இந்த விதிமுறைகள் - 2012-ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)) முதன்முதலில் வெளியிட்ட "சமத்துவ" (equity) விதிகளின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். இவை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பொதுப்பிரிவு (General Category) மாணவர்கள் இதன் மூலம் "துன்புறுத்தலுக்கு" ஆளாக நேரிடலாம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, நாட்டின் உயர்கல்வி ஒழுங்குமுறை அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழு (UGC), உயர்கல்வி நிறுவனங்களில் சாதி ரீதியான பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு பாகுபாடுகளைக் களைவதற்கான புதிய விதிமுறைகளை அறிவித்தது.
சாதி ரீதியிலான பாகுபாடு காரணமாக 2016 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் ரோகித் வெமுலா மற்றும் பாயல் தட்வி ஆகியோரின் தாயார்கள் தொடர்ந்த வழக்கைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியிட்ட "சமத்துவம்" (Equity) விதிகளின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இவை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த விதிகள் பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்குப் "பாதிப்பை" அல்லது "துன்புறுத்தலை" ஏற்படுத்தக்கூடும் என்று சிலர் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவர்களும், பரேலி நகர நீதிபதியும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
அந்த விதிமுறைகள் என்ன சொல்கின்றன மற்றும் அவை ஏன் சர்ச்சைக்குரியதாகக் கருதப்படுகின்றன என்பது குறித்த விவரங்கள்கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) புதிய விதிமுறைகள் யாவை?
பல்கலைக்கழக மானியக் குழு (UGC), ‘உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை ஊக்குவித்தல்’ தொடர்பான 2026-ஆம் ஆண்டுக்கான விதிமுறைகளை ஜனவரி மாதம் 13-ஆம் தேதி வெளியிட்டது. மதம், இனம், பாலினம், பிறந்த இடம், சாதி அல்லது ஊனம் ஆகியவற்றின் அடிப்படையில் காட்டப்படும் பாகுபாடுகளை அகற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, பட்டியல் சாதியினர் (Schedule Caste (SC)), பழங்குடியினர் (Schedule Tribes (ST)), சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினர், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான பாகுபாடுகளைத் தடுத்து, உயர்கல்வி நிறுவனங்களில் அனைவருக்கும் சமமான வாய்ப்பையும் உள்ளடக்கிய சூழலையும் உருவாக்குவது இந்த விதிமுறைகளின் நோக்கமகாகக் கருதப்படுகிறது.
இந்த விதிமுறைகள், 2012-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை ஊக்குவித்தல்) விதிமுறைகளுக்கு மாற்றாக அமைகின்றன.
இந்த புதிய விதிகள் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாகுபாடு தொடர்பான புகார்களைப் பதிவு செய்வதற்கும், அவற்றைத் தீர்ப்பதற்குமான ஒரு வழிமுறையை இவை உருவாக்குகின்றன.
இந்த விதிமுறைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும்?
இந்த விதிமுறைகளின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக, ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் சம வாய்ப்பு மையம் (Equal Opportunity Centre (EOC)), சமத்துவக் குழு (Equity Committee) மற்றும் சமத்துவப் படைகளை (Equity Squads) அமைக்க வேண்டும். இவை குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளன:
சம வாய்ப்பு மையம் (EOC): பின்தங்கிய பிரிவினருக்கான கொள்கைகள் செயல்படுத்தப்படுவதை இந்த மையம் உறுதி செய்யும். இது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையோடு ஒருங்கிணைந்து செயல்படும், மேலும் தேவைப்படும்போது சட்ட உதவி வழங்கவும் ஏற்பாடு செய்யும் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு சம வாய்ப்பு மையத்திலும் ஐந்து ஆசிரிய உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றும் இந்த உறுப்பினர்களுக்கு எந்தவிதமான இடஒதுக்கீட்டு முறையும் கிடையாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு கல்லூரியில் குறைந்தபட்சம் ஐந்து ஆசிரிய உறுப்பினர்கள் இல்லை என்றால், அந்தக் கல்லூரி இணைக்கப்பட்டிருக்கும் பல்கலைக்கழகத்தின் சமவாய்ப்பு மையம் இந்தப் பணிகளைச் செய்யும் என்றும் இந்த மையத்தின் அமைப்பு முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளன.
சமத்துவக் குழு (Equity Committee): ஒவ்வொரு 'சம வாய்ப்பு மையத்திலும்' (EOC) பத்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சமத்துவக் குழு இருக்கும். இதற்கு அந்த நிறுவனத்தின் தலைவர் தலைமை தாங்குவார். பத்து உறுப்பினர்களில் ஐந்து பேர் கண்டிப்பாகப் பின்வரும் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Classes (OBC)), மாற்றுத்திறனாளிகள் (Persons with Disabilities (PwD)), பட்டியலினத்தவர் (Scheduled Castes (SC)), பழங்குடியினர் (Scheduled Tribes (ST)), பெண்கள் உள்ளிட்ட உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும், புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இந்தக் குழு கூடி ஆலோசிக்க வேண்டும். பின்னர், புகார் குறித்த அறிக்கையை 15 நாட்களுக்குள் நிறுவனத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அறிக்கையைப் பெற்ற 7 நாட்களுக்குள் நிறுவனத் தலைவர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற நடவடிக்கைகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சமத்துவக் குழுக்கள் (Equity Squads): பாகுபாடுகளைக் கண்காணிக்கவும், அவற்றைத் தடுக்கவும் கல்வி வளாகங்களில் 'சமத்துவக் குழுக்கள்' அமைக்கப்படும். இந்தக் குழுக்கள் எப்போதும் விழிப்புடன் செயல்படுவதோடு, பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களுக்குத் தொடர்ந்து நேரில் சென்று ஆய்வுசெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாகுபாடுகள் குறித்துப் புகார் அளிக்க கல்வி நிறுவனங்கள் 24 மணிநேர உதவி மையத்தை உருவாக்க வேண்டும். அத்துடன், வளாகத்தில் சமத்துவத்தை மேம்படுத்த சமத்துவத் தூதர்களையும் (Equity Ambassadors) நியமிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் 2012-ஆம் ஆண்டு விதிமுறைகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?
2012-ஆம் ஆண்டு விதிமுறைகள் பெரும்பாலும் அறிவுரை கூறும் வகையிலேயே அமைந்திருந்தன. பாகுபாடு அல்லது துன்புறுத்தலின் தன்மைக்கு ஏற்பத் தண்டனை இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
ஆனால், அந்த விதிகளைப் பின்பற்றத் தவறிய நிறுவனங்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவை எதையும் குறிப்பிடவில்லை என்கின்றனர் புதிய விதிமுறைகளின்படி, தேசிய அளவிலான கண்காணிப்புக் குழுவின் மூலம் இந்தப் பணிகளை பல்கலைக்கழக மானியக் குழுவானது கண்காணிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த விதிகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, பல்கலைக்கழக மானியக் குழுவின் திட்டங்களில் பங்கேற்கத் தடை, பட்டப்படிப்புகள் அல்லது ஆன்லைன் படிப்புகளை நடத்தத் தடை, மற்றும் மத்திய அரசின் நிதியுதவி நிறுத்தப்படுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முந்தைய விதிமுறைகள், நிறுவனங்கள் ‘சம வாய்ப்பு பிரிவுகளை’ (Equal Opportunity Cells) அமைக்க அனுமதித்தன. ஆனால், அதில் யாரெல்லாம் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் அல்லது பாகுபாடு காட்டப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நடைமுறைகள் எதுவும் பழைய விதிமுறைகளில் தெளிவுபடுத்தப்படவில்லை.
அவர்கள் பாகுபாட்டிற்கு எதிரான ஒரு அதிகாரியை (Anti-Discrimination Officer) நியமிக்க வேண்டும் என்றும், அந்த அதிகாரியின் முடிவை எதிர்த்து மாணவர்கள் நிறுவனத்தின் தலைவரிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, புகார்களைப் பதிவு செய்வதற்கும் அவற்றை கையாளுவதற்கும் புதிய விதிமுறைகள் கூடுதல் விரிவான விதிகளை வழங்குகின்றன.
2012-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பதிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. உயர்கல்வி நிறுவனங்கள், பட்டியல் சாதியினர் (SC) அல்லது பழங்குடியின (ST) மாணவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டக்கூடாது என்று மட்டுமே முந்தைய விதிமுறைகளில் கூறப்பட்டிருந்தது.
புதிய விதிமுறைகள் கடந்த ஆண்டு வெளியான வரைவு அறிக்கையிலிருந்து எப்படி மாறுபடுகின்றன?
வரைவு விதிமுறைகள் பொதுவெளியில் வெளியிடப்பட்டபிறகு, சில கேள்விகள் எழுப்பப்பட்டன, அதன் விளைவாக மாற்றங்கள் செய்யப்பட்டன.
அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) மாணவர்கள் சங்கம், வரைவு அறிக்கையில் உள்ள சமத்துவக் குழுக்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் சேர்க்கப்படவில்லை என்றும், 'சாதிப் பாகுபாடு' குறித்த வரையறையில் அவர்கள் விடுபட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட இறுதி பதிப்பில், சாதி பாகுபாட்டிற்கான வரையறையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) சேர்க்கப்பட்டுள்ளனர். இது பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமத்துவக் குழுவில் (Equity Committee) OBC பிரிவினரின் பிரதிநிதித்துவமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முந்தைய வரைவு அறிக்கையில் (Draft), ஒரு பட்டியல் சாதிப்பிரிவைச் சேர்ந்த உறுப்பினர், ஒரு பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர் மற்றும் ஒரு பெண் என தலா ஒருவர் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இறுதி விதிமுறைகளில் 'பொய்ப் புகார்கள்' குறித்த பகுதி நீக்கப்பட்டுள்ளது; வரைவு அறிக்கையில் இது போன்ற பொய்ப் புகார்களுக்கு அபராதம் அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் தலைமையிலான கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) மாணவர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு எதிரான துன்புறுத்தல்களையும் உள்ளடக்கும் வகையில், சாதி ரீதியான துன்புறுத்தல் (Caste-based harassment) குறித்த வரையறையை வரைவு அறிக்கையில் தெளிவாக விளக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இந்த விதிமுறைகள் எந்தச் சூழலில் அறிவிக்கப்பட்டன?
2016 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் சாதிரீதியிலான பாகுபாட்டினால் தற்கொலை செய்து கொண்ட பயல் தத்வி மற்றும் ரோஹித் வெமுலாவின் தாயாரால், 2019-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிலிருந்து இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மனுதாரர்களான அபேதா சலீம் தத்வி மற்றும் ராதிகா வெமுலா ஆகியோர் 2012-ஆம் ஆண்டின் சமத்துவ விதிமுறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
உயர்கல்வி நிறுவனங்களில் பாகுபாட்டிற்கு எதிரான வலுவான நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்று அந்த மனு வலியுறுத்தியிருந்தது.
ஜனவரி மாதம் 3-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர், இந்த புதிய சட்டவிதிமுறைகள் பெயரளவுக்கு மட்டும் இருக்கக்கூடாது என்றும் அவை உண்மையாகவே செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
புதிய சமபங்கு ஒழுங்குமுறை விதிகளின் வரைவு (Draft), பிப்ரவரி மாதம் 2025-ஆம் ஆண்டில் பொதுமக்களின் கருத்துக்களுக்காக வெளியிடப்பட்டது. பின்னர, ஏப்ரல் மாதத்தில், இந்த விதிகளை இறுதி செய்து அறிவிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (UGC) நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த விதிமுறைகள் தொடர்பான சர்ச்சை என்ன?
லக்னோவில் இப்போது பா.ஜ.க நிர்வாகிகள் பொறுப்பில் இருக்கும் சில மாணவர்கள், இந்த விதிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விதிகள் பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களை 'துன்புறுத்த' வாய்ப்புள்ளதாகவும், சாதிரீதியான பிரிவினையை உண்டாக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், 'பொய்யான பாகுபாடு புகார்கள்' அளிப்பவர்கள் மீது எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை என்றும், விதிகளைப் பின்பற்றாத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் இந்த புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
X தளத்தில், #UGCRollBack என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, இந்த விதிமுறைகள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு "அநீதியானது" என்றும், இதர பிற்படுத்தப்பட்ட (OBC) சமூகத்தினரிடையே அரசியல் ஆதாயத்திற்காக இவை சாதி ரீதியிலான பிரிவினைகளை உருவாக்குகின்றன என்றும் பல்வேறு X தளக் கணக்குகள் பதிவிட்டுள்ளன.
Original Article : UGC’s new regulations to deal with caste-based discrimination and the opposition to them. -Abhinaya Harigovind , Shyamlal Yadav