கடல் மாசுபாடு ((Marine Pollution)) தற்போது மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. 11,098 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையையும், தங்கள் வாழ்வாதாரத்திற்கும் கடலைச் சார்ந்துள்ள 200 மில்லியன் மக்களையும் கொண்ட இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டிற்கு, கடல் மாசுபாடு என்னென்ன சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் மனிதப் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துகிறது?
காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதலின் சவால்களுக்கு மத்தியில், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது ஒரு இராஜதந்திர தேவை மட்டுமல்ல, ஒரு தார்மீக கடமையாகும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனவரி 5, 2026 அன்று கோவாவில் இந்திய கடலோர காவல்படை கப்பலான (Indian Coast Guard Ship (ICGS)) ‘சமுத்திர பிரதாப்’-ஐ நாட்டிற்கு அர்ப்பணித்த போது இவ்வாறு கூறினார்.
குறிப்பாக, மாசுக் கட்டுப்பாடு மற்றும் இந்தியாவின் சுற்றுச்சூழல் பேரிடர் மீட்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அந்த நோக்கங்களுக்கு மட்டும் கட்டுப்படாத இந்திய கடலோர காவல்படை கப்பலான சமுத்திர பிரதாப் கப்பலில் மாசுபாடைக் கண்டறிவதற்கான நவீன கருவிகள், மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான சிறப்புப் படகுகள் மற்றும் மேம்பட்ட தீயணைப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது கடல் மாசுபாடு ஒரு தீவிரமான உலகளாவிய பிரச்சனை என்பதைக் காட்டுகிறது.
காலநிலையை ஒழுங்குபடுத்துவதற்கும், பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பதற்கும், மனித ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கும் தூய்மையான பெருங்கடல்கள் மிக முக்கியமானவை. உலகளாவிய வர்த்தகத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்கள் கடல் வழியாக கொண்டு செல்லப்படுவதால், அவை மிகப்பெரிய பொருளாதார முக்கியத்துவத்தை பெற்றுள்ளன. உலகளாவிய கடல் பொருளாதாரம் $3 டிரில்லியன் முதல் $6 வரை மதிப்புடையது மற்றும் 150 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தேவையான வேலையை வழங்கியுள்ளது. இருப்பினும், கடல் மாசுபாடு இன்று கடல்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
கடல் மாசுபாடு (marine pollution) என்றால் என்ன?
கடல் மாசுபாடு என்பது 1982-ஆம் ஆண்டு ஐ.நா. கடல் சட்டம் தொடர்பான மாநாட்டால் (UN Convention on the Law of the Sea (UNCLOS)) வரையறையின்படி, மனிதர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேதிப்பொருட்கள், நெகிழிகள் அல்லது சத்தம் போன்ற பொருட்களை அல்லது ஆற்றலை கடலில் சேர்க்கும்போது கடல் மாசுபாடு ஏற்படுகிறது. இது கடல் விலங்குகள் மற்றும் கடல் வளங்களுக்குத் தீங்கு விளைவிக்கிறது.
நிலையான வளர்ச்சி இலக்கு 14.1 இது ஏன் முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது. இந்த இலக்கு, அனைத்து வகையான கடல்சார் மாசுபாடுகளையும், குறிப்பாக நிலத்திலிருந்து வரும் மாசுபாட்டையும் குறைத்து, அதிக அளவில் கடல் மாசுபடை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிலம் மற்றும் கடல் ஆகிய இரண்டிலிருந்தும் உருவாகும் கடல் மாசுபாடு ஒரு சிக்கலான மற்றும் ஒன்றோடொன்று தொடர்புடைய பிரச்சனையாகும். கடல் மாசுபாட்டில் 80 சதவீதம் நிலம் சார்ந்த மாசுகளால் ஏற்படுகிறது. மீதமுள்ள மாசுபாடு கடலில் நடைபெறும் செயல்பாடுகளிலிருந்து வருகிறது. சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுநீர் போன்றவை கழிவுப் பொருட்களையும் நச்சுப் பொருட்களையும் ஆறுகளிலும் பின்னர் கடல் நீருடன் கலந்து விடுகிறது.
நைட்ரஜன் அடிப்படையிலான உரங்களின் எச்சங்களைக் கொண்ட வேளாண் கழிவுகள் நீர்நிலைகள் வழியாகக் கடலுக்குச் செல்கின்றன. இது நீரில் ஊட்டம்நிறைதல் (eutrophication) எனப்படும் நிகழ்வுக்கு வழிவகுக்கிறது. அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள், நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் தீங்கு விளைவிக்கும் பாசிகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இது கடல் பகுதிகளிலிருந்து ஆக்ஸிஜனைப் பறித்து, கடல்வாழ் உயிரினங்கள் வாழமுடியாத இறந்த மண்டலங்களை உருவாக்குகிறது.
இது தவிர, மிகச் சிறிய நெகிழி துண்டுகள் (microplastics) உட்பட நெகிழி கழிவுகளும் கடல் மாசுபாட்டிற்கு ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளன. நிலத்தில் உருவாகும் இந்தக் கழிவுகள், நகர்ப்புற பகுதிகளிலிருந்தும் குப்பைக் கொட்டும் இடங்களிலிருந்தும் ஆறுகள் வழியாகக் கடலுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. சில இடங்களில், கடல் நீரோட்டங்கள் இந்தக் கழிவுகளைச் சேர்த்து மிதக்கும் குப்பைக் குவியல்களாக உருவாக்குகின்றன. அவற்றில் மிகப்பெரியது பசிபிக் குப்பைப் புயல் (Pacific Trash Vortex) ஆகும்.
கடல் சார்ந்த கடல் மாசுபாடு என்பது கடல்களில் நடைபெறும் மாற்றங்களினால் உருவாகிறது. இதில் கப்பல்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் ஒரு முக்கியக் காரணியாக அமைகிறது. கப்பல்களில் இருந்து சுத்திகரிக்கப்படாத நீரை வெளியிடுகின்றன. இது தீங்கு விளைவிக்கும் உயிரினங்கள் மற்றும் மாசுபடுத்திகளை கடலுக்குள் கொண்டு வரக்கூடும். காற்று மற்றும் ஒலி மாசுபாடும் கடல் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும். கப்பல் விபத்துகள், கடல்களில் நடைபெறும் மாற்றங்களினால் ஏற்படும் எண்ணெய் கசிவுகள், அதிக அளவிலான ஹைட்ரோகார்பன்களை கடல் சூழலில் வெளியிட்டு, கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும், சுரங்கத் தொழில் போன்ற பிரித்தெடுக்கும் நடவடிக்கைகள் கடல் தள சுற்றுச்சூழல் அமைப்புகளையும் சீர்குலைக்கின்றன.
கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மனித ஆரோக்கியத்தின் மீதான தாக்கம்
கடல் மாசுபாடு கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. கடுமையான பாதிப்புகளில் ஒன்று கடல் பல்லுயிர் இழப்பு (marine biodiversity) ஆகும். நெகிழி, எண்ணெய்க் கசிவுகள், நச்சு இரசாயனங்கள் மற்றும் கைவிடப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் போன்றவற்றை கடல் உயிரினங்கள் உட்கொள்ளும்போது, கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றன. நெகிழி காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 100,000 பாலூட்டிகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 123 கடல் பாலூட்டி இனங்களில் 81 இனங்கள் நெகிழியை சாப்பிட்டதாகவோ அல்லது சிக்கிக் கொண்டதாகவோ அறியப்படுகிறது.
கடல் மாசுபாடு, கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் நுட்பமான சமநிலைகளைச் சார்ந்துள்ளன. மாசுபாடு, உணவுச் சங்கிலியின் அடிப்படையாக இருக்கும் மற்றும் காற்றில் இருந்து கார்பனையும் உறிஞ்சும் நுண்ணிய தாவரங்களைப் போன்ற உயிரினங்களான மிதக்கும் நுண்ணுயிரிகளைப் (plankton populations) பாதிக்கிறது. மிதக்கும் நுண்ணுயிர்கள் உற்பத்தித்திறன் குறைவது மீன்வளத்திற்கு மட்டுமல்லாமல், உலகளாவிய காலநிலைக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சதுப்புநிலக் காடுகள் மற்றும் கடல் புற்கள் புயல்கள் மற்றும் கடல் அரிப்புகளிலிருந்து கடற்கரைகளைப் பாதுகாக்கின்றன. ஆனால், எண்ணெய் மற்றும் அழுக்கு படிவுகள் போன்ற மாசுபாடு அவற்றைப் பாதிக்கிறது. அவை கடலோர சமூகங்களை புயல்கள் மற்றும் கடல் மட்ட உயர்விற்கு மேலும் பாதிக்கப்படக்கூடியதாக ஆக்குகிறது.
கடல் மாசுபாடு மனித ஆரோக்கியத்திலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. உலகில் 300 கோடிக்கும் அதிகமான மக்கள், பிடிக்கப்பட்ட மற்றும் வளர்க்கப்பட்ட கடல் உணவுகளை விலங்குப் புரதத்தின் ஒரு முக்கிய ஆதாரமாக நம்பியுள்ளனர். மெத்தில் பாதரசம் (Methylmercury) மற்றும் பல்லுக் குளோரின் கொண்ட பைபீனில்கள் (Polychlorinated Biphenyls (PCBs)) போன்ற மாசுபடுத்திகளால் கடல் உணவுகள் அசுத்தமடையும்போது – இந்த நச்சுத்தன்மை வாய்ந்த தொழில்துறை இரசாயனங்கள் படிமங்களுடன் சேர்ந்து கொழுப்பு திசுக்களில் குவிகின்றன. அவை இருதய நோய்கள் மற்றும் மறதி நோய்க்கான அபாயங்களை அதிகரிக்கின்றன. மேலும், கருவில் உள்ள அல்லது பிறந்த குழந்தைகளுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
கடல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய மற்றும் சர்வதேச முயற்சிகள்
சர்வதேச அளவில், கடல்சார் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும், கண்காணிக்கவும், அதனுடன் கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டை மேம்படுத்தவும் பல்வேறு ஒப்பந்தங்களும் மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளன.
அவற்றில் மிக முக்கியமானது ஐ.நா. கடல் சட்டம் தொடர்பான (UN Convention on the Law of the Sea (UNCLOS)) மாநாடாகும். இது உலக அளவில் கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு ஒரு முக்கிய சட்டக் கட்டமைப்பாகும். நிலம் சார்ந்த மூலங்கள், கடலடி நடவடிக்கைகள் மற்றும் கழிவுகளைக் கொட்டும் கப்பல்கள் ஆகியவற்றிலிருந்து ஏற்படும் மாசுபாட்டைத் தடுக்கவும், குறைக்கவும், கட்டுப்படுத்தவும் இது நாடுகளைக் கட்டாயப்படுத்துகிறது.
கழிவுகள் மற்றும் பிற பொருட்களைக் கடலில் கொட்டுவதன் மூலம் ஏற்படும் கடல்சார் மாசுபாட்டைத் தடுப்பதற்கான மாநாடு 1972-ஆம் ஆண்டு அல்லது லண்டன் மாநாடு (London Convention), 1975-ல் நடைமுறைக்கு வந்தது. கடல்சார் மாசுபாட்டின் அனைத்து மூலங்களையும் திறம்படக் கட்டுப்படுத்துவதை மேம்படுத்துவதும், கடலில் கழிவுகளைக் கொட்டுவதன் மூலம் ஏற்படும் மாசுபாட்டைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
1973-ல், கப்பல்களிலிருந்து ஏற்படும் மாசுபாட்டைத் தடுப்பதற்கான முக்கியமான சர்வதேச மாநாடு (MARPOL மாநாடு) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது எண்ணெய், இரசாயனங்கள், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் கப்பல்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குப்பைகள் உட்பட, கப்பல்களில் கொண்டு செல்லப்படும் அனைத்துப் பொருட்களாலும் ஏற்படும் மாசுபாட்டைத் தடுப்பது பற்றிக் குறிப்பிடுகிறது.
2004-ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கப்பல் நிலைப்படுத்தும் நீர் மேலாண்மை மாநாடு (Ballast Water Management Convention), கப்பல்களின் நிலைப்படுத்தும் நீரிலிருந்து ஊடுருவும் உயிரினங்கள் பரவுவதைத் தடுக்க விதிகளை வகுக்கிறது. இது நிலைப்படுத்தும் நீரையும் வண்டல்களையும் சுத்திகரிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் தேவையான தரநிலைகளையும் நடைமுறைகளையும் வழங்குகிறது.
கப்பல்களிலிருந்து ஏற்படும் மாசுபாட்டைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பொதுவான மாசுபாட்டுக் கட்டுப்பாட்டுச் சட்டங்களைத் தவிர, கடல்சார் சட்டங்களும் கடல்சார் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கின்றன. எடுத்துக்காட்டாக, 1958-ஆம் ஆண்டின் வணிகக் கப்பல் சட்டம் (Merchant Shipping Act), கடலில் ஏற்படும் மாசுபாட்டைத் தடுப்பது குறித்த விதிகளைக் கொண்டுள்ளது.
அதேபோல், 1976-ஆம் ஆண்டின் இந்திய கடல்சார் மண்டலங்கள் சட்டம் (Maritime Zones of India Act), கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. MARPOL இணைப்பு VI-க்கு ஏற்ப, கப்பல் எரிபொருளில் கந்தகத்தின் அளவைக் கட்டுப்படுத்துவது குறித்து கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் 2019-ல் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.
ஒரு முழுமையான மற்றும் பங்கேற்பு அடிப்படையிலான கடல்சார் நிர்வாகத்தின் தேவை
சர்வதேச மரபுகள், தேசிய சட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப வழிமுறைகள் இருந்தபோதிலும், கடல் மாசுபாடு மிகவும் கடுமையான ஒரு சுற்றுச்சூழல் சவால்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. 11,098 கி.மீ கடற்கரையையும், 200 மில்லியன் மக்களையும் தங்கள் வாழ்வாதாரத்திற்கும் கடலை நம்பியிருக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, கடல் பாதுகாப்பு மிக முக்கியமானது.
கடல் மாசுபாட்டின் பெரும்பகுதி நிலம் சார்ந்த நடவடிக்கைகளிலிருந்தே வருவதால், கழிவு மேலாண்மைச் சட்டங்களை திறம்பட செயல்படுத்துதல் மற்றும் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
கடல் மாசுபாடு என்பது எல்லை தாண்டிய பிரச்சனையாக இருப்பதால், சர்வதேச ஒத்துழைப்பு முக்கியமானதாகிறது. தகவல் பகிர்வு மற்றும் கூட்டு கண்காணிப்பு மூலம் UNCLOS மற்றும் MARPOL போன்ற கட்டமைப்புகளை நடைமுறைக்கு கொண்டு வருவதில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும். உலக அளவில், நெகிழி மாசுபாடு குறித்த முன்மொழியப்பட்ட சட்டப்பூர்வ ஒப்பந்தம் நெகிழி உற்பத்தி, நுகர்வு மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு வாழ்க்கைச் சுழற்சி அணுகுமுறையைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு ராஜதந்திரத் தேவை மட்டுமல்லாமல், ஒரு தார்மீகப் பொறுப்பாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் குறிப்பிட்டார். எனவே, பொறுப்பான உற்பத்தி மற்றும் நுகர்வை ஊக்குவிப்பதற்காக, அறிவியல் கண்காணிப்பு, பொது விழிப்புணர்வு மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானதாகிறது.
Original Article : India’s role in global fight against marine pollution. -Renuka