1990-களில் இருந்து இந்தியாவில் உள்ள மாநிலங்களின் செல்வாக்கு வெளிநாட்டு உறவுகளில் மெதுவாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வெளிநாட்டு கொள்கைகளில் மாநிலங்களை இணைக்க வேண்டுமா என்ற கருத்து மீண்டும் எழுந்துள்ளது.
வெளியுறவு அமைச்சகம் (Ministry of External Affairs (MEA)) சமீபத்தில் கேரள அரசாங்கத்தை "வெளிநாட்டு ஒத்துழைப்புக்காக" ஒரு செயலரை நியமித்ததற்காக விமர்சித்தது. "வெளிநாட்டுச் செயலரை" (“external cooperation”) நியமிக்க கேரளா அரசுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறியது.
வெளியுறவுக் கொள்கையில் மாநிலங்களுக்குப் பங்கு இல்லை என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. வெளியுறவு, சர்வதேச சட்டம், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் குடியுரிமை ஆகியவை ஒன்றிய பட்டியலில் (Union list) இடம் பெற்றுள்ளது. அரசியலமைப்பு சட்டப் பிரிவு 246-(1) இன் படி, இந்த விவகாரங்கள் பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 253-வது பிரிவு இந்தப் பிரச்சினைகளில் சட்டங்களை இயற்றுவதற்கு பாராளுமன்றத்திற்கு முழு அதிகாரம் அளிக்கிறது.
கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் மாகாணங்கள் சில வெளிநாட்டு விவகாரங்களைக் கையாள முடியும். இந்திய அரசியலமைப்பு மாநிலங்கள் இதைச் செய்ய அனுமதிக்கவில்லை. மேலும், பிரிவு 293(1) மாநிலங்களின் கடன் வாங்கும் சக்தியைக் கட்டுப்படுத்துகிறது. அதாவது அவர்கள் சுதந்திரமாக வெளிநாட்டுக் கடன்களைப் பெறமுடியாது.
1990-களில் இருந்து, பல மாநிலங்கள் வெளிநாட்டு உறவுகளில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. செயல்திறன் மிக்க தலைமை மற்றும் வலுவான தொழில்துறை தளங்களைக் கொண்ட மாநிலங்கள் வெளிநாட்டு வர்த்தக இராஜதந்திரத்தில் இந்த போக்கை தொடர்ந்தனர். பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது, மாநிலத்தின் பொருளாதாரத் திறனை வெளிப்படுத்துவதற்காக துடிப்பான குஜராத் (Vibrant Gujarat) திட்டத்தை தொடங்கினார். இந்த நடவடிக்கை மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை இதுபோன்ற முயற்சிகளைத் தொடங்க தூண்டியது.
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது மாநிலத்தின் வெளிநாட்டுப் பொருளாதார ஈடுபாட்டில் முக்கியப் பங்காற்றியுள்ளார். ஏப்ரல் 2015-ல், அவர் ஒன்றிய அரசின் சார்பாக சீனாவில் ஒரு உயர்மட்டக் குழுவை வழிநடத்தினார். 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு, ₹40,232 கோடி மதிப்பிலான புதிய முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களும் வளர்ச்சிக் கடன்களுக்காக நேரடியாக உலக வங்கியை அணுகியுள்ளன. 1997-ஆம் ஆண்டில், உலக வங்கியிடமிருந்து நேரடியாக கட்டமைப்பு சரிசெய்தல் (adjustment loan) கடனைப் பெற்ற முதல் மாநிலம் ஆந்திரப் பிரதேசமாகும்.
2017-ஆம் ஆண்டில், முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக இருதரப்பு அதிகாரப்பூர்வ மேம்பாடு உதவிக்காக (Official Development Assistance (ODA)) பங்குதாரர்களிடமிருந்து நேரடியாக கடன் வாங்க நிதி அமைப்பில் முன்னேற்றமடைந்த மாநிலங்களை ஒன்றிய அரசு அனுமதித்தது. அதே ஆண்டு, மும்பை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு (Mumbai Trans Harbour Link project) திட்டத்திற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் இருந்து கடனைப் பெற்றது.
இப்போது, பல இந்திய மாநிலங்களில் உலக வணிக அமைப்பின் குழுக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் (Non-Resident Indian (NRI)) குழுக்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, பஞ்சாபில் வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான துறை உள்ளது. 1996 முதல், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்காக கேரளாவில் வசிக்காத கேரள மக்கள் விவகாரங்கள் (non-resident Keralites affairs (NORKA)) துறை உள்ளது. மாநிலங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தினாலும், வெளிநாடுகளில் சொந்த அலுவலகங்களை அமைக்கவோ அல்லது வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் அதிகாரிகளை நியமிக்கவோ முடியாது.
வெளியுறவுக் கொள்கை விவாதங்களில் மாநிலங்களை ஈடுபடுத்த ஒன்றிய அரசு முயற்சித்துள்ளது. 2000-ஆம் ஆண்டில், பாஜக தலைமையிலான அரசாங்கம் அரசியலமைப்பின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்ய தேசிய ஆணையத்தை அமைத்தது. மாநிலங்களைப் பாதிக்கும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுவதற்கு முன், ஒன்றிய மாநிலங்களுக்கு இடையேயான சபை (Inter-State Council (ISC)) கலந்தாலோசிக்க வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரை தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை.
2014-ல் நரேந்திர மோடி அவர்கள் பிரதமரானபோது, வெளியுறவுக் கொள்கையில் மாநிலங்கள் அதிக செல்வாக்கு செலுத்தும் என்ற நம்பிக்கை இருந்தது. 2013 அக்டோபரில், டெல்லியில் உள்ள தலைவர்கள் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் உள்ள மக்களையும் வெளியுறவுக் கொள்கை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். நவம்பர் 2015-ல், வெளியுறவு அமைச்சகம், வெளியுறவுக் கொள்கையில் மாநிலங்களுடன் இணைந்து செயல்படும் என்று குறிப்பிட்டார். இந்திய அதிகாரிகளுக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்புகளை எளிதாக்குவதற்காக வெளியுறவு அமைச்சகம் 2014-ல் மாநிலப் பிரிவை உருவாக்கியது.
2017-ஆம் ஆண்டில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பல்வேறு வெளியுறவு அமைச்சகச் சேவைகளை வழங்குவதற்காக அனைத்து மாநில தலைநகரங்களிலும் 'விதேஷ் பவன்' (Videsh Bhavan’) அமைக்கும் திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. தற்போது, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் வெளியுறவு அமைச்சக கிளைச் செயலகங்கள் உள்ளன. ஆனால், அவை வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளைக் கொண்டுள்ளன.
மாநிலப் பிரிவில் மாநிலப் பிரதிநிதிகள் இல்லை. மாநிலங்கள் தங்கள் கவலைகளைத் தெரிவிக்க உதவும் மாநிலங்களுக்கு இடையேயான சபை (Inter-State Council (ISC)) செயல்படவில்லை. தாராளமயமாக்கலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டில் ஒத்துழைப்புக்கான செயலாளரை கேரளா நியமித்தது குறித்த சர்ச்சை தேவையற்றது. வெளியுறவுக் கொள்கையில் இந்திய மாநிலங்களை எவ்வாறு ஆக்கப்பூர்வமாக ஈடுபடுத்துவது என்பது பற்றிய உரையாடல்களை மீண்டும் தொடங்க வேண்டும்.