ஹசீனாவின் வீழ்ச்சி ஏன் ஆச்சரியமளிக்கவில்லை? மற்றும் இந்தியா அடுத்து என்ன செய்ய வேண்டும்?

 ஷேக் ஹசீனா (Sheikh Hasina) ஆட்சியின் வீழ்ச்சி எச்சரிக்கைக்கான அறிகுறிகளைக் கவனிக்காதவர்களை மட்டுமே ஆச்சரியப்படுத்தியிருக்க வேண்டும். இப்போது, அவர் நாட்டை விட்டு வெளியேறியதால், சேதத்தைக் குறைக்க இந்தியா கடினமாக உழைக்க வேண்டும். பொதுவாக, அண்டை நாடுகளின் உறவின் முக்கிய அம்சங்களைப் பாதுகாப்பது முக்கியமாகும். 


ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனது சகோதரி ஷேக் ரெஹானாவுடன் வங்காளதேசத்தை விட்டு வெளியேறி, ஆகஸ்ட் 5-ம் தேதி இருவரும் டெல்லிக்கு அருகிலுள்ள ஹிண்டன் விமான தளத்தில் தரையிறங்கினர். இதற்கிடையில், ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் டாக்காவில் உள்ள அவரது வீட்டை சூறையாடி, பொருட்களை எடுத்துச் சென்றனர். 


வங்காளதேச இராணுவத்தின் தலைவர் ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் (General Waker-uz-Zaman), தொலைக்காட்சி உரையில் நாட்டின் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்தார்.  எதிர்காலத்தில் அவரது பங்கு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உரைக்கு முன், ஜெனரல் வேக்கர் (General Waker) இராணுவ தலைமையகத்தில் ஒரு கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் வங்காளதேசத்தில் உள்ள அனைத்து முக்கிய எதிர்க்கட்சிகளும், சில சிந்தனையாளர்களும் கலந்து கொண்டனர்.


தற்போது, வங்காளதேசத்திற்கு எப்படி இந்த நிலைமை ஏற்பட்டது?  பல வாரங்களாக நடந்த வன்முறைப் போராட்டங்கள் மற்றும் அரசாங்கம் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்தமை ஆகியவை இந்த நிகழ்வுகளுக்கு வழிவகுத்தன. 76 வயதான ஷேக் ஹசீனா ஆட்சியின் வீழ்ச்சி எச்சரிக்கையான அறிகுறிகளைப் புறக்கணித்தவர்களை மட்டுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும். 


வங்காளதேசத்தின் பல பகுதிகளில் நிலைமை மோசமாகி வருகிறது. இதை உலகம் பல மாதங்களாக, பல ஆண்டுகளாகக் கவனித்து வருகிறது. அரசியல் ரீதியாக, 2014, 2018 மற்றும் 2024 தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, எதிர்கட்சியினர் ஒன்று தேர்தல்களைப் புறக்கணித்தனர் அல்லது ஒடுக்குமுறை காரணமாக வெளியேற்றப்பட்டனர். இந்த ஒவ்வொரு தேர்தலிலும், ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் (Awami League) முறையே 300 இடங்களில் 234, 257 மற்றும் 224 இடங்களை வென்றது.


ஹசீனாவின் கட்சியான, அவாமி லீக் (Awami League) தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்றது. ஹசீனாவின் ஆட்சியில், அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு இடமளிக்கவில்லை. பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் (Bangabandhu Sheikh Mujibur Rahman) மகளின் தனிப்பட்ட சர்வாதிகாரம் (personal authoritarianism) பல ஆண்டுகளாக சீராக வளர்ந்துள்ளது. அவர் ஒரு காலத்தில் ஜனநாயகத்தின் சின்னமாக பார்க்கப்பட்டார். அவரது, சர்வாதிகார ஆட்சியில் அரசியல் எதிரிகள், ஆர்வலர்கள் மற்றும் எதிர்பாளர்கள் மத்தியில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இவை, மர்மமான முறையில் காணாமல் போதல் மற்றும் சட்டத்திற்கு புறம்பான கொலைகள் போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது. பின்னர், அரசு சாரா அமைப்புகள் (NGO) மற்றும் விமர்சகர்கள், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் (Muhammad Yunus) உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


ஹசீனாவின் முக்கிய போட்டியாளரான, நோய்வாய்ப்பட்ட முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, 78 வயதான இவர், ஊழல் குற்றச்சாட்டில் 2018-ல் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். தற்போது, கலீதா அவர்கள் மருத்துவமனையில் உள்ளார். மேலும், வங்காளதேச தேசியவாத கட்சியின் (BNP) உயர்மட்ட தலைவர்கள் சிறையில் உள்ளனர். கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் இங்கிலாந்திற்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். 


கோவிட்-19 தொற்றுநோய் வங்காளதேசத்தின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்தது மற்றும் அதன் வளர்ச்சிக்கான மாதிரியை நிறுத்தியது. மற்ற நாடுகளின் தேவையின் குறைவால், வங்காளதேசத்தின் ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலை பாதித்தது. நாட்டின் உற்பத்தி சார்ந்த வளர்ச்சிக்கு இந்தத் தொழில் முக்கியமானதாக இருந்தது. 2022 முதல், டாலருடன் ஒப்பிடும்போது வங்காளதேச டாக்காவின் மதிப்பானது 40% க்கும் அதிகமாக அளவில் தேய்மானம் அடைந்துள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு பாதிக்கு மேல் குறைந்துள்ளது. 2023-ம் ஆண்டில், வங்காளதேசத்தின் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து $4.7 பில்லியன் கடன் வாங்கியுள்ளது. ஆண்டின் இறுதியில், மொத்த வெளிநாட்டுக் கடன் $100 பில்லியனைத் தாண்டியது. இதனால், பணவீக்கம் தற்போது 10%க்கு அருகில் உள்ளது. 

 

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization (ILO)) தரவுகளின்படி, வங்காளதேசத்தில் 170 மில்லியன் மக்களில் கால் பகுதியினர் 15 முதல் 29 வயதுடையவர்கள் ஆவார் என  வங்காளதேச புள்ளியியல் பணியகத்தின் (Bangladesh Bureau of Statistics)  தரவை பிரோதோம் ஆலோ (Prothom Alo) நாளிதழ் மேற்கோள் காட்டியுள்ளது. இதில், ஒவ்வொரு ஆண்டும் 1.8 முதல் 1.9 மில்லியன் இளைஞர்கள் வேலை சந்தையில் (job market) நுழைகிறார்கள். இதற்கிடையில், பொருளாதார நெருக்கடி மற்றும் கடுமையான வேலை பற்றாக்குறையின் போது, ​​ஜூன் 5 அன்று வங்காளதேச உயர் நீதிமன்றம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது சந்ததியினருக்கு அரசு வேலைகளில் 30% இட ஒதுக்கீட்டை உறுதிசெய்தது. இந்த முடிவு மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பரவலான எதிர்ப்புகளைத் தூண்டியது. இறுதியில் ஹசீனா ஆட்சியை கவிழ்க்க வழிவகுத்துள்ளது.   

 

வங்கதேசத்தில் கடும் பின்னடைவைச் சந்தித்த முற்போக்கு சக்திகளுக்கு திங்கள்கிழமை ஒரு சோகமான நாளாக இருந்தது. நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரதமர், வங்கதேச தேசியவாதத்தின் மதச்சார்பற்ற மற்றும் நவீனமயமாக்கல் வரலாற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும், அவரது உறுதியான அரசியலானது தீவிரவாதத்திற்கு எதிராக வலுவான பாதுகாப்பாக செயல்பட்டது. இந்த தீவிரவாதம் ஏற்கனவே, இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க பாதுகாப்புக்கான சவால்களை உருவாக்கும் திறனைக் காட்டியுள்ளது. மேலும், வங்காளதேசத்தையே பின்னோக்கிய திசையில் கொண்டு செல்கிறது. 


இருப்பினும், வங்காளதேசத்தின் முழுமையான வரலாற்றின் தனது சொந்த பதிப்பை விமர்சகர்கள் மீது வளர்ப்பதில் ஹசீனாவின் இடைவிடாத முயற்சி மற்றும் அதன் மறுபக்கத்துடன் ஈடுபட மறுத்தது.  


வங்காளதேசம் போராட்டம் மற்றும் ஆழமான சமூக பிளவுகளுக்கு மத்தியில் பிறந்தது. ஆரம்பத்திலிருந்தே, நாடு மதச்சார்பற்ற தேசியவாதிகள் மற்றும் முஸ்லிம் தேசியவாதிகள் என்று பிளவுபட்டது. 1971-ல் பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலைப் போரை ஆதரிக்காத முஸ்லீம் தேசியவாதிகள் இடையே பிரிக்கப்பட்டுள்ளது.  

 

பல ஆண்டுகளாக, ஹசீனா முஸ்லீம் தேசியவாதிகளையும், அவர்களின் வாரிசுகளையும் இரும்புக் கரம் கொண்டு கையாண்டார். மேலும், ஜமாத்-இ-இஸ்லாமி (Jamaat-e-Islami) மற்றும் பிற இஸ்லாமிய சக்திகளால் போராட்ட மாணவர்களின் அணிகள் ஊடுருவியதாக அவர் மீண்டும் மீண்டும் கூறினார். 


தெருவோர வன்முறைக்கான ஆரம்ப எதிர்வினையாக, போராட்டக்காரர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஒதுக்கீட்டை ஏன் வெறுக்கிறார்கள் என்றும், அதற்குப் பதிலாக வங்காளதேசத்தில் பயன்படுத்தப்படும் இழிவான வார்த்தையைப் பயன்படுத்தி, "இராசாக்கர்களின் பேரக்குழந்தைகளுக்கு" (grandchildren of razakars) நன்மைகள் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்களா என்றும் ஹசீனா கேட்டிருந்தார். இராசாக்கர்கர்கள் என்பது, பங்கபந்து தலைமையிலான தேசியவாத இயக்கத்தை நசுக்க பாகிஸ்தான் இராணுவத்தால் அமைக்கப்பட்ட மிருகத்தனமான கூலிப்படையை குறிக்கிறது. 


இறுதியில், அவரது ஜனநாயக விரோத ஆட்சி, இஸ்லாமிய, இந்து விரோத சிறுபான்மையினர் மற்றும் பாகிஸ்தான் சார்பு அரசியலை அவரது நாட்டில் திரும்புவதற்கான சூழ்நிலையை உருவாக்கியது. பிரிவினை அரசியலில் வேரூன்றிய வங்காளதேச சமூகத்திற்குள் பிளவு நீடிக்கிறது. திங்கட்கிழமை நடந்த சம்பவங்களில் இது தெளிவாகத் தெரிந்தது. 


இந்தியாவானது, இப்போது ஒரு வலிமையான இராஜதந்திர சவாலை எதிர்கொள்கிறது. ஹசீனா பிரதமராக இருந்த காலத்தில், இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையிலான உறவுகள் சீராக மேம்பட்டன. இந்திய எதிர்ப்பு தீவிரவாதிகளுக்கு (anti-India extremists) எதிரான அவரது நடவடிக்கையை இந்தியா வரவேற்றுள்ளது. சமீபத்திய நெருக்கடி வங்காளதேசத்தின் உள்விவகாரம் என்று இந்தியா கூறிவருகிறது. 


ஹசீனாவின் சர்வாதிகாரத்திலிருந்து விலகி இருப்பதே சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் பெரிய சவாலாக உள்ளது. அதே நேரத்தில், வங்காளதேசத்துடன் சிறந்த உறவை உருவாக்க அவருடன் தொடர்ந்து பணியாற்ற இந்தியா விரும்புகிறது. ஹசீனாவின் ஆட்சியின் கீழ் இந்த உறவை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டாலும், இதன் தொடர்புடைய குறிப்பிடத்தக்க செலவுகளும் உள்ளன. 


இப்போது, ஹசீனா நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டாலும், சேதத்தை குறைக்க இந்தியா தீவிரமாக செயல்பட வேண்டும். பொதுவாக, அண்டை நாடுகளின் உறவின் முக்கிய அம்சங்கள் பாதுகாக்கப்படுவதையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டும். இது குறுகிய காலத்தில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும்.  



Original article:

Share: