"சோமநாத்" என்ற வார்த்தையைக் கேட்கும்போதே, நம் மனதிலும் இதயத்திலும் ஒருவிதப் பெருமை உணர்வு ஏற்படுகிறது. இது இந்தியாவின் ஆன்மாவின் அழிவில்லாத பிரகடனமாகும். இந்த கம்பீரமான திருக்கோவில், இந்தியாவின் மேற்கு கடற்கரையில், குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபாஸ் படான் (Prabhas Patan) என்ற இடத்தில் அமைந்துள்ளது. துவாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம் (Dwadasha Jyotirling Stotram) இந்தியா முழுவதும் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. "சௌராஷ்ட்ரே சோமநாதம் சா" (Saurashtre Somanatham Cha) என்ற வரியுடன் இந்த ஸ்தோத்திரம் தொடங்குகிறது. இதுவே, சோமநாதர் முதன்மையான ஜோதிர்லிங்கமாக இருப்பதன் நாகரீக மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.
முக்கிய அம்சங்கள்:
— 2026-ஆம் ஆண்டு சோம்நாத் கோவிலுக்கு முக்கியமான ஆண்டு. இக்கோவில் மீது முதல் தாக்குதல் நடந்து 1,000 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கி.பி. 1026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்தான், கஜினி முகமது வன்முறையான படையெடுப்பு நடத்தி, இந்த மாபெரும் கோவிலை அழிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
— ஆயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும், சோம்நாத் கோவிலின் பழையப் பெருமையை மீட்டெடுக்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாக, இன்றும் அக்கோவில் எப்போதும்போல பிரமாண்டமாக நிற்கிறது. அத்தகைய மைல்கல்களில் ஒன்று 2026-ஆம் ஆண்டில் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 1951-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி நடந்த ஒரு விழாவின்போது, அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் முன்னிலையில், சீரமைக்கப்பட்ட இக்கோவில் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டது.
— ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1026-ஆம் ஆண்டு நடந்த சோமநாதபுரத்தின் முதல் படையெடுப்பு, அந்த நகரத்து மக்கள்மீது ஏவப்பட்ட கொடுமைகள், மற்றும் அக்கோயிலுக்கு இழைக்கப்பட்ட பேரழிவு ஆகியவை பல்வேறு வரலாற்றுப் பதிவுகளில் மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
— இந்தியாவையும் அதன் மக்களின் மன உறுதியையும் அந்த நிகழ்வு எவ்வளவு பாதித்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். மிக முக்கியமாக, சோமநாதர் கோவில் ஆன்மீகரீதியில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அது கடற்கரையோரம் அமைந்திருந்ததால், செல்வம் மிக்க அந்தச் சமூகத்துக்கு பெரும் பொருளாதார வலிமை அளித்தது. அதன் வணிகர்களும் மாலுமிகளும் கோவிலின் பெருமையைத் தொலைதூர நாடுகளுக்கும் எடுத்துச் சென்றனர்.
— 1890களில், சுவாமி விவேகானந்தர் சோமநாதரைப் பார்வையிட்டார், அந்த அனுபவம் அவரை நெகிழச் செய்தது. 1897-ஆம் ஆண்டு சென்னையில் ஒரு சொற்பொழிவின் போது அவர் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
— இந்திய நாட்டின் விடுதலைக்குப் பிறகு சோமநாதர் கோயிலை மீண்டும் கட்டும் புனிதப் பொறுப்பு சர்தார் வல்லபபாய் படேலுக்கு கிடைத்தது. 1947-ஆம் ஆண்டு தீபாவளி சமயத்தில் அவர் அங்கு சென்றபோது, அந்த இடம் அவரைக் கவர்ந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, கோயில் அந்த இடத்திலேயே மீண்டும் கட்டப்படும் என்று அறிவித்தார். இறுதியில், 1951-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி, பிரமாண்டமான சோமநாதர் கோயில் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டது. அப்போது குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அந்த விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
— பண்டைய காலம் முதலே, சோமநாதம் பல்வேறு தரப்பு மக்களையும் ஒன்றிணைத்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, ‘கலிகால் சர்வக்ஞ’ என்ற பட்டம் பெற்ற ஹேமச்சந்திராச்சாரியார் எனும் மதிப்புமிக்க சமணத் துறவி சோமநாதத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
— இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள கோயில்கள், குறைந்தது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு முதல் தெளிவான மற்றும் ஒரே மாதிரியான வடிவில் தொடர்ந்து இருந்து வந்துள்ளன. ஆனால், இந்தக் கோயில் மரபு அதற்கும் மிக முந்தைய காலத்துக்கு கட்டிட அமைப்பாகக் கருதப்படுகிறது. அப்போது கோயில்கள் தற்காலிகமாகவோ அல்லது எளிதில் அழியக்கூடிய பொருட்களாலோ கட்டப்பட்டிருந்தன. கோயில்களுடன் தொடர்புடைய சில கலைப்பொருட்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. உதாரணமாக, கி.மு. 120-ஆம் ஆண்டு தேதியிடப்பட்ட பெஸ்நகரின் கருடத்தூண் மற்றும் கி.மு. 80-ஆம் ஆண்டில் குடிமல்லத்தின் சிவலிங்கம் ஆகியவை இந்த மரபின் தொன்மையை வெளிப்படுத்துவதாக அமைகின்றன.
— இந்தியக் கோயில் கட்டிடக்கலை, பொதுவாக இரண்டு பெரிய மரபுகளால் வகைப்படுத்தப்படுகிறது. அவை நாகரா (Nāgara) அல்லது வட இந்தியக் கட்டுமான மரபு, மற்றும் திராவிட (Draviḍa) அல்லது தென் இந்தியக் கட்டுமான மரபு ஆகும். இவை புவியியல் ரீதியாக இரண்டு மரபுகளாக வரையறுக்கப்பட்டிருந்தாலும், இந்த இரண்டு பகுதிகளுக்கு மட்டுமே அவை உரித்தானவை அல்ல என்றும் தெரிவிக்கின்றனர்.
— இவ்விரண்டு மரபுகளுடன் சேர்த்து, இந்தியக் கலை நூல்களில் "வேசரம்" அல்லது கலப்பினம் (Hybrid) என்று அழைக்கப்படும் மூன்றாம் வகையான கட்டிட மரபும் அடங்குவதாகக் கருதுகின்றனர். இந்தச் சொல்லின் வேர்ச்சொல் காரணமாக, கடந்தகால அறிஞர்கள் இந்த வகையை வடக்கு மற்றும் தெற்கு கலை மரபுகளின் கலவை என்று புரிந்துகொண்டு, இது புவியியல் ரீதியாகப் பொருத்தமான தக்காணப் பகுதியுடன் (Deccan region) தொடர்புடையதாகக் கருதினர்.
Original Article : What is the significance of Somnath Temple in India’s cultural history? -Roshni Yadav