கச்சத்தீவு சர்ச்சைக்குரியதா? - டி.ராமகிருஷ்ணன்

 கச்சத்தீவு விவகாரத்தை தமிழகத்தில் அரசியல் கட்சிகள், குறிப்பாக தேர்தல் காலங்களில் எவ்வாறு பயன்படுத்துகின்றன? கச்சத்தீவு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்றப்படுவதற்கு வழிவகுத்த வரலாற்று நிகழ்வுகள் யாவை? இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன, காலப்போக்கில் அது எவ்வாறு உருவாகியுள்ளது? 


தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், மார்ச் 31 அன்று பிரதமர் நரேந்திர மோடி சர்ச்சைக்குரிய கச்சத்தீவு பிரச்சினையை தனது X தளத்தில் பதிவிட்டார். அதில் காங்கிரஸ் பொறுப்பற்ற முறையில் கச்சத்தீவை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் மாநில பாஜக, அ.தி.மு.க., கட்சிகள் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக விமர்சித்தன. அரசியல் கட்சிகள் தங்கள் எதிரிகளைத் தாக்க இதைப் பயன்படுத்துவதால் இந்த பிரச்சனை மீண்டும் எழுகிறது.


திமுகவின் கடும் எதிர்ப்பையும் மீறி கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைக்கப் பட்டதாக  கடந்த மார்ச் 16-ம் தேதி தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார். இதுவரை கட்சத்தீவை மீட்க ஒன்றிய அரசால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர் பிரதமரிடம் கேட்டார். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய மீனவர்களை இலங்கை அரசு தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர் சங்கங்கள் பிப்ரவரி மாத இறுதியில் வருடாந்திர கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்தபோது சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கச்சத்தீவு கவனத்தை ஈர்த்தது.


கச்சத்தீவு எப்போது இலங்கையின் ஒரு பகுதியாக மாறியது?


1974 ஆம் ஆண்டில், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் இலங்கையின் சிறிமா ஆர்.டி.பண்டாரநாயக்க ஆகியோர் பாக் நீர்ச்சந்தி முதல் ஆதாம் பாலம் வரையிலான கடற்பரப்பில் தங்கள் நாடுகளுக்கு இடையிலான எல்லையைக் குறிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.


ஜூன் 26 மற்றும் 28, 1974அன்று வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கை, "வரலாற்று ஆதாரங்கள், சர்வதேச சட்டம் மற்றும் கடந்த கால வழக்குகளின் அடிப்படையில்" எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறியது. மக்கள் வசிக்காத கச்சத்தீவின் மேற்குக் கடற்கரையிலிருந்து ஒரு மைல் தூரத்தில் எல்லை உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த ஒப்பந்தம் 1921 அக்டோபரில் சென்னை மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையே தொடங்கிய பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்தது.


மீனவர்களுக்கு கச்சத்தீவு எவ்வளவு முக்கியம்?


இரு நாட்டு மீனவர்களும் நீண்ட காலமாக மீன்பிடிக்க இந்த தீவை பயன்படுத்தி வருகின்றனர். 1974 ஒப்பந்தம் இதை அங்கீகரித்தாலும், மார்ச் 1976 இல் ஒரு துணை ஒப்பந்தம், இரு நாட்டு மீன்பிடி படகுகள் மற்றும் மீனவர்கள் சிறப்பு நீர் பகுதிகள், கடற்கரைக்கு அருகில் அல்லது பிரத்தியேக பொருளாதார மண்டலங்களில் மீன்பிடிக்க முடியாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அல்லது இந்தியாவிடம் நேரடி அனுமதி பெறாமல் அவர்களால் மீன்பிடிக்க முடியாது.


இத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலத்தில் நடைபெரும் வருடாந்திர திருவிழாவில், இந்திய மற்றும் இலங்கையிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்த பாரம்பரியம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பேச்சுவார்த்தையைத் தூண்டியது எது?


கி.பி. 1505 முதல் 1658 வரை போர்த்துகீசியரின் கட்டுப்பாட்டில் இருந்ததால் கச்சத்தீவை இலங்கை உரிமை கொண்டாடியது. ராமநாதபுரத்தின் முன்னாள் ராஜா அதை தனது இராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக வைத்திருந்தார் என்று இந்தியா வாதிட்டது. முன்னாள் ராஜா ராமநாத சேதுபதியுடனான நேர்காணலை அடிப்படையாகக் கொண்டு 1968 ஆம் ஆண்டில் தி இந்து நாளிதழில் வெளியான ஒரு செய்திக் கட்டுரையின் படி, கச்சத்தீவு நீண்ட காலமாக ராமநாதபுரம் மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அரசாங்கம் பொறுப்பேற்கும் வரை எஸ்டேட் வரி வசூலித்ததாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும், ஜூலை 1974 இல் மக்களவையில் நடந்த விவாதத்தில், அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஸ்வரண் சிங், கச்சத்தீவு குறித்த முழுமையான வரலாற்று ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.


1974 ஒப்பந்தம் எப்படி வந்தது?


கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்ற தற்போதைய கோரிக்கை, 1974 ஒப்பந்தம் எதிர்கொண்ட எதிர்ப்பில் வேரூன்றி உள்ளது. ஜூலை 1974இல், நாடாளுமன்ற விவாதங்களின் போது, திமுக, அதிமுக, ஜனசங்கம், சுதந்திரா கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து அமர்வை விட்டு வெளியேறின. அப்போதைய ஜனசங்கத்தின் தலைவராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், தீவை ஒப்படைக்கும் முடிவு பொதுமக்களையோ அல்லது நாடாளுமன்றத்தையோ கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்டது என்று வாதிட்டார்.  சோஷலிசத் தலைவரான மது லிமாயின் ஆதரவு அவருக்கு இருந்தது.  


இந்த ஒப்பந்தத்திற்கு முன்பே, 1973ஆம் ஆண்டில், அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி, கச்சத்தீவை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல் இந்தியாவின் ஒரு பகுதியாக வைத்திருக்க பொதுமக்கள் விரும்புவதாகக் கூறி இந்திரா காந்திக்கு வேண்டுகோள் விடுத்தார். இதை தி இந்து நாளிதழ் 1973 அக்டோபர் 17 அன்று வெளியிட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு கருணாநிதி இந்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இது, 1974 இல் ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே வெளியிடப்பட்டது. அப்போதுதான் அ.இ.அ.தி.மு.க. வை நிறுவியிருந்த எம்.ஜி. ராமச்சந்திரன், இந்த விஷயத்தில் மத்திய அரசை திறம்பட வழிநடத்தாததற்காக கருணாநிதியை விமர்சித்து அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரினார்.


இந்த பிரச்சினைக்கு எப்போது புத்துயிர் கிடைத்தது?


சுமார் 15 ஆண்டுகளாக, அமைதியாக இருந்த கச்சத்தீவு விவகாரம் 1991 ஆகஸ்டில் மீண்டும் தலைதூக்கியது. அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தனது சுதந்திர தின உரையில் கச்சத்தீவு மீட்க அழைப்பு விடுத்தபோது இது நடந்தது. பின்னர், அவர் தனது கோரிக்கையை சரிசெய்து, அதற்கு பதிலாக "நிரந்தர குத்தகை" (lease in perpetuity) மூலம் தீவை இந்தியா திரும்பப் பெற வேண்டும், என்று பரிந்துரைத்தார். தமிழக சட்டசபையில் இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவும், கருணாநிதியும் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.


இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?


ஆகஸ்ட் 2013 இல், இலங்கைக்கு எந்த ஒரு பகுதியையும் இந்தியா விட்டுக்கொடுக்கவில்லை என்பதால், இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்பது ஒரு பொருட்டல்ல என்று இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.  இந்த சிறிய தீவு பிரிட்டிஷ் இந்தியா மற்றும் சிலோன் (இப்போது இலங்கை) ஆகியவற்றிற்கிடையே சர்ச்சைக்குரியதாக இருந்தது, ஏனெனில் அவர்கள் தங்கள் எல்லைகள் எங்கே என்பதை ஒப்புக் கொள்ளவில்லை. 1974 மற்றும் 1976 இல் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது. பின்னர், 2022 டிசம்பரில், இந்த ஒப்பந்தங்களைக் குறிப்பிட்டு, கச்சத்தீவு இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக் கோட்டின் இலங்கைப் பக்கத்தில் அமைந்துள்ளது என்று மாநிலங்களவையில் தெளிவுபடுத்தியது. இந்த விவகாரம் இன்னும் உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




Original article:

Share: