வெறுப்புப் பேச்சை (hate speech) கட்டுப்படுத்த உச்சநீதிமன்றம் போதுமான நடவடிக்கைகளை எடுக்கிறதா? -ஆராத்ரிகா பௌமிக்

 வெறுப்புப் பேச்சுகளை கட்டுப்படுத்துவதில் இந்திய உச்சநீதிமன்றம்  போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறதா? சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசப்படும் இத்தகைய வெறுப்புப் பேச்சுகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்போது, சம்பந்தப்பட்டவர்கள்மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கவும் உச்சநீதிமன்றம் தொடர்ந்து முயன்று வருகிறது. இருப்பினும், சட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள சுணக்கம் மற்றும் அதிகரித்துவரும் வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் காரணமாக, உச்சநீதிமன்றத்தின் தலையீடு இன்னும் தீவிரமாகவும் விரிவாகவும் இருக்க வேண்டும் என்ற விவாதம் பொதுவெளியில் எழுந்துள்ளது.


கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் பேச்சுகளுக்காகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுக்களை விசாரித்த கௌஹாத்தி உயர்நீதிமன்றம், அவருக்கு அறிவிப்பாணை அனுப்பியது. இந்த மனுதாரர்கள் முதலில் இந்திய உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தனர். இருப்பினும், இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, தேர்தல்கள் நெருங்கும்போது நீதிமன்றம் பெரும்பாலும் அரசியல் போர்க்களமாக மாறிவிடுவதாகக் குறிப்பிட்டு, மனுதாரர்களைக் கௌஹாத்தி உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது. முன்னதாக ஜனவரி மாதம், 2021-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள வெறுப்புப் பேச்சு தொடர்பான வழக்குகளை முடித்து வைப்பதாக உச்சநீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு தெரிவித்திருந்தது. ஆனால், உயர்நீதிமன்றங்களை அணுகுவது உள்ளிட்ட பிற சட்ட வழிமுறைகளைப் பின்பற்றத் தடையில்லை என்றும் தெளிவுபடுத்தியது. இந்தச் சூழலில், வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்துவதில் உச்சநீதிமன்றம் போதுமான நடவடிக்கைகளை எடுக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து ஷாருக் ஆலம் மற்றும் ஹாரிஸ் பீரன் ஆகியோர் ஆரத்ரிகா பௌமிக் ஒருங்கிணைத்த விவாதத்தில் விரிவாக உரையாடினர்.


வெறுப்புப் பேச்சு என்றால் என்ன, அதனைத் தண்டிப்பதற்கான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் யாவை?


ஷாருக் ஆலம் அவர்களின் கூற்றுப்படி, வெறுப்புப் பேச்சு என்பது எப்போதும் வன்முறைக்கான நேரடி அழைப்பாக மட்டுமே இருப்பதில்லை. மாறாக, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை ஓரங்கட்டும் நோக்கில் திட்டமிட்டுப் பரப்பப்படும் ஒரு சார்புநிலையான பேச்சாகவே அது பெரும்பாலும் அமைகிறது. இதன் காரணமாகவே, ஒரு பேச்சை குற்றவியல் தண்டனைக்குரிய வெறுப்புப் பேச்சாக வரையறுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்தும் அனைத்துக் கருத்துக்களையும் சட்டரீதியான தண்டனைக்கு உட்படுத்த முடியாது என்பதால், குற்றவியல் நடவடிக்கைக்கான தரம் மிக உயர்வாக இருக்க வேண்டும். மேலும், அதிகாரப் படிநிலைகளைக் கணக்கில் கொள்ளாமல் வெறுப்புப் பேச்சை ஆய்வு செய்ய முடியாது. அதன் பாதிப்பு என்பது பயன்படுத்தப்படும் சொற்களில் மட்டும் இல்லை, அது நிகழும் சமத்துவமற்ற சமூகக் கட்டமைப்பிலும் உள்ளது. வெறுப்புப் பேச்சு ஏற்கனவே சமூகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள குழுக்களையே இலக்கு வைப்பதால், அது அவர்களின் புறக்கணிப்பை உறுதிப்படுத்தி, ஜனநாயகத்தில் நிலவும் சமத்துவமின்மையை மேலும் ஆழமாக்குகிறது.


ஹாரிஸ் பீரன் : வெறுப்புப் பேச்சை குற்றமாக அறிவிப்பதில் உள்ள ஒரு முக்கியச் சவாலே அது மக்களால் எப்படிப் புரிந்து கொள்ளப்படுகிறது (Perception) என்பதுதான். வெறுப்புப் பேச்சு என்பது எப்போதும் வன்முறைக்கான நேரடி அழைப்பாக மட்டுமே இருப்பதில்லை; இது பெரும்பாலும் 'மறைமுக சமிக்ஞைகள்' (Dog whistles) எனப்படும் நுட்பமான முறையில் செயல்படுகிறது. அதாவது, பேசுபவர் தனது உள்நோக்கத்தை எளிதில் மறுக்கும் வகையில் வேண்டுமென்றே தெளிவற்ற கருத்துக்களைப் பரப்புவதாகும். இத்தகைய பேச்சுகளின் தாக்கம், சொல்லப்பட்ட வார்த்தைகளைத் தாண்டி மக்கள் அதை எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. இந்தத் தெளிவற்ற தன்மையின் காரணமாக, அத்தகைய பேச்சுகளுக்குப் போதிய கிரிமினல் தண்டனை வழங்குவதற்கான தெளிவான எல்லைகளை வரையறுப்பதில் சிக்கல் நீடிக்கிறது.


'வெறுப்புப் பேச்சை' ஒரு அரசியலமைப்புச் சட்ட மீறலாக கருத வேண்டுமா?


ஷாருக் ஆலம் அவர்களின் கூற்றுப்படி, வன்முறையைத் தூண்டும் வகையில் வெறுப்புப் பேச்சுகள் வெளிப்படையாகப் பேசப்படும்போதுகூட, அரசு மற்றும் அதன் அதிகாரிகள் பெரும்பாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இத்தகைய பேச்சுகளுக்கு எதிராக அரசு மீண்டும் மீண்டும் நடவடிக்கை எடுக்கத் தவறும்போது, அரசியலமைப்புச் சட்ட மீறல் குற்றவியல் பொறுப்பு (Constitutional Tort) மூலம் அரசைப் பொறுப்பேற்கச் செய்ய முடியும் என்கின்றனர். அரசின் இத்தகைய செயலற்ற தன்மையால் பாதிப்பு ஏற்படும்போது, அந்தத் தோல்வியை ஒப்புக்கொள்வதன் மூலமோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதன் மூலமோ அரசு அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கமாகக் கருதப்படுகிறது. 


ஹாரிஸ் பீரன் அவர்களின் கருத்துப்படி, வெறுப்புப் பேச்சுகள் அதிகரித்து வருவது ஆளும் அரசாங்கத்தின் செயல்பாடுகளுடன் நெருங்கிய தொடர்புடையது. பெரும்பாலும் தேர்தல் ஆதாயங்களுக்காகவும் கவனத்தை ஈர்க்கவும் அரசியல் பிரச்சாரங்களில் வகுப்புவாத மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. உயர்மட்ட அரசியல் தலைவர்களே இத்தகைய மொழியைப் பயன்படுத்தும்போது, அவர்களைப் பின்பற்றும் உறுப்பினர்கள் தங்கள் தலைவர்கள் எதை எதிர்பார்ப்பார்கள் என்று கருதுகிறார்களோ அதையே பின்பற்ற முற்படுகின்றனர். காவல்துறை மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்கள் இத்தகைய செயல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறுவதால் இப்பிரச்சினை மேலும் மோசமடைகிறது. எனவே, வெறுப்புப் பேச்சை ஒரு 'அரசியலமைப்புச் சட்ட மீறலாக' (Constitutional Tort) கருத வேண்டும். அவ்வாறு கருதினால் மட்டுமே நீதிமன்றங்களால் பொறுப்புகளை நிர்ணயித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க முடியும் என்கின்றனர். 


உச்சநீதிமன்றத்தின் தலையீடு எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?


ஹாரிஸ் பீரன்: இந்தியாவின் உச்சநீதிமன்றம், 2018-ஆம் ஆண்டின் 'தெஹ்சீன் பூனாவாலா vs இந்திய ஒன்றியம்' (Tehseen Poonawalla vs Union of India - 2018) வழக்கின்போது, கூட்டு வன்முறைக் கொலைகள் (Mob lynching) மற்றும் வெறுப்புணர்வுக் குற்றங்களைத் தடுக்க மாநிலங்களில் ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமிப்பது உள்ளிட்ட விரிவான உத்தரவுகளைப் பிறப்பித்தது. மேலும், 2023-ஆம் ஆண்டில், வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக மாநில அரசுகளே முன்வந்து முதல் தகவல் அறிக்கைகளைப் (First Information Report (FIR)) பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இத்தகைய வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், கடுமையான விதிமீறல்கள் இன்னும் தொடர்கின்றன. ஒவ்வொரு வழக்கையும் நீதிமன்றம் கண்காணிப்பது கடினமாக இருந்தாலும், நடவடிக்கை எடுக்கத் தவறும் மாநில அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். அதுமட்டுமின்றி, பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாக்கவும், "முழுமையான நீதியை" உறுதிப்படுத்தவும் இந்திய அரசியலமைப்பின் 142-வது பிரிவின்கீழ் உச்சநீதிமன்றத்திற்குப் பேராற்றல் உள்ளது. இருப்பினும், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மதவாதக் கருத்துக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்து, மனுதாரர்களை உயர்நீதிமன்றத்தை அணுகச் செய்வது போன்ற சில தருணங்களில், இந்த அதிகாரங்களைப் பயன்படுத்த நீதிமன்றம் தயக்கம் காட்டியுள்ளது. இத்தகைய சூழல்களில் தலையிடுவது நீதிமன்றத்தின் அரசியலமைப்புரீதியான கடமையாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. 


இந்திய உச்சநீதிமன்றத்தின் வெறுப்புப் பேச்சு தொடர்பான முந்தைய வழிகாட்டுதல்கள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதைவிடப் புறக்கணிக்கப்படுவதே அதிகம் என்று ஷாருக் ஆலம் குறிப்பிடுகிறார். இதன் காரணமாகவே, மனுதாரர்கள் இந்த வெறுப்புப் பேச்சு வழக்கை முடித்து வைக்காமல், அதனை ஒரு 'தொடர் ஆணையமாக' (Continuing Mandamus) கருதுமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர். இதன்மூலம் நீதிமன்றம் தொடர்ந்து இந்த விவகாரத்தைக் கண்காணித்து, விதிமீறல்கள் நடக்கும்போது தலையிட்டிருக்க முடியும் என்கின்றனர். இருப்பினும், நீதிமன்றம் அந்த வழக்கை முடித்துவிட்டது. மிக முக்கியமாக, மிகக் கடுமையான வெறுப்புப் பேச்சு நிகழ்வுகளில்கூட சட்ட அமலாக்கத் துறையினர் நடவடிக்கை எடுக்கத் தவறுவது, அவர்களின் அரசியலமைப்புரீதியான கடமையைத் தெளிவாகப் புறக்கணிப்பதைக் காட்டுகிறது. மேலும், வெறுப்புப் பேச்சு என்பது சமமானவர்களுக்கு இடையிலான மோதல் அல்ல, மாறாக அது ஒரு 'அதிகாரப் பலம்' சார்ந்த விஷயம் என்பதை நீதிமன்றம் உணர வேண்டும். இதில் ஆதிக்கம் செலுத்தும் குழுக்கள், எளிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் புறக்கணிக்கவும் அவர்களின் குரலை ஒடுக்கவும் இத்தகைய பேச்சுகளை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றன.


சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளபடி, வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்கெனத் தனித்துவமான குற்றவியல் சட்டப்பிரிவுகளை இந்தியா அறிமுகப்படுத்த வேண்டுமா?


ஹரிஸ் பீரன்: வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்கான பிரத்யேக சட்ட விதிகள் வரவேற்கத்தக்கவை என்றாலும், அவற்றைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதே உண்மையான சவாலாகும். வெறுப்புப் பேச்சை எதிர்கொள்வதற்கு இந்தியாவில் ஏற்கனவே பல சட்டவிதிகள் உள்ளன. உதாரணமாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act (RPA)), 1950, தேர்தல் பிரச்சாரங்களின்போது வெறுப்புப் பேச்சைப் பயன்படுத்தும் வேட்பாளர்கள்மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்கிறது. இருப்பினும், நடைமுறையில் இந்த அதிகாரங்கள் சீரான முறையில் பயன்படுத்தப்படுவதற்கான சான்றுகள் மிகக் குறைவாகவே உள்ளன. நாட்டின் அரசியல் சூழலில் மாற்றம் ஏற்படாதவரை, வெறுப்பு அரசியல் தொடர்ந்து நீடிக்கவே செய்யும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. 


ஷாருக் ஆலம்: வெறுப்புப் பேச்சுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அவை தன்னிச்சையான முறையில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. தற்போதைய சட்டங்கள் பெரும்பாலும் அத்தகைய பேச்சுகள் நிகழும் சமூக மற்றும் அரசியல் சூழலைக் கருத்தில் கொள்வதில்லை. சில பேச்சுகள் மனதைப் புண்படுத்தும் அல்லது உணர்ச்சிகளைக் காயப்படுத்தும் விதமாக மட்டுமே இருக்கலாம். ஆனால், மற்ற சில தூண்டுதல் பேச்சுகள் ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள விளிம்புநிலைச் சமூகங்களை மேலும் ஓரங்கட்டி, ஜனநாயகச் சிக்கல்களை மோசமாக்குகின்றன. அதே வேளையில், தீர்வுகளுக்காகச் சட்டத்தை மட்டுமே நம்பியிருப்பது தவறானதாகும். குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிரான ஒரே மாதிரியான பிம்பங்கள், உருவகங்கள் மற்றும் பிரச்சாரங்களை எதிர்க்கும் ஒரு விரிவான சமூக ஒருமித்த கருத்து தற்போது அவசியமாகிறது.


கர்நாடக வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்கள் (தடுப்பு) மசோதா, 2025, வெறுப்புப் பேச்சு தொடர்பான ஒரு ஒன்றிய அரசு சட்டத்திற்கு முன்னோடியாக அமையுமா?


ஷாருக் ஆலம்: நல்ல எண்ணத்துடன் கொண்டு வரப்பட்ட போதிலும், இந்த மசோதா வெறுப்புப் பேச்சின் பாரபட்சமான தன்மையை போதுமான அளவு அங்கீகரிக்கவில்லை என்பதே முக்கிய கவலையாக இருக்கிறது. இது வெறுப்புப் பேச்சு உருவாக்கக்கூடிய பாகுபாடு மற்றும் விளிம்புநிலைப்படுத்துதல் போன்ற ஆழமான யதார்த்தங்களைக் கவனத்தில் கொள்வதற்குப் பதிலாக, காயம், மனண்புண்படுதல் அல்லது அமைதியின்மை போன்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளாகக் கருதப்படும் கருத்துக்களிலேயே முக்கியமாக கவனம் செலுத்துகிறது. மற்றொரு கவலை என்னவென்றால், இந்த மசோதாவில் உள்ள சில வரையறைகள் மிகவும் விரிவாகவும் தெளிவற்றும் இருப்பதால், அவை அதிகாரிகளால் தன்னிச்சையாக தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும் என்கின்றனர். 


ஹரிஸ் பீரன்: வெறுப்புப் பேச்சு தொடர்பான இந்த மசோதா முதலில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், அது நடைமுறைக்கு வந்த பிறகே அதன் செயல்திறனை மதிப்பிட முடியும் என்றும் தெரிவித்தார். தற்போதைய மசோதாவில் சில கருத்தியல்ரீதியான இடைவெளிகள் உள்ளன, குறிப்பாக வெறுப்புப் பேச்சுக்கான வரையறையில் பாகுபாடு போன்ற முக்கியப் பிரச்சினைகள் சரியாகக் கையாளப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய குறைபாடுகள் வரும் காலங்களில் சட்டத் திருத்தங்கள் மூலம் சரி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


ஷாருக் ஆலம், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். ஹாரிஸ் பீரன் ஒரு வழக்கறிஞராகவும் மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.


Original article : Is the Supreme Court doing enough to tackle hate speech? -Aaratrika Bhaumik

Share: