இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தச் செய்திகள்: உணவு மற்றும் இரசாயனங்கள் முதல் பொறியியல் பொருட்கள் வரை, ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அவை அதிக இணக்கச் சுமை காரணமாக ஏற்றுமதியாளர்களை ஊக்கப்படுத்துவதில்லை. இதற்கு தீர்வுகாண இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA) இந்தியாவுக்கு சட்டப்பூர்வ வாய்ப்பை வழங்குகிறது என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்தியா ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் : உலக வர்த்தக வளர்ச்சியை குறைக்கும் அச்சுறுத்தலையும், வர்த்தக உத்திகள் மற்றும் கூட்டணிகளை மறு மதிப்பீடு செய்ய வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியுள்ள வேகமாக மாறிவரும் சர்வதேச வர்த்தக சூழலுக்கு மத்தியில், ஒழுங்குமுறை உறுதிப்பாட்டைப் பெறுவதற்காக இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) ஒரு தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்திற்கான (free trade agreement (FTA)) பேச்சுவார்த்தைகளை முடித்துள்ளன.
ஆனால், உலகளாவிய வர்த்தகத்தில் தனது செல்வாக்கைப் பயன்படுத்த அமெரிக்கா வரிகளைப் பயன்படுத்தி வருகிறது என்றால், ஐரோப்பிய ஒன்றியம் பல பத்தாண்டுகளாக, அதன் விரிவடைந்துவரும் ஒழுங்குமுறை வலிமை மூலம் சர்வதேச வர்த்தகத்தில் அதன் செல்வாக்கை வெளிப்படுத்தி வருகிறது. உணவு மற்றும் இரசாயனங்கள் முதல் பொறியியல் பொருட்கள் வரை, ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அவை அதிக இணக்கச் சுமை காரணமாக ஏற்றுமதியாளர்களை ஊக்கப்படுத்துவதில்லை.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA), இந்தியாவிற்கு அதன் வேகமாக வளர்ந்துவரும் நுகர்வோர் சந்தையைப் பயன்படுத்தி, வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பெற்ற லாபங்களை மாற்றியமைக்கக்கூடிய ஐரோப்பிய ஒன்றியம் (EU) தரநிலைகளுக்கு ஒரு தீர்வைக் காண ஒரு சட்டப்பூர்வ வாய்ப்பை வழங்குகிறது என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்தனர். சட்ட ஒப்பந்தத்தின்கீழ் ஐரோப்பிய ஒன்றியம் விதிமுறைகளுக்கு தீர்வு காணப்படாதது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகத்தில் கணிசமான சமச்சீரற்றத் தன்மையை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
முன்னாள் வருவாய் சேவை அதிகாரியும், ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையாளருமான சங்கீதா காட்போல், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், இந்தியாவின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% ஏற்கனவே வர்த்தக ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் 1%-க்கும் குறைவான வரிகளை எதிர்கொள்கிறது என்று கூறினார். மேலும், பரந்த அளவிலான பொருட்களுக்கு அதிக வரிகளைக் குறைப்பதன் மூலம் இந்தியா வழங்கும் சலுகைகளுடன் ஒப்பிடும்போது, தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்திடப்படும்போது இந்தியப் பொருட்கள் குறிப்பிடத்தக்க சந்தை அணுகலைப் பெறாது என்று கூறினார்.
இந்திய ஏற்றுமதிகளுக்கு கடுமையான சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பாதுகாப்புத் தேவை என்று காட்போல் மேலும் கூறினார். இந்த விதிகள் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (Small and Medium-sized Enterprises (SME)) மீது அழுத்தத்தை உருவாக்கி வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு விலக்கு அளித்துள்ளது என்று அவர் கூறினார். வளரும் நாடுகளை கடுமையான விதிகளைப் பின்பற்றச் செய்யும் அதேவேளையில் பெரியளவில் மாசுபடுத்துபவர்களுக்கு ஒரு சிறப்பு நன்மையை வழங்குவது தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து (FTA) இந்தியா பெறும் எந்தவொரு கட்டண சலுகைகளையும் குறைக்கக்கூடும்.
கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM))
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஐரோப்பிய ஒன்றியம் உலகின் முதல் கார்பன் வரியை அமல்படுத்தத் தொடங்கியது. அதன் தற்போதைய வடிவத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தைவிட குறைந்த சுற்றுச்சூழல் விதிமுறைகளைக் கொண்ட நாடுகளிலிருந்து சிமென்ட், எஃகு, அலுமினியம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், காகிதம், கண்ணாடி, இரசாயனம் மற்றும் உரங்கள் போன்ற மின்சாரத் துறை மற்றும் ஆற்றல் மிகுந்த தொழில்துறை துறைகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) கார்பன் தொடர்பான கட்டணத்தைப் பயன்படுத்தும்.
ஆனால் கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM), ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டமியற்றுபவர்களுக்கு வரி விதிக்கப்படும் பட்டியலில் மேலும் பல பொருட்களைச் சேர்க்க அனுமதிக்கிறது. இந்தியா பெரும்பாலும் அலுமினியம், இரும்பு மற்றும் எஃகு ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்கிறது. அவை ஒழுங்குமுறை காரணமாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 மற்றும் 2025 க்கு இடையிலான கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறையின் (CBAM) மாற்றக் காலத்தில் இந்தியாவின் எஃகு ஏற்றுமதி ஏற்கனவே குறையத் தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழையும் இந்திய எஃகு மற்றும் அலுமினியத்தின் ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் கார்பன் வரி விதிக்கப்படுகிறது. உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி (Global Trade Research Initiative (GTRI)) என்ற சிந்தனைக் குழுவின்படி, ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதியாளர்கள் கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) வரியைச் செலுத்த ஏதுவாக, பல இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்கள் விலைகளை 15 முதல் 22 சதவீதம் வரை குறைக்க வேண்டியிருக்கலாம்.
ஐரோப்பிய ஒன்றியம் அதன் புதிய மறுசுழற்சி கொள்கையின்கீழ் ஸ்கிராப் ஏற்றுமதியையும் (exports of scrap) கட்டுப்படுத்துவதால், கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) ஒரு வரி அல்லாத தடையாக செயல்படுவதாக இந்திய ஏற்றுமதியாளர்கள் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளனர்.
குறைந்த கார்பன் எஃகு உற்பத்திக்கான முக்கியமான உள்ளீடான எஃகு ஸ்கிராப்பை உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய காடழிப்பு ஒழுங்குமுறை
ஐரோப்பிய ஒன்றியத்தின் காடழிப்பு ஒழுங்குமுறை (European Union’s Deforestation Regulation (EUDR)) ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்கப்படும் பொருட்கள் காடழிக்கப்பட்ட நிலத்திலிருந்து வருவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது முதலில் டிசம்பர் 2024-ல் தொடங்க திட்டமிடப்பட்டது. ஐரோப்பிய நாடாளுமன்றம் அதை டிசம்பர் 2026 வரை தாமதப்படுத்த முடிவு செய்தது.
உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சியின் (GTRI) படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் காடழிப்பு ஒழுங்குமுறை (EUDR) இந்தியாவின் விவசாய ஏற்றுமதியை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மதிப்பு $1.3 பில்லியன் ஆகும். இது இந்தியாவின் அதிக காடழிப்பு விகிதம் காரணமாக போட்டியிடும் நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்வதைவிட கடுமையாக இருக்கும். இறுதிப் பொருளை மட்டும் சரிபார்க்கும் தரநிலைகளைப் போலன்றி, ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகள் சிக்கலான இணக்கத்தைக் கோருகின்றன. இந்த விதிகள் இறக்குமதி செலவுகளை உயர்த்துவதற்கும் ஐரோப்பிய ஒன்றிய உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்கும் வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தியாவில் தற்போது இணக்கத் தரநிலைகள் இல்லை என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் காடழிப்பு ஒழுங்குமுறை (EUDR) உணவுப் பொருட்களின் ஏற்றுமதியில் சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏனெனில், ஒழுங்குமுறைக்கு விநியோகர்கள் விவரங்கள் மற்றும் உற்பத்தியின் முகவரிகள் உட்பட விரிவான இணக்க நடைமுறைகள் தேவைப்படுகின்றன. இந்தியாவில் சாகுபடியின் பெரும்பகுதி சிறு விவசாயிகளால் செய்யப்படுகிறது. இது மூலத்தைக் கண்டறிவதை கடினமாக்குகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் காடழிப்பு ஒழுங்குமுறை (EUDR) பல நாடுகளை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காடழிப்புச் சட்டம் தொடர்பாக இந்தோனேசியா ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியம் அதன் புதிய காடழிப்புச் சட்டத்தின் மூலம் "ஒழுங்குமுறை ஏகாதிபத்தியத்தை" நடத்துகிறது என்று கூறியுள்ளது.
நிறுவன நிலைத்தன்மை குறித்த உரிய விடாமுயற்சி
பெருநிறுவன நிலைத்தன்மை தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய உத்தரவு (Corporate Sustainability Due Diligence (CSDD)) ஜூலை 2024-ல் தொடங்கியது. இது 2027 முதல் அமலுக்கு வரும். மேலும் 2029-ம் ஆண்டளவில், நிறுவனங்கள் தங்கள் மதிப்புச் சங்கிலிகளை பகுப்பாய்வு செய்து மனித உரிமை மீறல்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் ஊழல் போன்ற சாத்தியமான அபாயங்கள் மற்றும் தாக்கங்களை அடையாளம் காண வேண்டும். இந்த செயல்முறை, விநியோகர்கள் மற்றும் பிற வணிக கூட்டமைப்புகள் உட்பட பல்வேறு ஆதாரங்களில் இருந்து தரவைச் சேகரித்து பகுப்பாய்வு செய்ய வணிகங்களை கட்டாயப்படுத்தும். இது தரவுப் பாதுகாப்பு குறித்த இணக்கத்தையும் கவலைகளையும் எழுப்புகிறது.
பெருநிறுவன நிலைத்தன்மை தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய உத்தரவு (CSDD) பொறுப்பான வணிக நடத்தையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், ஆனால் விநியோகர்களின் தரவு உணர்திறன் வாய்ந்தது என்றும் அதைப் பகிர்வது வணிக ஆபத்து என்றும் இந்திய உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொள்ளும் அறிக்கையிடல் தரநிலைகளை அரசாங்கம் கொண்டு வரலாம் என்றும், தரநிலைகளில் ஒருங்கிணைப்பு இந்திய உற்பத்தியாளர்கள் தரநிலைகளுடன் ஒத்துப்போக உதவும் என்றும் தொழில்துறையினர் பரிந்துரைத்துள்ளனர்.
தொழில்துறை முடுக்கி சட்டம் (Industrial Accelerator Act)
இந்த ஆண்டு ஜனவரியில் முன்மொழியப்படும் என்று எதிர்பார்க்கப்படும் தொழில்துறை முடுக்கி சட்டம் (Industrial Accelerator Act), குறைந்தபட்ச உள்நாட்டு மதிப்பு கூட்டலை கட்டாயப்படுத்தும் உள்ளூர் உள்ளடக்க விதிமுறைகளை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. இது இறக்குமதிகள்மீது அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். இந்திய நிபுணர்கள் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியம் நீண்ட காலமாக, உள்ளூர் உள்ளடக்க விதிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டாம் என்று மற்ற நாடுகளை வற்புறுத்தி வருகிறது. இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியமே அத்தகைய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தச் சட்டம் தூய்மையான, மீள்திறன் கொண்ட, சுழற்சி முறை மற்றும் இணையப் பாதுகாப்புத் தரங்களைக் கொண்டிருக்கும். இது ஐரோப்பிய ஒன்றியத்தில் தயாரிக்கப்பட்ட தூய்மையான தயாரிப்புகளுக்கான தேவையை அதிகரிக்கவும், அதிக ஆற்றல் தேவைப்படும் தொழில்களுக்கு ஒரு தூய்மையான ஐரோப்பிய விநியோகத்தை உறுதி செய்யவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தச் சட்டம் ஒரு குறைந்த கார்பன் முத்திரையை உருவாக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் கூறியது. இந்த முத்திரை முதலில் எஃகு மற்றும் பின்னர் சிமெண்ட்டை உள்ளடக்கும். இது நுகர்வோர் பொருட்களின் கார்பன் தடம் பற்றி அறிய உதவும்.
Original Article : India-EU FTA: Why EU’s ever-growing regulations are India’s biggest challenge & deal needs to address them. -Ravi Dutta Mishra