்படுகிறது. "பரவலாக்கப்பட்ட நகர்ப்புற வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி” (Decentralised Urban Employment and Training (DUET)) திட்டமாக Jean Dreze முன்மொழிந்த இந்த யோசனை தீவிர பரிசீலனையில் உள்ளது. நகர்ப்புற உள்கட்டமைப்பு, நீர் மற்றும் பிற சுற்றுச்சூழல் வளங்களை மேம்படுத்துவது போன்றவை இதில் அடங்கும். இத்தகைய திட்டம் செலவு மிகுந்ததாக இருக்கும். 20 மில்லியன் நகர்ப்புற தற்காலிக தொழிலாளர்களுக்கு வேலை வழங்க ரூ.1 டிரில்லியனுக்கு மேல் செலவாகும். இதன் விளைவாக, செப்டம்பர் 2019 இல், நிதி அமைச்சகம் பெருநிறுவன வரி விகிதத்தைக் குறைத்தது. இதனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.1.84 டிரில்லியன் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டங்கள் முக்கியமாக ஏழைகளுக்கு தேவையான நிவாரணம் அல்லது "இடர்பாட்டு" வேலைவாய்ப்பை (“distress” employment) வழங்குகின்றன. எவ்வாறாயினும், குறுகிய கால நிவாரணத்திற்கு அப்பால், நீண்ட காலத்திற்கு நல்ல வேலைகளை வழங்கும் நிலையான திட்டங்கள் நமக்குத் தேவை. அத்தகைய திட்டங்களுக்கான நான்கு சாத்தியமான பகுதிகள் இங்கே:
நமது வேலையில்லாத் திண்டாட்டம் ஓரளவு குறைந்த திறன் மற்றும் பயிற்சியினால் உருவாகிறது. பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டதை ஈடுசெய்ய, வணிகங்களில் தொழிற்பயிற்சியுடன் இணைக்கப்பட்ட பெரிய அளவிலான தொழிற்கல்வித் திட்டம் நமக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது. கற்றுக்கொள்ள பல வெற்றிகரமான உதாரணங்கள் உள்ளன. உதாரணமாக, ஜெர்மனியில், பள்ளி படிப்பை முடித்தவர்கள் செல்லும் தொழில்சார் திட்டங்களுக்கு முதலாளிகள் பங்களிக்கின்றனர். இது ஸ்கிரீனிங் தொழிலாளர்களுக்கு (screening workers) முதலாளிகளின் பணத்தை மிச்சப்படுத்துகிறது. மற்றொரு உதாரணம் கலிபோர்னியா சமூகக் கல்லூரி அமைப்பு உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. வளரும் நாடுகளில், வெற்றிகரமான உதாரணங்களில் கென்யா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வாய்ப்புகள் திட்டம் (Kenya Youth Employment and Opportunities Project), தலைமுறை இந்தியா திட்டம் (Generation India program), கொலம்பியாவில் இளைஞர்களை கட்டியெழுப்பும் திட்டம் (Youth Building the Future Program) மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள ஹராம்பி இளைஞர் வேலைவாய்ப்பு முடுக்கி திட்டங்கள் (Harambee Youth Employment Accelerator projects) ஆகியவை அடங்கும். நிறுவனங்கள், உள்ளூர் அரசாங்கங்கள், வணிகச் சங்கங்கள் மற்றும் குடிமை அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு இந்த சந்தர்ப்பங்களில் முக்கியமானது.
இந்தியாவில், முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு துறைகளில் பல மூலதன மானியங்கள் உள்ளன. இந்த மானியங்கள் பெரும்பாலும் உழைப்பை மாற்றியமைக்கும், மூலதன-தீவிர முதலீடுகளுக்கு வழிவகுக்கும். இந்த மானியங்களை நாம் மறுபரிசீலனை செய்து, பலவற்றிற்கு பதிலாக ஊதிய மானியங்களை, குறிப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு, அவை புதிய, முறையான வேலைகளை உருவாக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மாற்ற வேண்டும்.
விவசாய விரிவாக்க சேவைகளைப் பற்றி நாம் நன்கு அறிந்திருந்தாலும், விவசாயம் அல்லாத வீட்டு நிறுவனங்களுக்கு உற்பத்தி வேலைகளை உருவாக்க உதவும் வகையில் மேலாண்மை பயிற்சி உள்ளிட்ட தொழில்நுட்ப உதவி மற்றும் விரிவாக்க சேவைகளை வழங்குவதில் இப்போது கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, உத்திர பிரதேசத்தின் சில மாவட்டங்களில் உள்ள ஆஷா பணியாளர்கள் போன்ற சமூக சுகாதார மற்றும் பராமரிப்புப் பணியாளர்கள் மென்பொருள் உதவியால் பயனடைந்துள்ளனர்.
இறுதியாக, வழக்கமான வேலை ஊக்குவிப்பு விவாதங்கள் பெரும்பாலும் தீவிரமான நுகர்வோர் சந்தையில் தனியார் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் தேவை பற்றாக்குறை பிரச்சினையை புறக்கணிக்கின்றன. இந்த பிரச்சினை பெரும் வருமானம் மற்றும் செல்வவள சமத்துவமின்மையால் மோசமடைகிறது. அங்கு வளர்ச்சியின் ஆதாயங்கள் உயர்மட்டத்தில் குவிந்துள்ளன. கீழ்மட்டத்தில் உள்ள மக்களை தேக்கமடைந்த ஊதியங்கள் மற்றும் வேலைவாய்ப்புடன் விடுகின்றன. இந்த குறைந்த அளவு ஊதியம் பெறும் பிரிவுகளின் வருமானத்தை அதிகரிப்பது தேவையை அதிகரிக்கும் மற்றும் பெரிய அளவில் அதிக வேலைகளை உருவாக்கும். இதைச் செய்வதற்கான ஒரு சிறந்த வழி, விவசாயிகளுக்கு மட்டுமல்ல, அத்தகைய அனைத்து குழுக்களுக்கும் அடிப்படை வருமான உதவியை வழங்குவதாகும். குறைந்தபட்ச வருமானம் என்பது "மோசமான" வேலைகளில் உள்ள ஏழை தொழிலாளர்களை சிறந்த வாய்ப்புகளைத் தேட அனுமதிக்கிறது.
பணம் எங்கிருந்து வரும்? வசதி படைத்தவர்களுக்கு தற்போது வழங்கப்படும் நேரடி மற்றும் மறைமுக மானியங்களை கணிசமாகக் குறைப்பதன் மூலம் ஒரு மிதமான அடிப்படை வருமான உதவிக்கு நிதியளிக்க முடியும். பணக்காரர்கள் மீதான வரிவிதிப்பை அதிகரிப்பதன் மூலம் இதனை எட்ட முடியும். இந்தியாவில், செல்வ சமத்துவமின்மை வேகமாக வளர்ந்து வருகிறது. இருந்தபோதிலும், பரம்பரை மற்றும் சொத்து வரிகள் பூஜ்ஜியமாக உள்ளன. மேலும், மூலதன ஆதாய வரி விகிதம் (capital gains tax rate) அமெரிக்காவை விட மிகக் குறைவு. இந்த மாற்றங்களை அமல்படுத்த அரசியல் துணிச்சலும் விருப்பமும் தேவை.