இந்தியா தனது அணுசக்தித் தேவைகளுக்கு இறக்குமதி செய்யப்படும் யுரேனியத்தையே அதிகளவில் சார்ந்துள்ளது. தற்போது இந்தியாவின் பொதுப் பயன்பாடு தேவையில் ஏறக்குறைய நான்கில் மூன்று பங்கு இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்தியா தனது எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, மார்ச் மாதம் 2-ஆம் தேதி கனடாவின் ‘Cameco’ நிறுவனத்துடன் 2.6 பில்லியன் கனடிய டாலர் (CAD) மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, 2027-ஆம் ஆண்டு முதல் 2035-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 10,000 டன் யுரேனியத்தை இந்தியாவுக்கு வழங்க அந்த நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
இந்தியாவிடம் என்னென்ன யுரேனியம் 'இருப்பு' உள்ளது?
இந்தியாவில் உள்நாட்டு இருப்பு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட யுரேனியம் கையிருப்பு என இரண்டும் உள்ளன. நாட்டின் உள்நாட்டு இருப்புகளில் சுமார் 4.2–4.3 லட்சம் டன்கள் தாதுக்கள் உள்ளன. இவை முக்கியமாக ஜார்க்கண்டில் உள்ள ஜடுகுடா (Jaduguda) மற்றும் துராம்திஹ் (Turamdih) சுரங்கங்களிலும், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தும்மலப்பள்ளியிலும் (Tummalapalle) அமைந்துள்ளன. இந்தத் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கக்கூடிய யுரேனியம் உலோகத்தின் அளவு 76,000–92,000 டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான தாது மற்றும் உலோக உற்பத்தி அளவுகளில் உள்ள மிகப்பெரிய வேறுபாட்டிற்கு, இந்தியத் தாதுவின் குறைந்த தரம் (0.02–0.45% செறிவு) தான் முக்கியக் காரணமாகும். இதற்கு நேர்மாறாக, கனடா உயர் ரகத் தாதுவைக் கொண்டுள்ளது, இது இந்தியத் தாதுவை விட 10 முதல் 100 மடங்கு வரை அதிகச் செறிவு மிக்கது. மேலும், ‘Cameco’ நிறுவனம் உலகளவில் யுரேனியம் உற்பத்தியில் (அளவின் அடிப்படையில்) முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும் ஒரு முன்னணி நிறுவனமாகக் கூறப்படுகிறது.
இந்தியா தனது பொதுப் பயன்பாட்டு எரிபொருள் தேவையில் ஏறக்குறைய நான்கில் மூன்று பங்கை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. இதற்காக, கனடாவின் ‘Cameco’ நிறுவனத்துடனான ஒப்பந்தம் தவிர, கஜகஸ்தானின் ‘Kazatomprom’ நிறுவனத்துடனும் இந்தியா விநியோக ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், உஸ்பெகிஸ்தான் மற்றும் ரஷ்யாவுடன் (இவை இரண்டும் குறைந்த மற்றும் நடுத்தர ரகத் தாதுக்களை வழங்குகின்றன) ஏற்கனவே விநியோக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தடைகளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, ஐந்து ஆண்டுகளுக்குத் தேவையான எரிபொருளைச் சேமித்து வைப்பதற்கான ஒரு கையிருப்பு மையத்தையும் அரசு உருவாக்கி வருகிறது.
யுரேனியம் தாதுவை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது அதைச் சுரங்கத்திலிருந்து வெட்டி எடுப்பதைவிட மலிவானது, ஆனால் அந்த இறக்குமதி செய்யப்பட்ட யுரேனியத்தை சட்டப்பூர்வமாக அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்த முடியாது. அதனால்தான், இந்தியா தனது சொந்த நாட்டிற்குள்ளும் யுரேனியம் தாதுவைச் சுரங்கம் மூலம் வெட்டி எடுத்து வருகிறது.
இந்த ஒப்பந்தத்தில் 2010-ஆம் ஆண்டு ஒப்பந்தம் சேர்க்கப்பட்டுள்ளதா?
‘Cameco’ நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தம், இந்தியா-கனடா அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின்கீழ் (Nuclear Cooperation Agreement (NCA)) மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டில், இந்தியா-அமெரிக்கா இடையிலான 123 அணுசக்தி ஒப்பந்தத்தின் விளைவாக, அணுசக்தி விநியோகக் குழு (Nuclear Suppliers Group (NSG)) இந்தியாவிற்கு வழங்கிய நிபந்தனையற்ற விலக்கிற்கு (clean waiver) பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து 2010-ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாகக் கூறப்படுகிறது.
கஜகஸ்தானுடனான ஒப்பந்தத்தைப் போலன்றி (அது குறைவான தலையீடுகளைக் கொண்டது), கனடாவுடனான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Nuclear Cooperation Agreement (NCA)), இந்தியா தனது "அணுப் பிளவு பொருட்களின் கணக்குகளை" கனடாவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது. இது இந்தியாவின் இறையாண்மையைச் சீர்குலைப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மறுபுறம், இந்தியாவின் அணு ஆயுதத் திட்டத்திற்கு மறைமுகமாக ஆதரவளிப்பதாக அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Nuclear Cooperation Agreement (NCA)) விமர்சிக்கப்படுகிறது: அதாவது, பொதுப் பயன்பாட்டிற்காக இந்தியா எவ்வளவு அதிகப்படியான யுரேனியத்தை இறக்குமதி செய்கிறதோ, அவ்வளவு அதிகமாகத் தனது உள்நாட்டு யுரேனியத்தை ராணுவத் தேவைகளுக்காகச் சேமித்து வைத்துக்கொள்ள முடியும் என்பதே அந்த விமர்சனமாகக் கூறப்படுகிறது.
இந்தியா தனது யுரேனியத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது?
இந்தியா தற்போது சுமார் 9 ஜிகாவாட் (Giga Watt (GW)) மொத்தத் திறனுடன் 24 அணு உலைகளை இயக்கி வருகிறது. இதில் 6 முதல் 7 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, இந்தியாவின் ஒட்டுமொத்த மின் தேவையில் சுமார் 3 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 700 மெகாவாட் (Mega watt (MW)) அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் (pressurised heavy water reactors (PHWRs)), யுரேனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துகின்றன. வரும் 2047-ஆம் ஆண்டிற்குள் அணுசக்தித் திறனை 100 ஜிகாவாட்டாக (GW) உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், அணுசக்தியை விரிவாக்கம் செய்வதற்கான முந்தைய முயற்சிகள், நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் உள்ளூர் மக்களின் போராட்டங்கள் காரணமாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளன.
டிராம்பேயில் (Trombay) உள்ள 'துருவா' (Dhruva) போன்ற ஆராய்ச்சி அணு உலைகளில் கணிசமான அளவு யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. இது மருத்துவத் துறையில் பயன்படும் டெக்னீசியம்-99m (Technetium-99m) மற்றும் அயோடின்-131 (Iodine-131) போன்ற மருத்துவ ஐசோடோப்புகளைத் தயாரிப்பதற்கும், மேம்பட்ட பொருள் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
சாந்தி சட்டம் (SHANTI Act) இந்தியாவின் அணுசக்தி வளர்ச்சிக்கு உதவுமா?
2025-26-ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலைத் திட்டத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய தலைமுறை சிறிய ரக அணு உலைகளை (Small Modular Reactors (SMR)) மேம்படுத்துவதற்காக ₹20,000 கோடி ஒதுக்கியுள்ளார். இந்த வகை அணு உலைகளில் பொதுவாக 3-5% செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
உள்நாட்டுப் பயன்பாட்டிற்காக உற்பத்தி செய்யப்படும் யுரேனியம், அணு ஆயுதங்கள் (தற்போது சுமார் 170 அணுக்கரு முனைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது) மற்றும் அணுசக்தியால் இயங்கும் ஐ.என்.எஸ் அரிஹந்த் (INS Arihant) ரக நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவின் அணுசக்தித் திட்டம் தற்பொழுது எவ்வாறு செயல்பட்டு வருகிறது?
இந்தியா தற்போது தனது மூன்று அடுக்கு அணுசக்தித் திட்டத்தின் முதல் நிலையிலிருந்து (Stage I) இரண்டாம் நிலைக்கு (Stage II) மாறிக்கொண்டிருக்கிறது.
முதல் நிலையில், அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் (PHWRs) இயற்கையான யுரேனியம்-235-ஐப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இந்தச் செயல்பாட்டில் புளுட்டோனியம்-239 (plutonium-239) ஒரு உபபொருளாகக் கிடைக்கிறது. இரண்டாம் நிலையில் (Stage II), வேக உற்பத்தி உலைகள் யுரேனியம்-238 (uranium-238) மற்றும் புளுட்டோனியம்-239 கலந்த ஆக்சைடு எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன், யுரேனியம்-233 மற்றும் கூடுதல் புளுட்டோனியம்-239-ஐயும் (plutonium-239) உருவாக்குகின்றன. இந்த உலைகள் நுகரும் எரிபொருளைவிட அதிக எரிபொருளை உற்பத்தி செய்வதால் இவை 'வேக உற்பத்தி உலைகள்' என்று அழைக்கப்படுகின்றன. கல்பாக்கத்தில் உள்ள மாதிரி வேக உற்பத்தி உலை (Prototype Fast Breeder Reactor (PFBR)) தற்போது செயல்பாட்டிற்கு வருவதற்கான இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இறுதியாக, மேம்படுத்தப்பட்ட கனநீர் உலைகள் (Advanced Heavy Water Reactors (AHWR)), புளுட்டோனியம்-239 (plutonium-239) மற்றும் தோரியம்-232 (thorium-232) ஆகியவற்றை எரிபொருளாகப் பயன்படுத்தும் என்றும் இதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுவதோடு, உபரி விளைபொருளாக யுரேனியம்-233-ம் உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் உலகின் தோரியம் (Thorium) இருப்பில் 20-25% உள்ளது என்ற உண்மையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே, ஹோமி ஜே. பாபா இந்த மூன்றடுக்குத் திட்டத்தை உருவாக்கினார்.
இருப்பினும், இந்தத் திட்டம் பல தாமதங்களையும் மற்றும் அதிகரித்துவரும் செலவுகளையும் எதிர்கொண்டது. 1977-ஆம் ஆண்டிலேயே கல்பாக்கத்தில் வேக உற்பத்தி சோதனை உலை (Fast Breeder Test Reactor) கட்டப்பட்டது. ஆனால், இந்திய அணுசக்தி சோதனைகளுக்குப் பிறகு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் போன்ற காரணங்களால், ஒன்றிய அரசு 2000-களின் தொடக்கத்தில் தான் முன்மாதிரி வேக உற்பத்தி உலைக்கு (Prototype Fast Breeder Reactor (PFBR)) ஒப்புதல் அளித்தது. மேலும், இந்த முன்மாதிரி வேக உற்பத்தி உலை திட்டத்தின் மதிப்பீட்டுச் செலவு வடிவமைக்கப்பட்ட போது இருந்த ₹3,492 கோடியிலிருந்து, 2019-ஆம் ஆண்டில் ₹6,800 கோடிக்கும் மேலாக உயர்ந்து ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகரித்தது.
மார்ச் மாதம் 2013-ஆம் ஆண்டில், அணுசக்தித் துறை (Department of Atomic Energy (DAE)) மக்களவையில் ஒரு முக்கியத் தகவலைத் தெரிவித்தது. அதன்படி, வேக உற்பத்தி உலைகள் (FBR) வணிக ரீதியாகச் செயல்படத் தொடங்கிய 30 முதல் 40 ஆண்டுகளுக்குப் பிறகே, தோரியத்தை (Thorium) பெரிய அளவில் பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டது. தற்போதைய முன்னோடி வேக உற்பத்தி உலையின் (PFBR) கால அட்டவணையின்படி பார்த்தால், இது 2060-களிலோ அல்லது அதற்குப் பிறகோதான் சாத்தியமாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவின் முன்னாள் அணுசக்தி துறை (DAE) தலைவர் அனில் காகோத்கர், ஒரு 'இரட்டிப்பு காலம்' (Doubling time) பற்றி விளக்குகையில் — அதாவது ஒரு அதிவேக உற்பத்தி உலை, மற்றொரு உலையைத் தொடங்குவதற்குத் தேவையான எரிபொருளை உற்பத்தி செய்ய எடுத்துக் கொள்ளும் காலம் சுமார் 15 முதல் 20 ஆண்டுகள் ஆகும் என்று கூறினார். இந்தியா 100 ஜிகாவாட் (GW) மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டுமெனில், இத்தகைய பல இரட்டிப்புச் சுழற்சிகளைக் கடக்க வேண்டும். இதனால்தான் யுரேனியம் (Uranium) விநியோகத்தைப் பாதுகாப்பான முறையில் உறுதி செய்ய இந்தியா பல்வேறு நாடுகளுடன் பல ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
Original article : India-Canada uranium deal and India’s nuclear programme. -Vasudevan Mukunth