வர்த்தகக் கொள்கையின் அதிக ஆதரவும் அதிக உறுதியும் ஏற்றுமதியை மேம்படுத்தும்.
இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி ஜூன் மாதத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிகரித்துள்ளது. ஏற்றுமதி 2.55% அதிகரித்து $35.2 பில்லியன் டாலரை எட்டியது. இறக்குமதி 5% அதிகரித்து 56.2 பில்லியன் டாலராக இருந்தது. இது மே மாதத்தின் ஏழு மாத அதிகபட்ச நிலையான $62 பில்லியன் டாலரில் இருந்து சற்று குறைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் வர்த்தக பற்றாக்குறை 9.4% அதிகரித்துள்ளது. இருப்பினும், கடந்த மாதத்தை விட சற்று குறைந்துள்ளது.
மே மாதத்தில் எண்ணெய் பற்றாக்குறை 13 பில்லியன் டாலர்களை எட்டியது. 10 பில்லியன் டாலராக குறைந்தாலும், அது கவலைக்குரியதாகவே உள்ளது. பெட்ரோலியம் ஏற்றுமதி 18.3% சரிந்து 5.5 பில்லியன் டாலராக உள்ளது. இது மே மாத பற்றாக்குறையை விட கிட்டத்தட்ட அதே அளவு குறைவாக உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக எண்ணெய் விலை கிட்டத்தட்ட மாறாமல் உள்ளது. இது ஏற்றுமதி அளவு குறைவதைக் குறிக்கிறது. ஜூன் மாத எண்ணெய் இறக்குமதி 19.6% அதிகரித்துள்ளது. இது உள்நாட்டு தேவை அதிகரிப்பதைக் காட்டுகிறது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் ஒட்டுமொத்த எண்ணெய் இறக்குமதி 23% உயர்ந்துள்ளது. உலகளாவிய விலைகள் கடந்த ஆண்டை விட சுமார் 9% அதிகரித்துள்ளது. எண்ணெய் பற்றாக்குறை முதல் காலாண்டு வர்த்தக பற்றாக்குறையான $62 பில்லியனில் கிட்டத்தட்ட பாதியாக உள்ளது. இந்த வர்த்தக பற்றாக்குறை கடந்த ஆண்டை விட 10.9% அதிகம்.
ஜூன் மாதத்தில் தங்கம் இறக்குமதியின் மதிப்பு 38.7% குறைந்துள்ளது. இது 2024-25-ல் இதுவரை இல்லாத அளவுக்கு $3.06 பில்லியனாக குறைந்தது. இருப்பினும் வெள்ளி இறக்குமதி கடுமையாக உயர்ந்து வருகிறது. ஜூன் மாதத்தில் அவை 377% ஆக உயர்ந்தன.
இந்தியாவின் தங்கச்சந்தையில் ஏற்படும் இடையூறுகள் பற்றிய கவலைகளை அரசாங்கம் விசாரிக்க வேண்டும். இந்த இடையூறுகளுக்கு GIFT City மூலம் வழங்கப்படும் சலுகை வரி இறக்குமதி காரணமாகும். இது ஐக்கிய அரபு அமீரகத்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் உள்ளது.
மேலும், இந்தியாவின் ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியில் தொடர்ந்து சரிவு உள்ளது. இந்த ஏற்றுமதி ஜூன் மாதத்தில் தொடர்ந்து ஏழாவது மாதமாக குறைந்தது. இந்த விவகாரத்திலும் கவனம் தேவை.
இந்த ஆண்டு இதுவரை எண்ணெய் மற்றும் தங்கம் தவிர்த்து இறக்குமதி கட்டணம் சுமார் 3% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 10% சரிவை சந்தித்தது தற்போது இது முன்னேற்றம் அடந்துள்ளது. ஜூன் மாதத்தில் வளர்ச்சி 7% ஆக அதிகரித்துள்ளது. இது விருப்பமான உள்நாட்டு தேவையில் மீட்சியைக் குறிக்கிறது, இது பொருளாதாரத்திற்கு ஒரு நல்ல அறிகுறியாகும்.
இந்தியாவின் வர்த்தகக் கொள்கையானது ஏற்றுமதியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பற்றாக்குறையை சரிபார்ப்பதை விட இது மிகவும் முக்கியமானது.
இந்தியாவின் முதல் 30 ஏற்றுமதி துறைகளில் குறைந்தது 19 துறைகள் மே மற்றும் ஜூன் மாதங்களில் வளர்ச்சியடைந்துள்ளன. ஏப்ரல் மாதத்தில் வெறும் 13 துறைகளில் மட்டுமே முன்னேற்றம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய பணவீக்கம் குறைந்து வருகிறது. வட்டி விகிதக் குறைப்புக்கள் தேவையைத் தூண்டும். சர்வதேச நாணய நிதியம் 2024 ஆம் ஆண்டில் தனது வர்த்தக அளவு வளர்ச்சியை (trade volume growth) 3% ஆக உயர்த்தியுள்ளது. இது கடந்த ஆண்டு 0.3% ஆக இருந்தது.
ஒரு கடினமான தருணத்திற்க்குப் பிறகு ஏற்றுமதியாளர்கள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். இத்துறைக்கு போதுமான ஆதாரங்களையும் உறுதியையும் ஒன்றிய அரசு வழங்க வேண்டும். இதில் வரி விலக்கு திட்டம் (duty remission scheme) மற்றும் வட்டி சமன்படுத்தும் திட்டம் (interest equalisation scheme) ஆகியவை அடங்கும். சிறிய நிறுவனங்களைத் தவிர (இன்னும் இரண்டு மாதங்களுக்கு ஆதரவைப் பெறும்) அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கான திட்டத்தை சமீபத்தில் முடிவுக்கு கொண்டுவந்தது போன்ற திடீர் கொள்கை மாற்றங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.