உயரும் கடல்நீர் மட்ட உயர்வு, நகரங்களின் வளர்ச்சி, வறுமை மற்றும் புலம் பெயர்ந்த மக்கள், போன்ற காரணங்களால் 120 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பல குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்காக ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர். இதனால் நீரில் முழ்கி இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
புதுடெல்லியின் பழைய ராஜீந்தர் நகரில் உள்ள பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் மூழ்கி இறந்த மூன்று ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த மாணவர்களின் சொல்லப்படாத சோகம், யார் வேண்டுமானாலும், எங்கும் மூழ்கலாம் என்பதற்கான ஒரு பயங்கரமான நினைவூட்டலாகும். அலட்சியம் மற்றும் தளர்வான விதிமுறைகள் காரணமாக ஏற்பட்ட இந்த சம்பவம் மிகவும் கவலைக்குரியது. உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) தலைமையிலான உலகளாவிய நிகழ்வான நீரில் மூழ்குதல் தடுப்பு தினத்தை (Drowning Prevention Day) அனைத்து நாடுகளும் அனுசரித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இச்சம்பவம் நடந்தது.
உயரும் கடல்நீர் மட்ட உயர்வு, நகரங்களின் வளர்ச்சி, வறுமை மற்றும் புலம் பெயர்ந்த மக்கள், போன்ற காரணங்களால் 120 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பல குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்காக ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர். இதனால் நீரில் முழ்கி இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. புயல், சூறாவளி, சுனாமி மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பேரிடர்கள் ஏற்படும். மேலும் எதிர்காலத்தில், நீரினால் ஏற்படும் ஆபத்துக்கள் பல மடங்கு அதிகரிக்கும் என்று ஆய்வுகள் எச்சரித்துள்ளன. இதில் பாதிக்கப்படக்கூடிய பெரும்பாலானவர்கள் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் ஆவர். ஏற்கனவே நீரில் மூழ்கி இறப்பவர்களில் பாதி பேர் இவர்கள் ஆவர்.
குழந்தைகள் நீரில் மூழ்கி இறப்பது ஏற்றுக்கொள்ள முடியாத பாதிப்பை ஏற்படுத்துகிறது. வியட்நாம் மற்றும் உகாண்டாவில் குழந்தைகள், குளிப்பதற்கோ அல்லது விளையாடுவதற்கோ நீர்நிலைகளுக்கு செல்லும் போது, ஆறுகள் மற்றும் ஏரிகளில் மூழ்கி இறந்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள குழந்தைகள் தங்கள் சொந்த வீடுகளில் நீச்சல் குளங்கள் மற்றும் தொட்டிகளில் மூழ்கி இறக்கின்றனர். இந்தியாவில், தினமும் காலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், முதலை மற்றும் பாம்பு நிறைந்த நதிகளை நீந்துவது, திடீர் வெள்ளத்தில் சிக்குவது அல்லது படகு கவிழ்வது போன்ற காரணங்களால் பாதிக்கப்படுகின்றனர். பங்களாதேஷில், 43% குழந்தை இறப்புகள் நீரில் மூழ்குவதால் ஏற்படுகின்றன. 5 வயதிற்குட்பட்ட பெரும்பாலான குழந்தைகள் தங்கள் சொந்த வீடுகளிலிருந்து 20 மீட்டருக்குள் மூழ்கி இறக்கின்றனர். நீரில் மூழ்கும் ஒவ்வொரு சம்பவமும் வித்தியாசமானது.
சிறு குழந்தைகள் கிராமத்து குளத்திலோ அல்லது தொட்டிகளிலோ தெரியாமல் விழக்கூடும். இதைப் போலவே, வளரிளம் பருவத்தினரும், இளைஞர்களும், குறிப்பாக ஆண்கள், மீன் பிடிக்கும்போதும், படகு சவாரி செய்யும்போதும், மது போதையில் மூழ்கியும் இறக்கின்றனர். பாதுகாப்பற்ற படகுகள் மற்றும் சரியான தனிப்பட்ட மிதவை சாதனங்கள் இல்லாததால் நீர் போக்குவரத்தில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. நகர வெள்ளத்தின் போது கார்களில் சிக்கியவர்கள் அல்லது நீர் கிடைக்காததால் ஆபத்தான நீர் ஆதாரங்களிலிருந்து தண்ணீர் எடுக்கும்போது பெண்கள் மூழ்குவது போன்றவை நீரில் மூழ்கும் பல வழிகளில் சில. இந்த சம்பவங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும் மற்றும் பெரும்பாலும் அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை. சிறுவன் ஆலன் குர்தி (Alan Kurdi) நீரில் மூழ்கியது மற்றும் எல் சால்வடோரிய (El Salvadorian) தந்தை ஆஸ்கார் ராமிரெஸ் (Oscar Ramirez) மற்றும் அவரது 2 வயது மகள் வலேரியா(Valeria) ஆகியோரின் மரணங்கள் இதயத்தை உடைக்கும் நிகழ்வுகளாக இருந்த போதிலும் அவை கவனத்தை பெறுவதில்லை.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 42 பேர் நீரில் மூழ்கி இறக்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 236,000 நபர்கள் நீரில் மூழ்கி இறக்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 82,000 பேர் 1 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள். ஊட்டச்சத்து குறைபாட்டினால் மூன்றில் இரண்டு பங்கு இறப்பு எண்ணிக்கையும், மலேரியாவால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்களும் இருந்தபோதிலும், நீரில் மூழ்குதல் என்பது பெரும்பாலும் அறிவிக்கப்படாத மற்றும் புறக்கணிக்கப்பட்ட பொது சுகாதார பிரச்சினையாக உள்ளது. நீரில் மூழ்கும் இறப்புகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன என்பது தரவு இல்லாததற்கு ஒரு முக்கிய காரணம். தற்கொலை அல்லது கொலை போன்ற காரணங்களால் நீரில் மூழ்கும் சம்பவங்கள் சேர்க்கப்படவில்லை. நீர் போக்குவரத்து விபத்துக்களால் ஏற்படும் நீரில் மூழ்கும் மரணங்களும் விலக்கப்பட்டுள்ளன. அகதிகள் மற்றும் நாடற்றவர்களின் மரணங்கள் கணக்கிடப்படவில்லை.
வெள்ளம் அல்லது சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளின் போது நீரில் மூழ்கி இறப்பதன் மூலம் ஏற்படும் உயிரிழப்புகள் உலகளாவிய எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், வெள்ளத்தின் போது குறைந்தது 75% இறப்புகள் நீரில் மூழ்குவதன் மூலம் ஏற்படுகின்றன. நீரில் மூழ்குவதை ஒரு பொது சுகாதார நெருக்கடியாக அதிக அளவில் அங்கீகரிக்க அழுத்தம் கொடுத்து வரும் உலக சுகாதார அமைப்பு (WHO), குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் (low- and middle-income countries (LMICs)) தற்போதைய மதிப்பீடுகளை விட உண்மையான மதிப்பை விட நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிகம் என்பதை சரிசெய்யப்பட்ட தரவு வெளிப்படுத்தக்கூடும் என்பதை அங்கீகரிக்கிறது.
1970-ஆம் ஆண்டுகளில் தட்டம்மை மற்றும் வயிற்றுப்போக்கு இருந்ததைப் போலவே இன்று நீரில் மூழ்கி மரணங்கள் மிகவும் தீவிரமானவை என்ற கருத்து உள்ளன. மேலும் பலர் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் அரசியல் மற்றும் பொது சுகாதார முயற்சிகளில் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டில் நீரில் மூழ்குவதைத் தடுப்பது குறித்த முதல் உலகளாவிய அறிக்கையை (Global Report on Drowning Prevention) உலக சுகாதார அமைப்பு வெளியிட்டபோது, நீரில் மூழ்கும் இறப்புகள் ஒரு பெரிய பொது சுகாதார அக்கறையாக உலக அரங்கில் குரல் கொடுத்தன. இதன் காரணமாக, வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பல ஆய்வுகள் மற்றும் பைலட் திட்டங்கள் (pilot projects) தொடங்கப்பட்டன. ஏப்ரல் 2021-ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச் சபை நீரில் மூழ்குவதைத் தடுப்பது குறித்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு உலகளாவிய நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தது.
ஆஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் உட்பட பல நாடுகள் நீர் பாதுகாப்பு திட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. ஆஸ்திரேலியா தனது பரந்த கடற்கரையில் கவனம் செலுத்தி, சர்ஃப் உயிர் காக்கும் கருவிகள் (surf lifesavers) மற்றும் உயிர்காப்பாளர்களுடன் (lifeguards) முன்னணி நீர் பாதுகாப்பை ஊக்குவித்து வரும் நிலையில், வியட்நாம் குழந்தைகளுக்கு நீச்சல் பாடங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. ப்ளூம்பெர்க் (Bloomberg) தொண்டு நிறுவனம் வியட்நாம் அரசாங்கத்துடன் இணைந்து நீரில் மூழ்குதல் குறித்த தேசிய திட்டத்திற்காக நீச்சல்-பாதுகாப்பு குறித்த பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பட்டம் பெற, ஒரு குழந்தை 30 வினாடிகள் தண்ணீரில் மிதிக்க முடியும் என்பதையும், குறைந்தது 25 மீட்டர் வரை திறந்த நீரில் உதவியின்றி நீந்த முடியும் என்பதையும் நிரூபிக்க வேண்டும். குழந்தைகள் நீரில் மூழ்கி இறக்கும் எண்ணிக்கையை குறைக்க, பங்களாதேஷ் அரசு, அஞ்சல் (Anchal) என்ற சமூக அடிப்படையிலான மாதிரியை ஏற்றுக்கொண்டுள்ளது. இதில் 1-5 வயதுடைய குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குழந்தை பராமரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த எளிய மாதிரி நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே நீரில் மூழ்கி இறப்பதை 88% குறைக்க வழிவகுத்தது. டிசம்பர் 2023-ஆம் ஆண்டில், இந்தியா நீரில் மூழ்குவதைத் தடுக்கும் அறப்போர் வீரர் அமைப்பில் (drowning prevention crusaders) சேர்ந்தது. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் 'நீரில் மூழ்குவதைத் தடுப்பதற்கான கட்டமைப்பை' (Strategic Framework for Drowning Prevention) வெளியிட்டது. ஒவ்வொரு ஆண்டும் 38,000 இந்தியர்கள் நீரில் மூழ்கி இறக்கின்றனர். இந்தியாவின் மாறுபட்ட நிலப்பரப்பு, பல்வேறு காலநிலைகள் மற்றும் அடிப்படை சேவைகளுக்கான சீரற்ற அணுகல் ஆகியவை சவால்களை உருவாக்குகின்றன. குறிப்பாக தொலைதூர பகுதிகளில் உள்ள மக்கள் நிலப்பரப்பு, வானிலை மற்றும் குறைவான வருமானம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்தியாவின் செயல் திட்டம் வலுவான தரவுகளை சேகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் உள்கட்டமைப்பு, போக்குவரத்து பாதுகாப்பு, கல்வி மற்றும் சுகாதார வசதிகளுக்கான அணுகல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல பிரச்சனைக்குரிய பகுதிகளில் தீர்வு காண வேண்டும்.
சமீபத்தில், உலகளாவிய பொது சுகாதார சமூகம் நீரில் மூழ்குவதை ஒரு சமூக சமத்துவமின்மை பிரச்சினையாக பார்க்கத் தொடங்கி உள்ளது. விபத்து மரணங்கள் மட்டுமல்ல. நீரில் மூழ்கும் இறப்புகளில் 90% குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் நிகழ்கின்றன என்று உலகளாவிய தரவு காட்டுகிறது. பணக்கார நாடுகளில், ஏழை மற்றும் சிறுபான்மை சமூகங்கள் நீரில் மூழ்கி இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நீரில் மூழ்குவதை பொது சுகாதார நெருக்கடியாகக் கருதுவது ஒரு நீண்ட பயணமாக இருக்கும்.
இதற்கு பல்வேறு துறைகளில் முறையான ஒத்துழைப்பு தேவைப்படும். இதற்கிடையில், குறைந்த செலவுடன் கூடிய விரைவான தீர்வுகள் ஒவ்வொரு நாளும் உயிர்களைக் காப்பாற்றும். இந்தத் தீர்வுகளில் நீர்நிலைகளைச் சுற்றியுள்ள தடைகளைப் பயன்படுத்துதல், பள்ளி வயது குழந்தைகளுக்கு அடிப்படை நீச்சல் திறன்களைக் கற்பித்தல் மற்றும் பாதுகாப்பான நீர் போக்குவரத்து மற்றும் மிதக்கும் சாதனங்களை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும்.
லோபா கோஷ் குளோபல் ஹெல்த் அட்வகேசி இன்குபேட்டர் (Global Health Advocacy Incubator) மூத்த தகவல் தொடர்பு ஆலோசகர் மற்றும் எழுத்தாளர்.