மண்டல் கமிஷன் பரிந்துரைகள் என்ன? இதர பிற்படுத்த பிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினரை (OBC creamy layer) விலக்குவதற்கான அளவுகோல் என்ன? இட ஒதுக்கீட்டின் அளவு கவலைக்குரியதா? இன்னும் சமமான இட ஒதுக்கீட்டுக்கு என்ன செய்ய முடியும்?
பூஜா கேத்கருக்கு இந்திய நிர்வாக சேவை (IAS) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) மேல்நிலையினர் அல்லாத அடுக்குகளுக்கான (non-creamy layer) இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டதில் பல குறைபாடுகள் உள்ளன. இதன் மூலம் இதர பிற்படுத்த பிற்படுத்தப்பட்டவளுக்கான இட ஒதுக்கீட்டில் மேல்நிலையினரை (OBC creamy layer) சுற்றி பிரச்சினைகள் எழுப்புகின்றன.
இடஒதுக்கீட்டின் வரலாறு என்ன?
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 15 மற்றும் 16 முறையே அரசாங்கத்தின் எந்தவொரு கொள்கையிலும் மற்றும் பொது வேலைவாய்ப்பிலும் அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தை உறுதி செய்கிறது. சமூக நீதியை அடைவதற்காக, சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Class (OBC)) அல்லது, பட்டியல் சாதியினர் (Scheduled Castes (SC)) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes (ST)) ஆகியோரின் முன்னேற்றத்திற்கான சிறப்பு சலுகைகளையும் வழங்குகிறது. மத்திய அளவில் வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினருக்கான (ST) இடஒதுக்கீடு முறையே 15% மற்றும் 7.5% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டில், வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, மண்டல் கமிஷன் 1980 பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (OBC) 27% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. பின்னர் 2005 ஆம் ஆண்டு தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில், முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரரீதியில் பின் தங்கியோருக்கான (Economically Weaker Sections (EWS)) 10% இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டது.
மேல்நிலையினர் (creamy layer) என்றால் என்ன?
இந்திரா சாவ்னி வழக்கில் (Indra Sawhney case) (1992) ஓபிசிக்கு 27% இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்தியாவில் வர்க்கத்தை நிர்ணயிப்பது சாதிதான் என்று அது கூறியது. சமத்துவத்தைப் பேண, இடஒதுக்கீடுகளுக்கு 50% வரம்பை நிர்ணயித்துள்ளது. விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே இந்த வரம்பை மீற முடியும். ஓபிசி இடஒதுக்கீட்டிலிருந்து மேல்நிலையினரையும் (creamy layer) நீதிமன்றம் விலக்கியது.
நீதிபதி ராம் நந்தன் பிரசாத் கமிட்டி (Justice Ram Nandan Prasad Committee (1993)) பரிந்துரைகளின் அடிப்படையில் மேல்நிலையின் (creamy layer) ஒரு பகுதியாக ஒரு நபரை அடையாளம் காண்பதற்கான அளவுகோல்கள் உள்ளன. இது விண்ணப்பதாரரின் பெற்றோரின் நிலை/வருமானத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. கிரீமி லேயரைச் சேர்ந்தவர்களுக்கான அளவுகோல் பெற்றோரின் வருமானம், சம்பளம் மற்றும் விவசாய வருமானத்திலிருந்து வருமானம் நீங்கலாக, கடந்த மூன்று தொடர்ச்சியான நிதியாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ₹8 லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும். மேலும், பின்வரும் வகை விண்ணப்பதாரர்களும் கிரீமி லேயரைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்: (அ) குரூப் ஏ/வகுப்பு 1 அதிகாரியாக (Group A/Class I officer or parents) அரசுப் பணியில் (மத்திய அல்லது மாநிலம்) பணிபுரியும் பெற்றோர்கள், குரூப் பி/கிளாஸ் 2 அதிகாரிகளாக நுழைந்தவர்கள் (Group B/Class II officers) அல்லது குரூப் பி/வகுப்பு 2 பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு 40 வயதுக்கு முன்பே குரூப் ஏ/கிளாஸ் 1-க்கு பதவி உயர்வு பெற்றவர்கள்; (ஆ) பொதுத்துறை நிறுவனங்களில் மேலாளர் பதவியில் பணிபுரியும் பெற்றோர்,(இ) அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் பெற்றோர்.
என்னென்ன பிரச்சினைகள்?
சமீபத்திய சர்ச்சை செயல்பாட்டில் உள்ள குறைபாடுகள் பற்றிய பிரச்சினைகளை எழுப்பியுள்ளது. சில விண்ணப்பதாரர்கள் சந்தேகத்திற்குரிய வழிகளில் மேல்நிலையினர் அல்லாத அடுக்குகள் (Non-Creamy Layer (NCL)) அல்லது பொருளாதாரரீதியில் பின் தங்கியோருக்கான (EWS) சான்றிதழைப் பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. மத்திய அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 4% இடங்களிலும் இந்த குளறுபடி நடைபுறுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. மேல்நிலையினர் விதிவிலக்கைச் மீறுவதற்க்கான உத்திகளைக் கடைப்பிடிப்பதாக அவர்கள் மீது புகார் உள்ளது. இந்த உத்திகளில் சொத்துக்களை பரிசாக வழங்குதல் மற்றும் முன்கூட்டிய ஓய்வு பெறுதல் ஆகியவையும் அடங்கும். விண்ணப்பதார் அல்லது அவரது இணையினரின் (spouse) வருமானம் அத்தகைய விலக்குக்குக் கருதப்படாது.
மற்றொரு சர்ச்சைக்குரிய பிரச்சினை இடஒதுக்கீடு பலன்களின் செறிவு தொடர்பானது. ரோகினி கமிஷன் (Rohini Commission) ஓபிசி சாதியினரிடையே துணை வகைப்பாடு குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டது. கல்வி நிறுவனங்களில் 97% இடஒதுக்கீடு, வேலை வாய்ப்புகளில் ஒன்றிய அளவில் 25% ஓபிசி சாதிகள்/துணை ஜாதிகளால் மட்டுமே பெறப்பட்டுள்ளன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
OBC பிரிவின் கீழ் உள்ள சுமார் 2,600 சமூகங்களில் 1,000 க்கும் அதிகமானோர் வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பூஜ்ஜிய பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருந்தனர். SC மற்றும் ST பிரிவினருக்கும் இடஒதுக்கீடு பலன்களை பெறுவதில் இதேப் போன்ற சிக்கல் நீடிக்கிறது. இந்த சமூகங்களுக்கு 'மேல்நிலையினர்' (creamy layer) அடிப்படையில் எந்த விலக்கும் இல்லை.
இடஒதுக்கீடு தற்போது 60% ஆக உள்ளது, இதில் பொருளாதார ரீதியில் பின் தங்கியோருக்கான இட ஒதுக்கீடும் அடங்கும். சமூக யதார்த்தங்களைக் கருத்தில் கொண்டு, இந்த அதிக சதவீத இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது. பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் பதில்களின்படி, மத்திய அரசில் ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டிக்கு ஒதுக்கப்பட்ட 40-50% இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னோக்கி செல்லும் வழி என்னவாக இருக்கும்?
மேல்நிலையினர் அல்லாத அடுக்குகள் (NCL), பொருளாதாரரீதியில் பின் தங்கியோர் (EWS) மற்றும் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்களை வழங்குவதில் உள்ள குறைபாடுகளை தீர்ப்பதே முதன்மையான தேவையாகும். தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த நன்மைகளைப் பெறுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த முழுமையான ஆய்வு இருக்க வேண்டும்.
இடஒதுக்கீடு சமூகத்தினருக்கான காலியிடங்கள் பின்னடைவின்றி நிரப்பப்பட வேண்டும். பல்வேறு சமூகங்களின் பிரதிநிதித்துவம் அல்லது பிரதிநிதித்துவமின்மையை நிவர்த்தி செய்ய இடஒதுக்கீட்டின் துணை வகைப்படுத்தல் அவசியமாக இருக்கலாம். இதேபோல், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவில் மேல்நிலையினர்' (creamy layer) விலக்கு, குறைந்தபட்சம் குரூப் 1 / கிளாஸ் ஏ அரசு அதிகாரிகளின் குழந்தைகளுக்கு பரிசீலிக்கப்படலாம். இத்தகைய முன்மொழிவுக்கு ஆதரவான ஒவ்வொரு வாதத்துக்கும், சரியான எதிர் வாதங்களை முன்வைக்கக்கூடிய நுட்பமான விஷயங்கள் இவை. ஆயினும்கூட, இந்த அம்சங்களை செயல்படுத்த அனைத்து மக்களுடன் ஒரு விவாதம் தொடங்க வேண்டும். இடஒதுக்கீட்டின் பலன்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் பிற்படுத்தப்பட்டவர்களிடையே மிகவும் பின்தங்கியவர்களைச் சென்றடைவதை இது உறுதி செய்யும்.
ரங்கராஜன். ஆர் ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி, 'அரசியல் எளிமைப்படுத்தப்பட்டது' என்ற புத்தகத்தின் ஆசிரியர்.