மின்கல செல் உற்பத்தித் திறனை மேம்படுத்த நிதி உதவி மட்டுமே போதுமானதல்ல என்று தெரிவிக்கின்றனர்.
2030-ஆம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் (GW) அளவிற்குப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை மேம்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடைய, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Production Linked Incentive (PLI)) திட்டத்தையே இந்தியா தனது முக்கியக் கருவியாக நம்பியுள்ளது. ஏற்கனவே தொலைத்தொடர்புத் துறையில் இந்தத் திட்டம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அங்கு, நிறுவனங்கள் தங்களது ஆண்டு விற்பனை இலக்கை எட்டினால் மட்டுமே அரசு ஊக்கத்தொகை வழங்கும் என்பது போன்ற அதே பாணியைப் பின்பற்றி, பசுமைத் தொழில்நுட்பப் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடாக இருக்கும் இந்தியாவை, உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற அமைச்சகங்கள் நம்புகின்றன. இருப்பினும், தொலைத்தொடர்புத் துறையைப் போலன்றி, சூரிய ஒளி மின்சக்தி (Solar PV) மற்றும் நவீன மின்கல சேமிப்புத் துறைகளில் இந்த உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் (PLI) திட்டத்தைச் செயல்படுத்துவதில் பெரும் சவால்கள் உள்ளன.இறுதிக்கட்டப் பணியான 'சூரிய ஆற்றல் மின்கலம்' (Solar Module) கட்டமைக்கும் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இது 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் அதன் இலக்கில் 56% சதவீதத்தை எட்டிவிடும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், அதன் ஆரம்பக்கட்ட உற்பத்தி நிலைகள் இன்னும் பலவீனமாகவே உள்ளன.
தொழில்நுட்பரீதியாக மிகவும் கடினமான பாலிசிலிக்கான் (Polysilicon) மற்றும் வேஃபர் (Wafer) தயாரிப்பில், முறையே 14% மற்றும் 10% இலக்கு மட்டுமே எட்டப்பட்டுள்ளது என்றும் இந்த இடைவெளியானது, மூலப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்திற்காக நாம் இன்னும் பிற நாடுகளையே சார்ந்திருப்பதைக் காட்டுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, அதிக முதலீடு தேவைப்படும் இத்தகைய ஆரம்பக்கட்டத் திட்டங்களில் உள்ள அபாயங்களைக் குறைக்க, கூடுதல் நிதியுதவி (Capital Subsidies) வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மின்கல தயாரிப்புத் திட்டத்திலும் இதே போன்ற சிக்கல்கள் நீடிக்கின்றன. மின்சார வாகனங்களுக்காக (EV) உள்நாட்டிலேயே 50 கிகாவாட் (GWh) மின்கல செல்களை உற்பத்தி செய்யும் திட்டம், ₹18,000 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. ஆனால், இதன் முன்னேற்றம் மிகவும் மந்தமாக உள்ளது. 2025-ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, இலக்கில் வெறும் 2.8% (அதாவது 1.4 கிகாவாட்) மட்டுமே எட்டப்பட்டுள்ளது. உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை (இரண்டு ஆண்டுகளில் 25% மற்றும் ஐந்து ஆண்டுகளில் 60%) ஒரு தடையாக உள்ளது. 'ஜிகாபேக்டரி' (Gigafactory) எனப்படும் பிரம்மாண்ட தொழிற்சாலைகளை அமைப்பதில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்கள், தொழிற்சாலைகளை அமைக்கத் தேவையான சீனத் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு விசா வழங்கப்படாதது போன்ற சிக்கல்கள் பின்னடைவுக்குக்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன. வெறும் நிதி உதவியை (பணம்) மட்டும் அளிப்பதன் மூலம் உயர் தொழில்நுட்ப உற்பத்தியை மேம்படுத்திவிடலாம் என்ற அரசாங்கத்தின் நம்பிக்கை தவறானது. இத்தகைய தொழில்நுட்பங்களை பெருமளவில் உற்பத்தி செய்ய பல ஆண்டுகால ஆராய்ச்சி முதலீடும், திறமையான பணியாளர்களும் அவசியம் என்று வலியுறுத்துகின்றனர். பெரிய நிறுவனங்கள் சர்வதேச தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் மூலம் விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கின்றன. ஆனால், இவை அதிக செலவுகளை ஏற்படுத்துபவை மற்றும் எப்போதும் உடனடி முடிவுகளைத் தருவதில்லை. மேலும், காலக்கெடுவைத் தவறியதற்காக பல நிறுவனங்கள் கடுமையான அபராதங்களைச் சந்தித்து வருகின்றன. எனவே, 'உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை' (PLI) திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏலம் எடுக்கும் நிறுவனங்களின் நிதி பலத்தை மட்டும் பார்க்காமல், அவர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் அனுபவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
Original Article : Manufacturing woes: On non-fossil fuel capacity and PLI schemes.