புல்வெளிகள் போன்ற உயிர்ப்பரப்பு மண்டலங்களைப் பாதுகாப்பது தனித்துச் செய்யக்கூடிய காரியமல்ல, இதற்கு வெவ்வேறு ஐ.நா. அமைப்புகளுக்கு இடையே பகிரப்பட்ட இலக்குகள் தேவைப்படுகின்றன. இருப்பினும், பல்லுயிர்த்தன்மை மற்றும் காலநிலை இலக்குகள் ஒத்துப்போகின்றனவா, மேலும் நிறுவனங்கள் எவ்வாறு திறம்பட இணைந்து செயல்பட முடியும் என்பது குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
2022-ஆம் ஆண்டில், தான்சானியா, ஜாம்பியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் கூட்டமைப்புக்கு (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)) ஒரு கடிதம் எழுதினர். அக்கடிதத்தில், காடுகள் மட்டுமின்றி, புல்வெளிகள் மற்றும் சவானாக்கள் உட்பட அனைத்து சுற்றுச்சூழல் மண்டலங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினர். 'சயின்ஸ்' (Science) இதழில் வெளியிடப்பட்ட அந்தக் கடிதத்தில், சவானாக்கள் (வெப்பமண்டல சமதளப் புல்வெளி) (savannahs) வலுவான கார்பன் சேமிப்பு இடங்களாக இருக்க முடியும் என்றாலும், உலகளாவிய காலநிலை விவாதங்களில் காடுகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்று வாதிடப்பட்டது. மூன்று ஆண்டுகள் கடந்த பின்னரும், ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் கூட்டமைப்பானது (UNFCCC) காலநிலை உச்சி மாநாடுகள் இன்னும் இந்தக் கவலையை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டன.
பிரேசிலின் வடக்கு பகுதியில் உள்ள பெலெம் நகரில் (Belém) ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் கூட்டமைப்பின் (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)) 30-வது காலநிலை மாநாட்டில் (COP30) 10 நாட்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் காடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அமேசான் காடுகளின் பெரும்பகுதியை தன்னகத்தே கொண்டிருப்பதால், பிரேசில் அரசாங்கம் காடுகளை நிகழ்ச்சிநிரலின் முக்கியமான மையப் புள்ளியில் வைத்தது. வெப்பமண்டல காடுகளைப் பாதுகாக்க நாடுகளுக்கு உதவ பல மில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்த "வெப்பமண்டல காடுகளுக்கான பாதுகாப்பு நிதி வசதி" (Tropical Forests Forever Facility (TFFF)) பற்றிய அறிவிப்பு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும், 30-வது காலநிலை மாநாடு, காலநிலை பாதுகாப்பிற்கான தெளிவான செயல் திட்டமின்றி முடிவடைந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன், உலகளாவிய காலநிலை நடவடிக்கையில் காடுகளுக்கு மட்டும் சாதகமாக இருக்கும் ஒரு தொடர்ச்சியான சமநிலையற்ற தன்மையையும் அது வெளிப்படுத்தியது. காடுகளைப் போலவே, உலகம் முழுவதும் உள்ள மற்ற முக்கியமான உயிரியல் மண்டலங்களும் (biomes) காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்பால் அச்சுறுத்தப்படுகின்றன. அவற்றை பாதுகாப்பதும், காலநிலை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
“காலநிலை மாற்றம் அனைவரையும் பாதிக்கிறது, ஆனால் பாலைவனச் சமூகங்கள் மிக மோசமான பாதிப்புகளில் சிலவற்றைச் சந்தித்து வருகின்றன,” என்று இல்கா/வோங்குதா/நூங்கார் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரும், சுதேசிப் பாலைவனக் கூட்டமைப்பின் (Indigenous Desert Alliance (IDA)) தலைமை நிர்வாக அதிகாரியுமான சமந்தா முர்ரே என்பவர், இங்கு வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்றும் மேலும், இங்கு வாழும் வாழ்க்கை மிகவும் கடினமாகி வருகிறது என்றும் கூறினார்
சுதேசிப் பாலைவனக் கூட்டமைப்பு (Indigenous Desert Alliance (IDA)) என்பது ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் உள்ள பரந்த பாலைவன புல்வெளிகளைப் பாதுகாக்க மற்றும் நிர்வகிக்க பணிபுரியும் பழங்குடி சமூகக் காவலர்களின் ஒரு வலைப்பின்னல் ஆகும்.
இப்போதுதான் தொடங்குகிறது
புல்வெளிகள் உலகின் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான சூழல் மண்டலங்களில் ஒன்றாகும். வேளாண், காடுகளாக மற்றும் தோட்டங்களாக மாற்றுதல், ஆக்கிரமிப்பு உயிரினங்கள் (invasive species) பரவுதல் மற்றும் புதைபடிவ எரிபொருள் அகழ்வு போன்ற காரணங்களால் இவை மிக விரைவான வாழ்விட இழப்பை எதிர்கொண்டுள்ளன. மேலும், பல அரசாங்கங்கள், கட்டுப்படுத்தப்பட்ட எரிப்பு மற்றும் மேய்ச்சல் போன்ற பாரம்பரிய பழங்குடி நிலப் பயன்பாட்டு முறைகளையும் கட்டுப்படுத்தியுள்ளன. இது காடுகள் அழியும் போது அதிதீவிரமான காட்டுத் தீக்கும் மற்றும் அதிக கார்பன் வெளியேற்றத்திற்கும் வழிவகுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில், பாலைவனப் புல்வெளிகள் தற்போது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வறட்சியினாலும், திடீர் வெள்ளங்களினாலும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்புகள் மேலும் மோசமடையக் காரணம், பஃபெல் புல் செஞ்சர்ஸ் சிலியாரிஸ் (Cenchrus ciliaris) எனப்படும் ஒரு ஆக்கிரமிப்பு இனமாகும். இது, உள்ளூர் பூர்வீக வகையிலான புற்களை அகற்றிவிட்டு, அதிக தீவிரம் கொண்டதாக எரியக்கூடிய தன்மையுடன் இருப்பதால் நிலைமையை மிகவும் கடினமாக்குகிறது.
சுதேசிப் பாலைவனக் கூட்டமைப்பு (Indigenous Desert Alliance (IDA)) போன்ற அமைப்புகள், ஆஸ்திரேலியாவின் பாலைவனப் புல்வெளிகள்மீது கவனம் செலுத்தும் வகையில் செயல்படுகின்றன. உள்ளூர் பழங்குடி சமூகங்களால் வழிநடத்தப்படும் சுதேசிப் பாலைவனக் கூட்டமைப்பு (IDA), பண்பாட்டுக்கு ஏற்ற கட்டுப்படுத்தப்பட்ட தீ வைப்பு (controlled burns), பழங்குடிக் காவலர்களின் தொடர்ச்சியான கண்காணிப்பு, மற்றும் ஆக்கிரமிப்பு உயிரினங்களின் (invasive species) மேலாண்மை ஆகியவற்றின் மூலம் இந்தச் சூழலியல் அமைப்புகளைக் பாதுகாத்து வருகிறது. இருப்பினும், புல்வெளிகளைக் காப்பதற்கான முயற்சிகள் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளன.
காலநிலை மாற்றம் ஆஸ்திரேலியாவின் பாலைவனங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி பலரும் அறியாமல் இருக்கிறார்கள். புல்வெளிகள் பெரும்பாலும் தரிசு நிலமாகவே பார்க்கப்படுகின்றன, இதனால் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடும் ஆதரவும் குறைவாகவே கிடைக்கின்றன சமதா குறிப்பிட்டுள்ளார்.
செராடோ இல்லை என்றால், அமேசான் இல்லை
ஆஸ்திரேலியாவில் காணப்படும் நிலை உலகம் முழுவதும் பிரதிபலிக்கிறது. பிரேசிலில் உலகின் அதிக பல்லுயிர் வளம் கொண்ட புல்வெளிகளில் (சவன்னாக்களில்) ஒன்றான செராடோ (Cerrado) உள்ளது. இந்த செராடோ, நாட்டின் 12 நீர் அமைப்புகளில் எட்டு நீர் அமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. சாவோ பிரான்சிஸ்கோ (São Francisco) மற்றும் டோகன்டின்ஸ் (Tocantins) போன்ற முக்கிய நதிகளும் இதில் அடங்கும். இருப்பினும், இந்த செராடோ பகுதி கடுமையான அழுத்தத்தில் உள்ளது. மனிதச் செயல்பாடுகள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக, செராடோவின் புல்வெளிகள், அமேசான் மழைக்காடுகளைவிட இரண்டு மடங்கு வேகத்தில் நிலப்பரப்பை இழந்து வருவதாகக் கூறப்படுகிறது.
சமீபகாலமாக, காலநிலை மாநாடுகளில் மேற்கொள்ளப்படும் சிறிய ஆனால் வளர்ந்துவரும் முயற்சிகள் புல்வெளிகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளன. விஞ்ஞானிகள், பூர்வகுடி மற்றும் உள்ளூர் சமூகங்கள், மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து, அழிவை நோக்கிச் செல்லும் இந்த உயிரியல் மண்டலம் (Biome) குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 30-வது காலநிலை மாநாட்டில், முக்கிய இடத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள், பூர்வகுடி செராடோ (Cerrado) சமூகங்களின் பொதுப் போராட்டங்கள், மற்றும் பிரேசில் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நாட்டின் ஆறு தேசிய உயிரியல் மண்டலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறப்பு இளைஞர் குழுக்கள் ஆகியவை புல்வெளிப் பிரச்சினைகள் குறித்த கவனத்தை ஈர்த்தன. இருப்பினும், இந்த முயற்சிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்படாமல் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதாகக் கூறப்படுகிறது.
புல்வெளிகள் குறித்தும் பல துணை நிகழ்வுகளில் விவாதிக்கப்பட்டன. அவற்றில், "செராடோ மற்றும் அமேசான்: நீரால் இணைக்கப்பட்டவை" என்ற தலைப்பிடப்பட்ட ஒரு நிகழ்வில், மினாஸ் ஜெரைஸைச் சேர்ந்த கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், செராடோ பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான தண்டாரா டோனாண்ட்சின், செராடோவின் இன்றியமையாத பங்கை வலியுறுத்தினார். செராடோவும் அமேசானும் சுற்றுச்சூழலால் இணைக்கப்பட்ட "சகோதர" உயிர்ப்பு மண்டலங்கள் என்றும், செராடோ இல்லாமல் அமேசான் காடுகள் நீடித்திருக்க முடியாது என்றும் அவர் விளக்கினார்.
ஒரு சமூகநீதி பிரச்சனை
விவசாயம், சுரங்கம், காட்டுத் தீ தடுப்பு, சமூக நில உரிமைகள் பறிப்பு மற்றும் சுற்றுச்சூழலைவிட வேளாண் வணிகத்திற்கு ஆதரவாக உள்ள கொள்கைகள் ஆகியவற்றால் செராடோ (Cerrado) பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும், பிரேசிலின் விவசாய நச்சு கழிவுகளில் 70 சதவீதம் அங்கு கொட்டப்படுவதால், சுற்றுச்சூழலுக்கும் உள்ளூர் சமூகங்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
செராடோவைப் பாதுகாப்பது சமூக நீதியின் ஒரு அம்சம் என்றும் பூர்வீக குடிமக்கள் மற்றும் குயிலோம்போலா (Quilombola) சமூகங்களின் நில உரிமைகளை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதுடன், பாதுகாப்பான நில எல்லை நிர்ணயத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் தண்டரா பரிந்துரைத்தார். இயற்கை வளங்களை நிர்வகிப்பதில் பாரம்பரிய சமூகங்களை ஈடுபடுத்தும் உள்ளடக்கிய கொள்கைகளை உருவாக்குவதையும் வலியுறுத்தினார்.
இந்தத் துணை நிகழ்வுகளில் நடந்த விவாதங்களை காலநிலை மாநாடு பேச்சுவார்த்தைகளுடன் இணைப்பது சவாலானது. காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் கூட்டமைப்பின் (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)) காலநிலை மாநாட்டில் முக்கியமாக கார்பன் மேலாண்மையில் கவனம் செலுத்துகிறது. ஆனால் பல்லுயிர் மற்றும் நிலச் சீரழிவு ஆகியவை ஐ.நா.வின் உயிரியல் பன்முகத்தன்மை மாநாடு (Convention on Biological Diversity (CBD)) மற்றும் பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐ.நா. மாநாடு (Convention to Combat Desertification (CCD)) ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த ஐ.நா.வின் உயிரியல் பன்முகத்தன்மை மாநாடு (CBD) மற்றும் பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐ.நா. மாநாடு (CCD) ஆகிய இரண்டுமே புல்வெளிகளை அங்கீகரிக்க வலுவான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
உதாரணமாக, சவுதி அரேபியாவில் நடந்த காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் கூட்டமைப்பின் 16-வது காலநிலை மாநாட்டில், நிலச் சீரழிவு சமநிலையை (land degradation neutrality) அடைவதற்கு புல்வெளிகளின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. தீர்மானம் L15 மேய்ச்சல் நிலங்களை (rangelands) சிக்கலான சமூக-சூழலியல் அமைப்புகளாக அங்கீகரித்தது. மேலும், இந்தக் பகுதிகளில் கொள்கைகள், முதலீடுகள் மற்றும் பாதுகாப்பான நில உடைமைக்கு முன்னுரிமை அளிக்க மாநாட்டில் பங்கேற்ற நாடுகளை வலியுறுத்தியது.
இணைப்பினை உருவாக்குதல்
புல்வெளிகளைப் பாதுகாப்பது தனிப்பட்ட ஒருவரால் செய்ய முடியாத காரியம்; அதற்கு பல்வேறு ஐக்கிய நாடுகள் சபைத் துணை அமைப்புகளிடையே பொதுவான இலக்குகள் தேவைப்படுகின்றன. இருப்பினும், பல்லுயிர் மற்றும் காலநிலைப் பாதுகாப்பின் இலக்குகள் ஒரே மாதிரியானவை. மேலும், இந்த நிறுவனங்கள் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 1992-ஆம் ஆண்டில் மூன்று ரியோ மாநாடுகள் (Rio Conventions) உருவாக்கப்பட்டன. இதுவே ஐ.நா. பல்லுயிர் மாநாடு (UNCBD), UNFCCC ஐ.நா. காலநிலை மாற்றம் குறித்த கட்டமைப்பு மாநாடு (UNFCCC)), மற்றும் ஐ.நா. பாலைவனமாதலை எதிர்ப்பதற்கான மாநாடு (UNCCD) ஆகியவற்றை இணைப்பதற்கான முதல் படியாகக் கருதப்படுகிறது. காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு மற்றும் நிலம் சீரழிவது ஆகியவற்றில் ஒத்துழைப்புடன் செயல்பட இது ஒரு புதிய வழிமுறையை ஏற்படுத்துகிறது.
30-வது காலநிலை மாநாட்டில், உலகளாவிய வனவிலங்கு நிதியம் (World Wide Fund for Nature) மற்றும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature) போன்ற குழுக்கள், பெரும்பாலும் கவனிக்கப்படாத இந்த உயிரின மண்டலங்களின் (biomes) முக்கியத்துவத்தை எடுத்துரைத்தன. அவற்றின் கூட்டு அறிக்கை, 'கவனிக்கப்படாத கார்பன் சேமிப்பு இடங்களைப் பாதுகாத்தல்' ('Protecting the overlooked carbon sink'), காலநிலைப் பேச்சுவார்த்தைகளில் புல்வெளிகளைச் சேர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தியது. இது, செயல்திறனை மேம்படுத்த, புல்வெளிகளை மூன்று ரியோ உடன்படிக்கைகள் (Rio Conventions) முழுவதும் ஒருங்கமைந்த வழியில் பரிந்துரைத்தது. மேலும், பாரிஸ் உடன்படிக்கையின்கீழ் (Paris Agreement) ஒவ்வொரு நாட்டின் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளில் (nationally determined contributions (NDCs)) புல்வெளிகளைச் சேர்க்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
இந்தியாவுக்கான ஒரு சிறிய முயற்சி
ஐ.நா. அமைப்புகளுக்கு இடையே தொடர்புகளை உருவாக்குவதுதான் உலகின் புல்வெளிகளைப் பாதுகாக்க மிகவும் பயனுள்ள வழியாகும். இதேபோல், இந்திய அரசின் அமைச்சகங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பும் இந்தியாவின் புல்வெளிகளைப் பாதுகாக்க உதவும் என்கின்றனர். பெங்களூரில் உள்ள அசோகா சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (Ashoka Trust for Research in Ecology and the Environment (ATREE))) வெள்ளை அறிக்கையின்படி, இந்தியாவின் புல்வெளிகள் 18 வெவ்வேறு அமைச்சகங்களின்கீழ் வருகின்றன. மேலும், ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் முரண்பட்ட நோக்கங்கள் உள்ளன. உதாரணமாக, சுற்றுச்சூழல் அமைச்சகம் காடுகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. ஆனால், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் “தரிசுநில வரைபடம்” சில நேரங்களில் புல்வெளிகளை வேறு பயன்பாட்டிற்குக் கிடைக்கக்கூடிய நிலமாகக் குறிப்பிடுகிறது.
இந்த ஆளும் அமைப்புகள்—தேசிய அளவில் இருந்து சர்வதேச நிலைகள் வரை—ஒன்றாகச் செயல்பட்டால், நாடு சார்ந்த தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDC) போன்ற வழிமுறைகள் மூலம் பலன்கள் நீட்டிக்கப்படலாம். இந்தியாவின் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட எட்டு பங்களிப்புகளில் ஒன்று, "2030-ஆம் ஆண்டுக்குள், அதிகரித்த காடு மற்றும் மரங்களின் பரப்பளவு மூலம் 2.5 முதல் 3 பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்ஸைட் சமமான கூடுதல் கார்பன் சேமிப்பகத்தை (carbon sink) உருவாக்க வேண்டும்" என்பதை இலக்காகக் கொண்டுள்ளது. புல்வெளிகளை முக்கியமான கார்பன் சேமிப்பகங்களாக அங்கீகரிப்பது, இந்தியாவுக்கு காடுகளை மட்டும் உள்ளடக்கிய திட்டங்களைக் கடந்து, அதன் காலநிலை நடவடிக்கைகளை வலுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், பிரேசிலிய ஆய்வாளர்கள் திறந்த சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும், அவற்றை பிரேசிலின் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளில் (NDCs) சேர்க்கவும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாட்டில் (UNFCCC) ஒரு "சூழல் அமைப்பு சார்ந்த அணுகுமுறையை" ஏற்கும்படியாக வலியுறுத்தப்பட்டது.
புல்வெளிகளைத் தனித்துவமான சூழல் அமைப்புகளாக அங்கீகரிப்பது, அவற்றின் கார்பன் பிரித்தெடுத்தல் (carbon sequestration) மற்றும் சூழலியல் சேவைகளில் அவற்றின் பங்கை மதிப்பிடுவது, தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளில் (NDCs) அவற்றின் பாதுகாப்பைச் சேர்ப்பது, மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு நிலம் மற்றும் மேலாண்மை உரிமைகளை உறுதிசெய்வது ஆகியவை புல்வெளிப் பாதுகாப்பை உலகளவில் முதன்மையானதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் மிக முக்கியமானதாகும். நாடுகள் ஒருங்கிணைந்த கொள்கைகளை உருவாக்கக் கூடிய வகையில், தொடர்புடைய ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவதும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் பலதரப்புவாதத்தின் மதிப்புகளை நிலைநிறுத்தி, புதைபடிவ எரிபொருள் மற்றும் வேளாண் வணிக லாபிக் குழுக்களைவிட அறிவியல் மற்றும் குடிமைச் சமூகத்திற்கு முன்னுரிமை அளித்தால், இந்தக் குறிக்கோள்களை அடைய முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்
சுதீர்த்தா லஹிரி, மினசோட்டா பல்கலைக்கழகத்தில் (University of Minnesota) பாதுகாப்பு அறிவியல் (Conservation Science) துறையில் முனைவர் பட்டப்படிப்பு மாணவராகவும், உலகளாவிய மாற்றத்தைப் பற்றிய ஆய்வுக்கான பல்துறை மையத்தின் (Interdisciplinary Center for the study of Global Change (ICGC) அறிஞராகவும் உள்ளார்.
Original Article : Not just forests: why grasslands also belong in national climate plans -Sutirtha Lahiri