SHANTI மசோதா என்ன மாற்றங்களைச் செய்கிறது? -சாயீ பாண்டே

 இந்தியாவின் அணுசக்தித் துறை தற்போது எவ்வளவு வெளிப்படையாக உள்ளது? தனியார் நிறுவனங்கள் என்ன பங்கு வகிக்கும்? அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திற்கு (Atomic Energy Regulatory Board (AERB)) தற்போது என்ன அதிகாரங்கள் உள்ளன? இந்தியாவின் அணுசக்தித் திட்டம் எவ்வளவு தற்சார்புடையது? அணுசக்திப் பொறுப்புடைமைச் (nuclear liability) சட்டம் எவ்வாறு மாறியுள்ளது? எதிர்க்கட்சிகள் ஏன் 'SHANTI' மசோதாவை எதிர்க்கின்றன?


தற்போதைய செய்தி:


திருத்தங்கள் மற்றும் ஒரு தேர்வுக் குழுவின் மறு ஆய்வுக்கான எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு மத்தியிலும், நாடாளுமன்றம் இந்தியாவில் அணுசக்தியை நிலையான முறையில் பயன்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் (SHANTI) மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்புத் தேவைகளை குறைப்பதற்காக, சிறிய மட்டு அணு உலைகள் மற்றும் மேம்பட்ட அழுத்தப்பட்ட நீர் உலைகளுக்காக ரூ.20,000 கோடியை ஒதுக்கி, அரசாங்கம் அணுசக்தி இயக்கத்திற்கு ஊக்கமளித்துள்ளது. இந்தியாவின் அணுசக்தித் துறை 1956ஆம் ஆண்டு  முதல் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அணுசக்தி சட்டம் (Atomic Energy Act), 1962 மற்றும் அணுசக்தி சேதங்களுக்கான குடிமைப் பொறுப்புச் சட்டம் (Civil Liability for Nuclear Damages Act), 2010 போன்ற முந்தைய சட்டங்களின் கீழ் தனியார் மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்பு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்தியாவின் கடுமையான பொறுப்புச் சட்டங்கள் காரணமாக தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவைத் தவிர்த்தன.


SHANTI மசோதா என்றால் என்ன?


SHANTI மசோதா என்பது ஒரு விரிவான சட்டமாகும். முன்னதாக, இந்தத் துறை முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததுடன், கடுமையான விதிமுறைகளையும் கொண்டிருந்தது. இந்த மசோதாவின் கீழ், இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களை சொந்தமாக வைத்துக்கொள்ளவும், கட்டவும், இயக்கவும் அனுமதி பெறலாம். வெளிநாட்டு நிறுவனங்களும் உபகரணங்களையும் சேவைகளையும் வழங்க அனுமதிக்கப்படுகின்றன.


SHANTI மசோதாவானது, அணு எரிபொருள் உற்பத்தி, கனநீர் உற்பத்தி, கதிரியக்கக் கழிவு மேலாண்மை, பாதுகாப்பு வழிமுறைகள், உரிமம் வழங்குதல் மற்றும் ராஜதந்திர மேற்பார்வை போன்ற முக்கியமான நடவடிக்கைகளின் மீது 51% அரசாங்கக் கட்டுப்பாட்டைப் கொண்டு, 49% வரை தனியார் நிறுவனங்கள் பங்குபெறுவதை அனுமதிக்கிறது.


இந்த மசோதா, அணு மின் நிலைய செயல்பாடுகளில் இந்திய அணு மின் கழகத்தின் (Nuclear Power Corporation of India Limited (NPCIL)) ஏகபோகத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறது. இது தனியார் நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சிகள் அணு மின் நிலையங்களை உருவாக்க, சொந்தமாக வைத்திருக்க மற்றும் இயக்க அனுமதிக்கிறது. எரிபொருள் உற்பத்தி, உபகரண உற்பத்தி, ஆலை செயல்பாடுகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் துறை பங்குபெறும். இது ஒரு பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியைப் (public-private partnership model) பின்பற்றும். இதில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்யும். அதேநேரத்தில் அரசாங்கம் இந்தச் செயல்முறையை மேற்பார்வையிடும்.


இந்த மசோதா, தனியார் நிறுவனங்கள் பங்கேற்க அனுமதிப்பதன் மூலமும், தெளிவான விதிகளை வழங்குவதன் மூலமும் மேம்பட்ட அணுசக்தி தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. இது சிறிய மட்டு உலைகளையும் (SMRs) இந்தியாவால் வடிவமைக்கப்பட்ட உலைகளுக்கு தேவையான ஆதரவை வழங்குகிறது. தூய்மையான ஆற்றலை மேம்படுத்தவும் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவுகிறது.


அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் பங்கு என்ன?


அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் (Atomic Energy Regulatory Board (AERB)), 1983ஆம் ஆண்டு அணுசக்தி சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டது. தற்போது ஒரு சட்டப்பூர்வ அதிகார அமைப்பாக மாற்றப்பட்டு, அரசாங்கத்திற்குப் பதிலாக நாடாளுமன்றத்திற்குப் மட்டும் பதிலளிக்கும் வகையில் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


அணுசக்தி பாதுகாப்பு, கதிர்வீச்சு பாதுகாப்பு, அவசரகால தயார்நிலை மற்றும் குடிமை அணுசக்தி நிறுவல்கள் முழுவதும் தர உத்தரவாதத்தை உறுதி செய்வதற்கு அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் பொறுப்பு வகிக்கிறது. இது பாதுகாப்பு நடவடிக்கைகள், உரிமங்கள் மற்றும் தரநிலைகளை வழங்குகிறது. அணுசக்தித் துறையின்கீழ் உள்ள அலகுகளுக்கு அணுசக்திச் சட்டத்தின் பிரிவு 23-ன் படி தொழிற்சாலைகள் சட்டம் (Factories Act), 1948-ன் தொழில்துறை பாதுகாப்பு விதிகளை நிர்வகிக்கிறது மற்றும் கதிர்வீச்சு அபாயங்களைத் தடுக்க ஆய்வுகளை நடத்துகிறது. தனியார் துறை பங்கேற்பு அதிகரிப்பதன் காரணமாக SHANTI மசோதாவின் கீழ் ஒழுங்குமுறை மேற்பார்வையை வலுப்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், ஒரு நிறுவனத்திற்கு அதிகப்படியான அதிகாரங்களை வழங்குவதாகக் கூறி விமர்சிக்கப்பட்டுள்ளது.




என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன?


இந்த மசோதா அணுசக்தித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை வெளிப்படையாக அனுமதிக்கவில்லை. தனியார் நிறுவனங்கள் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடமிருந்து அங்கீகாரத்தைப் பெறவேண்டும். கதிரியக்கப் பொருட்கள் மற்றும் கதிர்வீச்சு உற்பத்தி உபகரணங்களை உற்பத்தி செய்தல், வைத்திருத்தல், அப்புறப்படுத்துதல் வரை, கதிரியக்க வசதிகளை நிறுவுதல், இயக்குதல் அல்லது திரும்பப் பெறுதல் ஆகியவற்றுக்கு தேவையான அங்கீகாரத்தை பெற வேண்டும்.


செலவிடப்பட்ட எரிபொருள் மற்றும் உயர் மட்ட கதிரியக்கக் கழிவுகளை மீண்டும் செயலாக்குதல் மற்றும் நிர்வகித்தல்; கன நீர் உற்பத்தி மற்றும் மேம்படுத்துதல்; கதிரியக்கப் பொருட்களின் செறிவூட்டல் மற்றும் ஐசோடோபிக் பிரித்தல் போன்றவை அரசங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தச் சட்டம், அணுசக்தி விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதற்காக ஒரு அணுசக்தி பொறுப்புடைமை நிதியத்தையும் (nuclear liability fund) உருவாக்கியுள்ளது.


பொறுப்பு தொடர்பாக என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?


முந்தைய ஆட்சியுடன் ஒப்பிடும்போது, ​​சாந்தி மசோதா, இயக்குநர்களுக்கு பொறுப்பு வெளிப்படையானதாகவும் கணிக்கக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. பொறுப்பு வரம்புகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன: அதன்படி 3,600 மெகாவாட் திறன் கொண்ட பெரிய மின் நிலையங்களுக்கு ரூ.3,000 கோடி; 1,500-3,600 மெகாவாட் திறன் கொண்ட நடுத்தர மின் நிலையங்களுக்கு ரூ.1,500 கோடி; மற்றும் 150 மெகாவாட் திறன் கொண்ட சிறிய மட்டு உலைகளுக்கு ரூ.100 கோடி. கடுமையான மீறல் வழக்குகளில் சட்ட மீறல்களுக்கான அபராதம் ரூ.1 கோடியாக வரையறுக்கப்பட்டுள்ளது.


உத்தேச அணுசக்தி பொறுப்பு நிதியிலிருந்து கூடுதல் ஆதரவுடன், இயக்குநரின் உச்சவரம்பைத் தாண்டிய பொறுப்பை ஒன்றிய அரசு ஏற்கும். முன்னதாக, இயக்குநர்கள் குறைபாடுள்ள பாகங்கள், தவறான உபகரணங்கள், வடிவமைப்பு திறமையின்மை மற்றும் சேதத்தை ஏற்படுத்தும் வேண்டுமென்றே செய்யும் செயல்களுக்கு விநியோகஸ்தர்களை பொறுப்பாக்க முடியும். தற்போதைய மசோதா விநியோகஸ்தர் பொறுப்புணர்வை முற்றிலுமாக நீக்குகிறது.


அரசின் நிலைப்பாடு என்ன?


மின் ஆதாரங்களைப் பல்வகைப்படுத்துதல், புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் எரிபொருள் இறக்குமதிகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல் மற்றும் அணுசக்தி திறனை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதே ஒன்றிய அரசின் நோக்கமாகும்.


இந்தியாவின் மேம்பாட்டுக் குறியீட்டை அதிகரிப்பதற்கான முக்கிய இலக்குகளில் எரிசக்திப் பாதுகாப்பும் ஒன்றாகும். புவியியல் நிலைமைகளுக்கு உட்பட்ட சூரிய சக்தி மற்றும் காற்றாலை ஆற்றலுடன் ஒப்பிடும்போது, ​​இது 24 மணி நேரமும் தடையற்ற அடிப்படை மின்சாரம் வழங்குவதை உறுதி செய்கிறது. நிலக்கரியை இன்னும் அதிக அளவில் சார்ந்துள்ள எரிசக்தித் துறைக்கு இது ஒரு உந்துதலாக அமையும். இது தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்திற்கும் ஒரு மேம்பாட்டை உறுதி செய்கிறது.


அணுசக்தி மிகக் குறைந்த கார்பன் உமிழ்வுடன் சுத்தமான ஆற்றலை உறுதி செய்கிறது. இந்தியாவின் 2070ஆம் ஆண்டு நிகர பூஜ்ஜிய இலக்கை நோக்கி முன்னேற உதவுகிறது. இந்த மசோதா அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனான தாமதமான அணுசக்தி ஒப்பந்தங்களை மீண்டும் தொடங்கவும், ரஷ்யாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், ஒரு உலகளாவிய அணுசக்தி நாடாக இந்தியாவின் நற்பெயரை வலுப்படுத்தவும் உதவும்.


இந்தியாவுக்கு அணுசக்தி ஏன் தேவைப்படுகிறது?


புவியியல் மற்றும் தட்பவெப்பநிலை மாறுபாடுகள் காரணமாக இந்தியா சூரிய, காற்று மற்றும் நீர் மின்சக்தித் துறைகளில் பல்வேறு  சவால்களை எதிர்கொள்கிறது. மேலும், மின்சார உற்பத்திக்காக இன்னும் அதிக அளவில் நிலக்கரியையே சார்ந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சேமிப்பு மற்றும் மின்கட்டமைப்பு ஒருங்கிணைப்புச் செலவுகள் அதிகமாகவே உள்ளன.


எனவே, குறைந்த மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்திற்குத் தேவையான அடிப்படை மின் உற்பத்தித் திறன் இருப்பது முக்கியமானதாகும். வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கான எரிசக்திப் பாதுகாப்பை அடைவதற்கு, இந்தியா தனது அணுசக்தித் துறையை வலுப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும். மேலும், நுகர்வோருக்கு குறைவானதாகவும் நம்பகமானதாகவும் மின்சாரத்தை வழங்குவதற்கு, மின்சாரக் கலவையில் போதுமான அடிப்படை மின் உற்பத்தித் திறன் இருக்க வேண்டும். இதை அடைவதற்கு அணுமின் நிலையங்கள் சிறந்த வழிகளில் ஒன்றாகும்.


இந்தியாவின் அணுசக்தித் திட்டம் என்றால் என்ன?


இந்தியா, பரந்த தோரியம் இருப்புகளைப் பயன்படுத்தும் நோக்கத்துடன் கூடிய ஒரு எரிபொருள் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அணுசக்தித் திட்டத்தை உருவாக்கியுள்ளது. தற்போது, ​​இந்தியா  7 மின் நிலையங்களில் 25 அணு உலைகளை இயக்கி வருகிறது. இதில் 21 அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் மற்றும் நான்கு இலகு நீர் உலைகளும் அடங்கும். இவை அனைத்தும் இந்திய அணு மின் கழகத்தால் (Nuclear Power Corporation of India Limited (NPCIL)) நிர்வகிக்கப்படுகின்றன.


ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் புகழ்பெற்ற தகைசால் பேராசிரியரும், அணுசக்தி ஆணையத்தின் உறுப்பினருமான R.B. Grover-ன் கூற்றுப்படி, இந்தியாவில் போதுமான யுரேனியம் இல்லாததால், இந்திய அணுசக்தி கழகம் (Nuclear Power Corporation of India Limited) அழுத்தப்பட்ட கனநீர் உலைகளின் வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டில் தேர்ச்சி பெற்றுள்ளது. பாபா அணு ஆராய்ச்சி மையம், பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை மறுபயன்பாடு செய்வதற்கும், அணுக்கழிவுகளை நிர்வகிப்பதற்கும் வழிமுறைகளை உருவாக்கியுள்ளது. அந்த வகையில், அணுசக்தி உற்பத்தியில் இந்தியா சுதந்திரமாகவும் தன்னிறைவு பெற்றதாகவும் உள்ளது. இந்தியா தோரியத்தைப் பயன்படுத்துவதற்கான வேக அணு உலையைச் (fast breeder reactor) செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.




எதிர்க்கட்சிகள் மசோதாவை ஏன் கடுமையாக விமர்சித்தன?


இந்த மசோதா பொறுப்புணர்வைக் குறைக்கிறது. ஏனெனில், இது தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்ட அனுமதிக்கும் அதே வேளையில், அரசாங்கமும் பொதுமக்களும் அபாயங்களைச் வேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக  எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. குடிமை நீதிமன்றங்களை நாடிய பிறகும்கூட, வெளிநாட்டு நிறுவனங்கள் பொறுப்புணர்வையும் இழப்பீட்டையும் தவிர்த்த போபால் விஷவாயு துயரம் போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழும் என்ற அச்சம் நிலவுகிறது; மேலும், புதிய சட்டத்தின்படி அத்தகைய சட்டப்பூர்வ வழிமுறைகளும் கிடைக்காது. உண்மையான சேதங்களின் அளவு மற்றும் பரப்பளவோடு ஒப்பிடும்போது, ​​விநியோகஸ்தர்களின் பொறுப்பை நீக்குவதும், இயக்குநர்களின் பொறுப்பு மற்றும் அபராதங்களை ஒரு பெயரளவிலான தொகைக்கு வரம்பு நிர்ணயம் செய்வதும் நியாயமற்றதாகக் கருதப்படுகிறது. ‘மாசுபடுத்துபவரே இழப்பீடு செலுத்த வேண்டும்’ (polluter pays) என்ற கொள்கை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இது பொதுப் பாதுகாப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தனியார் நிறுவனங்களுக்கு விபத்துச் செலவுகள், பொதுப் பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் நீண்டகால அபாயங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. பணவீக்கம் அல்லது ஏதேனும் ஒரு தீவிர விபத்தின் சுகாதாரம், சுற்றுச்சூழல், வாழ்வாதாரச் செலவுகள் குறித்த நீண்டகால மதிப்பீடு இருந்தபோதிலும், நிறுவனத்தின் பொறுப்புக்கான உச்சவரம்பு 15 ஆண்டுகளாக மாறாமல் உள்ளது.


Fukushima மற்றும் Chernobyl-ல் போன்ற பேரழிவுகள், அணுசக்தி விபத்துக்கள் அதிக செலவு மிக்கவையாக இருக்கக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. உதாரணமாக, Fukushima-வில் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு, SHANTI மசோதாவில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பைவிட 700 மடங்கு அதிகமாக இருந்தது.


மசோதாவின் பிரிவு 39, 2005ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மீற முயல்கிறது. பொது நலன் மறுஆய்வு மற்றும் பொது மேல்முறையீட்டு வழிமுறைகளை நீக்க முயற்சிப்பதால் இது பல கவலைகளை எழுப்பியுள்ளது. இது அணுசக்தித் துறை தொடர்பான மிக முக்கியமான தகவல்களை - ஆலை விவரங்கள், செயல்பாடுகள், வழிமுறைகள், ஒழுங்குமுறை சமர்ப்பிப்புகள் மற்றும் அணுசக்தி பொருட்கள் பற்றிய தரவு உட்பட - 'கட்டுப்படுத்தப்பட்டதாக' மாற்றும். இது முன்மொழியப்பட்ட அமைப்பின் வெளிப்படைத்தன்மையை குறைக்கிறது மற்றும் பொறுப்புணர்வை கேள்விக்குள்ளாக்குகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, இந்தியாவின் பாதுகாப்பு, தேசிய நலன், வணிக இரகசியங்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகள் தொடர்பான தகவல்களை ஏற்கெனவே பாதுகாக்கிறது. இருப்பினும், பொதுப் பொறுப்புடைமைக்கோ அல்லது பொது நலனுக்கோ அது முக்கியமானது எனில், இந்தப் பாதுகாப்புகள் கேள்விக்குள்ளாக்கப்படலாம்.


பிரிவு 42, அணுசக்தித் துறை ஊழியர்களை இந்தியாவின் வழக்கமான தொழிலாளர் பாதுகாப்பு விதிகளிலிருந்து நீக்குகிறது. இது அவர்களின் உடல்நலம் மற்றும் பணி நிலைமைகளைப் பாதிக்கிறது. இதன் காரணமாக, சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் தேசிய மின்சார ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு உட்பட பத்து முக்கிய தொழிற்சங்கங்கள் இந்த மசோதாவை 'கடுமையானது'  (draconian) என்று விமர்சித்துள்ளன.


இந்தியாவிடம் சொந்த அணுசக்தித் தொழில்நுட்பம் இருந்தபோதிலும், இந்த மசோதா வெளிநாட்டு விற்பனையாளர்களுக்குச் சாதகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இந்தியாவிடம் அதிக அளவில் தோரியம் இருப்புக்கள் இருப்பதாகவும், அவை பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், தனியார் நிறுவனங்கள் இந்தியத் தொழில்நுட்பத்தையே பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.


இந்த மசோதாவுக்குப் பொது மக்கள் கருத்து கேட்பு, சுற்றுச்சூழல் அறிக்கைகளைப் பகிர்வது, சமூகத்தின் ஒப்புதல், வழக்கமான பாதுகாப்புத் தகவல்களை வழங்குவது அல்லது நாடாளுமன்றத்தின் ஆய்வு ஆகியவை தேவையில்லை.


பிரான்சில் அனைத்து அணு உலைகளும் அரசாங்கத்தால் இயக்கப்படுகின்றன என்பதை எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பைப் பணயம் வைத்து, லாபத்திற்கும் பணக்கார நிறுவனங்களுக்கும் சாதகமாக இந்த மசோதா இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.


சாய் பாண்டே அரசியல், நடப்பு நிகழ்வுகள், சர்வதேச உறவுகள் மற்றும் புவிசார் அரசியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு பகுதிநேர எழுத்தாளர் ஆவார்.

Original Article : What does the SHANTI Bill change? -Saee Pande

Share: