18வது மக்களவைத் தேர்தலுக்கு இந்தியர்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்தத் தேர்தல் அந்தத் தொகுதிகளைப் பற்றியது மட்டுமல்ல இந்தியாவின் எதிர்காலத்திற்கான முக்கியமான தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. அரசியலமைப்பில் ‘இந்தியா’ (‘India’) மற்றும் ‘பாரத்’ (‘Bharat’) என்பதற்கு அர்த்தம் என்ன என்பதைப் பற்றியது.
2024 பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. நமது தேர்தல்களை ஜனநாயகத்தின் அருமையான காட்சிப் பொருளாக உலகமே பார்த்து வியந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. உலக மக்கள் இப்போது நம்மை ஒரு "தேர்தல் எதேச்சதிகாரமாகவேப்" ("electoral autocracy") பார்க்கிறார்கள். இந்தத் தேர்தல் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது.
நமது தேர்தல் ஜனநாயகத்தின் மீது மக்கள் நாளுக்கு நாள் நம்பிகையை இழந்து வருகின்றனர். அரசாங்க கிளைகள், ஊடகங்கள் மற்றும் கண்காணிப்பு போன்ற ஜனநாயகத்தின் முக்கிய பகுதிகள் கட்டுப்படுத்தப்படும் போது இது நிகழ்கிறது. இந்திய தேர்தல் ஆணையம், இந்திய ரிசர்வ் வங்கி, அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்திய புலனாய்வுத் துறைகள் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தபட்டு வருகிறது.
சிறுபான்மையினரை குறிவைத்து மத வெறுப்பு ஊக்குவிக்கப்படுகிறது ஊடகங்கள் மிரட்டப்படுகிறார்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை விலைக்கு வாங்குகிறார்கள். எதிர்த்து கேள்வி கேட்டால் "தேச விரோதிகள்" என்று முத்திரை குத்துகிறார்கள். இதுபோன்ற செயல்கள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
18-வது மக்களவைத் தேர்தலில் 543 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் தேர்வு செய்யவில்லை. இந்தியாவின் எதிர்காலம், நமது அரசியலமைப்பின் நிலைத்தன்மை, இக்பால் போற்றிய இந்துஸ்தான் (Hindustan), மகாத்மா காந்தி போராடிய பாரதம் ஆகியவற்றையும் நாம் தீர்மானிக்கிறோம். 2024 ஆம் ஆண்டு இந்தியா எந்த திசையில் செல்லும் என்பதற்கான வாக்கெடுப்பு போன்றது: ஜனநாயகத்தை மதிக்காத பிளவுபடுத்தும் தேசியவாதமா அல்லது நமது ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும், ஜனநாயக பொறுப்புக்கூறலையும் பாதுகாக்கும் நமது அரசியலமைப்பில் வேரூன்றிய குடிமை தேசியவாதமா (civic nationalism).
நிறைய மாறிவிட்டது
இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் 1951-52 ல் நடந்தது. இது ஒரு பெரிய விஷயம் மற்றும் இந்தியா எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதற்கான வாக்கெடுப்பு போன்றது. இப்போது, 70 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிப் பார்க்கும்போது, அது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் காணலாம்.
முதல் பொதுத் தேர்தலுக்கு முன்பு, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள், கடினமான காலங்களில் மக்கள் மிகவும் கடினமாக உழைத்தனர். ஒரு புதிய தேசத்தை உருவாக்க வேண்டியிருந்தது. காலனித்துவ ஆட்சியின் சேதத்தை சரிசெய்ய வேண்டியிருந்தது. பிரிவினைக்குப் பிந்தைய விளைவுகள், அகதிகளுக்கு உதவுவது மற்றும் காஷ்மீர் மீதான தாக்குதலை நிறுத்துவது போன்ற பெரிய பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. மேலும், அவர்கள் 500 க்கும் மேற்பட்ட சிறிய ராஜ்யங்களையும் அவற்றின் ஆட்சியாளர்களையும் இந்தியாவிற்குள் ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டியிருந்தது. இதையெல்லாம் மீறி ஜவஹர்லால் நேருவும் அவரது தளபதிகளும் ஜனநாயகத்தில் உறுதியாக இருந்தனர்.
சுதந்திரம் பெற்ற பல நாடுகளைப் போல் இந்தியா சர்வாதிகார நாடாக மாறவில்லை. மாறாக, அது ஒரு அற்புதமான அரசியலமைப்பை உருவாக்கியது. இந்திய அரசியலமைப்பு கிட்டத்தட்ட அனைவரும் வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. ஏழைகள் மற்றும் படிக்கத் தெரியாதவர்களுக்கும் கூட வாக்களித்து வருகின்றனர். மிகப் பழமையான நவீன ஜனநாயகமாக இருந்தாலும், அமெரிக்கா இதுவரை செய்யாத ஒன்றை இந்திய செய்தது. 1950 இல், இந்தியா தேர்தலில் வாக்களிக்கும் முறை உருவானது. இந்தியாவில் 176 மில்லியன் மக்கள் வாக்களிக்கக் கூடியவர்கள், பெரும்பாலோர் படிக்கத் தெரியாதவர்கள் என்பதால் இது ஒரு பெரிய விஷயமாக அப்பொழுது இருந்தது. மிகப் பெரிய தேர்தலுக்குத் தயாராவது சவாலானதாக இருக்கும் என்று அமெரிக்க பார்வையாளர் ஒருவர் கூறினார்.
ஓர் இலட்சியத்தை செயல்படுத்துவதற்கான ஓரு தேடல்
1951-52 ஆம் ஆண்டில் நடந்த பெரிய தேர்தலுக்கு முன்பு, நேரு தனது சொந்த கட்சியான காங்கிரஸிலிருந்து கடுமையான சவாலை எதிர்கொண்டார். நேருவுக்குப் பிடிக்காத விஷயங்களில் நம்பிக்கை வைத்திருந்த புருஷோத்தம் தாஸ் டாண்டன் (Purushottam Das Tandon) 1950 ஆகஸ்டில் காங்கிரஸ் தலைவரானார். டாண்டனின் கருத்துக்கள் இந்து மேன்மையை மையமாகக் கொண்டவை, முஸ்லிம்களை நம்பவில்லை என்று நேரு நினைத்தார். எல்லோரும் எல்லா இடங்களிலும் இந்தி பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
டாண்டனின் தலைமை காங்கிரஸை மத உணர்வுகளைத் தூண்டுவதில் பெயர் பெற்ற ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் மற்றும் இந்து மகாசபா போன்ற குழுக்களுக்கு ஆதரவாக உள்ளதாக நேரு கவலைப்பட்டார். எனவே, நேரு காங்கிரஸில் இருந்து தனது பதவிகளை ராஜினாமா செய்தார். ஆனால் கட்சியை விட்டு முழுமையாக வெளியேறவில்லை. நேரு மிகவும் பிரபலமானவர் என்பதால் தேர்தலுக்கு முன்பே அவர் வெளியேறுவதை காங்கிரஸ் விரும்பவில்லை. அந்த அழுத்தம் 1951 செப்டம்பரில் டாண்டனைப் பதவி விலக வைத்தது. பின்னர் நேரு தானே காங்கிரஸின் தலைவரானார்.
நேரு, இந்தியாவை நிலையானதாகவும், மதச்சார்பற்றதாகவும், முற்போக்கானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தார். சுதந்திர இயக்கத்தில் வேரூன்றிய காங்கிரஸ், ஜே.பி.கிருபளானி, ஜெயப்பிரகாஷ் நாராயண், பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் எஸ்.பி.முகர்ஜி போன்ற தலைவர்களிடமிருந்து கூட எப்போதும் எதிர்ப்பை எதிர்கொண்டது. நேரு, எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை மதித்து அரசியலமைப்பின் கொள்கைகளை உண்மையாக்குவதில் கவனம் செலுத்தினார்.
1950 ஆம் ஆண்டில், மாநில சட்டமன்றங்களில் இருந்து ராஜினாமா செய்து, மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுவதன் மூலம் பெண் சட்டமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் சேர ஊக்குவிக்குமாறு நேரு முதலமைச்சர்களை வலியுறுத்தினார். பிரச்சாரத்தின் போது, மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நமது முதலாவது மற்றும் சமீபத்திய பொதுத் தேர்தலில், இந்தியாவின் மிகவும் மாறுபட்ட கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பிரதமர்கள் பெரும் புகழ் பெற்றனர். 2024 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்த போதிலும், இந்தியாவின் மிகப்பெரிய எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது. மேலும், முதல்வராக இருந்த ஒரு முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் சிறையில் அடைக்கப்பட்டார். நேருவின் காலத்தில், 1948 இல் இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட ஒரு சட்டபூர்வமான போட்டியாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதல் மக்களவைத் தேர்தலில் அவர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்து, நமது ஜனநாயகம் நியாயமாகவும், வெளிப்படையாகவும் இருப்பதைக் காட்டினர்.
1951-52 ஆம் ஆண்டில், கடந்த கால மோதல்களுக்கு இடையே இந்தியர்கள் வாக்களித்தனர். மதக்கலவரம் காரணமாக பதற்றமான சூழல் நிலவியது. பிரிவினையின் வன்முறை பலரை பாதித்தது. கிழக்கு பாகிஸ்தானில், இந்துக்கள் கடினமாக நடத்தப்பட்டனர். கல்கத்தாவில் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இது டாக்காவில் இந்துக்களுக்கு எதிராக அதிக வன்முறையை ஏற்படுத்தியது. சிறுபான்மையினரை பாகிஸ்தான் எவ்வாறு நடத்தினாலும், மதச்சார்பற்ற அரசை உருவாக்க நேரு உறுதியாக இருந்தார். நாடாளுமன்றத்தில் மதவெறிக்கு எதிராக குரல் கொடுத்தார். நேரு, 1951 இல் லூதியானாவில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய போது, மத பிளவுகளுக்கு எதிராக போராடுவதாக உறுதியளித்தார். முஸ்லீம் லீக் முன்பு செய்ததைப் போலவே, இந்து மற்றும் சீக்கிய கலாச்சாரத்தின் பெயரால் வெறுப்பைப் பரப்பும் கட்சிகளை அவர் கடுமையாக விமர்சித்தார். இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று கூறிய நேரு, மத நல்லிணக்கத்திற்கு வாக்களிக்குமாறு மக்களை வலியுறுத்தினார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்தது, நேரு காங்கிரஸ் கட்சியை பெரிய வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
மீண்டும் யுத்தம்
முதல் பொதுத் தேர்தலின் போது, 176 மில்லியன் தகுதியான இந்தியர்களில் 107 மில்லியன் பேர் வாக்களித்து, இந்தியாவின் தலைவிதியின் பாதுகாவலர்களாக மாறினர். இன்று, 17 பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு, இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாக்க நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம். 1950 களில் இருந்து மத வேறுபாடின்றி அனைவரும் வாக்களித்தனர். நாட்டை மகத்தானதாக மாற்ற ஒன்றிணைந்து பணியாற்றிய நமது முன்னோர்களின் ஞானத்தை மதிப்போம்.
ஒன்றுபட்ட சகோதரத்துவ இந்தியாவை தற்போதைய ஆளும் கட்சி விரும்பவில்லை. மக்களை மதத்தின் பெயரால் பிளவு படுத்த நினைக்கிறார்கள். இந்தியா ஒரு முறை பிளவுபட்டதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இப்போது நாட்டின் ஆன்மாவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. இதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும், ஏனென்றால் நமது முதல் பிரதமர் கூறியது போல், "இந்தியா இறந்தால் யார் வாழ்கிறார்கள்” (“Who lives if India dies”)?
சசி தரூர் மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், ‘The Battle of Belonging: on nationalism, patriotism’ மற்றும் ’what it means to be Indian’ என்பவை உட்பட 25 புத்தகங்களை எழுதியவர்.
பாவா சயான் பஜாஜ், டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் இறுதியாண்டு தத்துவம் படித்து வருகிறார்.