கடலின் அடிப்பகுதியில் காணப்படும் மதிப்புமிக்க உலோகங்கள் மற்றும் அரிதான பூமிகளை கடலின் அடிப்பகுதியில் இருந்து தோண்டி எடுப்பது பலவீனமான கடல் அமைப்புகளை நிரந்தரமாக சேதப்படுத்தும்
கடலின் அடிப்பகுதிகள், அதிக அளவிளான உலோகங்கள் மற்றும் அரிதான பூமி தாதுக்களைக் கொண்டுள்ளன. இருப்பினும், இந்த மதிப்புமிக்க வளங்களை தோண்டி எடுப்பது பலவீனமான கடல் அமைப்புகளை நிரந்தரமாக சேதத்தை ஏற்படுத்தும். உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் கடந்த மாதத்தின் பெரும்பகுதியை ஜமைக்காவில், ஆழ்கடல் சுரங்கத்தின் எதிர்காலம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
கிங்ஸ்டனை தளமாகக் கொண்ட, சர்வதேச கடற்படுகை ஆணையம் (International Seabed Authority(ISA)), கடலின் அடிப்பகுதியிலிருந்து மூலப்பொருட்களை பிரித்தெடுப்பதை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை உருவாக்கி வருகிறது. இதைப்பற்றி, பல வாரங்கள் விவாதங்கள் நடந்த போதிலும், இந்த பிரச்சினை குறித்து பல கேள்விகள் உள்ளன.
ஆழ்கடல் சுரங்கத்தின் (deep-sea mining) தற்போதைய நிலை என்ன?
2025-ம் ஆண்டளவில், சர்வதேச கடற்படுகை ஆணையம் (International Seabed Authority(ISA)) ஆழ்கடல் சுரங்கத்தை நிர்வகிக்க சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட விதிகளின் தொகுப்பை வரையறுக்க நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விதிகள் இல்லாமல், திட்டமிட்ட சுரங்க நடவடிக்கை எதுவும் தொடங்க முடியாது. இதற்கான, விவாதங்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆனால், சமீபத்திய பேச்சுவார்த்தைகள் புதிய விதிகள் குறித்த கருத்து வேறுபாடுகளை எடுத்துக்காட்டியுள்ளன. குறிப்பாக, நீருக்கடியில் கண்காணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஜெர்மனி, பிரேசில் மற்றும் பசிபிக் தீவு நாடான பலாவ் (Palau) உள்ளிட்ட பல நாடுகள், அவற்றின் சுற்றுச்சூழல் தாக்கம் முழுமையாக ஆராயப்படும் வரை புதிய விதிகளுக்கு உடன்பட மாட்டோம் என்று கூறியுள்ளன. இதற்கு மாறாக, சீனா, நார்வே, ஜப்பான் மற்றும் மத்திய பசிபிக்கில் உள்ள மைக்ரோஸ்டேட் நெளரு (microstate Nauru) ஆகியவை சுரங்க நிறுவனங்கள் தங்கள் திட்டங்களைத் தொடங்குவதற்கு விரைவான உடன்பாட்டிற்கு அழுத்தம் கொடுக்கின்றன.
இந்த திட்டத்திற்கான, உடன்பாடு எட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருகின்றன. சர்வதேச கடற்படுகை ஆணையத்தில் (International Seabed Authority (ISA)) பிரதிநிதித்துவம் செய்துள்ள 169 நாடுகளில், 32 நாடுகள் இப்பொழுது ஆழ்கடல் சுரங்கத் தொழிலை நிறுத்தி வைப்பது அல்லது முற்றிலுமாக தடை செய்வதை ஆதரிக்கின்றன. இந்த நிலைப்பாட்டை சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல கடல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆதரிக்கின்றனர்.
இதற்கான, கவலைகள் இருந்தபோதிலும், கனடிய புத்தொழில் நிறுவனமான தி மெட்டல்ஸ் கம்பெனி (The Metals Company) வரவிருக்கும் மாதங்களில் வணிக ஆழ்கடல் சுரங்க நடவடிக்கைக்கு சர்வதேச கடற்படுகை ஆணையத்துக்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆழ்கடல் சுரங்கத்தால் யாருக்கு லாபம்?
ஆழ்கடல் சுரங்கமானது முக்கியமாக கடல் தளத்தில் உள்ள மாங்கனீசு முடிச்சுகள் (manganese nodules) மற்றும் பிற கனிமங்களை குறிவைக்கிறது. இந்தப் பகுதிகள் கடல் எல்லைக்கு வெளியே அமைந்துள்ளன. இந்த பகுதி பொதுவாக உயர் கடல் (high seas) என்று அழைக்கப்படுகிறது. உயர் கடல்கள் உலகின் பெருங்கடல்களில் பாதிக்கும் மேற்பட்டவையாக உள்ளன.
இந்த பகுதிகள் "மனிதகுலத்தின் பொதுவான பாரம்பரியம்" (common heritage of mankind) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் பொருள் மூலப்பொருட்கள் ஒரு நாட்டிற்கு மட்டுமல்ல, அனைவருக்கும் சொந்தமானது ஆகும். கடல் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் (United Nations Convention on the Law of the Sea) கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, இந்த பிராந்தியங்களில் சுரங்க நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் சர்வதேச கடற்படுகை ஆணையம் (ISA) பொறுப்பாகும்.
பல நாடுகளும் நிறுவனங்களும் ஆழ்கடல் சுரங்கத்தின் வணிக திறனில் ஆர்வமாக உள்ளன. சர்வதேச கடற்படுகை ஆணையம் இதுவரை 31 ஆய்வுக்கான உரிமங்களை வழங்கியுள்ளது. அவற்றில், ஐந்து சீன நிறுவனங்களுக்கு சென்றுள்ளன. ஜெர்மனி, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட பிற நாடுகளும் கடற்பரப்பை ஆராய்ந்து வருகின்றன.
ஆழ்கடல் சுரங்கத்திலிருந்து கிடைக்கும் லாபம் உட்பட ஆழ்கடலில் எந்தவொரு நடவடிக்கையும் நாடுகளிடையே சமமாக பகிரப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுவின் கடல் மாநாடு வழியுறுத்துகிறது. ஆழ்கடல் பாதுகாப்பு கூட்டணி போன்ற விமர்சகர்கள், இதற்கான பகிர்வை நிர்வகிக்க முடியுமா என்பது குறித்து சந்தேகம் கொண்டுள்ளனர்.
கடலின் அடிப்பகுதியில் என்ன வகையான உலோகங்கள் காணப்படுகின்றன?
சுரங்க நிறுவனங்கள் குறிப்பாக பாலிமெட்டாலிக் முடிச்சுகளில் (polymetallic nodules) ஆர்வமாக உள்ளன. அவை மாங்கனீசு முடிச்சுகள் (manganese nodules) என்றும் அழைக்கப்படுகின்றன. இவை உருளைக்கிழங்கு அளவிலான கட்டிகளாகும். அவை வண்டல் படிவுகளிலிருந்து மில்லியன் கணக்கான ஆண்டுகளாக உருவாகின்றன. அவை முக்கியமாக மாங்கனீசு, கோபால்ட், தாமிரம் மற்றும் நிக்கல் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இந்த மூலப்பொருட்கள் மின்சார கார் பேட்டரிகளில் முக்கிய கூறுகளாக உள்ளன. தற்போது, உலகம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதால், இந்த உலோகங்களுக்கான தேவை 2040-க்குள் இரட்டிப்பாகும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் (International Energy Agency (IEA)) எதிர்பார்க்கிறது.
ஹவாய் மற்றும் மெக்ஸிகோவுக்கு இடையில் அமைந்துள்ள கிளாரியன்-கிளிப்பர்டன் மண்டலம் (Clarion-Clipperton Zone), கடலுக்கு அடிப்பகுதியில் அதிக அளவு மாங்கனீசு முடிச்சுகளைக் கொண்டுள்ளது. தானியங்கி வெற்றிட ரோபோக்கள் (automated vacuum robots) மூலம் குழல்களைப் பயன்படுத்தி 4,000 முதல் 6,000 மீட்டர் (13,100 முதல் 19,700 அடி) ஆழத்திலிருந்து இந்த உலோகங்களை எடுத்து வருவதற்கு சுரங்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
பசிபிக், இந்திய மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களில் உள்ள பிற பகுதிகளிலும் இந்த தாதுக்களின் குறிப்பிடத்தக்க படிவுகள் உள்ளன. இதில், மாங்கனீசு முடிச்சுகளைத் தவிர, சுரங்க நிறுவனங்கள் பாலிமெட்டாலிக் சல்பைடுகளை (polymetallic sulfides) குறிவைக்கின்றன. இதில் அதிக அளவு தாமிரம், துத்தநாகம், ஈயம், இரும்பு, வெள்ளி மற்றும் தங்கம் ஆகியவை உள்ளன. மேலும், கோபால்ட் நிறைந்த ஃபெரோமாங்கனீசு மேலோடுகளிலும் (ferromanganese crusts) அவர்கள் ஆர்வம் காட்டு வருகின்றன. அவை கடல் ஆழத்திலிருந்து உடைந்து மீட்க கடினமாக உள்ளன.
ஆழ்கடல் சுரங்கம் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கும்?
மாங்கனீசு முடிச்சுகள் மற்றும் கனிம மேலோடுகள் இறந்த பாறைகள் மட்டுமல்ல. அவை பல கடல்வாழ் உயிரினங்களுக்கு முக்கியமான வாழ்விடங்களாகும். இந்த கடுமையான பகுதிகளில் 5,000 க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனங்கள் வாழ்கின்றன என்று கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த இனங்களைப் பற்றி அரிதாகவே ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன. இந்த ஆழங்களில் நிலைமைகள் தீவிரமானவை. உணவு பற்றாக்குறை, சூரிய ஒளி இல்லாமை, மற்றும் நீர் அழுத்தம் கடல் மட்டத்தை விட 100 மடங்கு அதிகமாக உள்ளது.
கடலுக்கு அடியில் உள்ள சுற்றுச்சூழலும் அங்கு வாழும் உயிரினங்களும் மிகவும் நுட்பமானவை. சுரங்க ரோபோக்கள் பெரிய பகுதிகளை வெற்றிடமாக்குவதன் மூலம் மாங்கனீசு முடிச்சுகளைத் தேடுகின்றன. இந்த ரோபோக்கள் கடல் தளத்தை அழித்து பல கடல் உயிரினங்களைச் சேகரிக்கும். சுரங்கப் பகுதிகளிலிருந்து தொலைவில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் தொந்தரவு செய்யப்படும். அவர்கள் ஒளி மற்றும் ஒலி மாசுபாட்டால் பாதிக்கப்படுவார்கள். வெகுதூரம் பரவும் வண்டல் மேகங்களும் தாக்கத்தை ஏற்படுத்தும். கூடுதலாக, சுரங்கப் பகுதிகளுக்கு மேல் மீன்பிடி நடவடிக்கை நிரந்தரமாக தடைபடலாம்.
இன்றுவரை, ஆழ்கடல் பகுதி மற்றும் அதன் சாத்தியக்கூறுகளில் சுமார் 1% மட்டுமே ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். எடுத்துக்காட்டாக, ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மாங்கனீசு முடிச்சுகளில் இருக்கும் தாதுக்கள் சூரிய ஒளி முழுமையாக இல்லாத நிலையில் மின்னாற்பகுப்பு (electrolysis) மூலம் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறது. இதுவரை, விஞ்ஞானிகள் இது ஒளிச்சேர்க்கை மூலம் மட்டுமே இயற்கையில் நடக்கும் என்று நினைத்தார்கள். ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
ஆழ்கடல் சுரங்கத்தின் விளைவுகளை முழுமையாக புரிந்து கொள்ளாமல் தொடங்குவது பல்லுயிர் சமநிலை மற்றும் பலவீனமான கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கடல் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். தேவையான ஆராய்ச்சி இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் ஆகலாம். ஏனெனில், இப்பகுதியை அணுகுவது கடினம்.
ஆழ்கடல் சுரங்கம் மதிப்புள்ளதா?
சீனா போன்ற நாடுகள் பல பத்தாண்டுகளாக முக்கியமான கனிமங்களை சுரங்கப்படுத்த எதிர்பார்க்கும் ஆழ்கடல் சுரங்கத்திலிருந்து பெரிய லாபம் மற்றும் மூலப்பொருட்களின் நிலையான விநியோகத்தை நம்புகின்றன. நில சுரங்கத்தை விட ஆழ்கடல் சுரங்கம் குறைவான அழிவுகரமானது என்றும் சில மனித உரிமை கவலைகளைத் தவிர்க்கிறது என்றும் சுரங்க நிறுவனங்கள் கூறுகின்றன.
இருப்பினும், கிரீன்பீஸ் அமைப்பினால் நியமிக்கப்பட்ட ஜெர்மனியைச் சேர்ந்த இலாப நோக்கற்ற ஓகோ-இன்ஸ்டிட்யூட்டின் (Öko-Institut) ஒரு ஆய்வு, ஆற்றல் மாற்றத்திற்கு மாங்கனீசு முடிச்சுகள் தேவையில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அதற்கு பதிலாக, லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் குவிப்பான்கள் (lithium-iron-phosphate accumulators) போன்ற புதிய பேட்டரி தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
ஆழ்கடல் சுரங்கத்தின் செலவுகள் மற்றும் தொழில்நுட்ப அபாயங்களை சுரங்க நிறுவனங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ளதாகவும் விமர்சகர்கள் கூறியுள்ளனர். இந்த வகை சுரங்கத்திற்கான தொழில்நுட்பம் இன்னும் முழுமையாக உருவாக்கப்படவில்லை. கூடுதலாக, அதிக ஆழத்தில் உள்ள அதீத நீர் அழுத்தம் ரோபோக்கள் மற்றும் பிற சுரங்க உபகரணங்களை சரிசெய்வதை கடினமாக்கும்.
மேலும் பெரிய நிறுவனங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றன. SAP, BMW, Volkswagen, Google மற்றும் Samsung SDI ஆகியவை கடற்பரப்பில் இருந்து மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதில்லை என்று உறுதியளித்துள்ளன. சுரங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க மாட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சுவிஸ் RE (Swiss reinsurance) உட்பட பல காப்பீட்டு நிறுவனங்கள், இந்த அபாயகரமான திட்டங்களை ஈடுகட்ட வேண்டாம் என முடிவு செய்துள்ளன. இந்த முடிவு அவர்களின் லாபத்தை பாதிக்கலாம்.
ஆழ்கடல் சுரங்கத்தை எப்போது தொடங்க முடியும்?
தற்போது, சாத்தியமான சுரங்கப் பகுதிகள் மட்டுமே ஆராயப்பட்டுள்ளன, ஆனால் தோண்டப்படவில்லை. தி மெட்டல்ஸ் நிறுவனம் (The Metals Company) 2024-ம் ஆண்டின் இறுதிக்குள் சர்வதேச கடற்படுகை ஆணையத்திலிருந்து வணிக சுரங்க உரிமத்திற்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளது. அவர்கள் 2026-ல் கிளாரியன்-கிளிப்பர்டன் மண்டலத்தில் (Clarion-Clipperton Zone) நடவடிக்கைகளைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், சர்வதேச கடற்படுகை ஆணையம் எப்போது உரிமத்தை அங்கீகரிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
நார்வே தனது சொந்த சுரங்க நடவடிக்கையை, கிரீன்லாந்து மற்றும் ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டங்களுக்கு இடையே உள்ள வடக்கு அட்லாண்டிக்கில், ஜனவரியில் நாடாளுமன்றத்தில் இருந்து அனுமதி பெற்ற பிறகு விரைவில் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தாலியை விட சற்றே சிறிய பகுதி, 281,000 சதுர கிலோமீட்டர் (108,570 சதுர மைல்) மற்றும் கண்ட அடுக்கிலிருந்து (continental shelf) 1,500 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. இந்தப் பெருங்கடல் பகுதி நார்வே நாட்டுக்கு சொந்தமானது. இதன் காரணமாக, இது சர்வதேச கடற்படுகை ஆணையத்தால் (ISA) கட்டுப்படுத்தப்படவில்லை. நார்வே அடுத்த ஆண்டு ஆய்வுக்கான உரிமங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது மற்றும் 2030-ல் சுரங்க நடவடிக்கைகளைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இருப்பினும், சுற்றுச்சூழல் அமைப்பான உலக வனவிலங்கு நிதியம் (World Wildlife Fund(WWF)) நார்வே மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த திட்டத்தினால், ஆர்க்டிக் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மீன்வளத்திற்கு மீளமுடியாத சேதம் ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளது. ஜப்பானும் அதன் நீருக்கடியில் உள்ள பிராந்தியத்தில் ஆழ்கடல் சுரங்கத்தைத் தொடங்க தயாராகி வருகிறது.