வானிலை முன்னறிவிப்பில் மேம்படுத்த நவீன தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி கண்காணிப்பு வலையமைப்பை விரிவுபடுத்தும் பிராந்திய வானிலை ஆய்வு மையம் -க.லட்சுமி

 மிகவும் தீவிரமான வானிலை நிகழ்வுகள் நடைபெறுகின்ற சூழலில், கூடுதல் கண்காணிப்பு மையங்களைச் சேர்ப்பதன் மூலமும், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், பிராந்திய வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre (RMC)) வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.   


மார்ச் 23 அன்று உலக வானிலை தினத்தை அனுசரிப்பதற்குத் தயாராகும் பிராந்திய வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre (RMC)), அதன் வானிலை கண்காணிப்பை மேம்படுத்த விரும்புகிறது. காற்றின் வேகம் (wind speed) மற்றும் திசையை (direction) 10 கிமீ உயரம் வரை கண்டறியக்கூடிய ரேடார் சாதனங்களான ’காற்று புரொஃபைலர்களை’ (wind profilers) சேர்க்க திட்டமிட்டுள்ளனர். இது அவர்களின் மேற்காற்று (upper air) கண்காணிப்பு வலையமைப்பில் சேரும். இதில் ஏற்கனவே  கதிர்வழி வான்வெளி அளவமைப்பு (radiosonde) மற்றும் வளிமண்டல ஆய்வு பலூன்கள் (pilot balloons) உள்ளன.  


கூடுதலாக, கடுமையான சூறாவளிகள் மற்றும் அடிக்கடி கனமழை போன்ற தீவிரமான வானிலை நிகழும்போது, பிராந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் சவாலை சமாளிக்க சிறந்த முன்னறிவிப்பு தொழில்நுட்பங்களில் செயல்படுகிறது.


சென்னையில் உள்ள வானிலை ஆய்வு கூடுதல் இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன், இந்திய வானிலை ஆய்வு மையம் காலநிலை சேவைகளுக்கான தேசிய கட்டமைப்பை அறிமுகப்படுத்தியதாக அறிவித்தார். இந்த கட்டமைப்பு பல்வேறு துறைகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஒரு மையப்படுத்தப்பட்ட நிகழ்நேர தரவு களஞ்சியத்தையும் உருவாக்கும், காலநிலை தொடர்பான தகவல்களை பல்வேறு பங்குதாரர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றும். இந்த அமைப்பு ஒரு முடிவெடுக்கும் ஆதரவு கருவியாக செயல்படும், ஐஎம்டி மற்றும் பல்வேறு துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது.


போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் விவசாயம் போன்ற துறை சார்ந்த காலநிலை சேவைகளைத் தவிர, இந்திய வானிலை ஆய்வு மையம் இப்போது சுகாதாரத் துறைக்கான வெப்ப அலை செயல் திட்டங்கள் போன்ற ஆபத்து சார்ந்த சேவைகளை வழங்குகிறது என்று பாலச்சந்திரன் குறிப்பிட்டார். காலநிலை மாற்ற தாக்கத்தைத் தணிப்பதற்கான தரவுகளை வழங்க அரசு நிறுவனங்களுடன் ஒத்துழைக்க அவர்கள் தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார். 

 

மேலும்,  தமிழ்நாடு முழுவதும் அதிக தானியங்கி மழைமானிகளை நிறுவ தெற்கு ரயில்வேயுடன் இணைந்து செயல்பட சென்னை வானிலை ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. தற்போது, மாநிலத்தில் சுமார் 40 தானியங்கி வானிலை நிலையங்கள் மற்றும் கிட்டத்தட்ட 75 தானியங்கி மழை மானி அமைப்புகள் (automatic rain gauge system (ARGs)) உள்ளன. மேலும், சென்னை மற்றும் பெங்களூரு அருகே உள்ள கல்பாக்கத்தில் விரைவில் மேலும் வானிலை ரேடார்கள் (radar) அமைக்கப்படும். எக்ஸ்-பேண்ட் ரேடார் (x-band radar data) தரவைப் பயன்படுத்தி பூந்தமல்லி போன்ற உள்ளூர் பகுதிகளுக்கு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நிகழ்நேரக் கணிப்பை (AI-based nowcast) வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 




Original article:

Share: