'எப்போதும் இயங்கும்' பொருளாதாரத்தில் பணி நேரத்திற்கு பிந்தைய தொடர்பைத் துண்டிக்கும் உரிமை -சஷி தரூர்

 அதிவேகமாக இணைக்கப்பட்ட மற்றும் நவீன பொருளாதாரத்தில் சராசரி தொழிலாளியைப் பாதுகாப்பதில் இந்தியாவின் சட்டக் கட்டமைப்பு இன்னும் பலவீனமாகவே உள்ளது.


டிஜிட்டல் யுகத்தில், ஸ்மார்ட்ஃபோன்கள், லேப்டாப்கள், மற்றும் உடனடி மின்னஞ்சல் (instant emails) போன்ற கருவிகள், ஒரு காலத்தில் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டவை. ஆனால், இன்று அவை 24 மணி நேரமும் இயங்கும் பணி மேற்பார்வையாளர்களாக மாறிவிட்டன. இவை வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையேயான எல்லையைக் குறைத்து, மாலை நேரங்கள், வார இறுதி நாட்கள், மற்றும் விடுமுறை நாட்களைக்கூட வேலை நேரமாக மாற்றிவிட்டன. இந்தத் தொடர்ச்சியான அணுகுமுறை என்பது அர்ப்பணிப்பின் அடையாளம் அல்ல, மாறாக ஒரு வளர்ந்து வரும் சிக்கலாகக் கருதப்படுகிறது. இது இந்திய பணியாளர்கள் மத்தியில் தெளிவாகத் தெரிகிறது. இனியாவது, இந்தியா தனது குடிமக்களுக்கு ஒரு அடிப்படை உரிமையை முறைப்படி அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது: தொடர்பைத் துண்டிக்கும் உரிமை (Right to Disconnect).


இந்தக் கருத்தை ஆதரித்து தனிநபர் மசோதாவை (Private Member’s Bill) முன்மொழிந்தவன் என்ற முறையில், இது ஒரு முற்போக்கான தொழிலாளர் சீர்திருத்தம் மட்டுமல்ல, பொது சுகாதாரம், நீண்டகாலப் பொருளாதார உற்பத்தித்திறன் மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்குத் தேவையான தேசியத் தேவையும் கூட என்று நான் நம்புகிறேன். இந்தியாவின் மிக மதிப்புமிக்க வளமான  நாட்டின் மக்கள் – அதிகமான பணிச்சுமை மற்றும் சோர்வால் தொடர்ந்து பாதிக்கப்பட்டால், இந்தியா தனது உலகளாவிய இலக்குகளை அடைய முடியாது.

இந்தியாவில் தாங்க முடியாத வேலை அழுத்தம்


இந்தத் தரவுகள் அதிர்ச்சியூட்டும் உண்மையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization  (ILO)) தரவுகளின்படி, இந்திய ஊழியர்களில் 51% பேர் வாரத்திற்கு 49 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கிறார்கள் என்றும் இதன் மூலம் நீண்ட வேலை நேரங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த வேலை அழுத்தத்தைத் தாங்குவது நீண்டகாலத்திற்கு நிலைக்காது. இதன் மனித இழப்பு மிக அதிகமாகும், அதாவது, 78% இந்திய ஊழியர்கள் வேலை தொடர்பான மனச்சோர்வு அடைந்ததாகக் கூறுகின்றனர். இது உடல் மற்றும் மனரீதியான சோர்வுக்கு வழிவகுக்கிறது.


இந்தத் தொடர்ச்சியான அதிக வேலைப்பளு சோர்வைத் தாண்டி, தீவிரமான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. மோசமான வேலை-வாழ்க்கைச் சமநிலை இரத்த அழுத்தம் (Hypertension), நீரிழிவு (Diabetes), பதட்டம் (Anxiety) மற்றும் மனச்சோர்வு (Depression) போன்ற வாழ்க்கைமுறை நோய்களுக்குக் காரணமாகிறது. இந்தச் சிக்கல்கள் தனிநபர்களை மட்டும் பாதிக்காமல், சுகாதார அமைப்பிற்குச் சுமையை ஏற்படுத்தி, நிறுவனங்களின் உற்பத்தித்திறனைக் குறைப்பதன் மூலம் சமூகத்தையும் பாதிக்கின்றன. அதிகநேரம் வேலை செய்யும் ஊழியர்கள் குறைவான படைப்பாற்றல் உடையவர்களாகவும், அதிகப் பிழைகளைச் செய்பவர்களாகவும் மற்றும் குறைவான உற்பத்தித் திறன் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். வேலையின் தரத்தைவிட நேரத்தைக் கொண்டு அளவிடுவது காலாவதியானது மற்றும் எதிர்மறையான விளைவைத் தரக்கூடியது. 2024-ஆம் ஆண்டில் அதிக வேலைப்பளுவால் இறந்த Ernst & Young (EY) நிறுவனத்தின் இளம் ஊழியரான அன்னா செபாஸ்டியன் பேரயில் (Anna Sebastian Perayil) என்பவரின் மரணம் இந்த ஆபத்தை எடுத்துக்காட்டியது. தேசிய மனநல ஆய்வின்படி, 24×7 டிஜிட்டல் அணுகல் கிடைக்கும் தன்மைக்கான எதிர்பார்ப்பால் தூண்டப்படும் வேலை தொடர்பான மன அழுத்தம், மனநல வழக்குகளில் 10-12% பங்களிக்கிறது. இந்தச் சிக்கலை புறக்கணிப்பது தேசிய நலனைப் புறக்கணிப்பதற்குச் சமமாகக் கருதப்படுகிறது. 


சமீபத்திய சீர்திருத்தங்கள் இருந்தபோதிலும், நவீன, டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்ட பொருளாதாரத்தில் இந்தியாவின் சட்டக் கட்டமைப்பு தொழிலாளர்களைப் போதுமான அளவு பாதுகாக்கத் தவறுகிறது. தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டமானது, 2020 (Occupational Safety, Health, and Working Conditions Code, 2020) பாரம்பரியமான "தொழிலாளர்களின்" வேலை நேரத்தை வரம்பிற்குள் கொண்டு வந்தாலும், ஒப்பந்த, ஃப்ரீலான்ஸ் (freelance) மற்றும் ஜிக் தொழிலாளர்கள் (gig workers) உட்பட பல "ஊழியர்களை" இது பெரும்பாலும் விலக்குகிறது. இதன் விளைவாக, ஒரு பெரிய அளவிலான மற்றும் பாதிக்கப்படக்கூடிய பணியாளர் பிரிவினர் போதுமான பாதுகாப்பு இல்லாமல் அதிக வேலை நேரங்களை எதிர்கொள்கின்றனர். நள்ளிரவுக் கால மின்னஞ்சல்களுக்குப் பதிலளிக்கத் தவறினால் தண்டனை அல்லது வேலை இழப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் ஊழியர்கள் இருக்கும்போது, அதிகார சமநிலை பணியமர்த்தும் நிறுவனங்களுக்குச் சாதகமாக உள்ளது என்பது தெளிவாகிறது.


ஒரு உலகளாவிய பிரச்சினை


முன்மொழியப்பட்ட சட்ட மசோதா இந்த அடிப்படை குறைபாட்டை சரிசெய்ய முயல்கிறது. அனைத்து ஊழியர்களுக்கும் வேலை நேரங்களை தெளிவாக வரையறுத்து கட்டுப்படுத்த, சட்டத் தொகுப்பை திருத்துவது அவசியமாகும். இந்த மசோதா இரண்டு முக்கிய பாதுகாப்புகளை உறுதி செய்வதன் மூலம் "தொடர்பைத் துண்டிக்கும் உரிமை" (Right to Disconnect) என்பதை சட்டபூர்வமாக நிறுவுவதற்கான  முயற்சியை மேற்கொள்கிறது. முதலாவதாக, ஊழியர்கள் தங்களின் நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரத்திற்கு வெளியே, வேலை சம்பந்தமான செய்திகளுக்குப் பதிலளிக்காததற்காக, தண்டிக்கப்படவோ, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவோ, அல்லது சமமற்ற முறையில் நடத்தப்படவோ கூடாது. இரண்டாவதாக, தொழிலாளர்களின் உரிமைகள் மீறப்படும் புகார்களைக் கையாள்வதற்கும், வழக்குகளைத் தீர்ப்பதற்கும் ஒரு சரியான அமைப்பு இருக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சேர்ந்து, வேலையில் கண்ணியத்தை மீட்டெடுக்கவும், ஓய்வுக்கான உரிமையைப் பாதுகாக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இதன் மூலம், தனிநபர்கள் தங்களது தொழில் வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகளுக்குப் பயப்படாமல், தங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது.


இந்தியாவைத் தவிர வேறு பல நாடுகளும் இந்த “எப்பொழுதும் இயங்கும்” பொருளாதாரத்தின் அழுத்தங்களை எதிர்கொள்கின்றன. இது ஒரு உலகளாவிய பிரச்சனையாகக் கருதப்படுகிறது. இதற்கு ஒரு சட்டரீதியான தீர்வு தேவைப்படுகிறது. இந்தத் தேவையை ஏற்கனவே அங்கீகரித்து, மற்ற நாடுகள் பின்பற்றுவதற்கு ஒரு முன்மாதிரியாக பல நாடுகள் திகழ்கின்றன. 2017-ஆம் ஆண்டில் “தொடர்பைத் துண்டிக்கும் உரிமை” (right to disconnect) என்பதை அறிமுகப்படுத்தியதன் மூலம் பிரான்ஸ் நாடு இந்தப் பிரச்சனைக்கான தீர்வுக்கு வழிகாட்டியது. அதிலிருந்து, போர்ச்சுகல், இத்தாலி, அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்கள் தொழிலாளர் சட்டங்களில் இதேபோன்ற பாதுகாப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளன.


இந்தச் சட்டங்கள், வேலை நேரம் முடிந்த பிறகு டிஜிட்டல் தகவல் தொடர்பைக் கட்டுப்படுத்துவதற்கான தெளிவான விதிகளைப் பேச்சுவார்த்தை மூலம் நிர்ணயிக்க நிறுவனங்களைக் கட்டாயப்படுத்துகின்றன. இது, தனிப்பட்ட நேரத்தை மதிப்பது பொருளாதார வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது, மாறாக நீண்டகால மற்றும் நிலையான வளர்ச்சியை ஆதரிக்கிறது என்பதை மிகவும் முன்னேறிய பொருளாதாரங்கள்கூட அங்கீகரிக்கின்றன என்பதைக் காட்டுகிறது. ஒரு மின்னஞ்சலுக்கு மறுநாள் விடையளித்தால் வேலை பாதிக்கப்படும் என்ற அச்சத்திலிருந்து தொழிலாளர்கள் விடுபட வேண்டும்.


ஆனாலும், இந்தச் சட்டம் ஒரு ஆரம்பப்புள்ளி மட்டுமே. "வேலை தொடர்பைத் துண்டிக்கும் உரிமை" (Right to Disconnect) என்றால், ஊழியர்கள் தங்கள் வழக்கமான வேலை நேரத்திற்குப் பிறகும் கட்டாயமாகத் தொடர்பில் இருக்க வேண்டியதில்லை. அப்படித் தொடர்பில் இருந்தால், அது வேலையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் பிரிக்கும் எல்லையைக் குழப்பி, மன அழுத்தத்தையும் சோர்வையும்  அதிகரிக்கும் என்கின்றனர். சட்டம் பாதுகாப்பு அளித்தாலும், உண்மையான மாற்றத்திற்குக் வேலை செய்யும் இடத்தின் கலாச்சாரத்திலும் மாற்றம் தேவைப்படுகிறது.


தொடர்பைத் துண்டிக்கும் உரிமைக்கான வளர்ந்துவரும் எதிர்பார்ப்பு அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. கேரளாவைப் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே உள்ளூர் தனியார் துறைக்காகச் சட்டங்களை இயற்றியுள்ளன. இந்த மாநில அளவிலான முயற்சிகள் நேர்மறையானவை என்றாலும், சிக்கலின் அளவும், அதன் சிக்கலான தன்மையும் ஒரு சீரான, நாடுதழுவிய தீர்வை அவசியமாக்குகின்றன. இப்போது முன்மொழியப்பட்டுள்ள மசோதாவானது, இந்த உரிமையை அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடியதாக மாற்ற, தொழில் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணி நிலைமைகள் சட்டத்தைத் (2020) (Occupational Safety, Health, and Working Conditions Code, 2020) திருத்துகிறது. முக்கியமாக, இது தற்போதைய சட்டங்களின்கீழ் பெரும்பாலும் விலக்கப்படும் ஒப்பந்த மற்றும் பணியமர்த்தப்பட்ட (Gig) தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பை விரிவுபடுத்துகிறது. இந்த தேசிய கட்டமைப்பானது, கட்டாய மனநல ஆதரவு உட்பட, தொடர்பைத் துண்டிக்கும் உரிமையைத் தொழில் பாதுகாப்பின் ஒரு முக்கியப் பகுதியாக மாற்றுகிறது. மேலும், இது முதலாளியின் நடத்தையின் மீதான ஒரு குறுகிய கட்டுப்பாட்டைக் காட்டிலும், ஊழியர்களின் நலனுக்கான ஒரு விரிவான அர்ப்பணிப்பாக இதை மாற்றுகிறது.


மேற்கொள்ள வேண்டிய  நடவடிக்கைகள்


சட்டங்கள் மட்டும் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. சட்டம் செயல்பட வேண்டுமானால், அதற்குப் பின்னால் பணியாளர்கள் மற்றும் நிர்வாகம் ஆகிய இருவருக்கும் வலுவான விழிப்புணர்வுத் திட்டங்கள், ஆதரவுப் பிரச்சாரங்கள், மற்றும் உணர்வூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், தொடர்ந்து வேலையிடத்தில் இருப்பதுதான் உண்மையான உற்பத்தித்திறனைவிட மேலானது என்றும், நள்ளிரவு மின்னஞ்சல்களை அர்ப்பணிப்புக்கான அடையாளமாகக் கருதும் விஷத்தன்மை வாய்ந்த கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் அலுவலக நடைமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை. எனவே, ஆலோசனை மற்றும் உளவியல்ரீதியான உதவி உட்பட செயலில் உள்ள மனநல ஆதரவுக்கான ஏற்பாடுகள், பணியிட கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாற வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.


பணி அல்லாத நேரத்தில் தொடர்பைத் துண்டிக்கும் உரிமை என்பது ஒரு முதலீடு ஆகும். போதுமான ஓய்வு எடுத்த பணியாளர்கள் காலப்போக்கில் அதிகக் கவனத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், அர்ப்பணிப்புடனும் செயல்படுவார்கள் என்பதும் அங்கீகரிக்கப்படுகிறது. தொழிலாளர்களை உண்மையாக ஓய்வெடுக்க அனுமதிப்பது என்பது வெறும் வேலை நேரத்தைக் குறைப்பது மட்டுமல்ல; அவர்கள் செய்யும் வேலையின் தரத்தை இது வெகுவாக மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. 


வேலை-வாழ்க்கை சமநிலைக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்புகளை அறிமுகப்படுத்துவது, அதாவது 'தொடர்பைத் துண்டிக்கும் உரிமை' (right to disconnect) மற்றும் வேலை நேரத்திற்கான வரம்புகள் போன்றவற்றைச் சேர்ப்பது, இந்தியாவின் வேலைச் சூழலை மேம்படுத்துவதற்கு ஒரு விரிவான அணுகுமுறையை உருவாக்கும். ஊழியர்களின் உடல் மற்றும் மன நலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், நீண்டகாலத்திற்கு இந்தியாவின் பணியாளர்கள் ஆரோக்கியமானவர்களாகவும், நிலையானவர்களாகவும், அதிக உற்பத்தித் திறன் கொண்டவர்களாகவும் மாறுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


நமக்கு முன்னால் இருக்கும் வழிகள் மிகத்தெளிவாக உள்ளது: நம் இளம் தலைமுறையின் ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் அச்சுறுத்தும் தொடர்ச்சியான அதிக வேலைப்பளுவின் (burnout) பாதையில் நாம் தொடரலாம்; அல்லது, நம் உழைக்கும் சக்தியை விடுவிக்கவும், இந்தியாவின் பொருளாதாரம் வேகத்தை  மட்டுமல்லாமல், அதன் மக்களின் பலத்தையும் நலத்தையும் பாதுகாக்கிறது என்பதை உறுதிசெய்ய இந்தச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, மற்றும் அதிக உற்பத்தித்திறன் கொண்ட தேசத்தை நோக்கி இந்த அவசியமான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.


சசி தரூர், திருவனந்தபுர மக்களவைத் தொகுதியில் இருந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர், விருதுபெற்ற எழுத்தாளர், முன்னாள் மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழுவின் தலைவர் ஆவார்.

Original Article :  The right to disconnect in an ‘always-on’ economy -Shashi Tharoor

Share: