கல்வி : வலுவான அடித்தளம், நிலையான விரிவாக்கம் மற்றும் சில குறிப்பிடத்தக்க அறிகுறிகள் -டி. சுரேஷ் குமார்

 பல தன்னாட்சி அதிகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் உலகளாவிய கல்வி மையங்களாக மாறியுள்ளன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஈர்க்கின்றன. நவீன கட்டமைப்புகள் மற்றும் மேம்பட்ட ஆய்வகங்கள், தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களுடன் போட்டியிடக்கூடிய தரத்தில் அவை உள்ளன.


ஒரு வெற்றிகரமான மரபு என்பது ஒருவர் விட்டுச் சென்றப் பாதையை பொறுத்து மதிப்பிடப்படுவதில்லை. மாறாக, அவரை பின் தொடர்பவர் அதிலிருந்து எதை உருவாக்குகிறார் என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. இந்தக் கோட்பாடு தமிழ்நாட்டின் அறிவுப் பொருளாதாரத்திற்கு ஏற்றதாக இருக்கும். இன்று, நவீன கல்வியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இந்த முன்னேற்றத்திற்கான வலுவான அடித்தளம் முதன்முதலில் ஆங்கிலேய ஆட்சியின் போது சென்னையில் உருவாக்கப்பட்டது. பின்னர், சமத்துவம் மற்றும் அணுகல் கொள்கைகளில் வேரூன்றிய நீதிக் கட்சியின் பகுத்தறிவு மற்றும் எதிர்காலக் கொள்கைகளால் அவை வலுப்படுத்தப்பட்டன. சுதந்திரத்திற்குப் பிறகு, பல்வேறு மாநில அரசாங்கங்கள் இந்த முயற்சிகளைத் தொடர்ந்து மேம்படுத்தி, அதிகமான மக்களைச் சென்றடைய கல்வியை விரிவுபடுத்தின. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் அரசியல் அதிகாரம் பல முறை மாறியிருந்தாலும், கல்விக் கொள்கைகளில் ஏற்பட்ட தொடர்ச்சி, வளர்ந்துவரும் அறிவுத் துறையில் தமிழ்நாடு ஒரு வலுவான நிலையை அடைய உதவியது.


300-வருடங்களுக்கு முன்பு, ஆசியாவின் முதல் ஆங்கில வழிப் பள்ளி (English-medium school) சென்னையில் நிறுவப்பட்டது. 1715 ஆம் ஆண்டில், ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜில் உள்ள செயிண்ட் மேரி தேவாலயத்தின் மதகுருவான ரெவரெண்ட் வில்லியம் ஸ்டீவன்சன், 12 பெண்கள் உட்பட ஆங்கிலோ-இந்திய சமூகத்தைச் சேர்ந்த 30 மாணவர்களுடன் செயிண்ட் மேரி தேவாலய அறக்கட்டளைப் பள்ளியைத் தொடங்கினார். அடுத்த 100 ஆண்டுகளில், இந்த நிறுவனம் மாநிலத் தலைநகரின் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டது. 1954-ஆம் ஆண்டில், இது செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மற்றும் ஆதரவற்றோர் இல்லம் என மறுபெயரிடப்பட்டது. பின்னர், கிறிஸ்தவ மிஷனரிகள் மாநிலம் முழுவதும் இதேபோன்ற பல பள்ளிகளைத் தொடங்கினர். இது ஆங்கிலோ-சாக்சன் பள்ளிக் கல்வியை முன்கூட்டியே பெறுவதற்கான தளத்தை  உருவாக்கியது.


உயர்கல்வியைப் பொறுத்தவரை, கலை மற்றும் அறிவியல் பிரிவுகளுக்கு முன்பே சென்னையில் தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்வியின் வருகை முக்கியத்துவம் பெற்றது. உண்மையில், ஐரோப்பாவிற்கு வெளியே முதல் தொழில்நுட்பப் பள்ளி 1794-ஆம் ஆண்டிலேயே சென்னையில் நிறுவப்பட்டது. மைக்கேல் டாப்பிங், ஒரு ஆதரவற்ற இல்லத்திலிருந்து  8 மாணவர்களுடன் ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜில் சர்வே பள்ளியை நிறுவினார். இந்த நிறுவனம் இறுதியில் உலகளவில் புகழ்பெற்ற கிண்டி பொறியியல் கல்லூரியாக (College of Engineering, Guindy (CEG)) உருவாகியது. இது பின்னர் 1978-ல் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு முக்கியப் பகுதியாக மாறியது.


அதேபோல், 1835-ஆம் ஆண்டு அரசு பொது மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டி. மோர்டிமர் அவர்களால் நிறுவப்பட்டஒரு தனியார் மருத்துவப் பள்ளியைத் தொடங்கினார். முதலில் மெட்ராஸ் மருத்துவப் பள்ளியாக மாறியது. பின்னர், 1850-ஆம் ஆண்டு மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியாக மாறியது. புகழ்பெற்ற இந்த கல்வி நிறுவனத்தில் கல்வி கற்ற டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதியாக  மாறினார். மேலும், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையையும் அவர்  பெற்றார்.


சர்வே பள்ளி உருவாக்கப்பட்டு 45 ஆண்டுகளுக்குப் பிறகு, மெட்ராஸின் ஆளுநராக இருந்த லார்ட் எல்பின்ஸ்டன், மெட்ராஸில் ஒரு மத்திய கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை அமைக்க பரிந்துரை செய்தார். இந்த யோசனை 1840-ஆம் ஆண்டில் மெரினா கடற்கரையில் மாநிலக் கல்லூரியை உருவாக்கியது. இது நோபல் பரிசு வென்ற சி.வி. ராமன் மற்றும் சுப்பிரமணியன் சந்திரசேகர் உள்ளிட்ட புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து, கல்கத்தா மற்றும் பம்பாய் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்ட சில மாதங்களுக்குள், செப்டம்பர் 1857-ல் மெட்ராஸ் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.


பாரம்பரிய படிப்புகளைத் தாண்டி, இந்தியாவின் முதல் வேளாண் பள்ளி தமிழ்நாட்டில் 1868-ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் கோயம்புத்தூரில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமாக பின்னர் மாறியது.


மாணவர் தக்கவைப்பு உத்திகள்


இருப்பினும், நிறுவனங்களை அமைப்பது மட்டுமே போதுமான நடவடிக்கையாக இருக்காது. மாணவர்களை ஈர்க்கவும், தங்கவைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். 105 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சித் தலைவர் சர் பி. தியாகராய செட்டி தலைமையிலான சென்னை மாநகராட்சி, ஏழைக் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில் சிரமங்களை எதிர்கொண்டதை உணர்ந்து, ஒரு புதிய திட்டத்தை முன்னோடியாக அறிமுகப்படுத்தியது. 1920-ஆம் ஆண்டு நவம்பர்  மாதத்தில், மெட்ராஸ் மாநகராட்சி  குழு, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியின் மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 4 பைசாவுக்கு  குறையாமல் காலை உணவு வழங்கும் திட்டத்தை முன்மொழிந்தது. மாணவர்களுக்கு "சிந்தனைக்கு உணவு" (food for thought) கொடுத்து அவர்களைப் பள்ளியில் தக்கவைத்துக்கொள்வதே இதன் குறிக்கோளாக இருந்தது. பின்னர், இந்தத் திட்டம் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. திட்டம் மிகவும் சிறப்பாக செயல்பட்டது. 1922–23-ல் 811-ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை 1924–25ல் 1,671-ஆக அதிகரித்தது.


தென் மாநிலங்களின் போட்டிக்கு மத்தியில் மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகம் எவ்வாறு நிறுவப்பட்டது


1956-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது, ​​மாநிலம் முழுவதும்  ஊரக பகுதிகளில் பள்ளிகளைத் திறப்பதில் முக்கிய பங்கு வகித்த முதல்வர் கே. காமராஜ் இந்த திட்டத்தை முன்மொழிந்தார். அவர் இலவச மதிய உணவுத் திட்டத்தை அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தினார். இதன் மூலம் 1,300 உணவு மையங்கள் மூலம் ஆண்டுக்கு 200 நாட்களுக்கு 65,000 குழந்தைகள் பயனடைந்தனர். எம்.ஜி. ராமச்சந்திரன், மு. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா தலைமையிலான அடுத்தடுத்த ஆட்சிகள் மதிய உணவில் முட்டை மற்றும் சத்தான  தானிய வகைகளைச் சேர்ப்பதன் மூலம் மதிய உணவுத் திட்டத்தை மேம்படுத்தின. இந்த மாற்றங்கள் மாணவர்களை ஈர்ப்பதற்கும், பள்ளி இடைநிற்றலைத் தடுப்பதற்கும் இந்தத் திட்டத்தை ஒரு வெற்றிகரமான மாதிரியாக மாற்றியது. பின்னர், மற்ற மாநிலங்களும் இந்த திட்டத்தைப் பின்பற்றி தொடங்கின. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்பு சரியான நேரத்தில் சத்தான உணவை வழங்க  இயலாத தாய்மார்களின் சுமையைக் குறைக்க, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையின்கீழ் செயல்பட்டுவரும் அரசாங்கம், காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


அரசியல் மற்றும் கல்விக் கொள்கை


திராவிட இயக்கத்தால் வழிநடத்தப்பட்ட பிராந்திய அடையாள அரசியலும் கல்வித் துறையில் எதிர்பாராத நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1937-ஆம் ஆண்டிலேயே, வட இந்தியாவின் முக்கிய மொழியான இந்துஸ்தானியை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயமாகக் கற்க வேண்டும் என்று சி. ராஜகோபாலாச்சாரி கூறினார். அவர் பதவி விலக நீதிக் கட்சி ஒரு போராட்டத்தைத் தொடங்கியது. இந்த நடவடிக்கை இறுதியில் 1940-ல் திரும்பப் பெறப்பட்டது. பின்னர், 1960-களின் நடுப்பகுதியில், இந்தி திணிப்புக்கு எதிராக திராவிட முன்னேற்ற கழகம் மக்கள்  போராட்டத்தை நடத்தியது. இந்த போராட்டம் திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தது. இந்த இயக்கத்தின் விளைவாக 1968-ல் முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரையின் கீழ் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பயிற்றுவிப்பதை இந்தக் கொள்கை கட்டாயமாக்கியது. இந்த கொள்கையின் விளைவாக, ஆங்கிலப் புலமை அதிகரித்தது. இது உலகளாவிய வேலைவாய்ப்பு வாய்ப்புகளின் முக்கிய சக்தியாக மாறியது. இன்றுவரை, தமிழ்நாட்டின் அரசாங்கங்களும் முக்கிய அரசியல் கட்சிகளும் இருமொழிக் கொள்கையை மாற்றவில்லை. ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கையை திணிக்கும் உறுதியான முயற்சிகளை, ஒன்றிய-மாநில பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கான நிதி விநியோகத்துடன் தொடர்புடையதாக இருந்தாலும், தமிழ்நாடு அதை தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

1980-களின் நடுப்பகுதியில், தமிழ்நாட்டில் உயர்கல்வியில், குறிப்பாக பொறியியலில் தனியார்மயமாக்கல் தொடங்கியது. எம்.ஜி. ராமச்சந்திரன் அரசாங்கம் அரசியல் ரீதியாக தொடர்புடையவர்கள் தனியார் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க அனுமதித்தபோது, இது காலப்போக்கில் கல்விக்கான பொதுநிதியைக் குறைக்கக்கூடும் என்றும் ​​பலர் அதை ஒரு ஆபத்தான நடவடிக்கையாகக் கருதினர். இருப்பினும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பொருளாதாரத்தை மாற்றியமைத்தபோது, ​​ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கியமானதாக இருந்த அதே தனியார் பொறியியல் கல்லூரிகள்தான் தமிழ்நாட்டில் தொழில்நுட்பத் துறைக்குத் தேவையான தகுதிவாய்ந்த மனித வளங்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்தன. பொறியியல் கல்விக்கான அணுகல் குடும்பங்களுக்கு அதிக செலவில் கிடைத்தாலும், இன்று பல சமூகரீதியாக பின்தங்கிய, நடுத்தர வர்க்க மற்றும்  ஊரக பகுதிகளில் வசித்து வரும் குடும்பங்கள் அமெரிக்காவிலோ அல்லது பிற நாடுகளிலோ பணிபுரியும் ஒரு குடும்ப உறுப்பினரைப் பற்றி பெருமை கொள்ளும்  ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.


 காலம்காலமாக பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த குடும்பங்கள்  வளர்ச்சியடைய பல காரணிகள் உதவின. முதலில் நீதிக் கட்சியின் தலைவர்கள் மற்றும் அவர்களின் திராவிட இயக்கத்தை பின்தொடர்ந்தவர்கள் கல்வி குடும்ப தொழில் அல்ல என்றும் அதை முன்னேற்றத்தின் உண்மையான கருவி என்ற நம்பிக்கையால் முன்னோடி ஆக மாறி சமூக வர்த்தக ஒதுக்கீட்டுக் கொள்கைகளை விரிவுபடுத்தினர். பொதுப் பணிக்கான முதல் வகுப்புவாத இடஒதுக்கீடு அரசு ஆணை 100 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் வெளியிடப்பட்டது. காலப்போக்கில், மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தக் கொள்கை விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இன்று, தமிழ்நாடு சமூகரீதியாக பின்தங்கிய சமூகங்களுக்கு 69% இடஒதுக்கீட்டை வழங்குகிறது. முஸ்லிம்கள் (பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் இருப்பவர்கள்) மற்றும் அருந்ததியர்களுக்கு (பட்டியல் சாதியினருக்குள்) துணை ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% கிடைமட்ட இடஒதுக்கீடு வழங்குப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீடு ஊரகப் பகுதிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் பின்தங்கிய இளைஞர்களுக்கு உதவுகிறது.


இரண்டாவதாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறைகளுக்கான தேவையான கட்டமைப்புகளை உருவாக்கிய முன்னோக்கிய முடிவு புதிய பட்டதாரிகளை கையாளும் வேலைவாய்ப்பு சந்தையை விரிவுபடுத்தியது. இந்த காலகட்டத்திலே தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu Industrial Development Corporation (TIDEL)) உருவாக்கப்பட்டது. மூன்றாவதாக, ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் (2001-06) அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் இ.பாலகுருசாமியால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு வேலைவாய்ப்புத் திட்டம், தனியார் துறை வேலைவாய்ப்புக்கான அணுகலை விரிவுபடுத்தியது. இந்தத் திட்டம் மாநிலம் முழுவதிலுமிருந்து வேலை தேடுபவர்களை ஒன்றிணைத்து, நகரத்தின் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் இருந்து மட்டுமே பணிகளை பெறும் சீரற்ற நிறுவன ஆட்சேர்ப்பு நடைமுறையை மாற்றியது.


முக்கியப் போட்டியாளர்களான திமுக மற்றும் அதிமுக இடையேயான போட்டி அரசியல், ஆட்சி மாற்றங்களின் போது சில வளர்ச்சித் திட்டங்களை நிறுத்துவதற்கு வழிவகுத்தாலும், கல்வித் துறை இதுபோன்ற இடையூறுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டு,  சில நேரங்களில் பின்னடைவுகளை மட்டுமே கண்டது. ஒவ்வொரு அரசும் தனது குறியீட்டை பதிப்பதாக செயல்படுவதால், தமிழ்நாடு இன்று பல்வேறு மாநில பல்கலைக்கழகங்களை கொண்டுள்ளது. இவை கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், இசை, மீன்பிடி, ஆசிரியர் கல்வி, திறந்த கல்வி மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்த  கல்வியை வழங்குகின்றன.




உயர்கல்வியை வலுப்படுத்துதல்


தற்போது, ​​தமிழ்நாட்டில் 22 மாநில பல்கலைக்கழகங்கள், இரண்டு மத்திய பல்கலைக்கழகங்கள், 29 தன்னாட்சி அதிகாரம் பெற்ற  பல்கலைக்கழகங்கள் மற்றும்  8 தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன. பல தன்னாட்சி அதிகாரம் பெற்ற  பல்கலைக்கழகங்கள் உலகளாவிய மையங்களாக உருவாகியுள்ளன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஈர்க்கின்றன. தேசிய நிறுவனங்களுடன் போட்டியிடும் அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வகங்கள் உள்ளன.


ஜூலை 01, 1982 அன்று திருச்சி மாவட்டத்திற்கு அருகிலுள்ள பாப்பாக்குறிச்சியில் குழந்தைகளுக்கான சத்தான மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கிவைக்கும் நிகழ்வில், அப்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஒரு பெண்ணுக்கு உணவு வழங்கினார்.


2006 முதல் 2011 வரை தலைமையில் கருணாநிதி ஆட்சி தனியார்மயமாக்கல் நடவடிக்கையில் இருந்து விலகியது. மாவட்டங்களில் கூடுதல் அரசு பொறியியல் கல்லூரிகளை நிறுவுவதில் மாநிலம் முதலீடு செய்தது. இதேபோல், 2017 முதல் 2021 வரையிலான காலம் மருத்துவ ஆர்வலர்களுக்கு நல்லகாலம் என்று நிரூபிக்கப்பட்டது. ஏனெனில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  ஒன்றிய  அரசின் ஆதரவுடன் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கினார்.


இந்த தொடர்ச்சியான கொள்கை தலையீடுகள் மொத்த சேர்க்கை விகிதத்தில் (Gross Enrolment Ratio (GER)) தமிழ்நாடு முதலிடத்தில் இருக்க முக்கியக் காரணியாக அமைந்தது. மாநிலத்தில் பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்த இலக்கை இந்தியா 2035-ஆம் ஆண்டுக்குள் அடைய திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை விகிதத்தில் 50%-க்கும் அதிகமாக உள்ளது. அரசு தொடர்ந்து பின்தங்கிய மாணவர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கிறது. புதுமைப் பெண் (Pudhumai Penn) மற்றும் தமிழ்ப் புதல்வன் (Tamil Pudhalvan Scheme) திட்டத்தின் கீழ் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த பிறகு, கல்லூரிகளில் சேர்ந்த பெண்கள் மற்றும் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் ஸ்டாலின் அரசாங்கம் இப்போது மாதந்தோறும் ரூ. 1,000 செலுத்துகிறது.


சீர்திருத்தத்தில் உள்ள இடைவெளிகள்


இந்த நூற்றாணடின் தொடக்கத்தில், தமிழ்நாடு முன்னேற்பாடான செயல்பாடு அடிப்படையிலான கற்றல் முறையின் (Activity-Based Learning) வெற்றிகரமான மாதிரியை அறிமுகப்படுத்தியது. மேலும், பள்ளி கல்வியின் தரத்திலுள்ள வேறுபாடுகளை குறைக்க மாநிலப் பல்கலைக்கழக வாரியம், தனியார் பள்ளிகள் வாரியம், ஆங்கில-இந்திய வாரியம் மற்றும் ஆரியென்டல் பள்ளி வாரியம் ஆகியவற்றை ஒற்றுமை பள்ளிக் கல்வி முறை (Uniform System of School Education (USSE)) போன்றவைகளை 15 ஆண்டுகளுக்கு முன்பு இணைத்தது. இது பொதுவாக சமச்சீர் கல்வி (Samacheer Kalvi) என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில், இந்த சீர்திருத்தம் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. CBSE பள்ளிகளின் எண்ணிக்கை முன்னர் 100-க்கும் குறைவிருந்தது, இன்று 1,750-க்கும் மேல் அதிகரித்துள்ளது. மேலும், சில ஆரம்பகால CBSE பள்ளிகள் ICSE மற்றும் IB/Cambridge வாரியங்களுக்கு மாறிவிட்டன. இதனால் ஒற்றுமை பள்ளிக் கல்வி முறையின் நோக்கம் புதிய அடையாளக் குறியிடு மற்றும் உணரப்பட்ட தரத்தின் வேறுபாடுகளால் பலவீனமடைந்துள்ளது. காலப்போக்கில், ஒற்றுமை பள்ளிக் கல்வி முறை (Uniform System of School Education (USSE)) அல்லாத பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதால், இது பணக்கார மற்றும் ஏழை மாணவர்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகரிக்கக்கூடும். அரசுப் பள்ளிகள் மற்றும் ஒற்றுமை பள்ளிக் கல்வி முறை வலுப்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர்கள் பதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க ஊக்குவிக்கப்படவேண்டும். மேலும், கூடுதல் கற்பித்தல் அல்லாத கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். தற்போதைய தேர்வு முறை மனப்பாடம் மற்றும் மதிப்பெண்களில் அதிக கவனம் செலுத்துகிறது. மேலும், ஒரு குழந்தையின் உண்மையான திறன்களை அளவிடுவதற்கு முழுமையான மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. கல்வித் திறன்களுடன், ஆசிரியர்கள் மாணவர்களை வாழ்க்கைக்குத் தயார்படுத்த அவர்களின் அறிவுசார் வளர்ச்சியயும் வளர்க்க வேண்டும்.


இதேபோல், உயர்கல்வியில், சென்னைப் பல்கலைக்கழகம் உட்பட பல மாநிலப் பல்கலைக்கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர் கொண்டு வருகின்றன. நியமன நடைமுறைகள் தொடர்பாக செயலகத்திற்கும், ஆளுநர் மாளிகைக்கும் இடையே நீடித்த தகராறு காரணமாக, 12 பல்கலைக்கழகங்கள் தற்போது துணைவேந்தர்கள் இல்லாமல் உள்ளன. நடந்து வரும் வழக்குகள் மற்றும் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவுகள் நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளன. மாநிலத்தில் துணைவேந்தர் நியமனங்களில் மாநில சுயாட்சியைப் பின்தொடர்வது, திறமையான கல்வித் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துவதை விட, அரசியலாக மாறியுள்ளது. நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, பல மாநிலப் பல்கலைக்கழகங்கள் நிரூபிக்கப்பட்ட கல்வித் தொலைநோக்குப் பார்வை கொண்ட அனுபவம் வாய்ந்த அறிஞர்களால் வழிநடத்தப்படுவதற்குப் பதிலாக அரசியல்ரீதியாக இணைக்கப்பட்டவர்களால் வழிநடத்தப்படுகின்றன.


மேலும், படிப்புகள், தேர்வு கட்டமைப்புகள் மற்றும் கட்டண ஆட்சிகளை தீர்மானிப்பதில் பல்கலைக்கழகங்களுக்கு போதுமான அதிகாரம் வழங்ப்படவில்லை. கல்லூரிகளின் கல்வியின் தரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு கொள்கைகள் தேவைப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில், பல அரசாங்கங்கள் பல்கலைக்கழகங்கள், குறிப்பாக பொறியியல் கல்லூரிகள், தரநிலைகளைக் குறைப்பதன் மூலம் தேர்ச்சி விகிதங்களை உயர்த்த அழுத்தம் கொடுத்துள்ளன. மாணவர்கள் முறையாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இல்லையெனில் பலர் வேலைகளைப் பெறுவதற்கான திறன்கள் இல்லாமல் பட்டம் பெரும் சூழல் உருவாகும். இது சமூக மற்றும் பொருளாதார சிக்கல்களை உருவாக்குகிறது. பல்கலைக்கழகங்களுக்கு வலுவான, அர்ப்பணிப்புள்ள தலைவர்கள் மற்றும் அவர்களின் கல்வி மற்றும் நிர்வாகப் பணிகளை நடத்த உண்மையான சுதந்திரம் தேவை. அரசாங்கத்தின் தலையீடு குறைவாக இருந்தால், உயர்கல்விக்கான வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும்.


மாநில அரசு தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ஐ சரியாக எதிர்த்தாலும், உயர்கல்விக்கான விரிவான கொள்கையை மாநில அரசு இன்னும் உருவாக்கவில்லை. பள்ளிக் கல்விக் கொள்கை தேசிய கட்டமைப்பிலிருந்து பெரிதாக வேறுபடவில்லை. உயர்கல்வி கொள்கையை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் பல்கலைக்கழகங்களையும் மாணவர்களையும் தெளிவான இலக்கு இல்லாமல் செய்துள்ளது. இந்த இடைவெளியை சரிசெய்வது மிகவும் முக்கியம்.


தமிழ்நாடு, ஒரு வலுவான மற்றும் பெருமைமிக்க கல்வி வரலாற்றைக் கொண்டுள்ளது.  கல்வியில் அதன் தலைமையைப் பராமரிக்கவும் வலுப்படுத்தவும் தொடர்ச்சியான புதுமை, புதுப்பித்தல் மற்றும் சீர்திருத்தங்கள் தேவை.


இந்தக் கட்டுரை தி இந்து இதழின் "தமிழ்நாட்டின் முன்னேற்றம்: சமூக சமத்துவத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சி" என்ற மின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.


Original article : Education: Strong foundation, steady expansion, and some striking signals -D. Suresh Kumar

Share: