டெல்லி உயர்நீதிமன்றம் அரசுக்கு கேட்பாணை அனுப்பியுள்ளது : உறைந்த கரு தானம் குறித்த விதிகள் மற்றும் அவை ஏன் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன? -அமால் ஷேக்

 ஒரு ஐவிஎஃப் நிபுணரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது., சட்டம் ஏன் சில மரபணு அல்லாத பெற்றோர் முறைகளை அனுமதித்து மற்றவற்றைத் தடுக்கிறது என்று கேள்வி எழுப்புகிறது. அதன் விவரங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன.


IVF (In Vitro Fertilization) என்பது ஒரு உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் (ART) ஆகும், இதில் முட்டைகள் உடலுக்குள் அல்லாமல் ஆய்வகத்தில் விந்தணுக்களால் கருவுறுகின்றன.


டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த வாரம் ஒரு பொதுநல மனு மீது நோட்டீஸ் அனுப்பியது. அந்த மனு, தம்பதிகள் இரு தரப்பிலும் சம்மதம் தெரிவித்தாலும்கூட, தானம் செய்வதற்குப் பதிலாக, கருவுறக்கூடிய உறைந்த கருக்களை அழிக்க வேண்டும் என்று சட்டம் கட்டாயப்படுத்த முடியுமா என்று கேள்வி எழுப்புகிறது.


பயன்படுத்தப்படாத உறைந்த கருக்களை கருவுறாத் தன்மை கொண்ட தம்பதிகளுக்கு (infertile couples) "தன்னலமற்ற, தன்னார்வ, சம்மதத்தின் அடிப்படையிலான தானம்" (altruistic, voluntary, consent-based donation) செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள "முழுமையான தடையை" எதிர்த்து, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப (ஒழுங்குமுறை) சட்டம்-2021 (provisions of the Assisted Reproductive Technology (Regulation) Act) மற்றும் அதன் விதிகளின் சில பிரிவுகளுக்கு சவால் விடுகிறது. இந்த விதிகள், தானம் செய்யப்பட்ட விந்து மற்றும் முட்டைகளைப் பயன்படுத்தி கருக்களை உருவாக்க அனுமதிக்கின்றன. ஆனால், பயன்படுத்தப்படாத உறைந்த கருக்களை மற்றொரு தம்பதியினரின் இனப்பெருக்கப் பயன்பாட்டிற்காக தானம் செய்வதைத் தடை செய்கின்றன.


இந்தச் சட்டத்தின் கீழ், அத்தகைய கருக்கள் 10 ஆண்டுகள் வரை சேமித்து வைக்கப்படலாம் மற்றும் அவை "அழிய அனுமதிக்கப்பட வேண்டும்" (allowed to perish) அல்லது ஆராய்ச்சிக்கு தானம் செய்யப்பட (be donated for research) வேண்டும். இந்த மனு இதை "செயல்பாட்டில் உள்ள கருக்களை பகுத்தறிவற்ற முறையில் அழித்தல்" என்று விவரிக்கிறது. மேலும், விருப்பமுள்ள தம்பதிகள் கருக்களைப் பெற தயாராக இருக்கும்போது, ​​கருக்களை அழியும்படி கட்டாயப்படுத்துவது நெறிமுறைக்கு முரணானது என்று அது வாதிடுகிறது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர் உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் (ஒழுங்குமுறை) சட்டத்தின் (ART) பிரிவு 28-இன் நோக்கத்தை விரிவுபடுத்தக் கோருகிறார் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. அந்தப் பிரிவு கருக்களைச் சேமித்தல் மற்றும் கையாளுவதை நிர்வகிக்கிறது. மேலும், மத்திய அரசிடம் இருந்து ஒரு பதிலை அமர்வு கோரியது.


இந்த மனுவை ஐவிஎஃப் நிபுணர் டாக்டர் அனிருத்தா நாராயண் மல்பாணி தாக்கல் செய்துள்ளதாவது, சட்டமானது ஏன் சில மரபணு அல்லாத பெற்றோர்களை அனுமதித்து மற்றவற்றைத் தடுக்கிறது என்று கேள்வி எழுப்புகிறது. "நீங்கள் ஒரு சில குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை மட்டும் அனுமதிக்கிறீர்கள், ஆனால் மற்றொரு தொழில்நுட்பத்தை அனுமதிப்பதில்லை," என்று மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனேகா குருசுவாமி நீதிமன்றத்தில் வாதிட்டார். இந்தச் சூழ்நிலையை அவர் ஒரு சாத்தியமான சட்டமியற்றும் குறைபாடு என்று விவரித்தார்.


உறைந்த கருக்கள் விசயத்தில் சட்டம் அனுமதிப்பது என்ன?


2021-ல் இயற்றப்பட்ட உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் (ஒழுங்குமுறை) சட்டம் (ART), ஒழுங்குபடுத்தப்பட்ட நிபந்தனைகளின் கீழ் விந்து மற்றும் முட்டைகளின் தன்னலமற்ற தானத்தை அனுமதிக்கிறது. இது தானம் செய்பவரின் உதவியுடன் செய்யப்படும் ஐவிஎஃப் முறையையும் அனுமதிக்கிறது. இதில் "இரட்டை-தானம் ஐவிஎஃப்" (double-donor IVF) முறையும் அடங்கும். இதில், தானம் செய்யப்பட்ட விந்து மற்றும் தானம் செய்யப்பட்ட முட்டைகளிலிருந்து ஒரு கரு உருவாக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட தம்பதியினருக்கு மாற்றப்படுகிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில், குழந்தைக்கு பெற்றோர் இருவருடனும் மரபணு ரீதியான தொடர்பு இருக்காது என்று சட்டம் இந்த நிலையைத் தெளிவாக ஏற்றுக்கொள்கிறது.


இருப்பினும், மீதமுள்ள உறைந்த கருக்களை தானமாக வழங்குவதை சட்டம் அனுமதிப்பதில்லை. ஐவிஎஃப் சுழற்சிகளின் வெற்றி விகிதங்களை மேம்படுத்துவதற்காகப் பல கருக்கள் உருவாக்கப்படுவதால், இந்தக் கருக்கள் உருவாகின்றன. இருப்பினும், இவை அனைத்தும் கருப்பையில் பதிய வைக்கப்படுவதில்லை. பல தம்பதிகள் பின்னர் தாங்கள் மற்றொரு கர்ப்பம் விரும்பவில்லை என்று முடிவு செய்கிறார்கள். ஆனால், அவர்களின் கருக்கள் உறைநிலையில் பாதுகாக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் இந்தக் கருக்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதில் சட்டம் கட்டுப்பாடுகளை விதிக்கிறது.


தடை எவ்வாறு செயல்படுகிறது?


"கருத் தத்தெடுப்பு" (embryo adoption) என்பதற்கு வெளிப்படையான தடை எதுவும் இல்லை. இந்தக் கட்டுப்பாடு முக்கியமாகப் பல விதிகளை ஒருங்கிணைந்து படிப்பதன் மூலம் உருவாகிறது. மருத்துவமனைகள் பயன்படுத்தப்படாத கருக்களை உண்மையான தம்பதிகளுக்காக மட்டுமே பாதுகாக்க வேண்டும். மேலும், அவற்றை வேறு எந்த நபருக்கும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு தம்பதி தங்கள் சொந்த கருக்களை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஒழுங்குமுறையின் அனுமதியுடன் மாற்றுவதைத் தவிர, கருக்களை மற்ற தரப்பினருக்கு மாற்றுவது தடைசெய்யப்பட்டுள்ளது.


பிரிவு 28(2) மேலும் சேமிப்புக் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்துகிறது. இந்தக் காலத்திற்குப் பிறகு, கருக்கள் சம்மதத்திற்கு உட்பட்டு, "அழிய அனுமதிக்கப்பட வேண்டும்" அல்லது பதிவுசெய்யப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு தானம் செய்யப்பட வேண்டும். இனப்பெருக்கப் பயன்பாட்டிற்காக கருக்களை மற்றொரு தம்பதியினருக்கு தானம் செய்யவோ அல்லது தத்தெடுக்கவோ சட்டம் எந்த ஒரு வழிமுறையையும் வழங்கவில்லை.


விதிகளின் கீழ் உள்ள சம்மதப் படிவங்கள் இந்த அமைப்பையே பிரதிபலிக்கின்றன. இறப்பு அல்லது பிரிவினை போன்ற சூழ்நிலைகளில் கருக்களுக்கு என்ன நடக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுமாறு தம்பதியினர் தீர்மானிக்கக் கேட்கப்படுகிறார்கள். இருப்பினும், கருக்களை மற்றொரு தம்பதியினருக்கு தானம் செய்வது ஒரு விருப்பமாக வழங்கப்படவில்லை.


புதிய மற்றும் உறைந்த கருக்கள்


மனுவில் எழுப்பப்பட்ட ஒரு முக்கியப் பிரச்சினை, புதிய தானமளிக்கப்பட்ட கருக்களுக்கும் உறைந்த கருக்களுக்கும் இடையே சட்டமானது சில வேறுபாடான நிலையைக் காட்டுகிறது. தானமளிக்கப்பட்ட விந்து மற்றும் தானமளிக்கப்பட்ட முட்டைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய கருக்கள் ஒரு தம்பதிக்கு மாற்றப்படலாம். உறைந்த கருக்கள், உறைநிலை நீக்கப்பட்டவுடன், உயிரியல் ரீதியாக புதிய கருக்களைப் போலவே இருக்கும் மற்றும் ஐவிஎஃப் சிகிச்சையிலும் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன.


இருந்தபோதிலும், உறைந்த கருக்கள் இனப்பெருக்க நோக்கங்களுக்காக மாற்ற முடியாதவையாகக் கருதப்படுகின்றன. இந்த மனு இதை ஒரு "இரட்டை நிலைப்பாடு" (double standard) என்று விவரிக்கிறது. கருக்கள் புதிதாக உருவாக்கப்படும்போது மரபணுரீதியான சீரற்றத் தன்மை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், கருக்கள் ஏற்கனவே இருந்து உறைநிலையில் வைக்கப்படும்போது, ​​அதே கொள்கையை அது நிராகரிக்கிறது என்றும் அந்த மனு தெரிவிக்கிறது.


அரசியலமைப்புச் சவால்


இந்த மனு அரசியலமைப்பின் 14 மற்றும் 21-வது பிரிவுகளின் கீழ் இந்தச் சட்டத்தை சவால் செய்கிறது. சமத்துவத்தைப் பொறுத்தவரை, புதிய தானமளிக்கப்பட்ட கருக்களைப் பெறும் தம்பதிகளுக்கும், உறைந்த கருக்களை நாடும் தம்பதிகளுக்கும் இடையே இந்தச் சட்டம் ஒரு "தன்னிச்சையான மற்றும் அரசியலமைப்புரீதியாக ஏற்க முடியாத பாகுபாட்டை" உருவாக்குகிறது என்று அது வாதிடுகிறது. இரண்டு சந்தர்ப்பங்களிலும், குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே மரபணு ரீதியான தொடர்பு இல்லை. மனுவின்படி, இந்த வகைப்பாட்டிற்கு ஒரு "புலப்படும் வேறுபாடு" (intelligible differentia) இல்லை. அதாவது, ஒரு வகை ஏன் அனுமதிக்கப்படுகிறது, மற்றொன்று ஏன் தடை செய்யப்படுகிறது என்பதை விளக்குவதற்கு ஒரு தெளிவான பகுத்தறிவு அடிப்படை இல்லை. மேலும், இது சட்டத்தின் நோக்கத்துடன் எந்தப் பகுத்தறிவுத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. இதன் மூலம், தெளிவான அடிப்படை இருக்கும் இடங்களில் மட்டுமே பாகுபாடு காட்ட அனுமதிக்கும் அரசியலமைப்பின் 14-வது பிரிவின்கீழ் உள்ள சமத்துவச் சோதனையில் இது தோல்வியடைகிறது.


தனிநபர் சுதந்திரத்தைப் பொறுத்தவரை, இந்த மனு இனப்பெருக்கத் தேர்வை வாழ்வுரிமை, கண்ணியம் மற்றும் தனியுரிமை ஆகியவற்றுக்குள் இணைக்கிறது. உதவி இனப்பெருக்கத் தொழில்நுட்பம் (ART) மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதா, எப்படிப் பெற்றுக்கொள்வது என்பது பற்றிய முடிவுகள், தனிப்பட்ட சுயாட்சிக்குள் அடங்கும் என்று அது வாதிடுகிறது. மருத்துவரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு விருப்பமாக கரு தானத்தை மறுப்பதன் மூலம், அரசு இனப்பெருக்கத் தேர்வில் "தேவையற்ற தலையீட்டை" ஏற்படுத்துகிறது.


இந்த வழக்கில் தொடர்ந்துவரும் ஒரு கருப்பொருள், கருக்களை அழிக்குமாறு சட்டம் விதிக்கும் கட்டாயமாகும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, கருக்கள் உண்மையான தம்பதியினரால் பயன்படுத்தப்படாவிட்டால், அவை "அழிய அனுமதிக்கப்பட வேண்டும்". கருக்களை அழியும்படி கட்டாயப்படுத்துவதும், அதேநேரத்தில் விருப்பம் தெரிவித்த பெறுநர்களுக்கு அவற்றை மாற்றுவதைத் தடுப்பதும் ஒரு "சட்டமன்ற முரண்பாட்டிற்கு" வழிவகுக்கிறது என்று மனு வாதிடுகிறது.


இந்த வழக்கு ஏன் முக்கியமானது?


இந்தியாவில் சுமார் 27 முதல் 30 மில்லியன் தம்பதிகள் கருவுறாத் தன்மையில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐவிஎஃப் சிகிச்சை செலவு மிக்கது மற்றும் பெரும்பாலும் பலமுறை செய்ய வேண்டியிருக்கும். பாரம்பரிய தத்தெடுப்பு முறையில் நீண்ட காத்திருப்புக் காலங்கள் உள்ளன. கரு தானம் சில தம்பதிகளுக்கு ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட விருப்பத்தை வழங்கக்கூடும் என்றும், மற்ற வழிகள் இல்லாத இடங்களில் கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கு இது வழிவகுக்கும் என்றும் மனு குறிப்பிடுகிறது. அந்த மனு அணுகல் தொடர்பான கவலைகளையும் சுட்டிக்காட்டுகிறது. போதுமான வசதி படைத்த தம்பதிகள் வெளிநாடுகளில் கரு தானம் பெறலாம். அத்தகைய வசதி இல்லாத தம்பதிகளால் அவ்வாறு செய்ய முடியாது. இதன் விளைவாக, இனப்பெருக்கத் தேர்வை திறம்பட ஒரு வசதிபடைத்தவருக்கு சார்ந்ததாகிவிடுகிறது என்று குறிப்பிடுகிறது.




Share: