நகர்ப்புற தூய்மை ஆய்வு 2024-25-ன் முக்கிய அம்சங்கள் என்னென்ன? -ரோஷ்ணி யாதவ்

தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக (2023-ஆம் ஆண்டு வரை) இந்தூர் நகரம், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் 'ஸ்வச் சர்வேக்ஷன்' தரவரிசையில் இந்தியாவின் மிகத் தூய்மையான நகரமாக முதலிடம் பிடித்தது. மத்தியப் பிரதேசத்தின் வர்த்தகத் தலைநகரான இந்தூர் உட்பட சில நகரங்கள் இத்தரவரிசையில் தொடர்ந்து இடம்பிடித்தன. இதனால், நாட்டில் உள்ள ஏறத்தாழ 4,000 பிற நகரங்களுக்கு முதலிடம் பிடிக்கும் வாய்ப்பை உறுதி செய்ய 2024-ஆம் ஆண்டில் இந்தூர் போன்ற நகரங்களுக்கு தனிப் பிரிவு ஒன்றை அமைச்சகம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய அம்சங்கள்:


— சூப்பர் ஸ்வச் லீக் (Super Swachh League) என்று அழைக்கப்படும் புதிய பிரிவில் - இந்தூர், குஜராத்தின் சூரத் மற்றும் மகாராஷ்டிராவின் நவி மும்பையுடன் சேர்ந்து, 2024-2025 ஆம் ஆண்டில் மீண்டும் "மிகத் தூய்மையான நகரங்களுள் மிகத் தூய்மையானதாக" உருவெடுத்தது.


— முந்தைய ஆண்டுகளில் சிறந்த செயல்திறன் கொண்ட நகரங்கள் தேசிய தரவரிசையில் இருந்து விலக்கப்பட்டதால், அந்த ஆண்டின் “மிகத் தூய்மையான நகரம்” பட்டத்தை அகமதாபாத் பெற்றது குறிப்பிடத்தக்கது.


— இந்தூரின் சிறப்பான செயல்திறன் காரணமாக, மத்திய அமைச்சகத்தின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் -நகர்ப்புற 2.0 (Swachh Bharat Mission - Urban 2.0 (SBM-U 2.0)), செப்டம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில், தூய்மைத் தரவரிசையை மேம்படுத்த உதவும் நோக்கில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள டெபல்பூர் நகரத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


— இந்நிலையில், கடந்த வாரம் இந்தூரின் பகீரத்புரா பகுதியில் குடிநீர் கழிவுநீருடன் கலந்ததால், 10-க்கும் மேற்பட்டோர் இறந்தது மற்றும் பலர் நோய்வாய்ப்பட்டது, மேலும், சுகாதாரத் துறைத் தரவுகளின்படி 200-க்கும் மேற்பட்டோர் இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஆகிய சம்பவங்கள் நடந்தபோது, ​​நகரத்தின் "நாட்டிலேயே மிகத் தூய்மையான" என்ற அங்கீகாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.


— 2017-ஆம் ஆண்டு இந்தூர் முதல்முறையாக முதல் இடம் பிடித்தபோது, நகர்புற தூய்மை ஆய்வு (Swachh Survekshan) இரண்டாவது ஆண்டாக நடந்தது. அப்போது 434 நகரங்களை உள்ளடக்கிய இந்தத் தரவரிசையில், மதிப்பீடு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது: நகராட்சி ஆவணங்கள் (நகரங்கள் தாங்களே சமர்ப்பிக்கும் சுய அறிக்கைகள்), சுதந்திரமான கண்காணிப்பு, குடிமக்களின் கருத்து ஆகிய அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது. நகராட்சி ஆவணங்களுக்கு மொத்த மதிப்பெண்ணில் 45 சதவீதம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரிவு நகரின் சுத்தம் செயல்பாடுகளை அளவிடுவதற்காக வடிவமைக்கப்பட்டது. அதாவது: வீடு வீடாக குப்பை சேகரித்தல், குப்பைகளை சுத்தம் செய்து கொண்டு செல்லுதல், கழிவுகளை பதப்படுத்தி அகற்றுதல், திறந்தவெளி கழிப்பிடமற்ற (open-defecation free (ODF)) நிலை மற்றும் கழிப்பறை வசதிகள், தகவல், கல்வி மற்றும் நடத்தை மாற்ற பிரசாரம், திறன் மேம்பாடு உள்ளிட்ட இவை அனைத்தும் நகராட்சியின் சுய அறிக்கையின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டன.


— இந்தூர் நகரம் 900-க்கு 875 மதிப்பெண்கள் பெற்று ஒட்டுமொத்தப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. அடுத்த நிலை போட்டியாளரான போபால் 829 மதிப்பெண்கள் பெற்றது. ஆனால் 'தன்னிச்சையான கண்காணிப்பு' பிரிவில் போபால் (483) இந்தூரை (435) விட அதிக மதிப்பெண்கள் பெற்றது. இருப்பினும், 'பொதுமக்களின் கருத்து' பிரிவில் இந்தூர் 496 மதிப்பெண்களுடன் போபாலின் 487-மதிப்பெண்களைவிட முன்னிலை பெற்று, ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியல் தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டது. 2017-ஆம் ஆண்டின் நகர்ப்புற தூய்மை ஆய்வு அறிக்கையின்படி, இந்தூரில் 100 சதவீதம் வீடுதோறும் சேகரிக்கும் குப்பையை அங்கேயே (மூலத்தில்) ஈரக் குப்பை / உலர்க் குப்பையாகப் பிரித்தெடுக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.


— 2017-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை, இந்தூர் ஒவ்வொரு ஆண்டும் முதல் இடத்தைப் பிடித்தது, மேலும் 2023-இல் சூரத்துடன் முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டது. 2023-ஆம் ஆண்டளவில், இந்த தரவரிசைகளில் 4,416 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சேர்க்கப்பட்டன. காலப்போக்கில், அதிக சுகாதார அம்சங்களைச் சேர்க்கும் வகையில் அளவுகோல்கள் விரிவுபடுத்தப்பட்டன. 2023-ஆம் ஆண்டில், நெகிழிக் கழிவு மேலாண்மை, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற கழிப்பறைகள் மற்றும் தெருக்களைச் சுத்தம் செய்தல் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பின்னர் மீண்டும், இந்தூர் முதல் இடத்தைப் பிடித்தது. இது வீடு வீடாகச் சென்று 100 சதவீத கழிவுகளைச் சேகரித்தல், குப்பைக் கிடங்குகளைச் சீரமைத்தல், குடியிருப்புப் பகுதிகள், சந்தைகள் மற்றும் பொதுக் கழிப்பறைகளைத் தூய்மையாக வைத்திருத்தல் ஆகியவற்றில் முழுமையான இலக்கை  அடைந்தததாகக் கூறப்படுகிறது.


— 2023-ஆம் ஆண்டின் அறிக்கை, இந்தூர் நகராட்சி அமைச்சகத்தின் "நீர்+" (Water+) சான்றிதழைப் பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது. இதன் பொருள்,  சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் எதுவும் திறந்த வெளிச் சூழலிலோ அல்லது நீர்நிலைகளிலோ வெளியிடப்படுவதில்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது, 2019-ஆம் ஆண்டில் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற (Open Defecation Free - ODF) நிலையை  நாடு அடைந்ததாக அரசாங்கம் அறிவித்ததைவிடவும் உயர்வானதாகக் கருதப்படுகிறது. 


— சமீபத்திய தரவரிசையான 2024-2025-க்கு, இந்தூர் தேசிய போட்டியில் இருந்து விலக்கப்பட்டு, சூப்பர் ஸ்வச்ச் லீக் பிரிவில் வைக்கப்பட்டது. அங்கு கடந்த ஆண்டுகளில் உச்ச தரவரிசை பெற்ற அனைத்து நகரங்களும் “மிகவும் சுத்தமானவற்றில் மிகவும் சுத்தமானது” என்ற பட்டத்திற்காக போட்டியிட்டன. அந்த பிரிவில் இந்தூர், சூரத் மற்றும் நவி மும்பை ஆகியவை முதல் பரிசை பகிர்ந்து கொண்டன.

 Original Article : What are the key highlights of Swachh Survekshan 2024-25? -Roshni Yadav

Share: