நோய்த்தடுப்புக்கான விரிவாக்கப்பட்ட திட்டம் (Expanded Programme on Immunization (EPI)) 50 ஆண்டுகளாக உள்ளது. இப்போது, அதை மேலும் விரிவுபடுத்துவதற்கான நேரம் இது.
2024 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) 1974 ஆம் ஆண்டில் நோய்த்தடுப்புக்கான விரிவாக்கப்பட்ட திட்டத்தை (Expanded Programme on Immunization (EPI)) தொடங்கியதிலிருந்து 50 ஆண்டுகால திட்டத்தைக் கொண்டாடுகிறோம். பெரியம்மை நோயை (smallpox virus) விரைவில் ஒழிக்க முடியும் என்பதை கண்டபோது, நோய்த்தடுப்புக்கான விரிவாக்கப்பட்ட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் தற்போதுள்ள நோய்த்தடுப்பு அமைப்புகளைப் பயன்படுத்துவதற்கான அங்கீகரிக்கப்பட்ட தேவை இருந்தது. தடுப்பூசிகளின் நன்மைகளைப் பரப்புவதற்கு பயிற்சி பெற்ற தொழிலாளர்களைப் பயன்படுத்தவும் விரும்பினர். இதற்குப் பிறகு, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாடும் தங்கள் சொந்த தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கின. இந்தியா 1978 இல் நோய்த்தடுப்புக்கான விரிவாக்கப்பட்ட திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது பின்னர் 1985 இல் அனைவருக்குமான நோய்த்தடுப்பு திட்டம் (Universal Immunization Programme (UIP)) மறுபெயரிடப்பட்டது. இந்தியாவில், சர்வதேச நிபுணர்களுடன் இணைந்து அனைவருக்குமான நோய்த்தடுப்பு திட்டத்தின் நாடு தழுவிய சுதந்திரமான கள மதிப்பீட்டை நாடு கடந்த இருபது ஆண்டுகளாக நடத்தியது. நோய் தடுப்புக்கான முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், எதிர்காலம் பற்றி கணிப்பதற்கும் இது ஒரு சிறந்த தருணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியா உட்பட உலகளவில் நோய்த்தடுப்பு மற்றும் தடுப்பூசிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 1974இல், ஆறு நோய்களுக்கான தடுப்பூசிகள் இருந்தன. இப்போது, ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு, அனைவருக்கும் 13 நோய்களுக்கான தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. கூடுதலாக, மேலும் 17 நோய்களுக்கான தடுப்பூசிகள் உள்ளன. குறிப்பிட்ட சூழ்நிலைகளின் அடிப்படையில் இந்த தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகிறது. ஏறக்குறைய 125 நோய்க்கிருமிகளுக்கு எதிராக தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. பல குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் பரவும் நோய்களைத் தடுக்கும்.
ஒரு வெற்றிக் கதை
பல ஆண்டுகளாக, அதிகமான குழந்தைகளுக்கு மூன்று டோஸ் டிப்தீரியா-பெர்டுசிஸ்-டெட்டனஸ் தடுப்பூசி (Diphtheria-pertussis-tetanus(DPT)) கிடைத்தது. இது நல்ல தீர்வுக்கான அறிகுறியாகும். 1970களின் முற்பகுதியில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் சுமார் 5% குழந்தைகள் DPTயின் மூன்று தடுப்பூசிகளைப் பெற்றனர். இது உலக அளவில் 2022 இல் 84% ஆக அதிகரித்துள்ளது. இதனால், பெரியம்மை ஒழிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் இருந்து போலியோ அகற்றப்பட்டது மற்றும் பல தடுப்பூசிகள் தடுக்கக்கூடிய நோய்கள் கிட்டத்தட்ட மறைந்துவிட்டன. இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் நோய்க்கு எதிரான தீர்வுகள் அதிகரித்து வருகிறது. 2019-21 ஆம் ஆண்டில், 76% குழந்தைகள் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளைப் பெற்றனர்.
நோய்த்தடுப்புக்கான விரிவாக்கப்பட்ட திட்டம் (Expanded Programme on Immunization (EPI)) தொடங்கப்பட்டதிலிருந்து, தடுப்பூசிகள் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளன மற்றும் பில்லியன் கணக்கான மருத்துவமனை வருகைகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தடுக்கின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. பொருளாதார ஆய்வுகள், தடுப்பூசிகள் மிகவும் செலவு குறைந்த தலையீடுகள் என்று மதிப்பிட்டுள்ளது. தடுப்பூசி திட்டங்களுக்கான ஒவ்வொரு டாலருக்கான (அல்லது ரூபாய்) செலவும் ஏழு முதல் 11 மடங்கு எதிர்காலச் செலவினங்களைக் குறைப்பதை உறுதி செய்கிறது.
இந்தியா போன்ற பல குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில், தடுப்பூசி திட்டம் மிகவும் வெற்றிகரமாக உள்ளது. இது பொதுவாக மற்ற எந்த அரசாங்க சுகாதார திட்டத்தையும் விட அதிகமான மக்களைச் சென்றடைகிறது. மேலும், பொது மற்றும் தனியார் துறைகள் சுகாதார சேவைகளை வழங்கும் இடங்களில், மற்ற சுகாதார தலையீடுகளை விட அரசு துறை பொதுவாக நோய்த்தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துகிறது. உதாரணமாக, இந்தியாவில், ஒட்டுமொத்த சுகாதார சேவைகளில் தனியார் துறையின் பங்கு கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு ஆகும். இருப்பினும், அனைத்து தடுப்பூசிகளிலும் கிட்டத்தட்ட 85% முதல் 90% வரை அரசுகளின் வசதிகளிலிருந்து வழங்கப்படுகின்றன. நோய்த்தடுப்புக்கான தீர்வு என்பது கொடுக்கப்பட்ட அமைப்பில் எந்தவொரு அரசாங்க தலையீடும் அடையக்கூடிய நோய்த்தடுப்புக்கான முழுமைக்கும் ஒரு கண்காணிப்பு அறிகுறி என்று நிபுணர்கள் அடிக்கடி வாதிடுகின்றனர்.
ஆனாலும், சவால்கள் இல்லாமல் இல்லை. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (United Nations Children's Fund (UNICEF)) அறிக்கை 2023 ஒரு கவலைக்குரிய நிலையைக் காட்டியது. குழந்தை பருவ நோய்த்தடுப்பு விகிதங்கள் பத்து ஆண்டுகளில் முதல் முறையாக 2021 இல் குறைந்துள்ளன. உலகளவில், சுமார் 14.3 மில்லியன் குழந்தைகளுக்கு எந்த தடுப்பூசியும் கிடைக்கவில்லை. 6.2 மில்லியன் பேருக்கு மட்டுமே சில தடுப்பூசிகள் கிடைத்தன. இந்தியா தடுப்பூசி விகிதங்களை மேம்படுத்தியுள்ளது. ஆனால், மக்கள் வாழும் இடம் மற்றும் அவர்களின் பொருளாதார நிலையைப் பொறுத்து நோய்க்கு எதிரான முழுமைக்கும் தீர்வு காணுவதில் இன்னும் பெரிய வேறுபாடுகள் உள்ளன.
குழந்தைப் பருவத்தில் இருந்து வாழ்க்கைப் போக்கில் கவனம் செலுத்துதல்
தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு மட்டுமே என்பது பொதுவான தவறான கருத்து, இது உண்மையல்ல. ஏறக்குறைய 225 ஆண்டுகளாக, தடுப்பூசிகள் அனைத்து வயதினருக்கும் கிடைக்கின்றன. பெரியம்மைக்கு (smallpox) எதிரான முதல் தடுப்பூசி 1798இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிருந்து, பெரியவர்களுக்கும் பல தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, 1880 களில் இருந்து 1890 களின் நடுப்பகுதி வரை உருவாக்கப்பட்ட ரேபிஸ் (rabies), காலரா (cholera) மற்றும் டைபாய்டு (typhoid) ஆகியவற்றிற்கான முதல் தடுப்பூசிகள் முக்கியமாக பெரியவர்களுக்காக தயாரிக்கப்பட்டது. 1897 ஆம் ஆண்டில், முதல் பிளேக் (plague) தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இது அனைத்து வயதினருக்குமானது. காசநோயிலிருந்து பாதுகாக்கும் பேசிலஸ் கால்மெட்-குய்ரின் (Bacillus Calmette-Guérin (BCG)) தடுப்பூசி முதன்முதலில் 1951 இல் ஒரு தேசிய பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டது மற்றும் பெரியவர்களுக்கும் வழங்கப்பட்டது. மேலும், இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகள் (Influenza vaccines) பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் எப்போதும் எல்லா வயதினருக்கும் பொருந்தும் என்பதை இந்த வரலாறு காட்டுகிறது.
இருப்பினும், தடுப்பூசி-தடுக்கக்கூடிய நோய்களால் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் தடுப்பூசிக்கு சரியாக முன்னுரிமை அளிக்கப்படுகிறார்கள். சில பத்தாண்டுகளுக்கு முன்பு, தடுப்பூசிக்கான விநியோகம் குறைவாக உள்ளது. அரசாங்கங்களுக்கு குறைவான நிதி ஆதாரங்கள் இருந்தன மற்றும் குறைவான பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இருந்தனர். எனவே, தடுப்பூசிகள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு மற்றும் மிகவும் பயனளிக்கும் குழுவிற்கு வழங்கப்பட்டன.
கடந்த ஐம்பது ஆண்டுகளில், அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அது அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. இருப்பினும், தடுப்பூசிகளால் தடுக்கக்கூடிய நோய்கள் வயதுவந்த மக்களில் பெருகிய முறையில் பொதுவானதாகி வருகின்றன. எனவே, அரசாங்கக் கொள்கைகள் இப்போது பல நாடுகளில் நடப்பது போல் பெரியவர்கள் மற்றும் முதியோர்களுக்கு தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்துவது இன்றியமையாததாகிறது. வயது வந்தோருக்கான தடுப்பூசிகளின் சிறந்த தீர்வுக்கான, நோய்த்தடுப்புக்கான விரிவாக்கப்பட்ட திட்டத்தின் கடந்த ஐம்பதாண்டுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.
முதலாவதாக, அதிகமான மக்களுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வது பற்றிய விவாதங்கள் உள்ளன. சமீபத்தில், இளம் பெண்களுக்கான மனித பாப்பிலோமா வைரஸ் (Human Papillomavirus (HPV)) தடுப்பூசிகள் பற்றிய அறிவிப்புடன் தொடங்குவது ஒரு நல்ல படியாகும். ஆனால், பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளை அதிகளவில் பெரியவர்களுக்கும் வயதானவர்களுக்கும் வழங்குவது குறித்து இந்திய அரசு பரிசீலிக்க வேண்டும். தடுப்பூசிகள் நீண்ட காலத்திற்கு பணத்தை மிச்சப்படுத்துவதால், நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (National Technical Advisory Group on Immunization (NTAGI)) பரிந்துரைத்தவுடன், அவை அரசாங்க வசதிகளில் இலவசமாக இருக்க வேண்டும்.
இரண்டாவதாக, இந்தியாவில் உள்ள நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) பெரியவர்களுக்கும் வயதானவர்களுக்கும் தடுப்பூசிகளைப் பரிந்துரைக்க வேண்டும். தடுப்பூசிகள் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படாவிட்டால், அதற்கான விளைவு மிக அதிகமாக இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக, தடுப்பூசி போடுவதற்கான தயக்கத்தைக் குறைக்க தடுப்பூசிகளைப் பற்றிய பொதுவான கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்களை முன்கூட்டியே நிவர்த்தி செய்வது அவசியம். எளிமையான மொழி மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இந்த கட்டுக்கதைகளைத் தகர்க்க தொழில்முறை தகவல் தொடர்பு முகமைகளை (professional communication agencies) அரசாங்கம் நியமிக்க வேண்டும். இந்த தடுப்பூசிகளைப் பற்றிய நம்பகமான ஆதாரங்களில் இருந்து குடிமக்கள் தங்களைத் தாங்களே கற்றுக் கொள்ள வேண்டும்.
நான்காவதாக, சமூக மருத்துவ நிபுணர்கள் (community medicine experts), குடும்ப மருத்துவர்கள் (family physicians) மற்றும் குழந்தை மருத்துவர்கள் (paediatricians) உள்ளிட்ட தொழில்முறை மருத்துவ சங்கங்கள், பெரியவர்கள் மற்றும் வயதானவர்களிடையே தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பணியாற்ற வேண்டும். நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தொடர்புடைய தடுப்பூசிகளைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்க வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும்.
ஐந்தாவதாக, மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள பெரியவர்களிடையே உள்ள நோய் சுமையைப் புரிந்து கொள்ள ஆராய்ச்சி நடத்த வேண்டும்.
தேசிய திட்டங்களில் புதிய தடுப்பூசிகளை அறிமுகப்படுத்துவது அனைத்து தடுப்பூசிகளின் முழுமையையும் அதிகரிக்க உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, பெரியவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு தடுப்பூசிக்கான தீர்வை விரிவுபடுத்துவது, குழந்தைப் பருவ தடுப்பூசியின் முழுமையை மேம்படுத்தலாம் மற்றும் தடுப்பூசிக்கான ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கலாம். இந்தியாவின் நோய்த்தடுப்புக்கான விரிவாக்கப்பட்ட திட்டம் (EPI) குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்தியாவில் அனைவருக்குமான நோய்த்தடுப்பு திட்டத்தின் (Universal Immunization Programme (UIP)) மற்றொரு சுதந்திரமான தேசிய மதிப்பாய்வுக்கான நேரம் இதுவாக இருக்கலாம். இந்த மீளாய்வில் முக்கிய உள்நாட்டு மற்றும் சர்வதேச நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், காசநோயை (Tuberculosis (TB)) அகற்றுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக வயது வந்தோருக்கான பேசிலஸ் கால்மெட்-குய்ரின் (BCG) தடுப்பூசிக்கான பைலட் திட்டத்தை (Pilot program) இந்தியா தொடங்கியது. பெரியவர்களுக்கான COVID-19 தடுப்பூசி பிரச்சாரம் வயது வந்தோருக்கான தடுப்பூசியின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்து பொது விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வயது வந்தோருக்கான தடுப்பூசியை விரிவுபடுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பை அளிக்கிறது. நோய்த்தடுப்புக்கான விரிவாக்கப்பட்ட திட்டம், அதன் 50 வது ஆண்டைக் குறிக்கும் நிலையில், இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. எந்தவொரு தடுப்பூசியும் பெறாத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது, தடுப்பூசி அணுகலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வது மற்றும் பெரியவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு தடுப்பூசியை விரிவுபடுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். நோய்த்தடுப்புக்கான விரிவாக்கப்பட்ட திட்டத்தை (EPI) 'நோய்த்தடுப்புக்கான அத்தியாவசிய திட்டமாக' (Essential Program on Immunization) மாற்றுவதற்கான நேரம் இது.
டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா, ஒரு மருத்துவர், உலக சுகாதார அமைப்பின் இந்திய அலுவலகம், ஆப்பிரிக்காவிற்கான பிராந்திய அலுவலகம், பிராஸ்ஸாவில்லே மற்றும் ஜெனீவாவில் உள்ள தலைமையகத்தில் 15 வருட பணி அனுபவம் கொண்டவர்.
டாக்டர் ராகேஷ் குமார், ஒரு மருத்துவர், இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இனப்பெருக்கம் மற்றும் குழந்தைகள் சுகாதாரத்தின் முன்னாள் இணைச் செயலாளர் மற்றும் உலகளாவிய சுகாதார நிபுணர் ஆவார்.